கோமாதா, கோமியம், மாட்டிறைச்சிக்கு தடை என்பதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு சமீபகாலமாக இயற்கை விவசாயத்தின் மீது அதிதீவிர காதல் பிறந்திருக்கிறது!

மத்தியப்பிரதேசத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய, ஆர்.எஸ்.எஸ்-இன் தலைமைக் குரு மோகன் பாகவத், “இயற்கை விவசாயம் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, விவசாய உற்பத்தியைப்  பெருக்குவதற்கும் சிறந்தது” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்! மேலும் “இரசாயன உரங்கள் பஞ்சாப் விவசாயத்தையே அழித்து விட்டது” என்ற ‘பிரம்ம ரகசியத்தையும்’ புதிதாகக் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்!.

“என்னடா இது விவசாயத்திற்கு வந்த புது சோதனை” என்று டி.வி.யை திருப்பினால் அதில் எச். ராசா, “இயற்கை விவசாயத்திற்கு பசுமாடு அவசியம்” என்று பேட்டி கொடுக்கிறார்! “பசும்பாலிலிருந்து செய்யப்படும் பஞ்சகாவ்யா செய்முறை பற்றி வேத நூல்களிலேயே உள்ளது” என்று ஒரு சாமியார் சொல்கிறான்.

“இப்படி இவனுக ஒன்னா சேர்ந்து கும்மியடிச்சா ஏதாவது விசயமிருக்கணுமே” என்று யோசித்தபோது, “பிரதான் மந்திரி கிருஷி விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யப்படும்!” என்று 2017-18 பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்தது நினைவுக்கு வந்தது. அருண் ஜெட்லியின் அறிவிப்புக்கு ஆதரவாக பாகவத் பேசினாரா? அல்லது, பாகவத்தின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்டு ஜெட்லி அறிவித்தாரா? என்ற குழப்பத்திற்கு விடைகாண முயற்சித்தோம்.

ஆர்.எஸ்.எஸ்.-இன் தலைவர் மோகன் பாகவத்.

“ஆர்கானிக் உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக பொருளாதாரக் கேபினட் கமிட்டி அறிவித்துள்ளது. இதனால், ஆர்கானிக் பயறு வகைகளின் ஏற்றுமதி 10,000 டன்னிலிருந்து 60,000 டன்னாக உயர்ந்துள்ளது” என்ற அவுட்லுக் பத்திரிகையின் செய்தி கண்ணில் பட்டது!

சரி… ஆர்கானிக் பொருள்களின் சந்தை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் என்று அபெடா (APEDA)-வின் தளத்திற்கு போனால், “சர்வதேச ஆர்கானிக் பொருள்களுக்கான சந்தை மதிப்பு 2014-இல் 80 மில்லியன் டாலராக இருந்தது. 2020-இல் இதன் மதிப்பு 100 பில்லியன் டாலராக (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6 லட்சம் கோடி) உயரும் என மதிப்பீடு” செய்யப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தது!

இதில் இந்தியாவின் பங்கு என்ன என்று கேட்டால், “2002-03 -இல் இந்தியா  12.4 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்கானிக் பொருள்களை ஏற்றுமதி செய்தது. 2015-16இல் ஏற்றுமதியின் அளவு 2.98 மில்லியன் டாலர்தான் உயர்ந்துள்ளது” என்று தேசபக்தர்கள் வருத்தப்படுகிறார்கள்! இவ்வளவு பெரிய உலகச் சந்தையில் இந்தியாவின் பங்கு இப்படிக் குறைவாக இருந்தால், நாடு எப்படி வல்லரசாகும் என்பதுதான் தேசபக்தர்களின் கவலைக்குக் காரணம்!

இரவில் சாப்பாடு இல்லாமல் தூங்கப்போகும் ஏழை இந்திய மக்களைப் பற்றி இந்த தேசபக்தர்களுக்கு கவலையில்லை! அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு நஞ்சில்லாத உணவுப்பொருளை தாராளமாக விளைவித்துக் கொடுக்க முடியவில்லையே என்பதுதான் இவர்களின் தேசியக் கவலை! ஆர்கானிக் விவசாயத்தை விரிவுபடுத்தினால்தான், உணவுப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் நம் விவசாயிகளிடம் வந்து கொள்முதல் செய்வார்கள். இதுதான் விவசாயிகளின் வருமானத்தை  இரட்டிப்பாக்கும் வழி என்பதுதான் இவர்கள் சொல்லவரும் கூடுதல் செய்தி.

மேற்கண்ட கூட்டத்தில் தொடர்ந்து பேசிய பாகவத், “சனாதன் தர்மம் என்பதே நீர் (JAL), காடு (JUNGLE),  நிலம் (ZAMEEN) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதுதான். இம்மூன்றும் அழிக்கப்பட்டால் அந்த நாடு முன்னேறாது” என்று அருள்வாக்கு வழங்கியிருக்கிறார்!

ஜல், ஜங்கல், ஜமீன் என்பது 1940-இல் நிஜாம் படையினரால் கொல்லப்பட்ட கோண்டு பழங்குடியினப் போராளி கொமாரம் பீம் எழுப்பிய முழக்கம். இன்று இந்த முழக்கத்தை முன்வைத்துப் போராடுகின்ற மாவோயிஸ்டுகளையும் பழங்குடிகளையும் மோடி அரசுதான் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் சொந்தமாயிருந்த ஆற்றுப் படுகைகளையும், விளைநிலங்களையும், காடுகளையும் ஆக்கிரமித்துக் கொண்டதுதான் பார்ப்பனியத்தின் வரலாறு.

