privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநீட் தேர்வு : போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ?

நீட் தேர்வு : போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ?

-

மாணவர்கள், பெற்றோர்களின் இந்த முற்றுகையால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து தப்பிச் சென்றார் அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி

மிழகத்தில் நீட் எனும் “தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை” எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மசோதாவை உரிய அழுத்தம் கொடுத்து ஜனாதிபதியிடம் ஒப்புதலை வாங்காமல் மோடியிடம் மண்டியிட்டு கிடக்கிறது எடப்பாடி அரசு.

கடந்த 2017, ஜூன் 22-ம் தேதி அன்று தமிழக அரசு ஒரு ஆணை வெளியிட்டது. அதன்படி தமிழக அரசின் சமச்சீர் கல்வியின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும். அந்த அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் சி.பி.எஸ்.ஈ. பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் 10 பேரின் சார்பில் அவர்களது பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.இரவிச்சந்திரபாபு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை இரத்து செய்து கடந்த ஜூலை 14, 2017 அன்று உத்தரவு பிறப்பித்தார். அதில் இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக மட்டுமே வழங்க முடியும் என்றும் மாநிலப் பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் மாநில பாடத்திட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த 4.2 லட்சம் மாணவர்களுக்கான 85% இடங்கள் மருத்துவக்கல்லூரிகளில் பறிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் அனைத்தும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தில் படித்து தேர்வு எழுதிய 4,675 மாணவர்கள் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது “தமிழகத்தில் சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்து என்பதுடன் மாணவர்களிடையே பாகுபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் மு.க. ஸ்டாலின். மத்திய, மாநில அரசுகளின் இந்தப் போக்கை கண்டித்து ஜூலை 27 அன்று மாவட்ட தலை நகரங்களில் மனித சங்கிலி போராட்டத்தை திமுக அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்காக தமிழக எதிர்க்கட்சிகள் இப்படி போராட்டம் நடத்துவது சரியான விசயம் என்றாலும் அவை வெறுமனே அடையாளப் போராட்டங்களாக நின்று விடுகின்றன. இலட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்டிருப்பதாக கூறும் இக்கட்சிகள் அரசாங்கத்தையே முடக்கிப் போடுமளவு போராட்டங்கள் நடத்துவதில்லை. சுயநிதிக் கல்லூரிக முதலாளிகளிடையே தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு, தே.மு.தி.க என்று எல்லாக் கட்சி முதலாளிகளும் உள்ளனர். கல்வியில் தனியார்மயம் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட இக்கட்சிகள் நீட் தீர்வுக்காக இதற்கு மேல் பேசுவது சாத்தியமில்லை என்பதே நிலைமை.

இந்நிலையில், “கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின்” கீழ் உள்ள இளநிலை படிப்புகளுக்கு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் ஜூலை 19ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. அதில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளில் மாற்றுத்திறனாளிகள், தொழில் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. கால்நடை மருத்துவம் இளங்கலை படிப்பு, பொதுப்பிரிவினருக்கு 20ம் தேதி நேற்று காலை கலந்தாய்வு தொடங்கியது. இந்த 233 இடங்களுக்கான கலந்தாய்வுக்கு 1,115 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

கலந்தாய்வு நிகழ்ச்சிக்கு கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வந்திருந்தை அறிந்த மாணவர்கள், பெற்றோர்கள் அரங்கின் முன் அமர்ந்து “நீட் தேர்வுக்கு விலக்கு பெறாததை கண்டித்து” மத்திய அரசு, தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மாணவர்கள், பெற்றோர்களின் இந்த முற்றுகையால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து தப்பிச் சென்றார் அமைச்சர் கிருஷ்ணா ரெட்டி.

தற்பொழுது அதிமுக அடிமை கைப்பிள்ளைகளுடன் கம்பு சுழற்றிக்கொண்டிருக்கும் கமலோ, “உயர்நிலைப்பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காதவன் நான் என்பதால் எனக்கு நீட் பிரச்சனை புரியாது” என்று மிகவும் அடக்கமாக கூறியிருக்கிறார். கமலின் கூற்றை நாம் அப்படியே கடந்து சென்று விட முடியாது. நீட் தேர்வை பற்றி பேசுவதற்கு முனைவர் பட்டம் முடித்திருக்க வேண்டும் என நினைக்கிறாரோ???

தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவு கலைந்து விட்டதை எண்ணி அனுதினமும் பேசுகிறார்கள். பெற்றோர்களுடன் இணைந்து இந்த அரசை எதிர்த்து முடிந்த அளவு போராடி வருகிறார்கள். தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதுகிறார்கள். இது எல்லாம் கமலுக்கு தெரியாததும் அல்ல. புரியாததும் அல்ல. இருந்தும் மத்திய அரசுக்கு எதிராக எதற்கு கம்பு சுற்ற வேண்டும் என்று சுழற்றிய கம்பை கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு தன் மகள் டெங்குவால் அனுபவித்த சோக கதையை அவிழ்த்து விட்டு, பிரச்னையை தீர்க்கா விட்டால் ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்று கீச்சுகிறார்.

அடிமைகளுக்கு எதிராக கம்பு சுற்றும் கமலாக இருக்கட்டும்,  பா.ஜ.கவிடம் விலைபோயிருக்கும் அதிமுக அடிமைகளாக இருக்கட்டும் யாரும் மோடி அரசை எதிர்க்கப் போவதுமில்லை. மாணவர்களின் “நீட்” பிரச்னையை தீர்க்கப் போவதுமில்லை. ஜல்லிக்கட்டில் நடத்திய மெரீனா எழுச்சியை போன்றதொரு மக்கள் எழுச்சிப் போராட்டம் தான் இந்த டெட்பாடி அரசையும், கார்ப்பரேட் மோடி அரசையும் பணிய வைக்க முடியும்.

ஆனால் மருத்துவ துறை சார்ந்த மாணவர்களோ இன்னமும் மெழுகுவர்த்தி வகைப்பட்ட எதிர்ப்புக்களையே தெரிவிக்கிறார்கள். நோயின் மூலத்தை புரிந்து கொள்வதும் அதற்கு என்ன மருந்து தேவை என்பதை பயன்படுத்துவதுமே நீட் நோயைப் போக்குவதற்கு பயன்படும்
_____________

இந்தச் செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி