வன் குமார், மேற்கு உ.பி.யிலுள்ள ஹாபூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி. இவர் கடந்த ஆண்டு அக்டோபரில் 12 ஏக்கர் அளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்திருந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 1,200 குவிண்டால் அளவிற்கு அமோகமான விளைச்சல் அவருக்குக் கிடைத்தது. எனினும், அறுவடை செய்த உருளைக்கிழங்கை உடனடியாக பவன் குமாரால் விற்க முடியவில்லை. காரணம், மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை.

கடந்த ஆண்டு நவம்பருக்கு முன்பாக ஒரு கிலோ உருளைக்கிழங்கை ரூ.10 தொடங்கி ரூ.12 வரை விவசாயிகளால் விற்க முடிந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, இந்த விலை ரூ.6−லிருந்து ரூ.8−ஆகச் சரிந்து விழுந்தது. பவன் குமாருக்கு ஒரு கிலோ உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய ஐந்து ரூபாய் வரை செலவாகியிருந்த நிலையில், ஆறு ரூபாய்க்கு உருளைக்கிழங்கை விற்பது தனக்குக் கட்டுப்படியாகாது எனக் கருதிய அவர், தனது விளைச்சல் முழுவதையும் குளிர்பதனக் கிடங்கில் சேமித்து வைத்துவிட்டு, கோடைக்காலம் தொடங்கியவுடன் விற்கலாம் என முடிவெடுத்தார்.

தனது விளைச்சல் முழுவதையும் ஐம்பது, ஐம்பது கிலோவாக 2,200 மூட்டைகளில் கட்டி, அவற்றைக் குளிர்பதனக் கிடங்கில் கொண்டு சேர்த்தார். 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்கை நான்கு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைப்பதற்குக் குறைந்தபட்ச வாடகை நூற்று முப்பது ரூபாய். சாக்கு விலை, சேமிப்புக் கிடங்கிற்கான வாடகை, வயலில் இருந்து உருளைக்கிழங்கைச் சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துக் கூலி எல்லாம் சேர்த்து பவன் குமாரின் உற்பத்திச் செலவை அதிகரித்தபோதும், கோடையில் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை பவன் குமாருக்கு இருந்தது.

ஆனால், அவரது நம்பிக்கையில் மண்தான் விழுந்தது. பவன் குமார் சேமித்து வைத்திருந்த உருளைக்கிழங்கை கிலோ இரண்டு ரூபாய்க்கு (மூட்டைக்கு நூறு ரூபாய்) விலை பேசினார்கள் கமிசன்  ஏஜெண்டுகள். அந்த விலை, ஒரு மூட்டை உருளைக்கிழங்கைச் சேமித்து வைக்கச் செலுத்த வேண்டிய வாடகைக்குக்கூட ஈடாகாததால், பவன் குமார் உருளைக்கிழங்கு மூட்டைகளைச் சேமிப்புக் கிடங்கிலிருந்து  திரும்ப எடுக்கவில்லை.

பவன்குமாருக்கு ஏற்கெனவே எட்டு இலட்ச ரூபாய் வங்கிக் கடன் நிலுவையில் உள்ளது. உருளைக்கிழங்கு விளைச்சலால் பழைய கடனோடு புதிய கடன் சேர்ந்ததுதான் அவர் கண்ட பலன்.

பவன்குமார் ஒரு உதாரணம். அலிகாரைச் சேர்ந்த சாஹுகர் சிங் இன்னொரு உதாரணம்; ஹாபூரைச் சேர்ந்த ஓம் தத் சிங் மற்றொரு உதாரணம். இப்படி, ‘‘சேமித்து வைத்தால் நல்ல விலை பெறலாம்’’ என நம்பி ஏமாந்த பல்லாயிரம் விவசாயிகளை மேற்கு உ.பி.யிலும் பஞ்சாபிலும் அரியானாவிலும் காண முடியும். உண்மை இவ்வாறிருக்க, நமது பொருளாதார மேதைகளோ, ‘‘இந்தியாவில் போதிய அளவிற்குச் சேமிப்புக் கிடங்குகள் இருந்திருந்தால், விவசாயிகளுக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காது’’ என நீட்டி முழங்கி வருகிறார்கள்.

குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் விவசாய விளைபொருட்களை அழுகாமல், கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். ஆனால், விவசாயிகளுக்கு இலாபம் தரத்தக்க விலையைப் பெற்றுக் கொடுக்கும் மந்திரக் கோல் அவைகளிடம் கிடையாது.

-ஆர்.ஆர்.

புதிய ஜனநாயகம் – ஜூலை 2017