privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்பாலியல் பாலத்காரத்தில் ஈடுபடும் ஐ.நா அமைதிப்படை

பாலியல் பாலத்காரத்தில் ஈடுபடும் ஐ.நா அமைதிப்படை

-

லகெங்கும் வன்முறைகளைத் தடுக்கவும் நாடுகளிடையே அமைதியை நிலைநாட்டவும், ஐ.நா-வின் அமைதிப்படையினர் இயங்கி வருவதாக தான் பொதுவாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கணக்காக ஐ.நா படை மீது அதிகரித்து வரும் பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் அந்த நம்பிக்கையைத் தவிடு பொடியாக்குகின்றன.

உலகம் முழுவதும் ஐநா அமைதிப்படையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். அதில் கிட்டத்தட்ட 90,000 படைவீரர்களும் காவல்துறையினரும் இருக்கின்றனர். ஊழியர்கள், அதிகாரிகள் என உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிறிய அளவில் உள்ளனர். இதற்கான செலவீனங்களுக்காக 2017-18 –ம் நிதி ஆண்டிற்கென இந்திய மதிப்பில் 43 ஆயிரம் கோடிக்கும் (6.8 பில்லியன் டாலர்) அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதிப்படை என்றால் அவர்களே ஆள் சேர்த்து படை நடத்துவது இல்லை. பலநாடுகள் தங்களது ராணுவ வீரர்களை ஐ.நா படைக்கு அனுப்புகின்றன.

ஐ.நா அமைதிப்படை மீது 2004-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2000. ஆனால் பதிவு செய்யப்படாத எண்ணிக்கை இதனினும் பன்மடங்கு அதிகம். அதே நேரத்தில் அப்படியான குற்றச்சாட்டுக்கள் எதுவுமே 2000 –ம் ஆண்டிற்கு முன்னதாக பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டுகளின் மீது கிஞ்சித்தும் சகிப்புத்தன்மை காட்டப்படாது என்று கூறும் ஐ.நா அதற்காக ஒருத் தனிச்சட்டமே இயற்றியிருக்கிறது. ஆனால் அத்தைகைய குற்றங்கள் தண்டனையில்லாமல் தொடர்வதாக பாலியல் தாக்குதல்களில் தப்பியவர்களும், சமூக ஆர்வலர்களும், சட்ட வல்லுனர்களும், மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.

ஹைதியில் 2015-ம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அமைதிப்படையினர் பாலியல் தொடர்பான குற்றங்களைச் செய்ததாக அசோசியேட்டட் பிரஸ் என்ற அமெரிக்கச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. மேலும் பலக் குற்றச்சாட்டுகள் பதிவே செய்யப்படவில்லை என்றும் கூறியது.

பாலியல் குற்றசாட்டுக்கள் காரணமாக 2007-ம் ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஐ.நாப் படையினர் ஹைதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இதைப் பற்றியதான ஆய்விற்கு ஐ.நா கோரிய போது ஈழத்தமிழர் படுகொலைக்கு என்ன நீதிவிசாரணை நடத்தியதோ அதையேதான் இலங்கை அரசு செய்தது. ஆயினும் தொடர்ச்சியாக ஐநாவின் அமைதிப்பணிக்காக அவர்கள் ஹைதிக்கும் வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். எனில் இங்கே ஐ.நா -வின் சட்டம் ஆய் துடைக்கக் கூட பயன்படவில்லை என்பதே உண்மை.

பெயரில் மட்டுமே அமைதி. இராணுவத்திற்கும் ஐநாவின் அமைதிப்படைக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை. இரண்டாம் உலகப்போரில் தென் கொரியப் பெண்கள் மீது ஜப்பானியப் படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதும் பின்னர் வியட்நாம் போரின் போது தென் கொரியா – அமெரிக்கா கூட்டுப்படையினர் வியட்நாம் பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதும் வரலாறு.

அமைதிப்படையினருக்கு வேறுவிதமான பயிற்றுவித்தல் தேவைப்படுவதாக கூறுகின்றனர் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தப் பேராசிரியர் பால் ஹைகேட். (Paul Higate) மற்றும் இலண்டன் பொருளாதார பள்ளியின் பாலியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மார்ஷா ஹென்றி(Marsha Henry). அதற்கு பாரபட்சமற்ற அணுகுமுறை மற்றும் பச்சாதாபம் போன்ற உணர்ச்சிகள் தேவைப்படுகிறது. இராணுவப் பயிற்சியில் அத்தகைய உணர்ச்சிகளுக்கு அங்கீகாரம் கிடையாது என்றும அர்கள் கூறுகின்றனர்.

பெண்களை அதிக அளவில் அமைதிப்படையில் சேர்ப்பது இதற்கு ஒருத் தீர்வாக இருக்கலாம்; என்று ஐ.நா. தகவல் தொடர்பு அதிகாரியான ஆதித்யா மேத்தா கருதுகிறார். ஆனால் இதற்கான முடிவை அமைதிப்படையை அனுப்பும் உறுப்பினர் நாடுகள் தான் எடுக்க வேண்டும் என்ம் அவர் கூறுகிறார்.

ஆனால் என்ன நடக்கும்? சக ஆண் வீரர்களால் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த பெண் வீரர்களின் 80 விழுக்காட்டினர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படடதாக 2011-ம் ஆண்டு அறிக்கை ஒன்று கூறுகிறது. அதுவே 2012 –ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 26,000 பெண் வீரர்கள் பாலியல் தாக்குதல்களுக்கு ஆளானதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனில் அமைதிப்படையே ஒரு இராணுவம் என்றான பிறகு இந்த தீர்வு பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யுமே ஒழிய சற்றும் குறைக்காது என்பதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை.

அமெரிக்க இராணுவத்தை எடுத்துக்காட்டியிருப்பது ஒட்டுமொத்த உலகின் ஒற்றை மேல்நிலை வல்லரசாக இருப்பதால் தான். மற்றபடி எந்த நாட்டின் இராணுவமும் இதற்கு விதிவிலக்கல்ல.

பெண்களை அடிமைகளாகக் கருதும் நிலப்பிரபுத்துவப் பிற்போக்குத்தனம் ஒருபுறம். பெண்களைப் விற்பனைச் சரக்காக்கியிருக்கும் முதலாளித்துவம் மறுபுறம். இந்த ஒட்டுமொத்த பிற்போக்குத்தனங்களின் கூடாரமாக உருவாக்கப்படும் ஐ.நா அமைதிப்படை பெண்களை பாதுகாக்கும் என்பதை இனியும் நம்ப முடியுமா என்ன?

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி