privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பொறுக்கி நித்திக்காக மக்களை துரத்தும் போலீசு ! நேரடி ரிப்போர்ட்

பொறுக்கி நித்திக்காக மக்களை துரத்தும் போலீசு ! நேரடி ரிப்போர்ட்

-

சென்னை பல்லாவரம்  11 -வது வார்டில் குவாரி சாலை அருகே மிகப் பெரிய மலை  உள்ளது. அந்த மலையடிவாரத்தில் பாரதி நகர், மலைமகள் நகர், பச்சையம்மன் கோவில் ஆகிய இடங்களில் சுமார் 600 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 45 வருடங்களாக வசித்து வருகின்றனர். அனைத்து சாதியினரும் இருக்கிறார்கள் என்றாலும் பெரும்பான்மையாக தலித் மக்கள் தான் வசிக்கிறார்கள். இந்த குடியிருப்புகளுக்கு மையப்பகுதியில்  2.19 ஏக்கர் காலி மனை ஒன்று உள்ளது. இதன் மதிப்பு சுமார் 30 கோடி இருக்கும் என்கிறார்கள்.

இந்த இடம் தனக்கு தான் சொந்தமானது என்று நித்தியானந்தாவின் சீடரான “சன்னியாசி” வள்ளிராமநாதன் 4.1.2017 அன்று ஒருவரை அந்த இடத்தில் தங்க வைத்தார். அவரும் நித்தியின் சீடர் தான். அன்று முதல் அப்பகுதி வழியாக மலைமகள் நகருக்கு செல்லும்  மக்களுக்கு வழி விடமுடியாது என்று தொடர்ந்து பிரச்சனை செய்து வந்தார். இதன் உச்சகட்டமாக 18 -ம் தேதி காலை நித்தியின் பொறுக்கி கும்பலுக்கும், பகுதி மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மலைமகள் பகுதியை சேர்ந்த ஐந்து பேரையும், அந்த பிரச்சனைக்குரிய இடத்தில் குடியிருக்கும்  கிருஷ்ணனின் மகன், மருமகன் உட்பட ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது பல்லாவரம் போலிசு.

கிருஷ்ணன்

இந்த பிரச்சனை குறித்து  கிருஷ்ணன்  கூறுகையில்,

“1953-1973 வரை வீரப்பன் செட்டியார் ( ராமநாதன் தந்தை- வள்ளியின் தாத்தா) கல் குவாரியை 4 முறை டெண்டர் எடுத்தார். இந்த குவாரியில் நான் டிரில்லிங் ஆப்புரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தேன். 1967 -ல் எனக்கு அடிபட்டு கால் முறிவு ஏற்பட்டது. இது வெளியில் தெரிந்தால் குவாரிக்கு தடைவிதித்து விடுவார்கள்  என்று கூறி, திரிசூலத்தில் வாடகை வீட்டில் இருந்த என்னை மாதம் சம்பளம் ரூ.300 கொடுத்து குவாரி அருகே குடிசை போட்டு தங்கிக்கொள் என்றார். அன்று முதல் இன்று வரை அந்த குடிசையில் தான் இருக்கிறேன்.  குவாரிக்கு கீழே 3 ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தது. தற்போதைய பச்சையம்மன் நகர். அந்த நிலம் ராயப்பேட்டையை சேர்ந்த குர்ஷித் பேகம் என்ற முசுலிமுக்கு சொந்தம். இந்த நிலத்தை 3000 ரூபாய்க்கு  வாங்கினார்.பிறகு அந்த மூன்று ஏக்கர்  உட்பட  பத்து ஏக்கர் ஏரி புறம்போக்கு என்பதால் அரசாங்கம் அதனை கைப்பற்றி பர்மா அகதிகள் 132 பேருக்கு  வீடு கட்டிகொள்ள அனுமதித்தது.

குவாரி இருந்ததற்கான அடையாளமாக நிற்கும் பிளந்த பாறைகள்

வீடு கட்டும் பணி  பாதி முடிந்த நிலையில் தன்னுடைய இடத்தை பறிகொடுத்த வெறுப்பில் திரிசூலம் மலை குவாரியை குத்தகைக்கு எடுத்த ராஜகோபால் ஐய்யரும், வீரப்பன் செட்டியாரும் சேர்ந்து சுரங்க விதிப்படி (Mines act)  குவாரிக்கு அருகில் வீடு கட்ட முடியாது என்றும், 1500 அடிக்கு அப்பால் தான் கட்ட முடியும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஸ்டே வாங்கி விட்டார்கள்.  1973-ல் டெண்டர் முடிந்து விட்டது. மீண்டும் கட்டிடப்பணிகள் தொடங்கியது.

