privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைநான் ஒரு நக்சலைட்- மனுஷ்ய புத்திரன்

நான் ஒரு நக்சலைட்- மனுஷ்ய புத்திரன்

-

நக்சலைட்

மாணவி வளர்மதி

நான் ஒரு நக்சலைட்
என்னைக் கைது செய்யுங்கள்
என்னைக் கொலை செய்யுங்கள்

நான் வெடிகுண்டுகள் செய்யவில்லை
வாகனங்களைத் தகர்க்கவில்லை
வனங்களில் மறைந்து வாழவில்லை

மக்களின் நிலம் திருடப்படுவதற்கு எதிராக
நான் ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

நான் அணு உலைக்கு எதிராக
உண்ணாவிரதம் இருந்தேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

நான் பழங்குடிகளுக்கு
மருத்துவம் செய்தேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

நான் வகுப்பறையில் மாணவர்களுக்கு
மனித உரிமையை போதித்தேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

நான் சாராயக் கடைக்கு எதிராக
ஒரு பாட்டுப் பாடினேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

நான் மரித்த தியாகிகளுக்கு
அஞ்சலி செலுத்த முயன்றேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

நான் வாடிவாசலை
திறக்கக் கோரினேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

நான் லாக் அப் மரணங்களுக்கும்
போலி என்கவுன்டர்களுக்கும்
நீதி கோரினேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

நான் அவர்களுக்குப் புரியாத
சில புத்தகங்களை வைத்திருந்தேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

தெருவில் உட்கார்ந்திருந்த மக்களை
திரும்பிப் பார்க்காமல் போன மந்திரிக்கு
செருப்பை எடுத்துக் காட்டினேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

அதிகாரத்தின் மறைவிடங்களில்
காறிதுப்பும் ஒரு கவிதையை எழுதுகிறேன்
ஆகவே நான் ஒரு நக்சலைட்

எனக்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கின்றன
நான் ஒரு தேச விரோதி
நான் ஒரு சமூகவிரோதி
நான் ஒரு பிரிவினைவாதி
நான் ஒரு கூட்டுச்சதிகாரன்
நான் ஒரு பயங்கரவாதி
ஆனால் நக்சலைட் எனும் பெயர்தான்
சொல்வதற்கு எளிதாக இருக்கிறது
அதைச்சொல்லும்போது
ஒரு அச்சம் மனதில் கவிகிறது

கையில் பதாகையுடன் நின்றிருந்த
ஒரு இளம்பெண்ணை
ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து
கீழே தள்ளுகிறான்
பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்
முதலில் அவளுக்கு
அந்த வார்த்தையின் அர்த்தம்கூடத் தெரியவில்லை
பிறகு அவள் அந்தச் சொல்லின்
அர்த்தக் கடலில் நீந்தத் தொடங்கினாள்

தினமும் நக்சலைட்டுகள்
கொல்லப்பட்டார்கள் என்றோ
பிடிபட்டார்கள் என்றோ
சில மங்கலான புகைப்படங்கள்
பத்திரிகைகளில் வெளிவருகின்றன
மக்கள் அதை அப்படியே நம்புகிறார்கள்
அந்தக் கொலைக்கு
அந்த கைதுகளுக்கு
உடனடி அங்கீகாரங்கள் வழங்குகிறார்கள்
அந்த மனிதர்களின் அடையாளங்கள்
உறுதிப்படுத்தப்படுவதில்லை
அவர்கள்மீதான குற்றங்களுக்கு
நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கப்படுவதில்லை
அவர்கள் அப்புறம் காணாமல் போய்விடுகிறார்கள்
பிறகு
பிணமாகவோ
நடைபிணமாகவோ
பைத்தியமாகவோ
இந்த வாழ்க்கைக்குள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்
நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்
நீண்ட காலமாக இது இப்படித்தான் நடக்கிறது

