ஜிஎஸ்டி – வரியல்ல, வழிப்பறி! என்ற தலைப்பில் 08.07.2017 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6.30 வரை ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் (கிழக்கு – மேற்கு) மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தோழர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கிளை/இணைப்பு சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பினர். அப்பகுதியை சார்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் நின்று ஆர்ப்பாட்டத்தை ஆதரித்தனர்.

தலைமை உரையில் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை சாத்தியமில்லை என்றும், ஜிஎஸ்டி வந்தால் குஜராத்தில் மட்டும் 14,000 கோடி ரூபாய்க்கு மேல் மாநில அரசுக்கு வரி வருவாயில் இழப்பு ஏற்படும் என்றும், என் பிணத்தின் மீது தான் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த முடியும் என கொக்கரித்த மோடி தான் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி புதிய இந்தியா பிறந்துள்ளதாக கூறியுள்ளார். சிறுதொழில், சிறு வணிகம், குடிசை தொழில் ஆகிய அனைத்தையும் அழித்து கார்ப்பரேட்களின் சந்தையை விரிவாக்குவதுடன், இலாபத்தையும் உத்திரவாதப்படுத்தியுள்ளார், மோடி. இதனை முறியடிக்க போராடுகின்ற மக்களுடன் கரம் கோர்ப்போம், இவ்வரசை தூக்கியெறிய புரட்சிகர அரமைப்புகளில் அணித்திரள்வோம் என கூறினார்.

அதன் பின்னர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் கண்டன உரையாற்றினார். தனது உரையில் அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்களுக்காக மக்கள் மீது கடுமையான வரி சுமையை சுமத்தியிருக்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது வரி விதித்ததன் மூலம் விலைவாசி உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி பட்டியலில் இருந்து மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்றவைகள் எல்லாம் விலக்களிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அம்பானியின் எண்ணெய் நிறுவனத்திற்கும், அதானியின் மின்சார நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்பட்டுவிட கூடாது என்றே விலக்களிக்கப்பட்டுள்ளது.

பீட்ஸா, பர்கர் போன்ற அன்னிய உணவு பொருளுக்கு 5% வரி, இட்லி, குடிதண்ணீர், கடலை மிட்டாய், சிலிண்டர், ஸ்டவ், குக்கர், துணி, பிரஷ், பேஸ்டு, பிளேடு ஆகியவற்றுக்கும் வரி விதிப்பு. ஜிஎஸ்டி வரியின் மூலம் இந்திய அரசு 30 இலட்சம் கோடி ரூபாய் வரை நிதி திரட்ட உத்தேசித்துள்ளது. இதில் இராணுவத்திற்கு மட்டும் 10 இலட்சம் கோடி செலவழிக்க உள்ளது. இதற்காகத்தான் இந்திய – சீன எல்லையில் பதற்றம் என கூறி மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறது. இராணுவ தளவாடங்களை தனியாரிடம் வாங்க அனில் அம்பானியிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை வரி சலுகையாக அம்பானிக்கு அளிக்க உள்ளார்கள்.

2ஜி ஸ்பெக்டிரம் வழக்கில் உண்மை குற்றவாளிகளான டாடா, மிட்டல், அம்பானி போன்ற முதலாளிகளை பாதுகாக்கின்ற அரசு, அவர்களுக்கு வரி மற்றும் மானிய சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனை முறியடிக்க தேர்தல் அரசியலால் முடியாது, மாறாக புரட்சிகர அரசியலை வரித்துக் கொண்டு போராடுகின்ற அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என கண்டன உறையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – வாழ்க
ஒற்றை வரி பெயராலே
உழைக்கும் மக்களை
வழிப்பறி செய்யுது அரசாங்கம்
மோடியின் அரசாங்கம்

வரிக்கு மேலே வரியை போட்டு
உழைக்கும் மக்களை
சுண்டுது அரசாங்கம்
மோடியின் அரசாங்கம்

சிறுவணிகர்களை ஒழித்துக்கட்டி
வர்த்தகம் எல்லாவற்றையும்
கார்ப்பரேட்டிடம் குவிப்பதற்கே
ஜிஎஸ்டி வரிவிதிப்பு

சிறுதொழில்களை ஒழித்துக்கட்டி
கார்ப்பரேட்களை வளர்ப்பதற்கே
ஜிஎஸ்டி வரிவிதிப்பு

நிரந்தர தொழிலாளர்களை ஒழித்துக்கட்டி
காண்டிராக்டு முறையை தீவிரமாக்குவதே
ஜிஎஸ்டி வரிவிதிப்பு

கடலைமிட்டாய்க்கு வரிவிதிப்பு
பதினெட்டு சதவீதம்
பீட்ஸா, பர்கருக்கோ
ஐந்து சதவீதம்

திங்கிற பிஸ்கெட்டுக்கோ
பதினெட்டு சதவீதம்
தங்க பிஸ்கெட்டிற்கு
மூன்று சதவீதம் வரிவிதிப்பு

இட்லி, தண்ணீ, துணிக்கும் வரி
குக்கர், ஸ்டவ், சிலிண்டருக்கும் வரி
பேஸ்டு, பிரஷ், பிளேடுக்கும் வரி

எதற்காக எதற்காக?
அத்தியாவசிய பொருட்களுக்கு
அநியாய வரியை போட்டு

மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது
எதற்காக, எதற்காக?
கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு
மானியங்கள் – சலுகைகளை
வாரிகொட்ட, வாரிகொட்ட

அதானி-அம்பானி
திருட்டுக் கும்பலின் எடுபிடி
மோடி-ஜேட்லி கும்பலே
ஏய்க்காதே ஏய்க்காதே
உழைக்கும் மக்களை ஏய்க்காதே!

கொல்லாதே கொல்லாதே
ஜிஎஸ்டி வரி என்ற பெயரில்
சிறுதொழிலை அழித்துவிட்டு
சிறுவணிகத்தை அழித்துவிட்டு
உழைக்கும் மக்களை கொல்லாதே!

செய்யாதே செய்யாதே
வரிகள் என்ற பெயரில்
உழைக்கும் மக்களிடம்
வழிப்பறி செய்யாதே!

நம்பாதே நம்பாதே
கார்ப்பரேட்டுகள் நடத்துகின்ற
வரியேய்ப்பை ஊக்குவித்து
சாமானிய மக்களை
வழிப்பறி செய்கின்ற அரசை
நம்பாதே நம்பாதே!

தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்
மக்கள் விரோத அரசு எந்திரத்தை
தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்
தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்
கார்ப்பரேட்களது காவல் அரசை
தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்

கட்டியமைப்போம் கட்டியமைப்போம்
மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை
கட்டியமைப்போம் கட்டியமைப்போம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்.