privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சிறப்புக் கட்டுரை: நிதிஷ் குமார் பரிசுத்த ஆவியாய் மாறியது ஏன் ?

சிறப்புக் கட்டுரை: நிதிஷ் குமார் பரிசுத்த ஆவியாய் மாறியது ஏன் ?

-

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மனசாட்சி திடீரென விழித்துக் கொண்டது போலும். கடந்த 2015 -ம் ஆண்டு நடந்த பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசு கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

“பீகாரி – பகாரி” (பீகாரிக்கும் வெளியாட்களுக்கும்) இடையிலான போராக அந்த தேர்தலைச் சித்தரித்த லாலு – நிதிஷ் கூட்டணி, மொத்தமுள்ள 243 இடங்களில் 178 இடங்களை வென்றது. இதில் ஐக்கிய ஜனதா தளம் 71 இடங்களையும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 இடங்களையும் காங்கிரசு 27 இடங்களையும் பெற்றன. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி வெறும் 58 இடங்களைப் பிடித்து படுதோல்வியடைந்தது – இதில் பாரதிய ஜனதா மட்டும் 53 இடங்களில் வென்றிருந்தது. தேர்தலுக்குப் பின் நிதிஷ் குமார் முதல்வராகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். இந்த நிலையில் தான் நிதிஷ் குமாரின் மனசாட்சி விழித்துக் கொண்டது.

நிதிஷ் குமாரின் மனசாட்சியின் திடீர் ஆவேசத்துக்கு ஊடகங்களில் பலவாறான வியாககியானங்கள் எழுதப்படுகின்றன. முதலாவதாக, லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் ஊழல்களால் நிதிஷ் குமார் பெரிதும் துயருற்றார் என்றும், இதை பாரதிய ஜனதா பயன்படுத்திக் கொண்டது என்றும் சொல்கிறார்கள்.

இரண்டாவதாக, லாலு இரயில்வே துறைக்கான மத்திய அமைச்சராக இருந்த போது ஒப்பந்தங்கள் மற்றும் நிலம் ஒதுக்கீட்டில் தனது மகன் தேஜஸ்விக்கு ஆதரவாக முறைகேடுகளில் ஈடுபட்டார், என்கிற பழைய குற்றச்சாட்டை சி.பி.ஐ தற்போது தூசு தட்டியது. தனது துணை முதல்வரே ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால், மனவருத்தம் கொண்ட நிதிஷ், தனது நேர்மையை நிரூபிக்கும் வரை தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் எனக் கோரியதாகவும், இதற்கு லாலு குடும்பம் மறுக்கவே வேறு வழியின்றி நேர்மையின் சிகரமான நிதிஷ் பாரதிய ஜனதா முகாமுக்கு மாறியதாகவும் நிதீஷ் குமாரே ஊடகங்களிடம் பேசினார்.

மூன்றாவதாக, அமித்ஷா – மோடி இணையின் சாமர்த்தியமான அரசியல் காய் நகர்த்தல்கள் எதிர்கட்சி முகாமை மொத்தமாக நிலைகுலையச் செய்திருப்பதாகவும், அதன் ஒரு பகுதியாகவே நிதிஷ் குமாரின் அணி மாற்றத்தைப் பார்க்க வேண்டும் எனவும் ஊடகங்கள் சொல்கின்றன.

நான்காவதாக, அடுத்த பத்தாண்டுகளுக்கு பாரதிய ஜனதாவின் எதிர்கட்சிகளுக்கு அரசியல் அரங்கில் இடமில்லாத ஒரு நிலையை மோடி அமித்ஷா இணை ஏற்படுத்தியிருப்பதாகவும். அரசியலில் பிழைத்துக் கிடக்க பாரதிய ஜனதாவின் முகாமுக்குத் தாவுவதை விட மாநிலக் கட்சிகளுக்கு வேறு வாய்ப்பில்லாத நிலையில் நிதிஷ் குமார் எடுத்த சாணக்கியத்தனமான முடிவாகவும் இந்த அணிமாற்றத்துக்கு ஊடக அறிஞர்களால் ஒரு விளக்கம் சொல்லப்படுகின்றது.

இந்த மொத்த வியாக்கியானங்களின் சாரமாக நிதிஷ் குமாரின் மனசாட்சியும், பாரதிய ஜனதாவின் அரசியல் சாணக்கியத்தனமும் இருப்பதால், அவையிரண்டையும் பரிசீலித்துப் பார்க்கலாம்.