ஒருவர் நக்சலைட் என்று அழைக்கபட்டதுமே
நாம் அவர்களை கைவிட்டு விடுகிறோம்
அவர்கள்
உங்களைவிடவும்
உங்களை நேசித்தவர்களாக இருக்கக்கூடும்
அவர்கள்
உங்களைவிடவும்
இந்த தேசத்தை நேசித்தவர்களாக இருக்கக்கூடும்
அதனாலேயே
அவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்
மக்கள் மீதான நேசம்தான்
உண்மையான வெடி மருந்து
அதிகாரம் அதைக் கண்டு எப்போதும் அஞ்சுகிறது
மக்களின் மீதான அன்பு
கலகத்தை உருவாக்குகிறது

துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு
அரசாங்கம் உரிமம் வழங்குகிறது
அதைபோலவே ஒருவரை
நிபந்தனையில்லாமல் அழிப்பதற்கும்
அரசே உரிமை வழங்குகிறது
அது ஒருவரை நக்சலைட் என்று அழைப்பது
பிறகு நாயைச்சுடுவதுபோல
எந்த ஒரு மனிதனையும் சுடலாம்
எனக்குத் தெரிந்து ஒரு டெய்லர்
அப்படித்தான் சுடப்பட்டான்
மளிகைக்கடையில் வேலை செய்த
ஒரு மத்தியதர வயதினனை
காவல் துறையினர் நள்ளிரவில் அழைத்து சென்றார்கள்
பிறகு அவனை யாருமே பார்க்கவில்லை

பயங்கரங்களை புரிபவர்கள்
இரண்டு பக்கமும் இருக்கிறார்கள்
ஆயுதபாணியாய் இருக்கிறார்கள்
யுத்த தந்திரங்களோடு இருக்கிறார்கள்
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வதில்லை
எளிய மக்கள் கொல்லப்படுகிறார்கள்
சிறைக் கம்பிகளின் பின்னே
பல ஆண்டுகள் தடுத்துவைக்கப்படுகிறார்கள்
பின்னர் சித்தரவதை அறைகளில்
லாடம் கட்டப்பட்டு
முறிந்த பாதங்களால்
கெந்திக் கெந்தி நடந்தபடி
நிரபராதிகள் என்று விடுதலையாகிறார்கள்

ஒரு பெண் துண்டுப்பிரசுரங்களை
வினியோகித்ததற்காக
நக்சலைட் என்று அழைக்கப்பட்டு
இன்று சிறையிலிருக்கிறாள்
அவளை நாம் கைவிட்டு விடக்கூடாது
நமக்காக சுவர்களில் எழுதியவர்களை
எப்படிக் கைவிட்டோமோ
நமக்காக லத்தியால்
முதுகெலும்பு முறிக்கப்பட்டவர்களை
எப்படி கைவிட்டோமோ
நமக்காக பன்னிரெண்டு ஆண்டுகளாக
விசாரணைக்கைதிகளாக இருப்பவர்களை
எப்படிக் கைவிட்டோமோ
அப்படி அவளையும்
நாம் கைவிட்டுவிடக்கூடாது

நன்றி: –  மனுஷ்ய புத்திரன்
_____________

  1. அதிகாரத்தின் அநீதிக்கு எதிராக பாடும் கவிஞனின் நெஞ்சுரத்தை வியக்கிறோம்! அவனோடு இணைந்து சொல்வோம்! நாங்களும் நக்ஸலைட்டுகள் தான்!

  2. தீவிரவாதியாவோம் தீராதநோய்க்கு மருந்தாவோம்!நோயோடுமோதுவதுதான் மருந்தின் வேலை நோயின்நெடி நீடிக்கிறதென்றால்மருந்தில்வீரியம்இல்லை எனக்கொள்!வீரியம்கொள்வோம்! நோயைதீர்ப்போம்!நோயோடுகெஞ்சுவது நோய்முற்றியதின்அறிகுறி! மருந்தின் வேலைமண்டியிடுவதல்ல !மாத்தியமைப்பதுதான்! வாருங்கள் தீவிரமருந்தாவோம்!

Leave a Reply to Sudeshkumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க