மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

150-இ, ஏரிக்கரை சாலை,கே.கே. நகர்,மதுரை-625020  9443471003

__________________________________________________________________________________________________

பத்திரிக்கை செய்தி

10.07.2017

க்கூஸ் ஆவணப்பட இயக்குநர் தோழர் திவ்யா பாரதிக்கு, கடந்த பல நாட்களாக அலைபேசியில் கொலை மிரட்டலும் ஆபாச வசவுகளும் இடைவெளி இல்லாமல் வந்துகொண்டிருக்கிறது. இந்த அராஜகத்தை டாக்டர் கிருஷ்ண சாமியின் புதிய தமிழகம் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியினர் நடத்திவருகின்றனர்.மேற்படி கட்சிகளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததன் பேரில் திவ்யா பாரதி மீது இரு சமூகங்களுக்கு இடையே மோதலைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அவரைக் கைது செய்யும் முனைப்பில் உள்ளது.கொலை மிரட்டலுக்கு எதிராக திவ்யா பாரதி கொடுத்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.காவல்துறையின் இச்செயல் பாரபட்சம் மட்டுமின்றி, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் லலிதாகுமாரி தீர்ப்பை மீறுவதாகும்.

திவ்யா பாரதி கக்கூஸ் என்ற ஆவணப் படத்தை தயாரித்து, இயக்கி வெளியிட்டுள்ளார். மனிதாபிமானமற்ற, அநாகரிகமான செயல் என்று உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளாகி சட்டத்தின் மூலமாகவும் தடை செய்யப்பட்டுள்ள, மனித மலத்தை மனிதனே கையால் அள்ளும் இழிசெயலை அந்த ஆவணப் படம் அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது.

சட்டமும் உச்ச நீதிமன்ற ஆணையும் இப்படி இருக்க மனிதக் கழிவை மனிதர்களே அள்ள கட்டாயப்படுத்தப்படும் எதார்த்தத்தை அந்த ஆவணப் படம் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கிறது. பள்ளர் சாதியைச் சார்ந்தவர்களும் இந்தத் தொழிலில் உள்ளனர் என்று ஆவணப்படத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.இது தான் திவ்ய பாரதி செய்துள்ள மிகப் பெரிய குற்றம் என்கின்றனர் புதிய தமிழகம் மற்றும் ஜான் பண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கட்சியினர்.

திண்டுக்கல் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் வேலை செய்யும் துப்புரவுப் பணியாளர்கள் சிலரை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதோடு, பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதை எதிர்த்துக் கேள்வி எழுப்பியதற்காக அக்கல்லூரி முதல்வர் சித்ரா செல்வி 12 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

அது சம்பந்தமான உண்மைகள்,முறைகேடுகள்,கல்லூரி முதல்வரின் கணவர் நடத்திய பாலியல் அத்துமீறல்களைப் பதிவுசெய்து சமூகவலைத் தளத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார் திவ்யா.முதல்வர் பள்ளர் சாதியைச் சார்ந்தவர் என்பதாலும், பொருளாதாரத்தில் வலுவானவர் என்பதாலும் புதிய தமிழகம் கட்சியினர் அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். இதனை பாஜக அரசியல்ரீதியாகப் பயன்படுத்துகிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அதுவும் கையால், குறிப்பிட்ட ஒரு சில சாதிகளே அகற்றும் கட்டாயம் இந்தியாவைத் தவிர உலகத்தின் வேறு எந்த மூலையிலும் இல்லை. இந்த அவலத்தை எதிர்த்துப் போராடி , மனித சமூகத்தின் அந்த ஆகப் பெரிய கேவலத்தை ஒழிக்கும் போராட்டத்தில் இணைய வேண்டிய புதிய தமிழகம் கட்சியினர், இப்படி அப்பட்டமாக சாதி வெறியோடு கடைகோடித்தனமாக நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

மலம் அள்ளுகிறவர்கள் இழிந்த தொழிலைத்தான் செய்கின்றனர். என் சாதிக்காரர்கள் அந்தத் தொழிலில் இல்லை என்று சொல்வது தீண்டாமைக் குற்றம். ஒருவேளை ஆவணப் படத்தில் தவறான தகவல் தரப்பட்டிருந்தால் தக்க ஆதாரங்களுடன் அதை மறுப்பதை விட்டுவிட்டு தன் சாதிப் பெருமையை முன்னிறுத்துவதன் மூலம் மற்ற சாதிகளை அவர்கள் இழிவுபடுத்துகிறார்கள். சாதி இழிவை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் சாதி ஆதிக்க வருணாசிரமக் கட்டமைப்பை தூக்கி நிறுத்த முனையும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வினருக்கு புதிய தமிழகம் கட்சியினர் அடியாள் வேலை பார்க்கும் இந்தப் புதிய போக்கு மிகவும் அபாயகரமானது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமே கேடுபயக்கக் கூடியது.

அரசு நிர்வாகம் துப்புரவுத் தொழிலுக்கு குறிப்பிட்ட சில சாதியினரை மட்டுமே தேர்ந்தெடுக்கிறது. துப்புரவுத் தொழிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிற வகையில் அதை நவீனப்படுத்தி இப்போது நிலவும் சாதிய இழிவைத் துடைப்பதற்கு அனைவரும் போராட வேண்டும். இதைவிடுத்து, ஏனைய ஆதிக்க சாதிகளைப் போல நாங்களும் ஆதிக்க சாதிதானென்று கொக்கரிப்பது நியாயத்திற்கும்,சட்டத்திற்கும் முரணானதாகும்.

புதிய தமிழகத்தின் இச்செயலை, அந்த சாதியைச் சேர்ந்த ஜனநாயகச் சக்திகள் எதிர்த்துப் போராட முன்வர வேண்டும். சாதி ஆதிக்கத்தை முன்னிறுத்துகிறவர்கள் இழந்துவிட்ட செல்வாக்கை மீட்கவும், அப்பட்டமான பிழைப்புவாத்திற்கும் சாதியைப் பயன்படுத்துகின்றனர். அரசுக்கு ஆதரவாக நின்று மக்களை ஒடுக்கும் வேலையைச் செய்கின்றனர்.

எனவே,கருத்துச் சுதந்திரத்தின் மீதும், பெண்ணுரிமையின் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தத் தாக்குதலை  புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிறுத்த வேண்டும். திவ்யா பாரதி மீது போடப்பட்டுள்ள  வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்.

கொலை மிரட்டல் விடுப்பதோடு தொடர்ந்து அச்சுறுத்தும் கிரிமினல்களை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்ய வேண்டும். கருத்துரிமையைக் காக்க வேண்டி அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு போராடவேண்டும் என்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

ம.லயனல் அந்தோணிராஜ்
மதுரை மாவட்டச் செயலாளர்

 

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை.

_____________

சாதி தீண்டாமையை எதிர்த்துப் போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி