privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநீட் தேர்வு உயர்நீதிமன்றத் தீர்ப்பு - தமிழக மாணவர்களுக்கு இடமில்லை

நீட் தேர்வு உயர்நீதிமன்றத் தீர்ப்பு – தமிழக மாணவர்களுக்கு இடமில்லை

-

ருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வாக “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) 2017-ம்ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வை “மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்” (சி.பி.எஸ்.ஈ.) நடத்தியது.

இத்தேர்வு முறை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பறிக்கும் என்றும் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கேட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது தமிழக அரசு. நீட் தேர்வை தம்மால் தடை செய்ய முடியாது என்று கூறி உச்சநீதிமன்றம் கைவிரித்து விட்டது.

அதன் பின்னர், இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான நிபந்தனைகளால் மாணவர்கள், குறிப்பாக தென்னிந்திய மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதோடு ‘நீட்’ தேர்வின் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மிகச் சுலபமானதாகவும், பிற பிராந்திய மொழிகளில் மிகவும் கடினமானதாகவும் அமைந்திருந்ததாக தமிழ் மற்றும் குஜராத்தி மொழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கிலும் சி.பி.எஸ்.ஈ. -க்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

அதே போல இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50%க்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டுள்ளன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. முழுக்க முழுக்க பாரபட்சமாக நடத்தப்பட்ட இத்தேர்வின் முடிவுகளில் எதிர்பார்த்தது போலவே தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.

தமிழக மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க ஓர் அரசாணையை கடந்த 2017, ஜூன் 22-ம் தேதி அன்று தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி தமிழக அரசின் சமச்சீர் கல்வியின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும். அந்த அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் சி.பி.எஸ்.ஈ. பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் 10 பேரின் சார்பில் அவர்களது பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.இரவிச்சந்திரபாபு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை இரத்து செய்து கடந்த ஜூலை 14, 2017 அன்று உத்தரவு பிறப்பித்தார். அதில் இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக மட்டுமே வழங்க முடியும் என்றும் மாநிலப் பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த அரசாணையானது, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளதாகவும், சமதளம் என்ற போர்வையில், சமமானவர்களிடையே பாகுபாட்டைத் தோற்றுவிப்பதாகவும், நீட் தேர்வின் நோக்கத்தை மறைமுகமாக சீர்குலைப்பதாகவும் உள்ளது என்றும் இந்த அரசாணையை வெளியிட மாநில அரசுக்கு அரசியலமைப்புப் படி அதிகாரம் இருந்தாலும். அது சட்டத்தை மீறுவதாக இருக்கக் கூடாது என்றும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி இரவிச்சந்திரபாபு தனது தீர்ப்பில், தமிழக அரசின் அரசாணை “சமதளம் என்ற போர்வையில் சமமானவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகக்” குறிப்பிட்டிருக்கிறார்.

நீட் தேர்வில் பிராந்திய மொழியில் தேர்வு எழுதியவர்களுக்கு கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததும், பாதிக்கும் மேற்பட்ட கேள்விகள் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டிருந்ததும், நீதிபதி இரவிச்சந்திரபாபு உள்ளிட்ட எந்த நீதித்துறை கனவான்களுக்கும் சமமானவர்களிடையே ஏற்படுத்தப்படும் பாகுபாடாகத் தெரியவில்லை.

மாறாக, மாநிலக் கல்வித்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு முறையின் மூலம் இழைக்கப்பட்ட அநீதிக்கு பிராயச்சித்தமாக வழங்கப்படும் இடஒதுக்கீடு, இரவிச்சந்திரபாபுவுக்கு மிகப்பெரும் பாகுபாடாகத் தெரிகிறது. பல்வேறு வாய்ஜால வார்த்தைகளால் தமிழக அரசின் இந்த அரசாணை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, இந்த அரசாணை செல்லுபடியாகாது என்று தீர்ப்பெழுதியிருக்கிறார்.

இப்படி மாநில உரிமையும் மக்கள் உரிமையும் பறிபோவது குறித்த சுரணையோ, எதிர்ப்போ இல்லாத அடிமை எடப்பாடி அரசு தில்லிக்கும், பாஜகவிற்கும் காவடி தூக்குவதிலையே பொழுதைக் கழிக்கிறது.

கல்வித்துறையில் தனது மாநிலத்துக்கான நிலைமைகளுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. மோடியின் மனுநீதி  ஆட்சி அந்த உரிமையை பறிக்கிறது. நீதிமன்றம் அதை ஆமோதிக்கிறது. மக்களே இந்த உரிமையை மீட்காமல் இனி தமிழகத்திற்கும் ஏழை மாணவர்களுக்கும் விடுதலை இல்லை.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி