த்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சர்தார் பரேலா தன்னுடைய இரு இளம்வயது மகள்களையும் உழவு மாட்டுக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறார்.

ராதா(13), குந்தி(9) என்ற இரு சிறுமிகளும் தங்களுடைய தந்தைக்கு உழவு மாடுகள் வாங்கப் பணம் இல்லாததால் நிலத்தில் மாடாய் உழைப்பதோடன்றி மாடாகவே மாறிவிட்ட அவலம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் அதுவும் முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே நிகழ்ந்துள்ளது. இது மட்டுமன்றி இவர்கள் வசிக்கும் தொகுதி சுஷ்மா சுவராஜ் வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.

இளம் பெண்களின் தந்தை பரேலா கூறுகையில் “மாடு வாங்க என்னிடம் பணமில்லை, அதே சமயம் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள ராதாவை மேற்கொண்டு படிக்க வைக்க காசும் இல்லை. இரண்டாவது மகளுக்கும் அதே நிலை தான்..அரசாங்கத்திடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்து, எதிர்பார்த்து கடைசியில் ஏமாந்தது தான் மிச்சம். வாழ்வதற்கு வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் என்னுடைய மகள்களையே உழவுக்குப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளானேன். கடந்த இரு வருடங்களாக இப்படிச் செய்துவருகிறேன்” என்கிறார்.

இரண்டு வருடங்களாக எட்டிக் கூடப் பார்க்காத அதிகார வர்க்கம், இணையத்தில் இது குறித்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் தாசில்தாரே அவருடைய ஊருக்கு விரைந்து சென்று உதவிகள் அளிப்போம் என்று உறுதியளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்கவும், பண்ணைக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் கோரி 2017, ஜூன்1 முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . ஆனால் ‘வியாபம் புகழ்’ சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசோ போராடிய விவசாயிகள் மீது போலீசைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி 6 விவசாயிகளைக் கொன்றது. உச்சகட்ட காமெடியாக அமைதி வேண்டி சாகும்வரை உண்ணாவிரதப் போர் நடத்தப் போவதாக அறிவித்து விட்டு விவசாயிகள் எதற்கும் மசிந்து கொடுக்காததால் இறுதியில் சாகாமலேயே உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் சிவராஜ்சிங் சவுகான்.

அதே சமயத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று சிவராஜ்சிங் சவுகானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். தரகு முதலாளிகளுக்கும், மல்லையாக்களுக்கும் பற்றாக்குறை இல்லாமல் அள்ளிக் கொடுக்கும் ரிசர்வ் வங்கிக்கு விவசாயக் கடன் என்றால் இனிக்கவா செய்யும்?

விவசாயத்தில் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வேலையில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க அரசு தீவிரமாக செய்துவருகிறது. அந்த வகையில் தன்னுடைய பசுவதை தடுப்புச்சட்டத்தைக் கொண்டுவந்து நாடு முழுவதிலும் விவசாயிகள் மாடு வளர்க்கும் தொழிலை ஒழித்துக்கட்டி விவசாயிகளை அழித்தும் வருகிறது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது; விவசாயத்திற்கான மானியங்களை நிறுத்துகிறது.

செய்தி ஆதாரம் :