privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவேலை கிடைக்காத பொறியியல் படிப்புக்கு கட்டணம் உயர்கிறது !

வேலை கிடைக்காத பொறியியல் படிப்புக்கு கட்டணம் உயர்கிறது !

-

விதி எண் 110 இழி புகழ் தமிழக சட்டமன்றத்தில், நேற்றைய (06.07.2017) கேள்வி நேரத்தில் கூடுதல் போனசாக ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவரது துறை செயலாளர்கள் இந்த கேள்வி நேரத்திற்காக ஓவர் டைம் பார்த்து எழுதிய பதிலை நேற்று படித்தார். அதில்தான் பொறியியல் கல்லூரிகளின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் நாமக்கல் கோழிப்பண்ணைகளுக்கு போட்டியாக 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் மாணவர்களை கட்டி மேய்க்க சுமார் 2 லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ளன. மத்திய அரசின் நீட் மோசடி காரணமாக மருத்துவக் கல்லூரி சேர்க்கை தள்ளிப் போவதால் பொறியியல் கவுன்சிலிங்கும் தள்ளிப் போய் கடைசியில் ஜூலை 23-ம் தேதிக்குப் பிறகு நடக்குமென்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.

இந்த ஆண்டு பொறியியல் படிக்க 1,48,000 பேர்கள் விண்ணப்பித்து அதில் 1,41,000 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவாம். மீதம் 1,22,000 இடங்களை என்ன செய்வார்கள்? அதில் மற்ற மாநில அப்பாவிகள் போக அனேகமாக அனைத்தும் காத்தாடுவது நிச்சயம்.

பொறியியல் படித்தாலும் வேலை இல்லை என்ற நிலைமையை இப்போது யாரும் அதிர்ச்சியோடு பார்ப்பதில்லை. அனைத்து பெற்றோரும், மாணவரும் இதை நன்கு அறிந்திருக்கின்றனர். அது போக இந்த ஆண்டு அனேக ஐ.டி நிறுவனங்கள் ஆட்குறைப்பை அமல்படுத்தி வருகின்றன. பட்டம் முடித்து வேலை தேடும் தம்பிமார்களை பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட அண்ணன்கள் சந்தித்தால் என்ன சொல்வார்கள்? அதிக பட்சம் ஒரு தேநீரைப் பகிர்ந்து கொண்டு ஆல் தி பெஸ்ட் சொல்லிக் கொண்டு போகலாமே தவிர அண்ணனோ, தம்பியோ வேலை தேடி அமர்வது குதிரைக் கொம்பு.

இப்படி வேலை இல்லை என்றாலும் பொறியியல் கல்லூரி முதல்வர்கள் சும்மா விடுவதாக இல்லை. ஏற்கனவே இலட்சம் சீட் காத்தாடுவதால் இளைத்துப் போன கல்லாவில் காசுகளை நிரப்ப உறுதியாக இருக்கின்றனர். அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்விக் கட்டணம் ஏற்றியாக வேண்டும் என்ற விதியைக் காட்டி தற்போது அரசை வற்புறுத்துகின்றனர். 2012-2013 கல்வி ஆண்டுக்கு பிறகு கட்டணம் ஏற்றப்படவில்லை என்று லீகலாக பேசி நியாயம் கேட்கின்றனர். அதே மாதிரி படித்தவனுக்கு வேலை கடைசியாக எந்த ஆண்டு கிடைத்தது, எத்தனை கேம்பஸ் நேர்காணல்கள் சொன்ன மாதிரி நடந்தது, அதிலும் தெரிவானர்கள் எத்தனை பேருக்கு உண்மையிலேயே வேலை கிடைத்தது என்று வெள்ளை அறிக்கை கேட்டாலும் உண்மை தெரியப் போவதில்லை.

மொத்தத்தில் அனைத்து பிரிவுகளுக்கும் ரூ. 10,000 ரூபாய் கட்டணத்தை ஏற்றி அமைச்சர் அறிவிப்பை வெளியிட்டு விட்டார். அமைச்சர் வெளியிட்ட அந்த கட்டணத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்?

சுயநிதி கல்லூரி முதலாளிகள் கேட்கும் கட்டண உயர்வு என்ன தெரியுமா? எக்ஸ் பிரிவு கல்லூரிகளுக்கு 1,58,300 ரூபாய், ஒய் பிரிவு கல்லூரிகளுக்கு 1,50,500 ரூபாய், இசட் பிரிவு கல்லூரிகளுக்கு 1,44,900-ம் என்றும் தற்போது நிர்ணயித்திருக்கிறார்கள்.  கிருஷ்ணா கமிட்டி பரிந்துரைத்திருக்கும் கட்டண உயர்வின் படி கவுன்சிலிங்கில் சேருகின்ற மாணவர்களுக்கு ரூ 10,000 கூட்டி 50,000-மாகவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவோருக்கு ரூ 10,000 கூட்டி 80,000-மாகவம் இருக்கிறது.

இதில் பொறியியல் கட்டண உயர்வு தொடர்பான பல்வேறு இணையத் தளங்களில் அரசு நிர்ணயத்திருக்கின்ற கட்டணத்தை விட மிக அதிகம் பல கல்லூரிகளில் கேட்பதாக மாணவர்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறார்கள்.

ஆக மொத்தம் தமிழக பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எப்படியும் மொத்த பட்டப் படிப்பிற்கும் பத்தை நெருங்கும் இலட்சங்களில் செலவழிக்க வேண்டியிருக்கும். இது குறைந்தபட்சம் மட்டுமே. பல கல்லூரிகள் இதை விட மிக அதிகம் வாங்குகின்றன. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீற இவர்கள் பல்வேறு வழிகளை வைத்திருக்கின்றார்கள்.

இனி வரும் காலத்தில் குறைவான இடங்கள் அதிக விலை என்று பொறியியல் கல்லூரி முதலாளிகள் தமது இலாபத்தை கவனித்துக் கொள்வார்கள்.

பொறியியல் படிப்பு முடித்த மாணவர்கள் தமது வங்கிக் கடனை எப்படி அடைக்க முடியும் என்று கவலையில் ஆழும் போது அடுத்த வருடம் எப்படி கட்டணத்தை கூட்டி கேட்க முடியும் என்று கல்வி முதலாளிகள் திட்டம் போடுவார்கள்.

கவலைப்படும் மாணவர்கள் அரசைக் கதறக் கதற கேள்வி கேட்டு போராடமல் இந்தக் கொள்ளையை நிறுத்த முடியாது.