privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கண்ணைப் பறிக்கும் கம்பியில்லா வண்ணச் சிறை !

கண்ணைப் பறிக்கும் கம்பியில்லா வண்ணச் சிறை !

-

“எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பிக்பாஸ்” வசந்த் & கோ விளம்பரத்தில் கமலுக்குப் போட்டியாக வசந்த குமார் தோரணை காட்டியிருந்தார். ஆடித் தள்ளுபடியின் இணைப்பு விளம்பரங்களில் நாளுக்கொரு அறிவிப்பு!

“இப்போது அலுவலகம் போக நல்ல பேண்ட் இல்லையே” என்றார் கணவர். முன்பு “திருமணம் ஆனபிறகுதான் ஒழுங்கா சட்டை பேண்ட் போட ஆரம்பித்திருக்கிறேன்” என்றதும் அவர்தான். தன்னை மறந்து அலுவலகத்தில் பணியாற்றுவதாக அவருக்கு ஒரு நினைப்பு. ஆனாலும் அவரைக் கவனிக்க ஒருத்தி இருக்கிறேன் என்பதால் வரும் மிதப்புதான் அது என்றால் அவர் அத்தனை சீக்கிரம் ஒத்துக் கொள்ள மாட்டார். போகட்டும். தி நகருக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவருக்கு இரண்டு பேண்ட், வாய்ப்பிருந்தால் எனக்கு இரண்டு சேலை.

மாதிரிப் படம்

சரவணா ஸ்டோர் ஆடி தள்ளுபடியின் “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்“ என்ற விற்பனை விளம்பரம், எல்லா இடங்களிலும் இழுத்தது. முன்பெல்லாம் ரங்கநாதன் தெருவில் இருக்கும் சரவணாதான் எங்களுக்கு அத்துப்படி. இப்போது அங்கேயே இரண்டோ மூன்றோ வந்து விட்டது. பேருந்தில் இறங்கி அருகாமையில் இருக்கும் சரவணா ஸ்டோருக்கு போனேன்.

காலை நேரம் என்பதால் கூட்டம் அலை மோதவில்லை. பேண்ட் எடுப்பதில் பிரச்சினை இல்லை. சேலைதான் அலைக்கழித்தது. ஒன் + ஒன் என்ற அட்டை தொங்கவிட்ட விலை சலுகை அட்டைப் பெட்டியில் என்னையும் சேர்ந்து ஐந்து பேர் இருந்தனர். ஒரே விலையில் இரண்டு சேலை கிடைக்காமல் அனைவருமே குப்பையைக் கிளறும் கோழியானோம். “பிளீஸ்க்கா கொஞ்சம் கலைக்காம பாருங்க” என்றவாறு வயிற்றை பிடித்துக் கொண்டு வலி தாங்காத வேதனையுடன் புன்னகையை முத்தில் காட்டினாள் அந்த விற்பனைப் பெண்.

என்னம்மா ஆச்சு உடம்புக்கு முடியலையா?

ஆமாக்கா வயித்து வலி.

ப்ரீயட் டயமாம்மா?

இல்லக்கா ஒரு வாரமா வலிக்குது. அல்சர் வந்துருச்சா, இல்ல தண்ணி அதிகம் குடிக்காததால ஏதாவது பிரச்சனைன்னு தெரியல.

தெரிஞ்சே ஏன் தண்ணி குடிக்காம இருக்கீங்க?

ஏ.சி.யிலேயே நிக்கறதால தண்ணி தாகமே அடிக்காது. எந்த நேரமும் கஸ்டமரு கூடவே இருக்கணுமா, நமக்கா தண்ணிக் குடிக்க ஞாபகம் வராது.

சரிம்மா.! டாக்டர பாக்க வேண்டியதுதானே?

சூட்டு வலி; கடையில மாத்தர வாங்கிப் போட்டா சரியாடும்னு நெனச்சேன். ஆனா மாத்தர போட்டா கொஞ்சம் கொறையுது இல்லன்னா உயிர் போறா மாதிரி வலிக்கிது. நாள மறுநாள்தான் டாக்டர பாக்கனும்!

ஏன் நாள கடந்துறீங்க. இன்னைக்கி பாத்தா என்ன?

லீவெல்லாம் கொடுக்க மாட்டாங்கக்கா. ஒடம்புக்கு முடியலன்னு போட்டுக்கலாம். ஆனா சம்பளம் கெடையாது.

ஒரு நாள் சம்பளம் போன பரவால்ல. உடம்புதானே முக்கியம் லீவு போட வேண்டியதுதானே?

விடுமுறை நாள்ல நாம லீவு போட்டா ஒரு வார சம்பளத்த கட் பண்ணிருவாங்க!

மாதிரிப் படம்

என்னம்மா அநியாயமா இருக்கு?

இப்புடிதான் இருக்கும்ங்கறத ஏத்துக்கிட்டுதானே வேலைக்கே வந்துருக்கோம். நாமெ வருத்தப்பட்டா முதலாளிங்க இரக்கப்படவா போறாங்க!

உங்களுக்கு வார விடுமுறையே கிடையாதா?

மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. ஆனா சம்பளம் தான் கிடையாது.

அதுக்குப் பேரு விடுமுறையே கெடையாதே?

சரி சலுகையின்னு வச்சுக்குங்க. எது எப்படியோ சம்பளம் கிடையாது. பிறகு எப்படி லீவு போட முடியும்?

அப்டின்னா வெளி உலகம், பொழுது போக்கு, எதுவும் கெடையாதா?

