privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்விவசாய சங்கங்களை ஒன்று திரட்டிய சீர்காழி பொதுக்கூட்டம்

விவசாய சங்கங்களை ஒன்று திரட்டிய சீர்காழி பொதுக்கூட்டம்

-

விவசாயியை வாழவிடு என்று தமிழகத்தில் பேசக்கூடாது. சீர்காழியில் பொதுக்கூட்டம் நடத்த 10.05.2017, 22.05.2017 மற்றும் 28.05.2017 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக போலீசார்  இறுதி நாளில் அனுமதி மறுத்தனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என நீதிமன்றத்தில் போலீசார் பதில் மனு தாக்கல் செய்தது. ஆனாலும் நாம் போராடி அனுமதி பெற்று ஒரு நாளில் திட்டமிட்டு பொதுக்கூட்டத்தை 17-6-2017 அன்று மாலை நடத்தினோம். இதற்கு முன்னர் போலீஸ் மறுத்ததற்கு காரணம் இந்தக் கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வருமாம். கூட்டம் முடிந்து விட்டது. எந்தப் பிரச்சினையும் வரவில்லை. மாறாக இந்தக் கூட்டம் விவசாயிகளிடையே பெரும் விழிப்புணர்வை உருவாக்கியிருக்கிறது. இதைத்தான் போலிஸ் தடை செய்ய நினைக்கிறதோ?

கூட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமையுரையாற்றினார்

அவரைத் தொடர்ந்து தெற்கு ராஜன் வாய்க்கால் சங்கத்தின், திரு ராமசாமி அவர்கள் பேசுகையில், “இன்று மக்களை பற்றி சிந்திக்காத அரசால் விவசாயி வறுமையால் செத்து மடிகிறான். இயற்கையை வெல்வது மனிதனின் இயல்பு. வெள்ளம் வரும்போது அணை கட்ட வேண்டும். தண்ணீர் பஞ்சம் வருவதற்கு முன்பு அணைக்கட்டி தண்ணீர் சேமிக்க வேண்டும்.  தமிழகத்தை பொறுத்தவரை 7 நதிகள் வற்றாத ஜீவ நதிகள் தடுப்பணை கட்டியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கும்.  இந்த அரசியல்வாதிகளை நம்பி பயனில்லை, விவசாயியை வாழ வைக்க வேண்டுமானால் நம்முடைய அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.” என்றார்.

அதற்கடுத்தபடியாக ம.உ.பா.மையத்தின் கடலூர் மாவட்டச் செயலர், வழக்கறிஞர் செந்தில், பேசுகையில் “15, 20 ஆண்டுகளுக்கு முன்னால் பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமானால் அது உடனடி சாத்தியம்.  ஆனால் இன்றைய ஜனநாயக’ நாட்டில் அது சாத்தியமில்லை.” என அரசை அம்பலப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர், திரு. சிவபிரகாசம், பேசுகையில் “41 நாட்கள் அய்யாகண்ணு போராட்டம் நடத்தினார் அரசுக்கு மானமிருந்தால் அவர்களை கேட்டிருக்க வேண்டும். விவசாயியை பற்றி யார் பேசினாலும் நாங்கள் அவர்கள் பக்கம் நிற்போம்.  39 எம்.பி எவனாவது எதிர்ப்பு தெரிவிக்கிறானா? எந்த அதிகாரத்திற்கும் பயப்படாமல் உயிரே போனாலும் பரவாயில்லை என்று போராட வேண்டும். விவசாயிக்கு இந்த பச்சை துண்டுதான் மிச்சம் அதிகாரி  எவனுக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.

அதன் பின்னர் கொள்ளிடம் மேற்கு பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு.விசுவநாதன், பேசுகையில் “விவசாயக் கடன், கல்விக்கடன், எதையும் தள்ளுபடி செய்யவில்லை, உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் இருந்தால் போதும்  எந்தத்தள்ளுபடியும் எங்களுக்கு வேண்டாம்”. என்றார்.

அவருக்கடுத்தபடியாக தெற்கு ராஜன் வாய்க்கால் சங்கத்தலைவர் திரு காந்தி (எ) புருஷோத்தம்மன், பேசுகையில் “இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டியிருக்கிறார்கள் விவசாயிகள். கட்டிய இன்சூரன்ஸ்க்கு கூட பணத்தை வாங்க முடியவில்லை” என்றார்.

கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. ரவீந்திரன், அவர்கள் பேசுகையில் “கடந்த மன்மோகன் ஆட்சியில் திட்டக்குழுவின் துணைத்தலைவரிடம் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி நான் பேசத்தொடங்கும் போதே “விவசாயிகள் பற்றி பேசாதே, வெளியே போ” என்றார். விவசாயியைப்பற்றி பேசாத திட்டக்குழு யாருக்காக இருக்கிறது. அந்தக்கூட்டம் தமிழ்நாட்டில் நடந்திருந்தால் செருப்பாலேயே மாண்டேக் சிங்கை அடித்திருப்பேன்”

தமிழக விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலர் திரு நந்தகுமார், பேசுகையில் கட்சி, மதம், சாதி என்று பல்வேறு வகையில் விவசாயிகளை பிரித்து வைத்து இருக்கிறார்கள். விவசாயிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அதை தெரிந்து கொள்ளத்தான் இந்த பொதுக்கூட்டம், மத்திய அரசு கரும்புக்கு 3 வருஷமா விலை சொல்றான். மாநில அரசு ஆதார விலை நிர்ணயிக்கிறான்.  ஆதாயம் அடைகிறான் முதலாளி.  அதிலும் 100 ரூபாயை பிடித்துகொண்டுதான் கொடுக்கிறான்.  இதுக்காகவா இந்த பிடுங்கிகளை ஆட்சியில உட்கார வைத்தோம்? நம்மை கொள்ளையடித்த இவர்களின் சொத்தையும், ஆட்சியையும் பறிமுதல் செய்யணும் இதற்கு மக்கள் அதிகாரம் தான் வேண்டும்.

பெருமாள் ஏரிநீர் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் திரு சண்முகம் விவசாயிகள் பிரச்சனை பெரிது, ஆனால் பிரிந்து கிடக்கிறாங்க, பிரிந்து கிடந்த விவசாயிகளை ஒரேமேடையில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.  இதை மக்கள் அதிகாரம்தாம் செய்திருக்கிறது. எல்லா விவசாயிகளையும் ஊர் ஊரா போய்திரட்டணும்.  ஆந்திரா, உ.பி. மாதிரி போராட்டம் நடத்தி தமிழ்நாட்டிலும் கடனை தள்ளுபடி செய்யணும்.

வெள்ளாற்றுபாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திரு பஞ்சமூர்த்தி அவர்கள் பேசுகையில் வெள்ளாற்று மணல் போராட்டம்  என்பதே மக்கள் அதிகாரம் செய்ததுதான் மக்களை ஊர் ஊராக திரட்டினோம்.  மணல் அள்ளகூடாதுன்னு சொல்லி 2000 பேர் ஆற்றிலே உணவு சமைத்து சாப்பிட்டு படுத்து தூங்கி போராட்டம் நடத்தினோம். மணல் குவாரியை நிறுத்தினோம் அப்போது ஒரு போலிசு எங்களிடம் வந்து எங்கள் ஊரில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்னார்.  வெள்ளாற்று போராட்டம் போல லட்சக்கணக்கில் விவசாயிகளை திரட்டாமல் விவசாயப் பிரச்சனை தீராது.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பிகாபதி பேசுகையில் விவசாயிகள் நாட்டின் முதுகு கெலும்பு  என்று சொன்ன அரசு உண்டு இன்று விவசாயி முதுகெலும்பை உடைக்கிறான்.  இந்த மண்தான் நம் உயிர் நம் உடலில் ஓடும் ரத்தம் சதைக்கு காரணம் மண்தான் இதை புரிந்துகொள்ள வேண்டும்., கடலை அழிக்கிறான், மண்ணை அழிக்கிறான் மோடி அரசாங்கம். உழவர்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்

