privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைசென்னையில் விவசாயம் உண்டா ? படங்களுடன் நேரடி ரிப்போர்ட்

சென்னையில் விவசாயம் உண்டா ? படங்களுடன் நேரடி ரிப்போர்ட்

-

“சென்னைக்கு மிக அருகில்” என்று ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் விளம்பரத்தை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். விளைவு, விளைநிலங்கள் எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளானது. அவற்றில் இருந்து தப்பி விவசாயம் நடப்பது என்பது மிக மிக அரிது தான். இந்த புரோக்கர்களின் பிடியில் சென்னை போரூர் அருகே உள்ள கோவூர் கிராமும் தப்பவில்லை. இருப்பினும் அங்கே ஒரு சில இடங்களில் மட்டும் விவசாயம் நடக்கிறது.

“இந்த கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 500 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்தார்கள். அவை கொஞ்சம் கஞ்சமாக சுருங்கி இப்பொழுது 70 ஏக்கருக்கும் குறைவாக வந்து விட்டது. முப்போகம் விளைந்த நிலத்தில், நெல்லை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பிய காலம் சென்று இப்பொழுது நிலம் , வீடு விற்பனைக்கு என்று எழுதி அந்த நிலத்தில் விளம்பரம் செய்துள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் விவசாயத்தில் லாபம் இல்லை , தண்ணீர் இல்லை.

விவசாயி அருள்தாஸ்

இந்த கோவூர் கிராம விவசாயிகளுக்கு பாசன நீர் செம்பரம்பாக்கம் ஏரி நீர் தான். அந்த நீர் தற்பொழுது கார் கம்பனிகளுக்கும், சென்னை மக்களின் குடிநீருக்கும் தான் பயன்படுகிறது. விளைநிலங்களுக்கு செல்லும் கால்வாய்க்கால் அனைத்தும் எங்கு இருக்கிறது என்றே தெரியவில்லை என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.
விளைநிலங்கள் அடுக்குமாடி கட்டிடங்களாக மாற்றப்பட்டு வரும் வேளையில், அந்த கட்டிடங்களுக்கு நடுவே தற்பொழுது நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அருள்தாஸ் என்ற விவசாயியை சந்தித்து, விவசாயத்தில் லாபம் இல்லை என்கிறார்கள். நீங்கள் எப்படி பயிர் செய்கிறீகள் என்றோம்.

இலாபம் இல்லை என்பதால் தான் இந்த நிலங்களை எல்லாம் விற்று விட்டார்கள். வீடுகள் வந்துவிட்டது. எனக்கு நிலத்தின் மீது இருந்த பாசம் விற்காமல் இருக்கிறேன். நாற்பது வருடமாக இந்த விவசாயத்தை தான் பார்க்கிறேன். இதை விட்டால் எனக்கு வேறு தொழிலும் தெரியாது. நான் மூன்று போகமும் பயிர் செய்கிறேன். ஒரு போகம் விட்டாலும் அடுத்தது என்னால் பயிர் செய்ய முடியாது. தண்ணீர் கிடைக்காது, நிலம் வறண்டு விட்டால் இப்பொழுது கிடைக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்யவும் முடியாது அதிக செலவு பிடிக்கும். அதனால் தான் விடாமல் நஷ்டம் ஏற்பட்டாலும் விவசாயம் செய்கிறேன்.

ஒரு ஏக்கருக்கு நெல் பயிரிட பிடிக்கும் செலவை ஒவ்வொன்றாக அடுக்கினார். முதலில் நாற்றாங்கால் செலவு, 1 கிலோ விதை உட்பட ரூ.2500, பதினைந்தாம் நாள் மருந்து அடிக்க ரூ.500, நடவுக்கு முன்பு மூன்று சால் உழவு ஓட்ட வேண்டும் அதற்கான செலவு ரூ.6000, பரம்பு கூலி ரூ.600, அடி உரமாக காம்ப்ளக்ஸ் 2 மூட்டை ரூ.2500, நடவு அன்று நாற்று எடுக்கும் கூலி, நடவு கூலி அனைத்தும் காண்ட்ராக்ட் ரூ.3500, வேலையாட்களுக்கு உணவு மூன்று வேளை ரூ.2000 (உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் இல்லை என்பதால் ஒப்பந்த முறையில் திண்டிவனத்தில் இருந்து ஆட்களை அழைத்து வருகிறார்கள்) , நடவு நட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு யூரியா, பொட்டாஷ் உரத்திற்கு ஆள் கூலியுடன் ரூ.2500, நாற்பத்தைந்து நாட்கள் கழித்து ஒரு யூரியா , கதிர் வரும் 60 வது நாளில் சல்பேட், பூச்சி மருந்து என்று ரூ.1500, அறுவடையின்போது ரூ.2500, இதர செலவுகள் உட்பட மொத்தமாக ரூ.25000 வரை செலவாகிறது.

