privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்பரலோகத்தில் இருக்கும் பிதாவே ! கார்டினல் பெல்லை மன்னியாதிரும் !

பரலோகத்தில் இருக்கும் பிதாவே ! கார்டினல் பெல்லை மன்னியாதிரும் !

-

ஸ்திரேலியாவின் 72 வயது ஜார்ஜ் பெல், ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் மூத்த பாதிரியாராக அறியப்பட்டவர், பிரபலமானவர்.  போப்பாண்டவருக்கு நெருக்கமான ஆலோசகருமாவார். வாட்டிகன் உயர் பதவிக்கு வந்த இவர் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

உலகமெங்கும் கத்தோலிக்க பாதிரிகளின் பாலியல் வக்கிரங்கள் அண்மையக் காலத்தில் அம்பலத்திற்கு அதிகம் வருகின்றன. இதனால் திருச்சபைக்கு எதிராக எழுந்துள்ள மனநிலையை மாற்ற போப் பிரான்சிஸ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இது பெரும் பின்னடைவு என பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.

கார்டினல் பெல்

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மெல்போர்ன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கார்டினல் பெல்லைக் கேட்டுக் கொண்டிருப்பதாக உதவி காவல் ஆணையர் ஷேன் பேட்டான் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த உத்திரவு மெல்போர்னிலிருக்கும் கார்டினலின் பிரதிநிதிகளிடம் அளிக்கப்பட்டதாகவும், குற்றம் சாட்டிய ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் வயது மற்றும் விவரங்களை பாதுகாப்பு கருதி தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டார். தெரிவித்தால் கார்டினல் ஆள் வைத்து தூக்கிவிடுவார் அல்லவா?

பாலியல் குற்றம் செய்தவர்களை என்ன விதமான சட்ட முறைகளில் விசாரிப்போமோ அதேதான் கார்டினலுக்கும் எனும் காவல் ஆணையர் பாதிரியாரும் மற்றவர்கள் போலத்தான் என்று கூறிவிட்டார். மாறாக அவருக்கு சிறப்புச் சலுகை அளித்து காவல் துறை வழக்கை ஊற்றி மூடினால் முழு ஆஸ்திரேலியாவும் வீதிக்கு வந்து போராடும்.

தற்போது வாடிகனின் நிதித்துறை தலைவராக இருக்கும் கார்டினல் பெல் தனது சொந்த ஊரான ஆஸ்திரேலியாவில் இருந்த போது குழந்தைள் மீது பாலியல் கொடுமைகளை செய்திருக்கிறார். அவரது ஆரம்பகால பாதிரி வாழ்க்கை முதல் மெல்போர்ன் நகரின் ஆர்ச்பிஷப்பாகும் வரையிலும் இக்குற்றங்களை செய்திருக்கிறார். எனினும் அவர் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறார்.

வயதான கார்டினல் தானொரு அப்பாவி என்று சொன்னாலும், அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் முகாந்திரம் இருப்பதாக போலீசு உறுதியாகக் கூறுகிறது. ஏற்கனவே இது தொடர்பான விசாரணை குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் ராயல் கமிஷனில் தான் போதுமான விளக்கம் அளித்திருப்பதாக சமாளிக்கிறார் கார்டினல் பெல். ஆனால் அவர் தற்போது ஆஸ்திரேலியா வந்து நீதிமன்றத்தில் ஆஜராகித்தான் தீர வேண்டும் என்று அனைவரும் கூறிவிட்டனர்.

வாட்டிகனின் இளவரசர் போன்றதொரு பதவியில் இருக்கும் கார்டினல் பெல் மீதான குற்றச்சாட்டு கத்தோலிக்க உலகில் அரிதானதாம். வியன்னாவைச் சேர்ந்த கார்டினல் ஹான்ஸ் ஹெர்மேன் இது போன்றதொரு குற்றச்சாட்டில் 1995-ல் பதவி விலகினார். அதற்கடுத்த சாதனையை கார்டினல் பெல் செய்திருக்கிறார்.

சமீக காலமாக உலகமெங்கும் 50 -க்கும் மேற்பட்ட ரோமன் கத்தோலிக்க பிஷப்புகள், குழந்தைகளை குதறியிருப்பதாக bishop-accountability.org இணையதளம் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் மசாசுசெட்சில் இருக்கும் இந்தக் குழுவினர் திருச்சபையின் பாலியல் குற்றங்களை ஆவணப்படுத்தும் வேலையைச் செய்கின்றனர். இவர்கள் ஆவணப்படியே பலர் மீது இன்றும் வழக்கும் விசாரணையும் நடந்து வருகிறது.

பிரான்சிஸ் என்பவர் 2013-ல் போப்பாக வந்த பிறகு, வாட்டிகனின் ஊழல் நிறைந்த நிதித்துறையை சுத்தம் செய்ய நினைத்தார். அதற்காகவே கார்டினல் பெல்லை நியமித்தார். மேலும் அவரை போப்புக்கு ஆலோசனை சொல்லும் 9 பேர் அடங்கிய இறைத் தத்துவ உயர்மட்ட ஆலோசனைக் குழுவிலும் நியமித்தார். தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்து அவரை நீக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை போப் மறுத்து விட்டார். நிதித்துறை ஊழல்தான் ஊழல், குழந்தைகள் மீதான வன்முறையெல்லாம் ஊழல் இல்லை என்று போப் நினைக்கிறாரா? இல்லை இறைத்தத்துவ குழுவைச் சேர்ந்த ஒருவரை பதவி விலக்கினால் பிறகு திருச்சபைக்கு ஏது மரியாதை என்று நினைத்தாரா?

