2017-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை 44 பேரை சிரச்சேதம் செய்து கொன்றுள்ளது சவுதி அரசு. அதிலும் கடந்த 10.07.2017 அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 6 பேரைக் கொன்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட அறுவரில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் மற்ற ஐந்து பேரும் சவுதி நாட்டவர்கள்.

மரண தண்டனை வழங்கும் நாடுகளில் சவுதி தான் முதலிடத்தில் உள்ளது. 2014-ல் 158 பேரையும், கடந்த வருடம் 153 பேரையும் வெட்டிக் கொன்றுள்ளது. ஜூன் 2017-ல் ஒரு மனித உரிமைகள் நிறுவனம் எடுத்த ஆய்வின்படி கொல்லப்படும் மக்களில் 41% பேர் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடாதவர்கள்; அவர்கள் அனைவரும் அரசியல் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள்.

கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வருகைக்குப் பின்னர் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது அந்த ஆய்வறிக்கை. இதில் மாற்றுத்திறனாளி ஒருவரும் அடக்கம். உலக தலைவெட்டிஅமெரிக்க அரசின் தலைமையில் ஒரு பாசிசக் கோமாளி அமர்ந்த பிறகு அமெரிக்காவின் பிராந்திய அடியாளான சவுதியில் தலைவெட்டி தண்டனை அதிகரிப்பது பொருத்தமானதுதான்.

அரசரை எதிர்த்து கருத்து தெரிவிப்பது, நாத்திக கருத்துக்களை கொண்டிருப்பது, இசுலாத்தை விமர்சிப்பது போன்ற இயல்பான கருத்து சுதந்திரம் சார்ந்த நடவடிக்கைகளை தீவிரவாத செயல்களாகச் சித்தரிக்கின்றது சவுதி அரசு. இதையே காரணமாக்கி மரண தண்டனை விதித்துக் கொல்லவும் செய்கிறது. தவறு செய்தால் தண்டனை என்றால் அமெரிக்காவோடு கூட்டு சேர்ந்து தீவிரவாத அழிப்பு என்ற பெயரில் ஏமன் உள்ளிட்ட பிற முசுலீம் நாட்டு மக்களைக் கொன்று குவித்த சவுதி அரச குடும்பத்திற்கு என்ன தண்டனை கொடுப்பது?

6 நபர்களைக் கொலை செய்த வஹாபியிச சவுதி அரசைக் கண்டித்து உலகெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அரசால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டுவரும் காஷ்மீரிகளும் அடக்கம். தாங்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத துயரங்களுக்கு மத்தியில் சவுதியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கின்றனர் காஷ்மீர் மக்கள்.

துருக்கி தலைநகர் அங்காராவில் சவுதி தூதரகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்ட ஷியா பிரிவு இசுலாமியரான ஷேக் நிமர்-அல் நிமரின் உருவப்படத்துடன் போராட்டக்காரர்கள்.

காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்ட ஷியா பிரிவு இசுலாமியரான ஷேக் நிமர்-அல் நிமரின் உருவப்படத்துடன் போராட்டக்காரர்கள்.
காஷ்மீரில் போராடிய இளைஞர்களைக் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், இரப்பர் தோட்டாக்களைக் கொண்டும் இராணுவம் கலைக்க வேண்டியதாயிற்று.
இலண்டனில் சவுதி தூதரகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் சவுதிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஈரானில் சவுதி தூதரகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் உருவப்படத்தைக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.
காஷ்மீரில் நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆக்ரோஷமாகக் குரல் கொடுக்கிறார்.

நன்றி : INDEPENDENT

_________________________________________

இந்த படக் கட்டுரை பிடித்திருக்கிறதா?