ஆனால் அறுவடையின் போது கிடைக்க கூடியதோ வெறும் 25 அல்லது 30 மூட்டை தான். மூட்டைக்கு ரூ.1000 என்றாலும் மிஞ்சுவதோ வெறும் ரூ.5000 தான். அதுவும் எங்கள் உழைப்பிற்கு எடுத்துக்கொண்டால் ஒன்றும் மிஞ்சுவதில்லை. நெல் விலை எப்பொழுதும் ஒரே சீராக இருந்தால் பிரச்சனை இல்லை. எப்பொழுது விலை ஏறும், குறையும் என்று தெரியாது. நெல் மூட்டைகளை காஞ்சிபுரம் கமிட்டிக்கு தான் கொண்டு போகணும். அவ்வளவு தூரம் சென்று வர ஆகும் செலவை ஈடுகட்ட தனியார் வியாபாரியிடம் கொடுத்து விடுகிறோம். எங்களுக்கென்று நாங்கள் ஒருபிடி நெல் கூட எடுத்துக் கொள்வதில்லை.

என் பிள்ளைகளை எல்லோரையும் அரசுப் பள்ளியில் படிக்க வைத்ததால் பெரிய சிரமம் தெரியவில்லை. தனியார் பள்ளியில் படிக்க வைத்திருந்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருப்பேன். இந்த நிலத்தை காப்பற்ற வேண்டும் என்பதற்காக நஷ்டத்திலும் இந்த விவசாயத்தை செய்து வருகிறேன். ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நிலத்தை விற்கச் சொல்லி தொடர்ந்து நச்சரிக்கிறார்கள். விவசாயத்தின் மீதான பிடிப்பு தான் தற்பொழுது வரை பயிர் செய்து வருகிறேன் என்றார்.

திண்டிவனத்தில் இருந்து வேலைக்கு வந்திருந்த விவசாய தொழிலாளிகளிடம் பேசினோம். அவர்களில் நடவு வேலைக்கு வந்திருந்த பெண்கள், வேலைக்கு போகாத குடிகார கணவனால் குடும்பத்தை தான் பொறுப்பேற்று நடத்த வேண்டிய கட்டாயத்தாலும், இல்லையெனில் குடியினால் கணவனை இழந்த பெண்களும் தான் வந்திருந்தார்கள். “எங்கள் ஊரில் சுத்தமாக விவசாயம் இல்லை. வேறு எந்த வேலையும் இல்லை. அதனால் தான் இவ்வளவு தொலைவு வந்து வேலை செய்கிறோம்” என்றார்கள்.

நடவு நடும்போது இடுப்பு வலி ரணமா இருக்கும், முக்கியமாக ஆப்புரேசன் செஞ்ச ஒடம்புக்கு தான் ரொம்ப பிரச்சனையா இருக்கும். இந்த வலியோட தான் வீட்டு வேலையும் பாத்துக்குறோம் என்றனர்.

அதில் மல்லிகா என்ற பெண் ஒருவர் “ ஊர்ல சாராயம் வித்துகிட்டு இருந்தேன். அந்த தொழில செய்ய மனசு வரல. அதை விட்டுட்டு விவசாய வேலைக்கு வந்துட்டேன். இப்ப கெடக்கிற வேலைய செய்யுறேன். சாராயம் விக்கும்போது பணம் இருந்தது, ஊர்ல எல்லோரும் என்ன திட்டுவாங்க. இப்ப இந்த வேலை கஷ்டமா தான் இருக்கு. ஆனா கொஞ்ச நிம்மதியா இருக்கேன் என்றார்.

அதேபோல், ஆண்களும் நாற்று பிடுங்கியவரே இந்த சாண் வயித்துக்கு எந்தெந்த ஊருக்கெல்லாம் வந்து பொழைக்கிறோம் பாருங்க. தேள், பூரான், பாம்பு எல்லாம் நாற்றில் இருக்கும். எது கடித்தாலும் தண்ணியில் தெரியாது. இரண்டு தோள் பட்டை கடுமையான வலி ஏற்படும், தொடர்ந்து வேலை செய்தால் ஒன்றும் தெரியாது. ஆனால், இந்த வேலை கிடைப்பதேயில்லை. விவசாயமே அழிஞ்சிடுச்சி என்று சொல்லிக்கொண்டே தங்கள் வேலையை செய்தனர்.

அருகே பரம்பு ஓட்டிக்கொண்டிருந்தவரிடம் மோடி மாட்டையெல்லாம் விற்ககூடாதுன்னு சொல்லிட்டாரே இந்த மாடு வயசாகிடுச்சின்னா என்ன பண்ணுவிங்க என்றோம்.

அவன் கடக்கிறான்…பா அவனா மாடு மேய்க்கிறான். ஏறு ஓட்டுறான். மேல வந்து ஒக்காந்துகினு எதையாது ஒன்னு சொல்லுவான் அதெல்லாமா கேக்க முடியும். அப்புறம் விவசாயம் எப்படி பண்றதாம். நாங்க பொழப்புக்கு எங்க போறதாம். என்னமோ சோறு போடறவன் மாதிரி பேசுறான். பாட்டன் காலத்துல இருந்து மாடு வளக்குறோம், கறி சாப்பிடுறோம். அவன் திடீர்னு வந்து நிறுத்த சொன்னா நடக்கிற காரியாமா… நம்ம ஊர்ல அதெல்லாம் முடியாது என்று சொல்லிக்கொண்டே மாட்டை வேகமாக அதட்டினார்.

