privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஆதார் இல்லாமல் இனி சாக முடியாது - மனுஷ்யபுத்ரன்

ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது – மனுஷ்யபுத்ரன்

-

தார் எண் இல்லாவிட்டால்
எனக்கு மரண சர்டிஃபிகேட் தர முடியாது
என்று சொல்லிவிட்டார்கள்.

நான் சரியாக
இன்று மாலை ஆறு மணிக்கு
இறக்கவிருப்பதாக முடிவெடுத்து
அனைவருக்கும் சொல்லி அனுப்பி விட்டேன்.

கடைசி நேரத்தில் வழிமறித்து
ஒரு எண்ணைக் கேட்டு
நிர்பந்திக்கிறார்கள்.

என்னிடம் இறப்பதற்கு
போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன
சாதிச்சான்றிதழ் இருக்கிறது
மதச் சான்றிதழ் இருக்கிறது
ரேஷன் கார்டு இருக்கிறது
கல்விச் சான்றிதழ் இருக்கிறது
எல்லாவற்றுக்கும் மேலாக
பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது
நான் பிறந்திருப்பதாலேயே இறக்க நேர்கிறது
என்பதையாவது
அரசரே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறது
நான் இன்று இறந்து விடுவேன் என்று
என் நண்பர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை
நான் நிறைவேற்றியே தீரவேண்டும்.

அரசரே
உங்கள் அக்கறை எனக்குப் புரிகிறது
நான் சொர்கத்திற்கு போவதாக இருந்தாலும் சரி
நரகத்திற்குப் போவதாக இருந்தாலும் சரி
அங்கே என் ஆதார் எண்ணைக் கேட்பார்கள்
என்பதற்காகத் தானே நீங்கள் அவசரப்படுகிறீர்கள்
நான் எங்கும் போகாமல்
இங்கேயே ஆவியாக சுற்றித் திரிந்தாலும்
ஆதார் எண் தேவை என்பதை
எனக்கு நீங்கள் புரிய வைக்கிறீர்கள்.

ஒரு மனிதன் இறந்து விடுகிறான்
அரசரே நீங்கள் அவனிடம் வருகிறீர்கள்
அவனது விழித்திரையை
திறந்து பார்க்கிறீர்கள்
அதை படம் எடுத்துக் கொள்கிறீர்கள்
பிறகு அந்த பிரேதத்தை படம் எடுக்கிறீர்கள்
பிறகு அந்தப் பிரேதத்தின் படத்தை ஒட்டிய
ஒரு ஆதார் அட்டையை
அதன் கையில் திணிக்கிறீர்கள்
இந்தக் காட்சி பயங்கரமாக இருக்கிறது
நீங்கள் பிணங்களிடமிருந்து திருடுகிறவர்களை போல
ஏன் நடந்து கொள்கிறீர்கள்?
அல்லது பிணங்களிடமிருந்து திருடும் பழக்கத்தை
ஏன் உங்களால் கைவிட முடியவில்லை?

அரசரே
ஆதார் எண் இல்லாமல்
என்னைச் சாக அனுமதியுங்கள்
சாவுக்கு பிறகு எனக்கு நிறைய
ரகசியத் திட்டங்கள் இருக்கின்றன
நான் ஒரு பூனைக்குட்டியாக பிறந்து
என் காதலிகளைத் தேடி செல்லவிருக்கிறேன்
ஒரு கழுகாக பிறந்து
உங்கள் தலைக்கு மேல் பறக்க விரும்புகிறேன்
கடவுள் எனக்கு இழைத்த அநீதிக்காக
அவரை வீடு தேடிச் சென்று பழி தீர்க்க திட்டமிட்டிருக்கிறேன்

நீங்கள் என்னை ஆதாரில் இணைத்துவிட்டால்
சாவுக்குப் பின் நான் செய்யக்கூடிய
அனைத்தும் கண்காணிக்கலாம் என்பது தானே
உங்கள் திட்டம்

அரசரே
சாவு என்பது அந்தரங்கமானது
சாவு என்பது அதிகாரத்திலிருந்து விடுபடுவது
சாவு என்பது தண்டனைகளை புறக்கணிப்பது
சாவு என்பது சட்டங்களுக்கு வெளியே இருப்பது
சாவு என்பது ஒழுங்குகளை கடைபிடிக்காதது
சாவு என்பது பூர்வீக நிலைகளுக்கு திரும்புவது
சாவு என்பது அரசர்கள் இல்லாத ஒரு தீவில் தனித்திருப்பது

அரசரே
நேற்று நீங்கள் என்னை
வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள்
இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்

மனது வைய்யுங்கள்
எனக்கு இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கிறது

நன்றி: மனுஷ்யபுத்திரன்