ஜுனைத் வீடு திரும்பவில்லை
………………………..
ப்போது இன்னொரு பெயர்
திடீரெனெ பிரபலமாகிவிட்டது
ஜுனைத் என்ற பதினாறு வயது பையனை
ஓடும் ரயிலில் கத்தியால் குத்தி
கொலை செய்துவிட்டார்கள்
ரத்தம் வெள்ளத்தில் மிதக்கும் படங்கள்
பரவலாகக் காணக்கிடைக்கின்றன
ஒரே நாளில் நாம் பிரலமாவதற்கு
தேச பக்தர்களால்
நாம் கொல்லப்படுவதைவிட
சிறந்த வழி வேறு எதுவுமில்லை

ஜுனைத் என்பது ஒரு பையன் அல்ல
ஒரு பெயர் கூட அல்ல
அது ஒரு அடையாளம் அவ்வளவுதான்
அக்லக் என்பது
எப்படி ஒரு அடையாளமோ
அதேபோல
ரோஹித் வெமூலா
எப்படி ஒரு அடையாளமோ
அதே போல

கொலைகாரர்கள் முன்
கைகூப்பிக் கெஞ்சிய
ஒரு டெய்லரின் படம்
நாடு முழுக்க பரவியதே
அந்த டெய்லரின் பெயர் எனக்கு மறந்துவிட்டது
அது முக்கியமல்ல
அந்தப் புகைப்படமும் ஒரு அடையாளம்தான்

ஜுனைத் டெல்லியிலிருந்து
ரமலானுக்கு புத்தாடைகளுடன்
ரயிலில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது
ஒரு கும்பல் அவனைக் கொன்றுவிட்டது என்கிறார்கள்
கொல்வதற்கு காரணம் எதுவும் தேவையில்லை
ஜுனைத்திற்கு ஒரு அடையாளம் இருக்கிறது
அக்லகிற்கு ஒரு அடையாளம் இருக்கிறது
அந்த டெய்லருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது
ஆனால் கும்பலுக்கு எந்த அடையாளமும் இல்லையா?
அவர்களுக்கு பெயர்கள் இல்லையா?

அக்லக்கை கும்பல் ஏன் கொலை செய்தது
என்பது உங்களுக்குத் தெரியும்
அந்த முதியவன் வைத்திருந்த ஆட்டிறைச்சியை
பசு இறைச்சி என சந்தேகித்து கொலை செய்தார்கள்
நாடு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது
இப்போது எந்த இறைச்சியும் தேவையில்லை
மாட்டிறைச்சிகான
உங்கள் உரிமையைப்பற்றி பேசினாலே போதும்
நீங்கள் கொல்லப்படுவீர்கள்
ஜினைத் என்று அழைக்கப்படும்
அந்தச் சிறுவன் கும்பலோடு மாட்டிறைச்சியைப் பற்றி
விவாதித்தான் என்று சொல்லப்படுகிறது
ஆயுதம் தாங்கிய பசுப்பாதுகாவலர்கள்
தங்கள் கத்தியை நேராக அவனது நெஞ்சில் இறக்கினார்கள்

ஜினைத் கொல்லப்பட்ட அன்று
ரமலான் நோன்பு இருந்தான்
அவன் அதிகாலையிலிருந்து
ஒரு சொட்டுத்தண்ணீரைக் கூட
அருந்தியிருக்கவில்லை
அவன் நோன்பு திறப்பதற்கான
கடைசி நோன்புக் கஞ்சியை
அவனுக்கு கொடுக்க முடியாமல் போயிற்று
என்று அவனது தாய் கதறிய செய்தியைப் படித்தேன்
இப்போது முற்றுபெறாத அந்த நோன்பு
முடிவற்றதாக நீண்டுகொண்டே இருக்கிறது
அந்தப் பசியும் தாகமும்
முடிவற்றதாக வளர்ந்துகொண்டே இருக்கிறது

இந்த நாட்டின் இதயமற்ற அரசரே
உங்களால் இதை புரிந்துகொள்ள முடிகிறதா?
ஒரு சிறு பையன்
தன் ரத்த வெள்ளத்தில்
தாகத்தோடு பசியோடும்
மிதந்துகொண்டிருக்கிறான்
அவன் நோன்பை முடிக்கவேண்டிய நேரம்’
கடந்துவிட்டது
உங்களுக்கு இந்தப் பாவத்தில்
எந்தப் பொறுப்பும் இல்லையா?
அமெரிக்க ஜனாதிபதியுடன்
இன்றிரவு நீங்கள் விருந்து மேசையின் முன் அமரும்முன்
உங்கள் கரங்களை ஒரு கணம் உற்றுப்பாருங்கள்
இந்தப் பையன்களும் சேர்ந்துதானே
நீங்கள் இந்தியாவை வல்லரசாக்க வேண்டும்?
உங்களால் இதைத் தடுக்க முடியாது
என்பதும் எனக்குத் தெரியும்
அந்தக் கும்பலைப் போலவே
நீங்களும் ஒரு கருவி
கும்பலுக்கு பெயர் இல்லை
உங்களுக்கு இருக்கிறது
அவ்வளவுதான்