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில போலீஸ் துப்பறிவாளர் குழு ரோமுக்குச் சென்று கார்டினல் பெல்லை விசாரித்திருக்கிறது. கார்டினல் பெல்லும் 2016 -ம் ஆண்டில் வீடியோ மூலம் ஆஸ்திரேலியவால் நடந்த ராயல் கமிஷனுக்கு வாக்குமூலம் அளித்தார். ஆனால் நமது தமிழக ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் போல இவரும் உடல்நிலை சரியில்லை என்றே ஆஸ்திரேலியா வர மறுத்துவிட்டு வீடியோவில் பேசினார். வந்தால் சிறை என்பது அவருக்கு தெரியாததல்ல. நேர்மையற்ற இந்த குற்றச்சாட்டுக்கள் திருச்சபையின் செல்வாக்கை குறைக்கும் முயற்சி என்று அப்போது அவர் கூறினார்.

பாதிரியார்கள் அனைவரும் தாம் இழைத்த குற்றங்களுக்கு இதையேதான் எப்போதும் பதிலாக முன்வைக்கின்றனர். தாங்களும் மனிதர்கள்தான், தங்களிடமும் சாத்தான்கள் நுழைவார்கள் என்று கூட அவர்கள் தம்மை மண்ணில் உலவும் மனிதர்களாக கருதுவதில்லை. அதற்காகத்தான் புனிதம் நிறைந்ததாக கற்பிதம் செய்யப்பட்ட திருச்சபையின் பின்னே மறைந்து கொள்கின்றனர். இதை முழுத் திரைப்படமாக வெளிவந்த “ஸ்பாட்லைட்” படத்தில் காணலாம்.

“கார்டினல்: ஜார்ஜ் பெல்லின் எழுச்சியும் வீழ்ச்சியும்” எனும் நூலை லூயிஸ் மில்லிகான் எனும் செய்தியாளர் எழுதி வெளியிட்ட சிலநாட்களிலேயே பெல்லின் மீதான குற்றச்சாட்டுக்கள் காவல் துறைக்கு கூடுதலாக வர ஆரம்பித்தன. மே 17-ம் தேதி வாக்கில் இக்குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் ஏபிசி நெட் வொர்க்கில் பணியாற்றும் செய்தியாளர் மில்லிகென், குழந்தைகள் மீதான ராயல் கமிஷன் விசாரணையை கிட்டத்தட்ட இருவருடங்களாக பதிவு செய்திருக்கிறார். இவரது புத்தகத்தை ஆளுமைக் கொலை செய்யும் புத்தகம் என்று கார்டினல் பெல்லின் அலுவலகம் கூறியிருக்கிறது. பல்வேறு குழந்தைகளை குதறிய கார்டினலின் ஆளுமை இன்னும் அழிக்கப்படவில்லை என்பதே உண்மை. திருச்சபையின் வலிமை அப்படி.

ஆனால் செய்தியாளர் மில்லிகான் கூறும் போது கார்டினல் மீது குற்றம் சாட்டிய மக்களிடம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நேர்காணல் செய்தாகவும், அக்குற்றங்கள் பல ஆண்டுகளுக்கு வெளிவராமல் இருந்ததையும் கூறுகிறார்.

இந்தியா போன்ற ஏழை நாடுகளிலேயே பாலியல் குற்றங்கள் போதுமான அளவிற்கு புகாராக வருவதில்லை என்ற நிலைமை மேலைநாடுகளில் இல்லை. ஆனால் அதே குற்றங்களை ஒரு பாதிரியார் செய்தால் அங்கேயும் பொது விசாரணைக்கு வராது. அதுவும் குழந்தைகள் மீதான வன்முறை என்பது ஒரு துர்கனவு போன ஆழ்மனதில் பதிந்து அவர்கள் வளர்ந்து ஆளாகி தைரியம் பெற்று சட்டத்தின் முன் பேசும் போது சம்பந்தப்பட்ட பெல் போன்ன்ற கயவர்கள் பெரும் செல்வாக்குடன் விசுவரூபமாக எழுந்தருளியிருக்கின்றனர்.

எனினும் இந்த உலகம் தொடர்ந்து திருச்சபையின் மீதான குற்றங்களை பதிவு செய்கிறது. பாதிரியார்களை தண்டிக்குமாறும் போராடி வருகிறது. இவர்கள் அனைவரும் பிறப்பால் கிறித்தவர்கள்தான். இங்கு போல இது பாக் – ஐ.எஸ்.ஐ சதி, தேசவிரோதிகளின் சதி என்று அங்கே கூற முடியாது.

இந்தியாவிலும், தமிழகத்திலும் இருக்கும் கிறித்தவ மக்கள் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக இங்கேயும் போராட வேண்டும். இல்லையேல் திருச்சபையின் பாவங்களை தண்டிக்கவே முடியாது மட்டுமல்ல, குற்றங்களும் அதிகரிக்கும். திருச்சபையின் தோற்றம் முதலே அங்கே ஜனநாயகம் என்பது துளியும் இல்லை. சாதாரண மக்களுக்கு இருக்கும் சமூக – அரசியல் – நீதிமன்ற நடைமுறைகள் அவர்களுக்குப் பொருந்தாது என்றே நடைமுறையில் அனைத்து அரசமைப்புகளும் பின்பற்றுகின்றன. இங்கே சங்கரமடம் போன்றதொரு அதிகார வலிமையில் இருக்கும் திருச்சபையில் ஜனநாயகம் கொண்டு வரப்பட்டால்தான் அதன் அதிகார விஷப்பல்லை பிடுங்க முடியும்.

செய்தி ஆதாரம் :