இதற்கிடையில் நான் குடிசை போட்டு தங்கியிருந்த இடத்திற்கு நிலவரி கட்ட சொல்லி அப்போதைய முனிசிபாலிட்டி அதிகாரி வெங்கட்ராம ஐயர் ஒரு நோட்டிசு அனுப்பினர். அன்று முதல் இந்த இடத்திற்கு நிலவரி கட்டி வருகிறேன். மீண்டும் 1976 -ல் இந்த குவாரியை நான் தான் டெண்டர் எடுத்தேன் ஆகவே இந்த நிலம் எனக்கு தான் சொந்தம் என்று வழக்கு  போட்டார் வீரப்பன் செட்டி. அந்த வழக்கில் நிலவரி நான் கட்டி வந்ததற்காக எனக்கு தான் சேரும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து  பதினான்கு முறைக்கு மேல் வழக்கு போட்டு அனைத்தும் தள்ளுபடி ஆகிவிட்டது.

நித்தியானந்தா அமைத்துள்ள சுற்றுசுவருடன் கூடிய காலி நிலம்

2007 -ம் ஆண்டு அவருடைய மகன் ராமநாதன் செட்டியார் இந்த இடம் எங்களுடையது என்று கூறி நித்தியானந்தாவுடன் வந்து என்னிடம் பேசினார்கள்.இடத்தை காலி செய்ய சொல்லி மிரட்டினார்கள். 25.03.2007 -ல் இந்த இடத்தில் இருந்த பத்து வீடுகள், தென்னை அனைத்தையும் போலிசு பாதுகாப்புடன்  இடித்து விட்டு மலைமகள் நகரில்  வசிக்க கூடிய மக்கள் செல்வதற்கு கூட வழிவிடாமல் மிகப்பெரும் சுற்று சுவர் கட்டினார்கள்.  அப்பொழுது நித்யானந்தாவின் செருப்பை வைத்து பூஜையும் போட்டார்கள். அதன் எதிரில் ஒரு குடிசை போட்டு பாதுகாப்பிற்கு இரண்டு வாட்ச்மேன் போட்டார்கள். அன்று முதல் அவர்களுக்கு எதிராக போராடி வருகிறோம்.

2015-ல் நான் இங்கு வீடு கட்டிய போது கவுன்சிலர் அன்புகுமாரை வைத்து மிரட்டினார்கள். ராமநாதன்  மகள் வள்ளி என்னுடைய நிலம், அதில் மக்கள் நுழைகிறார்கள்  என்றும்  வழக்கு போட்டார். அந்த வழக்கு நடந்து வருகிறது.

2017 மார்ச் மற்றும் மே மாதம் ரஞ்சிதாவுடன் வந்து பார்வையிட்டு சென்றார்கள். அன்று முதல் பாதுகாப்பிற்கு இருந்த வாட்ச்மேன்களை துரத்திவிட்டு அந்த குடிசையில்  நித்தியின் சீடர்கள் வந்து தங்க ஆரம்பித்தனர். அப்பொழுது தொடங்கிய அவர்களின் பொறுக்கித்தனம்  நாளுக்கு நாள் அதிகரித்தது” என்று கூறினார்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்பாணை

பொறுக்கி நித்தியின்  சீடர்கள் செய்யும் கேடுகெட்ட அயோக்கியத்தனங்களைப் பற்றி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், இந்த இடத்தில் 7 சென்ட்டிற்கு மட்டும் பட்டா உள்ளது, நித்தி சீடர்கள்  தினமும் ஏதாவது பூஜை செய்து இங்கு இருக்கக் கூடிய குழந்தைகளை கூட்டி சென்று அவர்களுக்கு பிரசாதம் கொடுப்பார்கள். அன்னதானம் வழங்கும் போது அவர்களை போட்டோ எடுத்துக்கொள்வார்கள். இந்த காம்பவுண்டை சுற்றியும் கண்காணிப்பு கேமாரா வைத்துள்ளார்கள். யாராவது உள்ளே வந்தால் அடிப்பார்கள். அவசரத்துக்கு ஒதுங்கும் பெண்களை  வீடியோ எடுக்கிறார்கள். நாங்கள் இதனை கேட்டால் அப்படித் தான் செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று மிரட்டுகிறார்கள்.

“குழந்தைகளை எங்களிடம் விட்டு விடுங்கள் ஒரு குழந்தைக்கு ஐந்து லட்சம் தருகிறோம். பெங்களூரு ஆசிரமத்தில் தங்க வைத்து படிக்க வைக்கிறோம்” என்பார்கள்.  உங்களில் யாரேனும் சந்நியாசியாக வருவதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்று இங்கு இருக்க கூடிய இளைஞர்களை மூளைச்சலவை செய்கிறார்கள். இரவு நேரத்தில் ஏதாவது பள்ளம் தோண்டுகிறார்கள். என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு போலிசும் பாதுகாப்பு கொடுக்கிறது.  மின்சாரத்தை திருட்டுத் தனமாக தான் எடுக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.

