ந்தியா முழுவதும் தொழில் துறையில் மிக முக்கிய பங்குவகிக்கிறது லாரி போக்குவரத்து துறை. உற்பத்தி பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படும் சரக்கு லாரிகளின் தேவை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இதில் பெரும் உரிமையாளர்கள் தவிர்த்து ஒன்றிரண்டு லாரி வைத்துள்ள சிறு முதலாளிகள் மற்றும் அவற்றை சார்ந்த தொழிலாளிகள் என லட்சக்கணக்கான மக்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர்.

இந்த சமூகம் தடைபடாமல் இயங்க, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் லாரிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் பழுதாகி நிற்கும் காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அதனை பழுது நீக்கி எடுத்துச் செல்ல லாரி ஓட்டுனர்கள் படும் பாடு பெரும் திண்டாட்டம் தான். மத்திய அரசின் தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பால் இத்தொழிலைச் சார்ந்து இயங்கும் பல லட்சம் பேர் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர்.

தொடர் பயன்பாட்டால் தேய்மானம் அடையக்கூடிய  லாரிகளின் டயர், பேரிங் உள்ளிட்ட உதிரி பாகங்களுக்கு ஜிஎஸ்டி -யில் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால், லாரி உதிரி பாகங்களின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சங்க இணை செயலாளரும், கோவை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான கலியபெருமாள்  “தினகரன்” நாளிதழிடம் கூறுகையில்: “தமிழகத்தில் 1.50 லட்சம் லாரிகள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை பழைய லாரிகள். இதனை பழுது நீக்கித்தான் பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை 1 -ம் தேதி முதல் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு ஜிஎஸ்டி 28% வரி விதிப்பால் உதிரிபாகங்களின் விலை முன்பை விட பதினைந்து மடங்கு அதிகரித்து உள்ளது.

உதாரணமாக, லாரியின் முன்பக்க டயர் விலை ஒரு ஜோடி முன்பு இருபத்தி எட்டாயிரம் முதல் முப்பதாயிரம் வரை இருந்தது. தற்பொழுது முப்பந்தி ஐந்தாயிரம் வரை உயர்ந்துள்ளது. லாரியின் பின்புறம் பொருத்தப்படும் நைலான் ஃபைபர் டயர் ஒரு ஜோடி முப்பத்தி ஐந்தாயிரத்தில் இருந்து நாற்பதாயிரமாகவும், பெரிய நைலான் ஃபைபர் டயர் முப்பத்தி எட்டாயிரத்தில் இருந்து நாற்பத்தி ஐந்தாயிரமாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி -யால் தொழில்துறைகள் பலவற்றில் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவது ஒரு மாதத்திற்கும் மேலாக 50% வரை குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விலை உயர்ந்துள்ளதால், லாரி தொழில் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. பழுது பார்த்து பராமரிக்க வேண்டிய லாரிகளுக்கு தற்போதைய விலையில் உதிரிபாகங்கள் வாங்குவது கட்டுபடியாகாது, பழைய லாரிகளை பராமரிக்க முடியாத நிலையில் இத்தொழில் முடங்கும் அபாயம் உள்ளது என்றார்.”

மகாரஷ்டிராவுக்கு அடுத்தபடியாக லாரிகள் மூலம் வர்த்தக தொடர்பு அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. அதிலும் முக்கியமாக சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லாரிகளின் பயன்பாடு மிக முக்கியமானது. தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மூலம் திருப்பூரில் இருந்து பனியன்கள் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொச்சின் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இங்கு இத்தொழிலை நம்பி சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள், லாரி டிரைவர்கள், பார்சல் கட்டுவோர் ஆகியோர் வருமானமின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள், பூக்கள், மற்றும் தேயிலைகள் ஆகியவை வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு ஊர்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறி விவசாயிகள் பாதிப்பு அடைந்தனர்.

லாரிகள் வேலையிழந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பே நாம் அனுபவித்துள்ளோம். விண்ணை முட்டும் விலைவாசியால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை வாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படும் பனியன்கள், பெட்சீட் ராகங்கள், லுங்கி, திரைசீலைகள், ரெடிமேடு ஆடைகள், புடவைகள் என அனைத்தும் விற்பனை செய்யப்படும் முக்கிய இடமாக விளங்குவது ஈரோடு ஜவுளி சந்தை. சமீபத்தில் காட்டன் ரகங்களுக்கு 5%, ரெடிமேடுக்கு 12%, ரேயான், பாலியெஸ்டருக்கு 18% என மத்திய அரசு வரி விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தியும் அந்த ஜிஎஸ்டி -யை விலக்கி கொள்ள அரசு மறுத்தது. இதனால் ஜவுளி விற்பனை கடும் சரிவை சந்தித்து மிகக் குறைந்த அளவிலேயே விற்பனை நடக்கிறது.

வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பபடும் ஜவுளிகள் எதுவும் அனுப்ப முடியாமல் முடங்கியுள்ளது. முக்கியமாக ஜிஎஸ்டி எண் இல்லாததால் லாரிகளில் சரக்கு அனுப்புவதில் சிரமமாக உள்ளது. லாரி புக்கிங் அலுவலகத்திலும் புக்கிங் செய்து அனுப்ப முடியாததால் கிட்டத்தட்ட 40% வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு கனிமார்கட் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் இருந்து கொள்முதல் பகுதிக்கும், கொள்முதல் இடத்தில் இருந்து பிற சில்லறை வியாபாரிகளுக்கும் கொண்டு செல்லும் பதிவு பெற்ற சரக்கு லாரிகளுக்கு ஜிஎஸ்டியில் 5% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லும் போது ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் எடுத்து செல்ல முடியாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்குரிய ஜிஎஸ்டி -யுடன் கூடுதலாக 100 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால், கடந்த ஒரு வாரமாக மதுரையில் பெரும்பாலான லாரிகளில் சரக்குகளை ஏற்றிச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. வெளியூர்களிலும் சரக்கு புக்கிங் பாதித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மதுரையில் சரக்கு லாரிகள் ஓடவில்லை. வெளி மாநிலங்களிலும் சரக்குகள் பதிவு செய்வது தடைபட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து சரக்கு லாரி வர்த்தகம் பாதிக்கிறது. மதுரையில் நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. லாரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மதுரை லாரி புக்கிங் நிறுவன உரிமையாளர் ஜெயராஜ் ஊடகங்களிடம் கூறுகையில், “ஜிஎஸ்டி பற்றி அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சரியாகப் புரியவில்லை. 5, 12, 18, 28 சதவீதம் என சுமார் 1,200 பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த லாரி உரிமையாளர்களும் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஒரு லாரி வைத்திருந்தாலும், ஜிஎஸ்டி -க்குள் வரவேண்டும்.

ஜிஎஸ்டி வரியோடு கூடிய ரசீது இல்லாததால் லாரிகளில் சரக்கு ஏற்ற தயக்கமாக உள்ளது. அதிகாரிகள் ஆய்வின் போது பிடித்தால் அபராதம் செலுத்த வேண்டும். சரக்கு லாரி வர்த்த பாதிப்பை தடுக்க, ஜிஎஸ்டி வரி நடைமுறையை அனைத்து தரப்பினருக்கும் சரியான முறையில் விளக்கி, சீரமைக்க வேண்டும் என்றார்.”

கர்நாடகாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் வாடகைக்கு செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர், வர்த்தகம் 50 சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை 1 முதலே மாநிலம் முழுவதும் வாடகைக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் 4 கோடி ரூபாய் வீதம் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் இழப்பில் லாரி உரிமையாளர்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி பதிவு, இன்சூரன்ஸ், ஆகியவற்றுக்கான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்து விட்டன. ஏற்கனவே ஒரு லாரிக்கு மாதந்தோறும் வருமானவரி 7,500, டீசலுக்கான வாட் வரி 25% என்று பிடுங்கிக் கொள்கிறது அரசு. லாரிகளுக்கு 70 முதல் 80% வரை டீசல் பிடிப்பதிலேயே செலவு ஆகிவிடுகிறது. இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி விதிக்கவில்லை. மாறாக ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கும், ஏற்றுமதிக்கும் வரியும் கட்டுப்பாடும் விதித்துள்ளது அரசு.

ஒட்டு மொத்தமாக ஜிஎஸ்டி-யால் பல்வேறு தொழில்கள் அடியோடு முடிங்கியுள்ளது. சரக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதோடு அவற்றைக் கொண்டு செல்லும் லாரித் தொழிலும் முடங்கியுள்ளன. இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கடும் விலையேற்றத்தை சந்தித்தே தீரும். மக்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று இயங்கும் மத்திய, மாநில அரசுகளை மக்கள் முடக்காமல் இதற்கு என்ன தீர்வு?

(பல்வேறு நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பதிவு)

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி