மது அன்றாட உணவில் தவிர்க்கவியலாத ஒரு காய், தக்காளி. கடந்த இரண்டு மாதங்களாகவே தக்காளியின் விலை மளமளவென ஏறிக் கொண்டே சென்றது. இன்று சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை கிலோ ரூ.120 ஐ-யும் தாண்டிவிட்டது. இது சாதாரண மக்களின் அன்றாட உணவுச் செலவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல உணவு விடுதிகளில் தக்காளி சாதத்தை தமது மெனுவிலிருந்தே நீக்கிவிட்டனர். சுருக்கமாகக் கூறினால், இன்றைய சூழலில் மக்களைத் தன்னை நெருங்கவிடாமல் ‘தெறிக்க’ விட்டிருக்கிறது தக்காளி.

‘தெறிக்க’ விடும் தக்காளி

இந்திய அளவிலான காய்கறி உற்பத்தியில் 8.23% உற்பத்தியை தக்காளி நிறைவு செய்கிறது. தமிழகத்தைப் பொருத்தவாரியில் வேலூர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு பொய்த்துப் போன பருவ மழையால் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடியை தவிர்த்தனர். மேலும் வறட்சி காரணமாக தக்காளி சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளிலும் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் தக்காளி சாகுபடி, ஏற்கனவே தமிழகத்தின் தேவைக்குப் போதுமானதாக இல்லாத சூழலில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியைச் சார்ந்து தான் சந்தை இருந்து வந்தது.  இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக நிலவும், வறட்சியால் குறைந்து போன தமிழக தக்காளி உற்பத்தியோடு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்தும் குறைந்து வந்தது. இது தக்காளி விலையை மேலும் உயர்த்திவிட்டது.

இது ஒரு புறமிருக்க, கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு, தக்காளி வரத்து அதிகரித்து தக்காளியின் விலை கிலோ ரூ.10 வரையில் வீழ்ச்சி அடைந்தது. விவசாயிகள் தக்காளிக்கு அடக்கவிலை கூடக் கிடைக்காமல்  பெரும் நட்டத்தைச் சந்தித்தனர். வண்டி வாடகை கொடுக்கக் கூட கட்டுப்படியாகாமல் தக்காளியை வீதியில் வீசியெறிய வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

ஆறுமாதத்திற்கு முன்னால் கடுமையான விலை வீழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கடுமையான விலை உயர்வும் என தக்காளியின் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. தக்காளி விலை மட்டுமல்ல, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், அவரை, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் அனைத்திற்கும் இதே நிலைமை தான்.

மக்களின் காய்கறித் தேவை, அதற்கேற்றாற் போன்ற காய்கறி உற்பத்தி, உற்பத்தியான காய்கறிகளைக் கெடாமல் பாதுகாப்பது உள்ளிட்டு எந்த வேலையையும் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. விலைவாசி உயர்வு வருவதற்கு முன்னரே அதனை அனுமானித்து இறக்குமதியையோ, உற்பத்தியையோ அதற்கேற்றாற் போல முடுக்கிவிடும் திறன் இந்த அரசுகளுக்கு இல்லை. அது குறித்த அக்கறையும் இவர்களுக்கு இல்லவே இல்லை. இதன் காரணமாகவே, ஒரு புறம் உற்பத்திக் குறைவு காரணமாக காய்கறிகள் விலை மலை போல் ஏறி பொதுமக்களைப் பாதிப்பதும், மற்றொரு புறம் அதீத உற்பத்தி காரணமாக விளைபொருளுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரும்பான்மையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில், காய்கறிகள் மற்றும் மக்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் மக்களின் தேவையை ஒட்டி மைய அளவில் நாடு தழுவிய முறையில் திட்டமிடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டன. அதனால்தான், உணவுப் பொருட்களின் விலையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்ற இறக்கம் இல்லாமல், ஒரே சீராக வைத்திருக்க உதவியது.

மக்களின் நலன் சார்ந்து சிந்திக்கின்ற அரசு, இத்தகைய ஒரு திட்டமிட்ட உற்பத்திமுறையை செயல் முறைப்படுத்தும். ஆனால் சிந்தனையையும்  செயலையும் கார்ப்பரேட்டுகளை வாழ வைப்பதற்காகவே செலவிடும் அரசு, காய்கறிகள் வியாபாரத்தை ஊக வணிகத்தில் இணைப்பது குறித்தும், வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற ஆள்முழுங்கி நிறுவனங்களிடம் ஒட்டு மொத்த இந்திய விவசாயத்தை அடகு வைப்பது குறித்தும் தான் சிந்திக்குமே ஒழிய மக்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் ஒரு போதும் சிந்திக்காது.