வழக்கறிஞர் வேலு குபேந்திரன், பேசுகையில் விவசாயி இல்லையென்றால், மருத்துவமோ, வழக்கறிஞரோ கிடையாது என்ற கருத்து தான் உண்மை. பேருக்கு போராட்டம் நடத்தினால் வெல்ல முடியாது.  காஷ்மீர் ராணுவம் கூறுகிறது, மக்கள் கல்லால் அடித்தால் நாங்களும் திருப்பி கல்லால் அடிப்போம் என்கிறான். பெண்களை மயிரை பிடித்து அடிக்கிறானே நாங்களும் திருப்பி அடிப்போம்.

கரும்பு விவசாய சங்கம் திரு இமயவரம்பன் ஓடுகின்ற ஆற்றை தடுத்து நீரை பயன்படுத்தியது தமிழன் தான்.  ஆனால் இப்போது பலவருடமாக தண்ணீர் கடலுக்குதான் போகிறது.  சர் ஆர்தர் கார்ட்டன் கல்லணை கட்டிய முறை பிரமிக்க வைக்கிறது.  தமிழகத்தில் 23 நாட்கள் தான் நல்ல மழை இருக்கும் நான்கு லட்சம் விவசாயிகள் நாடு முழுக்க செத்திருக்கிறார்கள்.யாரும் சாகவில்லை என்று தமிழக அரசு கோர்ட்டில் சொல்கிறது. இந்த அயோக்கியத்தனத்தை நாம் முறியடிக்க வேண்டும்.

தோழர் காளியப்பன் பேசுகையில் “விவசாயியை வாழவிடு என்று பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டால் அனுமதி கொடுப்பதில்லை. 2015-ல் மூடு டாஸ்மாக்கை ! முழக்கத்தை மக்கள் நடைமுறைபடுத்திருக்கிறார்கள்.  அடுத்து வயலைபற்ற வைத்து விடுவோம் என்று அஞ்சுகிறார்கள்.  விவசாயிகளை வாழவிடாமல் தடுப்பது யார்? இந்த அரசுதானே? மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாயி வருமானம் இரண்டு பங்கு உயர்த்தப்படும் என்றார் மோடி நடந்ததா? அத்தனையும் பொய் வாக்குறுதி, மன்மோகன்சிங், மாண்டேக் சிங் அலுவாலியா திரும்ப, திரும்ப  சொன்னார்கள் விவசாயியே விவசாயத்தை விட்டு வெளியே போ . அரசு விவசாயத்தை கை கழுவி விட்டது,.  தமிழகத்தில் ஆட்சியே இல்லை, ரவுடிகளும், அதிகாரிகளும் தான் ஆள்கிறார்கள்.  இந்தியாவின் 70 சதவிகித விவசாயிகள் வறுமை சாவுக்கு தள்ளப்படும் நிலையை தடுக்க வேண்டும்.”  அதற்காக தான் இந்த கூட்டம் என்று பேசி முடித்தார்.

மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ பேசுகையில் நமக்கு ஒரு நாளில் கூட்டம் நடத்த கற்று தந்திருக்கிறார்கள். போலீசு  என்பவர்கள் கெட்டவங்க, என்று நாம் சொல்லித்தான் மக்கள் நம்புகிறார்கள் என்றில்லை. மக்களே தங்கள் சொந்த அனுபவத்தில் அறிந்து இருக்கிறார்கள்.அப்படித்தான் விவசாயத்திலும் அரசுதான் விவசாயியை வாழவிடவில்லை என்பதும் விவசாயிகள் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறார்கள்.  தண்ணீரில் உயிரினங்கள் இருந்தால் அது நல்ல நீர் உயிர் இல்லையென்றால் அது குடிக்க உபயோகமில்லாத நீர்.  அதுபோல விவசாயி சமூகத்தின் உயிர்நாடி அவனில்லையென்றால் சமூகம் இல்லை விவசாயி தன் சாவின் மூலம் சமூக அழிவை எச்சரிக்கை செய்கிறான்,

