privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவீராங்கனை காஞ்சனமாலாவை பிச்சைக்காரியாய் பெர்லினில் அலைய விட்ட பாஜக அரசு !

வீராங்கனை காஞ்சனமாலாவை பிச்சைக்காரியாய் பெர்லினில் அலைய விட்ட பாஜக அரசு !

-

ஜெர்மனில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கண்பார்வையற்ற காஞ்சனமாலா

நூற்றி முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒரே ஒரு வெங்கலப் பதக்கம் கூட கிடைக்கவில்லையே என முக்கி முனகுவது ஏன்? ஜமைக்கா போன்ற குட்டி நாடுகளும், எத்தியோப்பியா போன்ற ஏழை நாடுகளும் பதக்கங்களைக் குவிக்கும் போது இந்தியர்கள் ஏன் திணறுகின்றனர்?

காஞ்சனமாலாவின் கதையை நீங்கள் அறிந்து கொண்டால் மேற்கண்ட கேள்விக்கு விடை கிடைக்கலாம்.

காஞ்சனமாலா நாக்பூரைச் சேர்ந்தவர். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. 2011-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெங்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை. இந்தாண்டு மெக்சிகோவில் நடக்கவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உலக நீச்சல் போட்டியில் தகுதி பெறுவதற்கான இம்மாத முதல் வாரத்தில் ஜெர்மன் சென்றிருக்கிறார்.

காஞ்சனமாலாவுக்கும் அவருக்குத் துணையாகச் சென்ற ஜெய்மாலா பாண்டே என்பவருக்கும் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி உதவித் தொகை அளித்திருக்க வேண்டும் – ஆனால், அந்த உதவித் தொகை உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. காஞ்சனமாலாவுக்கு மட்டுமின்றி, தகுதிப் போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற மற்றவர்களுக்கு உதவித் தொகை வந்து சேரவில்லை.

விசாவுக்கான செலவான 15 ஆயிரத்தை தனது சொந்தக் காசில் கட்டிய காஞ்சனமாலா, ஜெர்மன் சென்ற பின் போட்டி நடக்கும் நாட்களில் எப்படியும் அரசின் உதவித் தொகை வந்து சேரும் என்று நம்பியிருக்கிறார். ஜூலை 3-ம் தேதியில் இருந்து 9-ம் தேதி வரை போட்டிகளில் கலந்து கொண்ட காஞ்சனமாலாவின் கையில் சல்லிக் காசில்லை. இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் காஞ்சனமாலாவுக்காக கன்வல்ஜித் சிங் என்கிற பயிற்சியாளர் ஒருவர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு வீர்ர்களுக்குப் பயிற்சியளிக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயிற்சியாளர்கள் வழக்கமாக என்ன செய்வார்களோ அதையே கன்வல்ஜித்தும் செய்துள்ளார். ஜெர்மன் சென்ற அவர், கண்பார்வையற்ற காஞ்சனமாலாவைக் கவனிக்காமல் ஊரைச் சுற்றிப் பார்க்கவும் ஜெர்மன் பீரைச் சுவைக்கவும் சென்று விட்டார். மேலும், முக்கிய போட்டிகளின் போது தான் கலந்து கொள்ள 90 பவுண்டுகள் (சுமார் 7,462 ரூபாய்) தர வேண்டும் என்று லஞ்சம் கேட்டு நோகடித்துள்ளார்.

பயிற்சியாளரின் பாராமுகத்தாலும், கையில் காசு இல்லாத காரணத்தாலும் காஞ்சனமாலா மொழி தெரியாத நாட்டில் தவித்துள்ளார். ஒரு நாள் போட்டி அரங்கில் இருந்து தான் தங்கியிருந்த ஓட்டலுக்குச் செல்ல கையில் காசில்லாமல் டிராம் வண்டியில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் போது காஞ்சனமாலாவைப் ஜெர்மன் போலீசார் கைது செய்துள்ளனர். இறுதியில் 120 யூரோ (சுமார் 10,000 ரூபாய்) தண்டம் கட்டி மீண்டுள்ளார். இறுதியில் ஓட்டல் கட்டணமான ஆயிரம் ரூபாயையும், உணவுக்கான 40 ஆயிரம் ரூபாயையும் கட்ட முடியாமல் தவித்துள்ளார்.

