privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமாடு விற்கத் தடை நீக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு - ஒரு பார்வை

மாடு விற்கத் தடை நீக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு – ஒரு பார்வை

-

த்தியில் ஆளும் மோடி அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை, கடந்த 2017 மே 26 அன்று கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதையும், வாங்குவதையும் தடை செய்யும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஏற்கனவே பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் முசுலீம் மதத்தைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகளையும், பால் மாடு வளர்க்கும் விவசாயிகளையும் அடித்துக் கொன்ற சங்கப் பரிவாரக் கும்பல், இவ்வறிவிப்பினைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனங்களை வழிமறித்து, தாக்குதல் தொடுத்தது.

தமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் பழனி, பெருந்துறை மற்றும் பொன்னேரி போன்ற பகுதிகளில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மோடி அரசின் அறிவிப்பை எதிர்த்து தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி என்பவரும், ஆஷிக் இலாஹி பாபா என்பவரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். மனுவில், கால்நடை சந்தைக்கான விதிகளின் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், கூட்டாட்சிக் கொள்கைகளை சீர்குலைப்பதாகவும், குடிமக்களின் உணவின் மீதான அடிப்படை உரிமைக்கு எதிராகவும் இருப்பதாகவும் கூறியிருந்தனர்.

மேலும் உணவுக்காக கால்நடைகளை வெட்டுவதும், இறைவனுக்காக கால்நடைகளை பலியிடுவதும் பல்வேறு மக்களின் கலாச்சார அடையாளமாக அரசியல் அமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படும் நாட்டில் இது போன்ற அரசாணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இச்சட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, கடந்த 2017, மே 30 அன்று, மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுவானதாகவும், குறிப்பான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லாமலும், இருப்பதைச் சுட்டிக்காட்டி, மேலும் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு உகந்ததாக இல்லாமல் இருப்பதையும் குறிப்பிட்டு, அதற்குப் பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பி, மத்திய அரசின் உத்தரவிற்கு நான்கு வாரங்களுக்கு தடையாணை விதித்து உத்தரவிட்டது

இச்சூழலில், ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், முகம்மது ஃபஹீம் குரேஷி, மத்திய அரசின் ‘மே26 அறிவிப்பு’-கள், தன்னிச்சையானவை, அரசியல் சாசன விரோதமானவை, மற்றும் சட்டவிரோதமானவை என்றும் குறிப்பிட்டு இந்த அறிவிப்புகளுக்கு தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் 15 அன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து மத்திய அரசுக்கு நோட்டீசு அனுப்பிய உச்சநீதிமன்றம் இவ்வழக்கை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

உச்சநீதிமன்றத்தின் நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மத்திய அரசு புதியதாக வெளியிட்டுள்ள இவ்வறிவிப்பின் மீது பல்வேறு தரப்பினர் முன் வைக்கும் ஆட்சேபணைகளையும், பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு இந்த விதிகளை மாற்றியமைத்து புதிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்றும் இது குறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடந்து வருவதையும் குறிப்பிட்டிருந்தது.

அதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை விதித்த இடைக்காலத் தடை நாடு முழுவதற்கும் செல்லுபடியாகும் என்றும் அத்தடை தொடர்ந்து வரும் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இத்தீர்ப்பினைத் தொடர்ந்து மத்திய அரசின் மே 26 அறிவிப்பிற்கு எதிராக ‘அனைத்திந்திய ஜமைதுல் குரேஷி செயல் கமிட்டி’ உள்ளிட்டு பல்வேறு தரப்பினரால் தொடுக்கப்பட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம். இவ்வழக்குகள் அனைத்தும் மத்திய அரசின் இந்த அறிவிப்புகளுடைய, அரசியல் சாசன சட்டப்படியிலான செல்லுபடித் தன்மையை கேள்விகேட்டு தொடுக்கப்பட்டவை. உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசின் அறிவிப்பிற்குத் தடை விதித்து ஒரு தீர்ப்பு வந்திருப்பது, பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.

உண்மையில் உச்சநீதிமன்றம் பார்ப்பனிய – இந்துத்துவ பண்பாடு குறித்த வழக்குகளில் அவாள் சார்பாகவே பேசும் போது இங்கு மட்டும் மாறிவிடுமா? உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுவின் அடிப்படையில் தான் இந்தத் தடையை நாடு முழுமைக்கும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளதே ஒழிய, மனுதாரர்கள் முன்வைத்தது போல், இவ்வறிவிப்பின் அரசியல் சாசன விரோதத் தன்மை குறித்தோ, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மை குறித்தோ தமது தீர்ப்பில் பேசவில்லை. மேலும் நாடெங்கும் எழுந்துள்ள எதிர்ப்பு அலையை கணக்கில் கொள்ளாமல் உச்சநீதிமன்றம் போக முடியாது என்பதும் உண்மை.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோத அறிவிப்பால் பாதிக்கப்பட்ட பல இலட்சக்கணக்கான கால்நடை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்தும், இதனைக்காரணமாக வைத்துக் கொண்டு பல உயிர்களைக் காவு வாங்கிய சங்கப் பரிவார கிரிமினல்களின் நடவடிக்கைகள் குறித்தோ மூச்சுக் கூட காட்டாமல் கொடுக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு, மோடி கும்பலின் கிரிமினல்தனங்களை எல்லாம் மவுனமாக அங்கீகரிக்கிறது.

இனி இறுதித் தீர்ப்பில் மத்திய அரசு என்ன விளக்கமோ புதிய உத்திரவோ பிறப்பித்தாலும், நாடெங்கும் நடக்கும் பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டங்கள்தான் மாடு விற்கத் தடை எனும் மனு நீதியை தூக்கி எறியுமாறு உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தும்.

மேலும் படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க