வருணாசிரமக் கொடுங்கோன்மையால் மக்களைக் கொன்றுகொண்டே, “சர்வே ஜனா சுகினோ பவந்து” (எல்லோரும் இன்புற்றிருக்கட்டும்) என்று தேனொழுக கூறுவதும், நிலப்பறி சட்டத்தை திணித்துக் கொண்டே, அதற்கு நேர் எதிராக அருள் வாக்கு சொல்வதும் அவர்களுக்குப் பழகிய கலைகள்.

ஒருபுறம் எதிர்ப்புகளையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகைத் திணிப்பதற்கு முயற்சிக்கிறது மோடி அரசு. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு திணிக்கப்படுவதற்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போதே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட மரபணு தொழில்நுட்ப ஆய்வுக்குழு, மரபணு மாற்றம் செய்யப்பட்ட (ஜி.எம்.) கடுகுக்கு அவசரம் அவசரமாக சான்றிதழ் தருகிறது.

இந்தக் களவாணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய வேளாண் அமைச்சர், பன்னாட்டு விதை நிறுவனங்கள் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிக்கை விடுகிறார் சுதேசி ஜாக்ரன் மஞ்சின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அஷ்வனி மகாஜன். பன்னாட்டு நிறுவனங்கள் நமது உணவுப் பாதுகாப்புக்கு எதிரானவையாம். அவர்களை அனுமதித்தால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு பறிபோய்விடுமாம்.

விவசாயிகளின் வளமான வாழ்விற்கு இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் ஹைதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றும் மைய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங். (கோப்புப் படம்)

அமைச்சர் கலந்து கொள்ளாததைப் பற்றி அந்த பன்னாட்டு நிறுவனங்கள் கவலையே படவில்லை. பிரதமரையே டவுசர் பாக்கெட்டில் வைத்திருப்பவர்கள் இதற்கா கவலைப்படுவார்கள்? இந்திய விதைக் கம்பெனிகளின் சம்மேளனம் என்ற அந்த அமைப்பின் தலைமைச் செயலகம், மோடி ஆட்சிக் காலத்தில் சென்ற ஆண்டில்தான் டில்லியில் தொடங்கப்பட்டது.  மான்சான்டோ, டூபான்ட், பேயர், டௌ கெமிக்கல்ஸ், சைன்ஜெண்டா உள்ளிட்ட 32 நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பு, நாங்கள்தான் இந்தியாவின் விதைச் சந்தையில் 50% கட்டுப்படுத்துகிறோம் என்று  அறிவித்திருக்கிறது.

அக்லக்கையும், பெஹ்லு கானையும், ஜுனைதையும் கொலை செய்த அஷ்வனி மகாஜனின் பரிவாரங்கள், நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கே எதிரான பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய மாநாட்டின் மீது இரண்டு கற்களைக்கூட வீசவில்லை. ஒருபுறம் மோடி நாட்டை அறுத்து விற்றுக்கொண்டிருக்க, இவர்கள் மாட்டை அறுப்பது பற்றிப் பேசி கவனத்தை திருப்புகிறார்கள்.

“நாங்கள் அரசியல் கட்சி அல்ல, சமூக இயக்கம். தேசத்திற்கு எதிராக எங்கள் கட்சியின் மத்திய அமைச்சரே செயல்பட்டாலும் எதிர்ப்போம்!” என்கின்ற பொய்த்தோற்றத்தை மக்களிடம் உருவாக்குகிறார்கள்.

இப்படிப்பட்ட சமூக முகம் ஆர்.எஸ்.எஸ்.-க்கு மட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உண்டு. இரசாயன உரங்களால் எந்த பஞ்சாப்பின் விவசாயம் அழிந்துபோனதாக மோகன் பாகவத் கூறுகிறாரோ, அதே பஞ்சாப்பின் வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் உலகின் முன்னணி பன்னாட்டு வேளாண் நிறுவனமான சைன்ஜெண்டா, “நீடித்த வேளாண் வளர்ச்சிக்கான கூட்டு ஆய்வுத்” திட்டங்களில் ஈடுபட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது! 2011-இல் இந்நிறுவனம் பஞ்சாப்பில் காலடி பதித்த பின்னர்தான் பஞ்சாப் விவசாயிகளின் தற்கொலையும் அதிகரிக்கத் தொடங்கியது! இக்கொலைகார நிறுவனத்திற்கும் ஒரு சமூக முகம் இருக்கிறது!

சைன்ஜெண்டா நிறுவனம், பீகார் மாநிலத்தின் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தை தத்தெடுத்து, விவசாயக் கிராமங்களில் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்து வருகிறது! “மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் ஒரு அங்கமாக இச்சேவையில் ஈடுபட்டு வருகிறோம்” என்கிறார் சைன்ஜெண்டா அதிகாரி கே.சி.ரவி!

ஆர்.எஸ்.எஸ்-க்கு இருப்பதை விட, மான்சாண்டோ, கார்கில், போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகமான ‘சமூக முகங்கள்’ இருக்கின்றன. எனவே ஆர்.எஸ்.எஸ்.-ஐ சமூக இயக்கம் என்று நம்புவதாயின், பன்னாட்டு நிறுவனக் கொள்ளையர்களையும்  “சமூக நிறுவனங்கள்” என்றே நாம் அழைக்க வேண்டியிருக்கும்.

-அன்பு

புதிய ஜனநாயகம் – ஜூலை 2017