privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபகத்சிங் மண்ணிலிருந்து ஒரு போர்க்குரல் - தோழர் தத்தார் சிங் உரை !

பகத்சிங் மண்ணிலிருந்து ஒரு போர்க்குரல் – தோழர் தத்தார் சிங் உரை !

-

விவசாயியை வாழவிடு! ஆக -5, மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற மாநாட்டின் மாலை அமர்வில். பகத்சிங் பிறந்த மண்ணில் இருந்து நான் உங்களிடம் உரையாற்ற வந்திருக்கிறேன் என அறிமுகம் செய்து கொண்டு பேசத்தொடங்கிய – தோழர் தத்தார் சிங், (அகில இந்திய கிசான் மஸ்தூர் சங்கம், பஞ்சாப்) அவர்களின் சுருக்கப்பட்ட உரை.

இந்தியாவில் இப்போது இரண்டு விதமான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. முதலாவதாக, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், இரண்டாவதாக விளை பொருட்களுக்கான உரிய விலையை நிர்ணயிக்கக் கோரியும் நடைபெறும் போராட்டங்கள் ஆகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இரண்டு விதமான தீர்வுகளை முன்வைத்து போராட்டங்கள் நடந்தது. ஒன்று காந்தி முன்னிறுத்திய பிரிட்டிஷாரின் நிழல் ஆட்சியின் தொடர்ச்சிக்கான போராட்டம், இன்னொன்று மாவீரன் பகத்சிங் முன்னிறுத்திய சோசலிச சமூக ஆட்சிக்கான போராட்டம். பகத்சிங்கின் திட்டம் சதித்தனமாகத் தோற்கடிக்கப்பட்டதால் இன்று இந்த அவல நிலையில் விவசாயிகள் வாழ்கின்ற நிலைமை தொடருகின்றது.

இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியின் நோக்கங்களை நாம் தீவிரமாக ஆராய்ந்து உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பசுமைப் புரட்சி என்பது விவசாயிகளின் நலனுக்கானது அல்ல; மாறாக தற்போதைய விவசாயிகளின் தற்கொலைக்கான மூலக்காரணமே அது தான். உண்மையில் இது கார்ப்பரேட்டுகளின் சதித் திட்டங்களை அரங்கேற்றி விவசாயத்தை அழித்தொழித்து விவசாயத்தை விவசாயிகளின் கைகளில் இருந்து பிடுங்கிக் கொள்ளும் உத்தியே .

1945 காலகட்டங்களில் நடந்த இரண்டாம் உலகப்போரின் மிச்சங்களான இராசயனப்பொருட்களை உரங்களாக்கி விவசாயத்தின் போக்கையே மாற்றித் தண்ணீரையும், நிலத்தையும் பாழ்படுத்துவதே பசுமைப் புரட்சி. இது முதலில் அமெரிக்காவில் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு கடுமையான எதிர்ப்புக்கள் இருந்ததால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இதை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிக்க முடிவு செய்தன.

இதன் விளைவாக உருவானது இந்தியத் தரகு முதலாளி வர்க்கம். வீரியப்படுத்தப்பட்ட விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், கலப்பைக்குப் பதில் டிராக்டர், அதை இயக்க டீசல் என்று இந்திய விவசாயிகள் எல்லாவற்றுக்குமே வெளிநாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

விவசாயத்திற்கான இடுபொருட்களை வீட்டிற்கு வெளியே சென்று வாங்கப் பழகாத விவசாயிகளுக்கு பசுமைப் புரட்சிக்குப் பின்னர் தலைகீழாக மாறி எல்லாவற்றுக்குமே விதை முதற்கொண்டு விவசாயத்திற்குத் தேவையான எல்லாவற்றையுமே காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்திய ஆட்சியாளர்கள் இதை சதித்தனமாக மக்கள் மேல் திணித்தனர்.

இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை எனப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் தான் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி. இந்திய விவசாயிகளின் எதிரி எம்.எஸ்.சுவாமிநாதன்.

விலை நிர்ணயத்தைப் பொறுத்தமட்டில் அரசு திரும்பத் திரும்ப விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுகிறது. அரிசியோ, கோதுமையோ, கரும்போ எதுவாக இருந்தாலும் கொள்முதல் விலை ஆமை வேகத்தில் தான் ஏற்றப்படுகிறது; இல்லை இருப்பதை விடக் குறைக்கப்படுகிறது. விவசாயக் கடனோ குதிரைக் கொம்பாகி விட்டது. வறட்சி நேரத்தில் நிவாரணம் என்றால் ஆட்சியாளர்களுக்கு இரத்தம் கொதிக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு நான் சென்ற போது அங்கே நிலத்தடியில் இருந்து தண்ணீரை எடுப்பதே இல்லை. அணைகள் கட்டி, மழைநீரை முறையாகச் சேகரித்து பாதுகாத்துப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இந்தியாவிலோ ஒரு பக்கம் வறட்சி வாட்டுகிறது மறுபுறம் அசாம் போன்ற மாநிலங்களில் மழை வெள்ளம் வீணாக்கப்படுகிறது. ஆனால் ஒரே நாடு; ஒரே தேசம் என்று வாய்ச்சவடால் பேசுகிறார் மோடி. காங்கிரசும் இதே போன்று தான் ஏமாற்றி வந்தது.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயி தடுமாறுகிறான்; ஆனால் வாங்கிய கடனை ஏப்பம் விடுகிறான் கார்ப்பரேட் முதலைகள். விவசாயிக்கோ தற்கொலை; கார்ப்பரேட்டுகளுக்கோ இராஜ மரியாதை. என்ன அக்கிரமம் இந்த நாட்டில்.

எனவே நாம் செய்ய வேண்டியது என்ன? கெஞ்ச வேண்டுமா இல்லை எதிர்த்துப் போராட வேண்டுமா? காந்தி செய்த அதே தவறை நாமும் செய்தால் நம் சந்ததியே அழிந்து விடும். பற்றாக்குறைக்கு உலக வர்த்தக நிறுவனம்(WTO) மூன்று முக்கிய கோரிக்கைகளை மூன்றாம் உலக நாடுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது.

  1.  தங்கு தடையற்ற வர்த்தகம் மற்றும் பொருட்கள் வினியோகம்.
  2.  விலை நிர்ணயிக்கும் அதிகாரம் தங்களைத் தவிர யாருக்குமில்லை.
  3.  எந்த அரசும் பொருட்களை ஏற்றுமதியோ இறக்குமதியோ செய்யக்கூடாது.

இந்த மூன்றையும் தடுத்து நிறுத்தாவிட்டால் நாம் அழிவது நிச்சயம். பஞ்சாப், தமிழ்நாடு, ம.பி, உ.பி, பீகார் என அனைத்து மாநில உழைக்கும் மக்களும், விவசாயிகளும் ஒன்றிணைந்து அரசுக்கெதிராகத் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இது போர்க்களம், இந்தப் போரில் நாம் நம்முடைய குடும்பங்களைக் காக்க வேண்டுமானால் தீவிரமாகப் போராடியே ஆக வேண்டும்.

-வினவு செய்தியாளர்கள்

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி