இஸ்லாமியர்கள் தங்களை சீதைகளாக உணர்கிறார்கள்

இஸ்லாமியர்கள்
ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல

அமர்நாத்தில்
பேருந்தின்மேல் பயங்கரவாதிகள்
குண்டு மழை பொழிந்தபோது
வேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்று
இந்து யாத்ரீகர்களை காப்பாற்றியவர் பெயர்
சலீம் ஷேக்
அவர் ஒரு இஸ்லாமியர்

அது இன்று தலைப்பு செய்தியாகி இருக்கிறது
அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர்
ஒரு இந்துவாக இருந்திருந்தால்
அது ஒரு தீரச் செயல் மட்டுமே
ஆனால் சலீம் ஷேக் செய்திருப்பது
ஒரு சமய நல்லெண்ண முயற்சி
இதற்குள் வேறொரு செய்தி இருக்கிறது

உயிருக்குப் பயந்து
வாகனத்தை விட்டு ஓடாததனால்
ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் நற்பெயரையும்
அவர் காப்பாற்றிவிட்டார்

ஆம், இஸ்லாமியர்கள்
ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல

இந்த நகரத்தில்
வெள்ளம் சூழ்ந்தபோது
இஸ்லாமியர்கள் கோயில்களுக்குள் புகுந்த
சாக்கடை நீரை
சுத்தப்படுத்தினார்கள்
வெள்ளத்தில் சிக்கியவர்களைக்
காப்பாற்றியதில் இம்ரான் என்ற மாணவன்
விஷப்பூச்சிக் கடியில் இறந்துபோனான்
இந்த தியாகம் எல்லோராலும் மெச்சப்பட்டது

ஆம், இஸ்லாமியர்கள்
ஒன்றும் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல

ஏதோ ஒரு நாட்டில்
இஸ்லாமிய பெயர்கொண்ட
யாரோ ஒருவன்
மக்கள் கூடுமிடங்களில்
குண்டுகளை வெடிக்கச் செய்கிறான்
உலகெங்கும் உள்ள
இஸ்லாமியர்கள் அடுத்த கணம்
பதட்டத்துடன் கூக்குரலிடுகிறார்கள்
‘ ‘ நாங்கள் இதைக் கண்டிக்கிறோம்
உடனடியாக அவனைக் கொல்லுங்கள் ’’
யாரவது ஒரு இஸ்லாமியன்
கொஞ்சம் வேறு வேலையாக இருந்து
இதைக் கண்டிக்கத் தவறினால்
அவன் ஒரு பயங்கரவாத
ஆதரவாளனாக இருக்கக் கூடும்
அந்தப் பாவத்தில் அவனுக்கு
பங்கு தரப்படுகிறது

ஆம் இஸ்லாமியர்கள் ஒன்றும்
அவ்வளவு மோசமானவர்கள் அல்ல
வேறு மாதிரியும் சொல்லலாம்
அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும்
அவ்வளவு மோசமானவர்கள் இல்லை

இஸ்லாமியர்களுக்கு என்று
சமய நல்லிணக்கத்திற்கான காவல் நிலையம்
ஒன்று இருக்கிறது
அவர்கள் அதில் தினமும் கையெழுத்திட வேண்டும்
தங்கள் இதயத்தைக் கிழித்து
தினமும் பாரதமாதாவின் ஆன்மாவிடம் காட்டவேண்டும்
பிற மதத்தவர்களை
இஃப்தார் விருந்துகளுக்கு அழைக்க வேண்டும்
வேறு யாருக்கும் இத்தகையை
கட்டாயங்கள் இல்லை

ஒரு இஸ்லாமியன்
தான் சுத்தமானவன் என்பதற்காக
தினமும் ஏழு முறை குளிக்க வேண்டியிருக்கிறது

ஒரு இஸ்லாமியன்
தான் ஒரு தேசவிரோதி இல்லை என்பதற்காக
தேசிய கீதம் பாடி முடித்த பிறகும்
நின்றுகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது

ஒரு இஸ்லாமியன்
தான் ஒரு பயங்கரவாதி இல்லை என்பதற்காக
தன் ஆடைகளை தினமும்
யாரிடமாவது களைந்து காட்ட வேண்டியிருக்கிறது

தினமும் ஒரு இஸ்லாமிய
தீவிரவாத சந்தேக நபரின் புகைப்படம்
செய்தித்தாள்களில் வெளியாகிறது
அவர் ஒரு இஸ்லாமியர் என்பது
அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது
இஸ்லாமியர்கள் அந்த செய்தித்தாளை உயர்த்தி
சட்டெனெ தங்கள் முகத்தை மறைத்துகொள்கிறார்கள்
’’ நீங்கள் சாப்பிடும் மாமிசம்தான்
இந்த வன்முறை உணர்ச்சிக்கு காரணமா?’’
என நண்பர்கள் விளையாட்டாகத்தான் கேட்கிறார்கள்
நான் அது காதில் விழாததுபோல
அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுகிறேன்

இஸ்லாமியர்கள்
தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த
இன்னும் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது
தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க
இன்னும் நிறைய
சுயபலிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது

இஸ்லாமியர்கள்
இந்த மண்ணின்
மகத்தான காப்பியங்களின் வழியில்
செல்கிறார்கள்
தங்களை எப்போதும்
நெருப்பின் முன் நின்றுகொண்டிருக்கும்
சீதைகளாக உணர்ந்துகொள்கிறார்கள்.

நன்றி:   மனுஷ்ய புத்திரன்