குஜராத்தின் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே நடந்து முடிந்துள்ளது. பாரதிய ஜனதாவின் சார்பில் அமித்ஷாவும், ஸ்மிருதி இரானியும் வென்றுள்ளனர் – காங்கிரசின் சார்பில் அகமது பட்டேல் வென்றுள்ளார். நேரடியாக மக்கள் வாக்கு செலுத்தும் நாடாளுமன்ற, சட்ட மன்றத் தேர்தல்களை விட எம்.எல்.ஏக்-கள் வாக்களிக்கும் இத்தேர்தல் விறுவிறுப்படைந்ததும், இதை ஒட்டி நடந்த குதிரை பேரங்களும் நமது கவனத்துக்குரியவை.

அமித்ஷா – ஸ்மிருதி இரானி

குஜராத் சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு மாநிலங்களவை இடமும் காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் கிடைக்கும். எனினும், பாரதிய ஜனதா சார்பில் மூன்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். வெற்றிபெறத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இல்லாத நிலையிலும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களை பேரம் பேசியோ மிரட்டியோ விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் எனும் நம்பிக்கையிலேயே பாரதிய ஜனதா மூன்றாவது வேட்பாளரை அறிவித்தது.

ஓட்டுப் பொறுக்கி அரசியலில் ஈடுபட்டுள்ள சர்வ கட்சிகளும் ஏற்கனவே தங்களுக்குள் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆட்ட விதிகள் அனைத்தின் மேலும் பாரதிய ஜனதா மலத்தை அப்புவதற்கு தன் வசமுள்ள மத்திய ஆட்சியதிகாரத்தைக் கையில் ஏந்தியது. வழக்கம் போல் பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாகச் செயல்படும் ஊடகங்கள் மோடி – அமித்ஷா இணையின் அயோக்கியத்தனங்களை “அரசியல் சாணக்கியத்தனங்களாக” விதந்தோதத் துவங்கின.

அகமது பட்டேல்

கடந்த மாதமே காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களில் ஆறு பேரை விலைபேசி தம் பக்கம் இழுத்த பாரதிய ஜனதா, தம்பக்கம் தாவி வந்தவர்களில் பல்வந்த்சிங் ராஜ்புட் என்பவரை மூன்றாவது வேட்பாளராக அறிவித்தது. குஜராத் அரசியலில் மோடி தலையெடுக்கத் துவங்கிய சமயத்திலேயே பாரதிய ஜனதாவில் இருந்து காங்கிரசுக்குத் தாவி தற்போது அக்கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சங்கர்சிங் வகேலாவை மீண்டும் தம் பக்கம் வளைத்துக் கொண்டது அமித்ஷா – மோடி இணை.

இதற்கிடையே தமது கட்சியைச் சேர்ந்த பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாரதிய ஜனதா விலை பேசி வருவதை அறிந்த காங்கிரசு, சுமார் 44 உறுப்பினர்களை குஜராத்திலிருந்து கர்நாடகாவுக்குக் கடத்தி விடுதி ஒன்றில் மறைத்து வைத்தது. இந்நிலையில், மேற்படி நடவடிக்கையை ஒருங்கிணைத்த கர்நாடகா மாநில அமைச்சரும் காங்கிரசைச் சேர்ந்தவருமான சிவகுமாரை மிரட்ட வருமான வரித்துறையை ஏவி விட்டது பாரதிய ஜனதா.

வருமான வரிச் சோதனையில் பத்து கோடி ரூபாய் பிடிபட்டதாக தகவல்கள் கசியவிடப்பட்டது. உடனே “கர்நாடக அமைச்சர் சிவகுமாரிடம் இருந்து பிடிபட்ட பணக் குவியலைப் பாரீர்” என பா.ஜ.கவின் சொம்பு ஊடகங்கள் சில படங்களை வெளியிட்டு புழுதி கிளப்பத் துவங்கின. வருமான வரித்துறையோ, ஊடகங்களில் வெளியான பணக் குவியல் படங்கள் அமைச்சர் சிவகுமாரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதல்ல என அமைதியாக முணுமுணுத்துக் கொண்டது. சிவகுமாரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஏழு கோடியா, பத்து கோடியா என ஊடகங்கள் கிசுகிசுக்களை பரப்பி வந்த வேளையில், பணமே கைப்பற்றப்படவில்லை என்கிற தகவலும் வெளியானது. எப்படியிருந்தாலும், அமித்ஷாவின் விருப்பம் எதுவோ அதுவே இறுதி உண்மையாக “விசாரணைகளின்” முடிவு செய்யப்படும்.

இந்தக் கூச்சல்களுக்கு இடையில் குஜராத் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை 15 கோடிக்கு பாரதிய ஜனதா விலைபேசியதாக வெளியிட்ட தகவல்கள் அப்படியே அமுக்கப்பட்டது. முறைகேடாக விலைபேசிய தரப்பை விட்டுவிட்டு விலைபேசப்பட்ட தரப்பிடம் வருமான வரிச் சோதனை நடத்திய கோமாளித்தனத்தை “அரசியலில் தூய்மையை நிலைநாட்ட” மோடி எடுத்து வரும் மாபெரும் நடவடிக்கைகளாக சித்தரித்தன ஊடகங்கள்.

இதற்கிடையே என்ன செய்தாவது அகமது பட்டேலின் வெற்றியைத் தடுத்து விட வேண்டுமென்கிற வெறியில், மத்திய தேர்தல் கமிசனைக் கொண்டு மாநிலங்களவைத் தேர்தலில் இதற்கு முன் இல்லாத நடைமுறையாக நோட்டாவை அறிமுகம் செய்ய வைத்தது மோடி அமித்ஷா இணை. கடைசியில் தேர்தலுக்கு முன் தனது உறுப்பினர்களை குஜராத்துக்கு அழைத்துச் சென்ற காங்கிரசு, அவர்களைப் பொத்தினாற் போல் அடைகாத்து அகமது பட்டேலுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து விட்டது.

வாக்குப் பதிவின் போது காங்கிரசிலிருந்து விலைக்கு வாங்கிய உறுப்பினர்கள் இருவர், தங்களது வாக்குச் சீட்டுகளை அமித்ஷாவிடம் காட்டுவது போன்ற வீடியோ பதிவு ஒன்றை தேர்தல் கமிஷனிடம் சமர்பித்த காங்கிரசு, அவர்களது இரண்டு வாக்குகளையும் செல்லாததாக அறிவிக்கக் கோரியது. தேர்தல் விதிமுறைகளின் படி பார்த்தால், அந்த வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் தான். ஆனால், குஜராத் மாநில தேர்தல் கமிஷனோ அதற்கு மறுத்து விட்டது. உடனே இப்பிரச்சினையை தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு எடுத்துச் சென்றது காங்கிரசு.

வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்ட நிலையில், தேர்தல் கமிஷனின் தில்லி அலுவலகத்தை பாரதிய ஜனதாவைச் சேர்ந்த மத்திய காபினெட் அமைச்சர்கள் முற்றுகையிட்டனர். வீடியோ ஆதாரங்கள் வெளியாகி உள்ள நிலையில் வேறு வழியின்றி அந்த வாக்குகளைச் செல்லாததாக அறிவித்தது மத்திய தேர்தல் ஆணையம். இறுதியில் அகமது பட்டேல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

“இது தேர்தல் கமிஷனின் வெற்றி” என அறிவித்துள்ளன ஊடகங்கள். இந்தியாவின் ஜனநாயக கண்காணிப்பு நிறுவனங்களுக்கு கிடைத்த வெற்றி என ஓரளவு ஜனநாயக சிந்தனை கொண்ட ஊடகவியலாளர்களும் கூட அகமது பட்டேலின் வெற்றிக்கு விளக்கம் அளிக்கின்றனர்.

ஆனால், “ஜனநாயகம்” என்றும், “மரபுகள்” என்றும் ”விதிகள்” என்றும் ஓட்டுப்பொறுக்குவதற்கென வகுக்கப்பட்ட நியதிகள், சட்டங்கள், நிறுவனங்கள் என சகலத்தின் மீதும் இந்துத்துவ எதேச்சாதிகாரம் மூத்திரம் பெய்ந்துள்ளது என்பதே நடந்து முடிந்துள்ள மாநிலங்களவைத் தேர்தல் காட்டும் உண்மையாகும். இத்தேர்தலில் துவக்கத்தில் இருந்தே பாரதிய ஜனதாவுக்குச் சார்பாக மத்திய மாநில தேர்தல் கமிஷன் நடந்து கொண்டது.

பா.ஜ.க பேரம் பேசுவதற்கு வசதியாக தேர்தல் தள்ளி வைத்த போதும், நோட்டாவை அனுமதித்த போதும், கட்சித் தாவல் நடந்த போதும், காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவால் விலைபேசப்பட்ட போதும் – கிழிந்த காவிக் கோவணத்தால் முக்காடிட்டுக் கொண்டே செயலாற்றியது தேர்தல் ஆணையம். பட்டவர்த்தனமாக விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது வீடியோ ஆதாரமாக வெளியான பின்னரே வேறு வழியின்றி நடுநிலையாகச் செயல்பட வேண்டிய நெருக்கடிக்கு தேர்தல் ஆணையம் உள்ளானது.

அரசின் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அழுகிச் சிதைந்து போயிருப்பதையும், அரசியல் அயோக்கியத்தனங்களே வேதங்களாகியிருப்பதையும் துலக்கமாக உணர்த்தும் சமீபத்திய உதாரணம் தான் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தல்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
வணிக நோக்கமற்ற மக்கள் ஊடகமான
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி