privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாவங்கதேசத்தில் தொடரும் அநீதி - பத்து தொழிலாளிகள் மரணம் !

வங்கதேசத்தில் தொடரும் அநீதி – பத்து தொழிலாளிகள் மரணம் !

-

வங்கதேசத்தின் மல்டிலேப்ஸ்  ஆடைத் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததால் குறைந்தது 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் குறைந்தது 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமுற்றனர். தொழிலாளர்களைக் காவு வாங்கிய அந்த ஆறு மாடி தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மல்டிலேப்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

திங்கட்கிழமை அன்று தொழிற்சாலையின் கொதிகலனை பழுது பார்க்கும் பணியில் தொழிலாளர்கள் குழு ஒன்று ஈடுபட்ட போது ஏற்பட்ட விபத்து இது என்கிறார், மல்டிலேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகியுதீன் ஃபருகி. கொதிகலன் நன்றாகத்தான் வேலை செய்து கொண்டிருந்தது. பழுது பார்த்தப் பிறகு மீண்டும் இயக்க முயற்சி செய்த போது  இந்த விபத்து ஏற்பட்டதாகவும்  அவர் கூறுகிறார். அவ்வளவுதானா? பத்து தொழிலாளிகள் ஒரு ‘விபத்தில்’ பலியானார்கள் எனுமளவுக்கு இது தற்செயலானதா?

கொதிகலனை பழுது பார்ப்பது என்பது திறமையான பொறியலாளர்கள், தொழிலாளிகள் அடங்கிய குழுவினருக்கு அன்றாட வேலை. அது ஏன் வெடிக்க வேண்டும்? மல்டிலேப்ஸ் நிறுவனத்தில் எந்திரங்கள் தரமானதா, அவை முறையான பரிசோதனை, தரச்சான்றிதழ் பெறப்பட்டதா? தீயணைப்புத்துறை சான்றிதழ் கொடுத்திருக்கிறதா என்ற கேள்விகள் கேட்டால் வங்கதேசத்தில் சிரிப்பார்கள்.

வங்கதேசம் ஒரு நவீன அடிமைகளை வைத்து முக்கியமாக அவர்களின் உயிர்களை மூலதனமாக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு வருமானம் கொடுக்கும் தேசம். அங்கே இப்படி மலிவாக கொல்லப்படுவோருக்கு என்றுமே மதிப்பில்லை.

1992 ஆண்டு தொடங்கப்பட்ட மல்டிலேப்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி இந்திய மதிப்பில் 450 கோடிக்கும் அதிகம். இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் பெரும்பாலும் சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, இரசியா, ஸ்பெயின், நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு மலிவான விலையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வளவு வருமானம் இருக்கும் நிறுவனம் தனது தொழிற்சாலை பாதுகாப்புக்கு என்று எதையுமே செய்ததில்லை.

வங்கதேச ஆடைத்தொழிற்துறையில் ஈடுபடும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள்

வங்கதேச ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு மட்டுமே 77 விழுக்காடு ஆகும். 2015-2016 ஆம் ஆண்டில் வங்கதேச ஏற்றுமதியின் அளவு இந்திய மதிப்பில் 2 இலட்சத்து 20 ஆயிரம் கோடி. இன்றைய தேதியில், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் சீனாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் வங்கதேசம் இருக்கிறது. சீனத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி அதிகரித்து வருவதால் வங்கதேசத்தை நோக்கி தங்களது கடைக்கண் பார்வையைக் குவிக்கின்றன மேற்கத்திய ஆடை நிறுவனங்கள்.

வங்கதேச ஆடைத்தொழிற்துறையில் ஈடுபடும் 40 இலட்சம் தொழிலாளர்கள் மாதக்கூலியாக இந்திய மதிப்பில் பெரும் ரூபாய் 3800 சொச்சத்திற்காக தங்களது இன்னுயிர்களை இழக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர் பெண்கள். இப்படி உலகிலேயே மலிவான உழைப்பு கொடுக்கும் வங்கதேசம் அதற்கு விலையாக தனது மக்களை பலிகொடுக்கிறது. இது முதலாளித்துவத்திற்காக செய்யப்படும் நவீன நரபலி.

பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்படும் விபத்துகளுக்காக இழிபுகழ் பெற்ற வங்கதேசத்தில் 2013 ஆண்டில் ரான பிளாசா கட்டிடம் நொறுங்கி விழுந்ததில் 1136 ஆயத்தத் தொழிலாளர்கள் கோரமரணம் அடைந்தனர். 2016 ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் நூறுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதை தான் வங்கதேசத்தின் வளர்ச்சி என்று உச்சி மோருகின்றனர் முதலாளித்துவ நிபுணர்கள்.

வங்கதேசத்தில் விபத்து நடந்து தொழிலாளிக் கொல்லப்படும் போது பன்னாட்டு நிறுவனங்கள் உடனே தமது வணிகத்தை நிறுத்தி விடுவதாக நீலிக்கண்ணீர் விடும். அடுத்த கணமே அவர்கள் அந்த நாடகத்தை மறந்து விட்டு வர்த்தகத்தை தொடர்வார்கள். மற்ற நாடுகளை விட வங்கதேசத்தில் மலிவாக ஆடைகள் தயார் செய்யப்படுகிறது என்பதிலேயே பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளி விரோத உண்மை தெரிந்து விடுகிறது. கூலியை கூட்டி கொடுக்கிறோம், இலாபத்தை குறைத்துக் கொள்கிறோம், தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று பன்னாட்டு நிறுவனங்கள் கூறிப் பார்க்கட்டுமே! இப்படி பச்சையாக நடிக்கும் கயவர்கள்தான் வங்க தேச தொழிலாளிகளின் கொலைக்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க