நிதிஷ் குமாரின் மனசாட்சியும் ஊழலும் :

லாலு பிரசாத் யாதவ் ஊழல்வாதி என்பதோ, அவர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக தண்டிக்கப்பட்டவர் என்பதோ, அவரது குடும்பத்தின் உறுப்பினர்கள் பலரும் அரசியல் பதவிகளில் அமர்ந்து வெவ்வேறு மட்டங்களில் ஊழல்களில் ஈடுபடுகின்றனர் என்பதோ மக்கள் அறியாத இரகசியங்கள் அல்ல. சாதாரண மக்களே லாலு குடும்பத்தின் ஊழல் முறைகேடுகளைக் குறித்து நன்கு அறிந்திருந்த நிலையில் தான் விசேடமான மனசாட்சிக்குச் சொந்தக்காரரான நிதிஷ் குமார் லாலுவின் கட்சியோடு கூட்டணி கட்டினார்.

நிதிஷ் – தேஜஸ்வி

லாலு குடும்பத்தின் ஊழல்களையும் தாண்டி அவரோடு நிதிஷ் கூட்டணி கட்டியதற்கு என்ன காரணங்கள் இருந்தனவோ, அதே காரணங்கள் தான் தற்போது கூட்டணியை முறிப்பதற்கும் உள்ளன. எனவே 2013 -ல் ஏற்பட்ட லாலு – நிதிஷ் கூட்டணி எந்த அடிப்படையில் நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

2013 -ம் ஆண்டு பாரதிய ஜனதா தனது பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்ததைத் தொடர்ந்து, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் அக்கட்சியுடனான தனது 17 ஆண்டு கூட்டணி உறவை முறித்துக் கொண்டது. மோடி பிரதமரானால் நாட்டின் மதச்சார்பின்மைக்கு பெரும் ஆபத்து என்று கூட்டணி முறிவுக்கான காரணமாக அப்போது நிதிஷ் குமார் சொல்லிக் கொண்டார்.

கூட்டணி முறிவுக்கு முந்தைய 17 ஆண்டுகளில் தான் பாரதிய ஜனதா நாடெங்கும் தனது இந்துத்துவ பிரிவினைவாத அரசியலைத் தீவிரமாக முன்னெடுத்திருந்தது. அதன் விளைவாக நாடெங்கும் வேர்மட்ட அளவில் சிறிய கலவரங்களை நடத்தி மக்களை மதரீதியில் பிளந்த பாரதிய ஜனதா, மோடியின் குஜராத்தில் (2002 -ம் ஆண்டு) இசுலாமியர்களுக்கு எதிராக மாபெரும் இரத்த வெறியாட்டம் ஒன்றையும் நிகழ்த்தியிருந்தனர்.

அப்போதெல்லாம் விழித்துக் கொள்ளாத நிதிஷ் குமாரின் மனசாட்சி, மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பின்னர் விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அப்போது நிதிஷ் போட்ட அரசியல் கணக்குகளின் பின் இரண்டு காரணங்கள் இருந்தன.

முதலாவதாக, இந்துத்துவத்தின் அதிதீவிர வடிவமாக எழுந்து வந்த மோடியின் தலைமையை ஏற்பது பீகாருக்குள் இருந்த நிதிஷ் குமாரின் இசுலாமிய வாக்கு வங்கியைப் பதம் பார்த்து விடும் என அவர் அஞ்சினார். ஏற்கனவே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இருந்தாலும், அதற்கு முன் நடந்த மாநில தேர்தல் பிரச்சாரங்களுக்காக மோடி பீகாருக்குள் நுழைவதற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து தனது இசுலாமிய வாக்கு வங்கியை சமாதானப்படுத்தி வைத்திருந்த நிதிஷ், நேரடியாக மோடியின் தலைமையின் கீழ் செல்வது தனது எதிர்கால அரசியல் வெற்றிகளைப் பாதிக்கும் என கணக்குப் போட்டார்.

இரண்டாவதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் (ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இறுதிக் காலங்களில்) “ஊழல் முறைகேடுகளுக்கு” எதிரான ஒரு மனநிலையை ஊடகங்கள் உருவேற்றி வந்தன. அப்போது மன்மோகன் சிங் அரசின் பல்வேறு உழல்கள் அம்பலமாகி வந்த நிலையில் அண்ணா ஹசாரே, அர்விந்த் கேஜ்ரிவால் போன்றோர் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் நடத்தி வந்தனர். பாபா ராம்தேவ் போன்றோர் கூட “கருப்புப் பண எதிர்ப்பு” இயக்கங்கள் நடத்தி வந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு மீட்பரின் வருகைக்கான பொதுபுத்தி கட்டமைக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக “சிறந்த ஆளுகைத் திறனும், கறைபடாத கரங்களும்” கொண்ட மீட்பராக களமிறங்குவதற்குத் தனக்கே எல்லா தகுதிகளும் இருப்பதாக நிதிஷ் கனவு கண்டு கொண்டிருந்த நிலையில் அந்தக் கனவுகளின் மேல் தண்ணீர் ஊற்றுவது போல் மோடி முன்னிறுத்தப்பட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கழண்டு கொள்வதாக ஐக்கிய ஜனதாதளம் முடிவெடுக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

பாரதிய ஜனதாவுடனான உறவை நிதிஷ் முறித்துக் கொண்ட அதே ஆண்டில் தான் (2013) கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு தண்டிக்கப்படுகிறார். அதைத் தொடர்ந்து தான் 2015 -ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக நிதிஷ் குமாரும் லாலு பிரசாத் யாதவும் கூட்டணி கட்டினர். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் உள்ளூர் சாதி அரசியலைக் கையிலேந்திச் சுழற்றிய நிதிஷ் – லாலு இணை, பாரதிய ஜனதாவின் இந்துத்துவ பிரச்சாரங்களை வெற்றிகரமாக முறியடித்தது. பீகாரி Vs பகாரி (மண்ணின் மைந்தர்கள் (லாலு & நிதிஷ்) Vs வெளியூர் பனியாக்கள் (மோடி & அமித்ஷா)) என மடைமாறிய பீகார் தேர்தலின் முடிவில் சாதிய அரசியல் இந்துத்துவ அரசியலைத் தோற்கடித்தது.

தொடர்ந்து வந்த இரண்டு ஆண்டுகளில் மோடியின் செல்வாக்கு தேசமெங்கும் அதிகரித்துள்ள நிலையையும், 2019 -ம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் திராணியை காங்கிரசு இழந்துள்ள நிலையையும் கூட்டிக் கழித்துப் பார்த்த நிதிஷ் குமார், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்கிற மூழ்கும் கப்பலை விட மோடியின் முன் சரணடைவது தனது அரசியல் எதிர்காலத்துக்கு உகந்தது என கணக்குப் போட்டே தனது முகாமை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

மற்றபடி, அதானி குழுமத்துக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கிய குற்றச்சாட்டு மோடியின் மேல் இருப்பதோ, அமித்ஷாவின் மேல் உள்ள ஊழல் வழக்குகளோ, வியாபம் ஊழலில் மத்திய பிரதேச பா.ஜ.க, காங்கிரசின் ஊழல் சாதனைகளை முறியடித்துள்ளதோ நிதிஷ் குமார் அறியாத இரகசியங்கள் அல்ல. லாலுவின் ஊழல்களுக்காக விழித்துக் கொண்ட நிதிஷின் மனசாட்சி, பாரதிய ஜனதாவின் ஊழல்களிடம் சரண் புகுந்திருப்பது முற்றிலும் அரசியல் சந்தர்பவாதமே அன்றி வேறு காரணங்களுக்காக இல்லை.

நரேந்திர மோடி – அமித்ஷா இணையின் அரசியல் சாமர்த்தியம் :

மணிபூர், அருணாச்சல் பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மைக்குக் குறைவான இடங்களையே வென்ற பாரதிய ஜனதா, குதிரை பேரங்களில் ஈடுபட்டு பின்னர் ஆட்சியமைத்தது. பீகாரில், ஆளும் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமாரை வெளியே பெயர்த்தெடுத்து வந்து ஆட்சியமைத்துள்ளது. எதிர்வரும் மாநிலங்களவைத் தேர்தலுக்காக குஜராத் மாநில காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசி வருகின்றது. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சந்தை விலையாக 15 கோடியை பாரதிய ஜனதா நிர்ணயித்து குதிரை பேரத்தைத் துவக்கியுள்ள நிலையில், இதைச் சமாளிப்பதற்காக தனது கட்சியைச் சேர்ந்த குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களை கர்நாடகாவுக்குக் கடத்தி மறைத்து வைத்துள்ளது காங்கிரசு.

பொதுவாக இது போன்ற அரசியல் பேரங்களில் கட்சிகள் ஈடுபடுவதும், சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசுவதும் இந்திய ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட “மாண்புகளில்” சேர்த்திதான் என்றாலும், முதலாளித்துவ ஊடகங்கள் இந்நடவடிக்கைகளை விமரிசிப்பது வழக்கம். ஆனால், பாரதிய ஜனதாவின் சந்தர்பவாத அரசியல் நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் சூட்டியிருக்கும் செல்லப் பெயர் தான் “அரசியல் சாமர்த்தியம்”. எதிர்கட்சிகளின் லஞ்சபேரங்களையும் முறைகேடுகளையும் தனது வசமிருக்கும் சி.பி.ஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய துறைகளைக் கொண்டு கண்காணித்துக் கட்டுப்படுத்தும் பாரதிய ஜனதாவின் அணுகுமுறைக்கு ஊடகங்கள் சூட்டியிருக்கும் பெயர் “அரசியல் தூய்மைப்படுத்தல்”

ஊடகங்கள் உள்ளிட்ட பிரச்சார சாதனங்களை ஆசைகாட்டியோ, (என்.டி.டி.வி போன்ற சில எடுத்துக்காட்டுகளில்) மிரட்டியோ தனது வழிக்குக் கொண்டு வந்துள்ள மோடி – அமித்ஷா இணை, தன்னுடைய அரசியல் அழுகுணி ஆட்டங்களுக்கு எதிராக எந்த விமர்சனங்களும் எழாத வண்ணம் தடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராவதற்கு மனுதாக்கல் செய்திருக்கும் அமித்ஷாவின் சொத்து மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் 300 சதவீதம் உயர்ந்திருப்பது பற்றி செய்தி வெளியிட்ட டைம்ஸ் நௌவ், டி.என்.ஏ போன்ற பத்திரிகைகள், அமித்ஷா தரப்பினரால் மிரட்டப்பட்ட அடுத்த நொடியே அந்த செய்திகளை அழித்துள்ளன.

கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ள மோடி – அமித்ஷா இணை, அதைக் கொண்டே தனது அரசியல் எதிரிகள் ஒவ்வொருவராக ஒழித்துக்கட்டி வருகின்றனர். இந்த சர்வாதிகார நடவடிக்கைகளைத் தான் ஊடகங்களும், முதலாளிய அறிவுத்துறையினரும் அரசியல் சாமர்த்தியம் என விளக்குகின்றனர்.

கடந்த வாரம் முழுவதும் முதலாளிய ஊடகங்கள் லாலுவின் ஊழல்களை விரிவாக பட்டியலிட்டு வந்த அதே சமயத்தில் தான், மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தவர் ஒருவர் “தற்கொலை” செய்யப்பட்டார். அதே சமயத்தில் தான் மோடி அரசு அதானி குழுமத்துக்கு முறைகேடாக வழங்கிய வரிச்சலுகைகள் குறித்த தகவல்களை பரஞ்சோய் தாக்கூர்த்தா இ.பி.டபிள்யு பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தியிருந்தார். எனினும் இவை குறித்தெல்லாம் எவரும் வாய் திறக்கவில்லை.

காங்கிரசும், லாலு போன்ற மாநிலக் கட்சிகளும் ஊழல் புரிந்தனர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகங்களும் இல்லை – பாரதிய ஜனதாவோ, இந்துத்துவ பாசிசம் மற்றும் ஊழலின் ஒட்டுமொத்தமாக உள்ளது. தனது ஊழல்கள் வெளிப்படுவதை எதேச்சாதிகார முறையில் மறைத்தும், தடுத்தும் வருகின்றது. இவர்கள் வெறும் ஊழல்வாதிகள் மட்டுமில்லை – கொடூரமான பாசிஸ்டுகளும் தான் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகின்றனர்.

பாசிஸ்டுகளான இந்துத்துவ கும்பலை மட்டுமல்ல – அவர்களின் பாதந்தாங்கிகளாகச் செயல்பட்டு வரும் ஊடகங்களையும் அவற்றின் பிரச்சாரங்களையும் மக்கள் தான் ஒருசேர எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

மேலும் :

_______________________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதா?
இந்து மதவெறி பாசிசத்தையும் பாஜக -வின் ஊழல்களையும் அம்பலப்படுத்தும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வாரச் செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

  1. ஆவிகளுக்கும் ரெய்டு என்கிற பயத்தை ஏற்படுத்தி காரியம் சாதிக்கிற ” சாத்தானின் ” ஆக்டாேபஸ் செயலுக்கு நி.குமார் மட்டும் தப்பிக்க முடியுமா …? தற்பாேது குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கர்நாடக மந்திரியின் ரெசார்ட்டில் ரெய்டு என்கிற பூச்சாண்டி காட்டி அந்த எம்.எல்.ஏ.க்களை எப்படியாவது மாநிலங்கவை தேர்தலில் அவர்களின் வாக்குகளை பா.ஜ.க பெற முயற்சிப்பதும் நடந்துக் காெண்டுதான் இருக்கிறது …. நாடு எதை நாேக்கி ….?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க