செய்தி, படங்கள் : வினவு செய்தியாளர்.

  1. மரபு முறை விவசாயம் மெல்ல, அல்ல, விரைந்தே இனி சாகும்! அமெரிக்க அரசின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டி, இந்திய விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கபட மாட்டாது! அதானிகள், அம்பானிகள், ஏற்கனவே டாடா வளைத்து போட்ட டீ எஸ்டேட் களை போல, தனியார் மானாபொலி ஆகும்! மீண்டும் அய்யர் பண்ணைகள் புதிய பெயரில் எதிர்பார்க்கலாம்! விவசாய கூலிகள் ஒன்று போராடி மடியலாம் அல்லது நிதானமாக வறுமையில் சாகலாம் சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ் !

  2. 2000ஆம் ஆண்டு பாஜக ஆட்சி காலத்தில் வந்த புழல் – தாம்பரம் புறவழி சாலைதான் இந்த காரம்பாக்கம், கோவூர், குன்றத்தூர், திருநீர்மலை பகுதிகளில் விவசாய நிலங்களை ஒழித்துகட்ட கொள்ளி கட்டை கொண்டு வந்தது.

    1980, 90களில் தமிழ் திரைபடங்களில் கிராமமாக கட்டப்பட்டது இந்த கோவூரும், குன்றந்த்தூருமே.

    2015 டிசம்பரில், புரட்சிதலைவியின் சீரிய நிர்வாக திறமையால் ஏற்படுத்தப்பட்ட வெள்ளத்தின் போது அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களும், இந்த செம்பரம்பாக்கம் பாசனத்தில் இருந்த நிலங்களில் வந்த குடியிருப்புகளே .

  3. வாழ்க்கை முழுதும் விவசாயிக்கு உழைக்கும் மாடுகளுக்கு ஓய்வூதிய(?! 🙂 ) திட்டத்தை கொண்டு வருகிறது காபிடலிச மோடி அரசாங்கம்.

    லாபம் தராத மாடுகளை கசாப்பு கடைக்குதானே அனுப்ப முடியும் என்று காபிடலிசம் பேசுகிறார்கள் கம்ம்யூனிஸ்ட்கள் ! ( உஷ் CTS முதலாளி காதில் விழப்போகிறது ..)

    என்ன கொடுமை சரவணன் இது !

    • என்னது மாட்டுக்கு ஓய்வூதியமா? ஆர்.எஸ்.எஸ் மங்கிகள் மட்டுமே இப்படி ஒரு விளக்கத்தை சொல்வார்கள். ஒரு வேளை அவர்களே இப்படி சிந்தித்திருப்பார்களா என்று தெரியவில்லை. உங்களைப் போல அறிவாளிகள் தான் சொல்லிக் கொடுக்கறீங்க போல இருக்குதே..

      நாங்க விவசாயிகளை பத்தி யோசிச்சா, உங்க மூளை மாட்டை பத்தி யோசிக்குது. நாங்க தொழிலாளியை பத்தி யோசிச்சா உங்க மூளை முதலாளியைப் பத்தி யோசிக்குது.

      மாட்டு சாணிய தின்னு, மாட்டு மூத்திரத்தை குடிப்பனுக்கு மனுசன விட மாடு ஒசத்தி !
      மாட்டு மூளை இருக்குற அறிவாளிக்கு மனுசனும் மாடும் ஒன்னு !

      தொழிலாளர் நல சட்டங்களை திருத்துவதும், தொழிலாளர்களின் பி.எஃப் பணத்தை பிடுங்குவதும் என மோடி அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் இருக்கும் போது மாட்டுக்கு ஓய்வூதியம் ! உங்க ஒப்பீடும், லாஜிகல் ரீசனிங்கும்.. ம் வெளங்கிடும்!

      முதலாளிகளுக்காக உழைத்து தேய்ந்த இயந்திரங்களுக்கு கூட கோடி ஓய்வூதிய திட்டம் அறிவித்துள்ளார். அது மட்டுமில்லை இராணுவத்தில் ஓய்த்து தேய்ந்த இயந்திரங்களுக்கும் மெயிண்டனன்ஸ் என்ற பெயரில் ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. அந்த திட்டத்துக்கு தான் தொழிலாளர்களின் பி.எஃப் பணத்தை திருப்பி விட்டுள்ளார். உங்களுக்கு தெரியுமா?

      கம்யூனிஸ்டுகள் என்னடான்னா தேய்ந்த இயந்திரங்களை காய்லான் கடையில போடச் சொல்றீங்க.. அப்புறம் சி.டி.எஸ், டி.சி.எஸ் கம்பெனிகள் தேய்ந்த இயந்திரங்களை Sorry, தேய்ந்த ஊழியர்களை காய்லான் கடைக்கு போட்டா அதையும் எதிர்த்து போராடுறீங்க..

      என்ன லாஜிக் சார் இது என்று நீங்கள் நேரடியாக கேட்கலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க