இன்று சுவரில் ஒட்டப்பட்டிருந்த
ஒரு சுவரொட்டியைப் படித்தேன்
‘’ முஸ்லீம்கள் யாரிடமும்
எதைப்பற்றியும் விவாதிக்காதீர்கள்
முக்கியமாக உங்கள் உணவைப்பற்றியோ
நீங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்றோ
உரத்துப் பேசாதீர்கள்
கிசுகிசுக்கக்கூட செய்யாதீர்கள்
நீங்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு
அது மிகவும் அவசியம்’’
ஆம் மெளனமாக இருங்கள்
கொலைகார்கள் உங்கள் அருகிலேயே’
இருக்கக்கூடும்
அவர்கள் உங்களை சற்றுமுன்
கட்டித்தழுவிகொண்டிருந்திருக்கூடும்
நீங்கள் கிரிக்கெட்பந்தயங்களைப்
பார்ப்பதைக்கூட தவிர்த்துவிடுவது நல்லது
நீங்கள் உங்கள் பகைநாட்டு வீரனின் சிக்ஸருக்கு
கைதடிட்டினால்
உங்கள் கைகள் முறிக்கப்படும்

புனித ரமலான் மாதத்தில்
குடிப்பது தடை செய்யபட்டிருக்கிறது
நிரம்பிய கோப்பையிடம்
மனம் கசந்து
நான் என்ன செய்யவேண்டும்
என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்
நான் செய்வதற்கு ஒன்றுமே இல்லை
நான் அமைதியிழந்திருக்கிறேன்
நான் இதையெல்லாம்
கடந்து போய்விடவே விரும்புகிறேன்
இந்த நாட்டில் யாருக்கும் நீதி கிடைத்ததில்லை
கலவரங்களில் கொல்லப்பட்டவர்களுக்கோ
குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கோ
ரயிலில் அடித்துக்கொல்லப்பட்ட
ஒரு பையனுக்கோ
எவருக்கும் நீதி கிட்டப்போவதில்லை

கும்பலைச் சேர்ந்தவர்கள்
காத்திருக்கிறார்கள்
ஒரு பையன் கொல்லப்பட்டதற்காக
தங்களில் இரண்டுபேர் கொல்லப்பட வேண்டும் என்று
அப்போதுதான் பதிலுக்கு இறுநுறு பேரைக் கொல்ல முடியும்
இரண்டாயிரம்பேரைக் கொல்ல முடியும்
அதுதான் திட்டம்
அதற்காக ஒரு பையன்
தான் ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியமலேயே
இறக்கிறான்
மாட்டிறைச்சி என்பது முக்கியமே அல்ல
நிறைய மனித இறைச்சிக்கு தேவை இருக்கிறது
மனித இறைச்சி
அதிகாரத்தின் ஆண்மையை
பெருகச் செய்வது

எனக்கும் ஒரு பெயர் இருக்கிறது
எனக்கும் சில அபிப்பராயங்கள் இருக்கின்றன
அந்தப் பெயர் நான் கொல்லப்படுவதற்கான ஒரு பெயர்
அந்த அபிப்ராயங்கள் நான் கொல்லபடுவதற்கான ஒரு அபிப்ராயங்கள்
மேலும் நான் சுன்னத் செய்யப்பட்டிருக்கிறேன்
இதையெல்லாம் மாற்றியமைப்பது
அல்லது மறைத்துவைப்பது
அவ்வளவு சுலபமல்ல
எனது ஆதார் அட்டையில்
என்னைப்பற்றிய எலலா விபரமும் இருக்கிறது
நீங்கள் என்னிடம் வருவதற்கு
இன்னும் அதிக நேரம் ஆகபோவதில்லை
என்பது எனக்குத் தெரியும்
நான் பயப்படவில்லை
தர்க்கரீதியாக இதை
புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்

மக்கள் அந்தப்பையன் கொல்லப்படுவதை
அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்
என்று சொல்லப்படுகிறது
எல்லோராலும்
வெளிப்படையாக கும்பலில்
சேர்ந்துகொள்ள முடியாது
அவர்கள் தங்கள் மனசாட்சியைக்கொல்வதற்கான
வழிமுறைகளை ஏற்கனவே உருவாக்கிவிட்டார்கள்
அந்தப்பையனின் குரல்வளையை
அறுத்தவர்களில் ஒருவன்
பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்
சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ
தேர்ந்தெடுக்கப்படலாம்
புனித ரமலான் மாதத்தில்
குடிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது

நமது அசோக சக்கரத்தின்
நான்கு சிங்கங்கள்
மிகவேகமாக
ஓநாய்களாக மாறிவிட்டன
அது பரிணாம வளர்ச்சியில்
மிகவும் விசித்திரமான ஒரு சம்பவம்
ரத்தவெள்ளத்தில் மிதக்கும்
ஒரு பையனின் சடலம் அருகே
நான்கு ஓநாய்கள் உற்றுப்பார்த்தபடி
நின்றுகொண்டிருக்கின்றன

– மனுஷ்ய புத்திரன்