3 மாநில  விவசாயிகளின் கடனோ ஒரு லட்சம் கோடிக்கு கீழ்தான் வருகிறது.  ஆனால் 3 முதலாளிகளுக்கு  மட்டும் ஒரு லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய எவ்வளவு செலவாகும்னு தெரியாதா? விவசாயியை வாழவிடு என்ற திரும்பி திரும்ப சொல்லி பாருங்கள், பச்சை வயல் பற்றி எரியும்.  100 நாள் வேலை திட்டத்தில் ஒதுக்கும் தொகையைவிட விவசாயத்திற்காக ஒதுக்கும் தொகை குறைவு. இப்படி மையமான விஷயங்களில் அரசின் சிண்டை பிடித்து கேட்க வேண்டும்.

நெடுவாசல் போராட்டத்தில் மாணவர்கள் போனா தீவிரவாதினு எந்த சட்டம் சொல்கிறது? அய்யாக்கண்ணுவின் போராட்டத்தை ரசிக்கிறது அரசு.  நம் போராட்டத்தை பார்த்தால் அரசு, பதற வேண்டும்

விவசாயி வருட வருமானம் 20000, மாதம் என்றால் 1700-ல் எப்படி  வாழமுடியும்? அரசு ஊழியர் கடைநிலை ஊழியர் மாதம் 18000/- சம்பளம் விவசாயிக்கு 1700 என்ன கணக்கு இது.  அதிகாரி சொன்னதைத்தான் விவசாயி பயிர் செய்தான், விவசாயி தூக்குல தொங்குறான்.  அதிகாரி சாகவில்லை. நீர் நிலையை அழிச்சது, இந்த அரசுதான். மதுரை கோர்ட், விழுப்புரம் பஸ் ஸ்டாண்டு எல்லாம் நீர் நிலையில்தான இருக்குது.  இந்த அரசு கட்டமைப்பிடம் இந்த ஆட்சியிடம் எப்படி நியாயம் கிடைக்கும்?

விவசாயிகள் தப்பிப்பதற்கு ஒரேவழிதான் இருக்கிறது. நாங்கள் சொல்வதை கேளுங்கள் கோர்ட்டு சொன்னாலும் டாஸ்மாக் கடைய மூட முடியாது என்ற இந்த அரசிடம் மக்கள் கெஞ்சவில்லை. என் ஊர்ல கடை வைக்கிறதுக்கு நீ யார் என்று அடித்து நொறுக்கியதைப்போல உனக்கு ஆளத் தகுதியில்லை என அறிவிப்போம். விவசாயிகள் மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் சேர்ந்த நம்முடைய வாழ்க்கையை அழித்த இந்த அமைப்பை அடித்து நொறுக்க வேண்டும். அரசு கடன் தள்ளுபடி, ஆதார விலை போன்றவற்றை இந்த அரசு இனிமேலும் செய்யாது. ஏனெனில் இது கார்ப்பரேட் அரசாங்கம்.  மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் அனைத்து மாநிலங்களிலும் பற்றி எரிகிறது போராட்டம்.  தமிழகத்தில் பச்சைவயல்கள் பற்றி எரியும். அப்போது இந்த அரசு கட்டமைப்பின் மாயை எரிந்து சாம்பலாகும்.

நிகழ்ச்சியின் இடையிடையே ம.க.இ.க பாடல்கள் பாடப்பட்டன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி, தொடர்பு எண்- 98434 80587