இந்த பிரச்சனை தொடங்கிய காலம் முதல் எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் அரசு செய்து கொடுக்கவில்லை. தண்ணீர், சாலை, கழிநீர் வாய்க்கால் என எதுவும் இல்லை. மழைக்காலத்தில் மலைமேல் இருந்து விழும் நீர் செல்வதற்கு எந்த வழியும் இல்லாததால் தண்ணீர் முழுதும் தேங்கி நிற்கும், தெருவில் நடக்கவே முடியாது. அதிகாரியிடம் நாங்கள் முறையிட்டால் இந்த பிரச்சனை முடியட்டும் என்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் இதனை முடிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பதே இல்லை. நாங்கள் படிக்காதவர்கள். எங்களால் என்ன செய்ய முடியும்? தினமும் வேலைக்கு போனால் தான் எங்கள் பொழப்பு என்றாகிவிட்டது. தினந்தோறும் வேதனையாக உள்ளது. இந்த அரசின் மீது இருந்த நம்பிக்கை எங்களுக்கு விலகி விட்டது. போலீசு, தாசில்தார் எல்லாரும் இப்பொழுது நித்தியானந்தாவின் கையில் தான் இருக்கிறார்கள்.

எல்லா கொடுமைகளையும் விட  உச்ச கட்டமாக பெண்களை தினந்தோறும் கிண்டல் செய்கிறார்கள். அசிங்கமாக பேசுவது, பாலியல் சைகைகள் செய்வது என்று இவர்களுடைய அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவர்கள் சாமியாரே இல்லை. ஒரு பொறுக்கியை விட கேவலமாக நடந்து கொள்கிறார்கள். எங்களுடையை கோபத்தை வேண்டுமென்றே தூண்டி விடுகிறார்கள். 18 -ம் தேதி திருமணமான பெண்ணை கிண்டல் செய்தார்கள்.  நாங்கள் பெண்கள் அனைவரும் சேர்ந்து கேட்டதற்கு எங்களை போட்டோ எடுத்தார்கள். போட்டோ எடுக்க வேண்டாம் என்ற எங்களை கடுமையாக அடித்தார்கள். அசிங்கமாக திட்டினார்கள். நாங்கள் திருப்பி அடித்தோம்.

போலிசு, எங்களை “நித்தியானந்தா சீடர்கள் மேல் கேசு கொடுங்கள்” என்று கூறி ஸ்டேசனுக்கு அழைத்து சென்று பெண்கள் என்றும் பார்க்காமல் அசிங்கமாக திட்டினார்கள். கேசு போட்டு விடுவோம் என்று எங்களையே மிராட்டினார்கள். இந்த பிரச்சனையில் சம்பந்தமே இல்லாத 9 பேரை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்கள். அன்று இரவு முதல் போலிசை குவித்து மிரட்டி மிரட்டினார்கள். போலிசின் மிரட்டலுக்கு பயந்து அப்பகுதியில் இருந்த இளைஞர்கள்  வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருக்கிறார்கள். ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கிய நித்தியனந்தாவுக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. மோடியோட சப்போர்ட் இல்லாம இவனால இவ்ளோ அட்டூழியம் செய்ய முடியாது என்று கூறி முடிக்கும் போதே அவர்களிடம் ஒரு இயல்பான பயம் தென்பட்டது.

இந்நிலையில் 19 -ம் தேதி  தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலகத்தில் இருந்து மலைமகள் பகுதி மக்கள், கிருஷ்ணன், சன்னியாசி வள்ளி ஆகியோரை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து அந்த இடம் முழுவதும் நித்தியானந்தாவின் சீடரான வள்ளிக்கு தான்  சொந்தம் நீங்கள் அனைவரும் காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். தற்பொழுது அந்த பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட போலிசை குவித்து அவர்களை வெளியேற்றும் பணியை செய்து வருகிறார்கள். அரசு, போலிசு அனைத்தும் கார்ப்பரேட் சாமியார்களுக்கு அடியாள் தான் என்பதை நிரூபித்துள்ளது.

அதானிக்கும், அமெரிக்காவிற்கும் சேவை செய்யும் மோடி அரசாகட்டும், மோடி அரசின் பினாமியாக தமிழகத்தை கொள்ளையடிக்கும் எடப்பாடி அரசாகட்டும் இரண்டும் பொறுக்கி சாமியாரை ஆதரிக்கின்றன. பகுதி மக்கள் இந்த பொறுக்கிக் கூட்டத்தை துரத்துவது என்று முடிவெடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் இழிவுகளில் ஒன்றான நித்தியை துரத்துவது அவர்களுக்கு மட்டுமல்ல நமது அனைவரின் கடமையும் கூட.

செய்தி, புகைப்படங்கள்  : வினவு செய்தியாளர்