காஞ்சனமாலா

வேறு வழியின்றி ஜெர்மனில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் காஞ்சனமாலா. ஜெர்மனில் பழகியவர்களிடமிருந்தும் முகமரியாதவர்களிடமிருந்தும் வெட்கத்தை விட்டுக் கைநீட்டிக் காசு வாங்கியே மேற்படி தொகையைக் கட்டி இருக்கிறார். தற்போது இந்தியா திரும்பியுள்ள காஞ்சனமாலா, தான் செலவு செய்த தொகையை இந்திய அரசு எப்போது தரப் போகிறது என்பது பற்றி எந்தத் தகவலும் தனக்குச் சொல்லப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நிதி விசயத்தில் விளையாட்டு வீரர்களை பிச்சை எடுக்க விட்ட இந்திய ஒலிம்பிக் கமிட்டி, வீரர்களைச் சரியான பிரிவுகளில் பதிவு செய்யவும் தவறியுள்ளது. 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் முறையிலான நீச்சலில் பயிற்சி பெற்று முந்தைய போட்டிகளில் பதக்கமும் பெற்றுள்ள காஞ்சனமாலாவின் பெயரை 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டிகளுக்குப் பதிவு செய்துள்ளனர் அதிகாரிகள். ஜெர்மன் சென்ற பின் இதை அறிந்து கொண்ட காஞ்சனமாலா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் அனுப்பி திருத்தம் செய்துள்ளார். இதற்கெல்லாம் உதவ வேண்டி அனுப்பப்பட்ட பயிற்சியாளர் கன்வல்ஜித், பெர்லின் நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்று விட்டார்.

இத்தனை இடர்பாடுகளையும் கடந்து ஜெர்மனில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் காஞ்சனமாலா. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ள ஒரே இந்தியரும் காஞ்சனமாலா தான்.

பார்ப்பனிய சாதி அடுக்கு பெருவாரியான மக்களை விளையாட்டுத் திடலின் வெளியே நிறுத்தி வைத்துள்ள நிலையில், இந்திய மக்களின் ஏழ்மையான பொருளாதார நிலைமையோ இன்னொரு திசையில் இருந்து அவர்களை விளையாட்டு, கலை உள்ளிட்ட துறைகளில் இருந்து வயிற்றுப்பாட்டை கவனித்துப் பிழைத்துக் கிடக்கச் சொல்லி விரட்டியடிக்கின்றது. இந்நிலையில் காஞ்சனமாலா போல் குறிஞ்சி மலர் போல் ஓரிருவரே தங்களை அமுக்குப் பேயாய் அழுத்திக் கொண்டிருக்கும் சமூக நிலைமைகளை மீறி விளையாட்டுத் துறைகளில் சாதிக்க வருகின்றனர். இவர்களின் கனவுகளின் மீதும் இந்திய அதிகார வர்க்கம் என்கிற வெள்ளை யானை சாணியைப் போட்டு அமுக்குகின்றது.

மத்தியில் நடந்து கொண்டிருப்பது மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு என்பதையும், இந்தியாவை உய்விக்க மறுபிறவி எடுத்து வந்துள்ள மகாத்மா காந்தி என மோடியை அவரது அமைச்சரவை சகாக்களே முன்னிருத்திகிறார்கள் என்பதையும் இங்கே நினைவூட்டுகிறோம். பாரத மாதாவை ஏற்கனவே விற்று விட்டது ஆர்.எஸ்.எஸ் கும்பல்; இதோ பாரதத் தாயின் கண் பார்வையற்ற புதல்விகளை பிச்சைக்காரிகளாய் பெர்லின் தெருக்களில் அலைய விட்டுள்ளது அந்தக் கும்பலின் ஆட்சி.

செய்தி ஆதாரம்:

_________________________________________

இந்த பதிவு பிடித்திருக்கிறதா?