லீவு போட்டா தூங்கலான்னுதான் வருது. அப்பறம் எங்க பொழுது போக்கறது.

நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சியெல்லாம் பாக்க மாட்டீங்களா?

நாமெ ரெண்டு பேரும் இங்க பேசறத எங்க பிக் பாஸ் கேமராவுல பாத்துருப்பாரு. இப்ப வந்துருவாரு பாருங்க. சில நாளு ஒரு ஏழெட்டு பேருங்க ஒரு ஃப்ரண்டு போன்ல பாத்துருக்கோம். அதுவும் முழுசா பாக்கறதுக்குள்ள தூக்கம் வந்துரும். காலையிலேருந்து நிக்கறதால இடுப்பு வலியும் உள்ளங்கால் எரிச்சலும் அப்படியே ஆள சாச்சுப்புடும். பிறகு எங்கக்கா பிக்பாஸூ?

அப்படின்னா நீங்க தூங்க போக 12, 1 மணி ஆகிடும் போலருக்கே!

ஆமாக்கா. இதுபோல கடைங்களுக்கு வேலைக்கி வர்ரது அகதி முகாமுக்குள்ள வர்ரது போலதான். கடைக்குள்ள சுதந்திரமா சுத்தி சுத்தி வேலை பாக்கலாம். வெளிய எங்கும் போக முடியாது.

உங்க சொந்த ஊரு எது?

உளுந்தூர்பேட்டை பக்கத்துல ஒரு கிராமம்.

அம்மா அப்பா ஊர்ல இருக்காங்களா?

அம்மா இறந்துட்டாங்க. அப்பா மட்டும் இருக்காரு. நானும் தங்கச்சியும் இங்க வேலை செய்யுறோம். அப்பா, பாட்டி, தம்பி எல்லாரும் ஊருல இருக்காங்க.

நீங்களும் ஊரிலேயே ஏதாவது வேலை பாக்கலாமில்ல!

அங்க என்னாக்கா வேலை இருக்கு. ஊருல இருக்கப்ப விவசாய வேலைக்கி போவேன். இப்பெல்லாம் தினமும் வேலை இருக்கறதில்ல. தங்கச்சியும் பெரிய பொண்ணாயிட்டா, கல்யாணமுன்னா நாலு காசு வேணுமேன்னுதான் இங்க வந்தோம்.

நீங்க வேலைக்கி வந்து எத்தன வருசமாச்சு?

கிட்டத்தட்ட மூணு வருசமாகப் போகுது.

வேற ஊர்கள்ளேருந்தும் ஆளுங்க வேலைக்கி வாராங்களா?

திருநெல்வேலி, தஞ்சாவூரு, அரியலூரு, சேலம் எல்லா ஊருலேருந்தும் வந்துருக்காங்க.

பெரும்பாலும் சின்ன வயசு பசங்களாவே இருக்கிங்களே எப்படி?

அஞ்சாறு மாடிக்கும் அலஞ்சு திருஞ்சு காலையில 9 மணிக்கி ஆரம்பிச்சு ராத்திரி 11 முடிய ஓடிட்டே இருக்க, பசங்களால மட்டும் தான் முடியும்.

போதுமான அளவு சம்பளம் கொடுப்பாங்களா?

போதுமான அளவு சம்பளம் இருந்தா லீவு போட்டுட்டு டாக்டர போயி பாத்துருக்க மாட்டேனா? வலிய பொருத்துட்டு எதுக்கு வேலை செய்றேன்?

என்னாம்மா சம்பளம் கொடுப்பாங்க?

ஒம்பதாயிரம் தருவாங்கக்கா. சாப்பாடு தங்கறது எல்லாம் ஃப்ரி. காலையில வரனும். ராத்திரி போகனும்.

அம்மா அப்பாவை பாக்க ஊருக்கு எப்ப போவீங்க?

வருசத்துக்கு ரெண்டு தடவ ஒரு வார லீவுல போய் வருவோம். அந்த நாளுக்கு சம்பளம் கிடையாது.

நடுத்தர வயசு பெண்கள் வேலை செய்றாங்களே அவங்களும் வெளியூரா?

கல்யாணம் ஆயிட்டா வெளியூரு பொண்ணுங்கள வேலைக்கி எடுத்துக்க மாட்டாங்க. சென்னைய சேர்ந்தவங்க மட்டும் வாட்சுமேன், செக்கியூரிட்டி வேலை பாக்குறாங்க.

உங்களுக்கு கல்யாணம் ஆனா வேலைக்கி என்ன பண்ணுவீங்க?

மாதிரிப்படம்

ஒக்கார வச்சு சோறு போட்ற பெரிய படிப்பு மாப்பிளைங்களா என்ன கட்டிக்கப் போறாங்க? அவரு பயிரு போட்டா நாமெ கள எடுக்கனும், அவரு கொத்தனாருன்னா நாமெ சித்தாளு பொழப்ப மாத்திக்கிட்டு போக வேண்டியதுதான்!

அந்த பெண் சொன்னது போலவே (பிக்பாஸ்) சூப்ரவைசர் வந்து விட்டார். நாங்கள் நின்ற இடத்துக்கு அடுத்த ஆடை வரிசையில் நுழைந்து எங்கள் எதிரில் திடிரென நிற்பதைப் பார்த்து எனக்கே கொஞ்சம் திக்ககென்றுதான் இருந்தது. வந்தவர் அந்த பெண்ணைக் கேள்விகளால் விரட்ட ஆரம்பித்தார்.

என்ன பண்ணிட்டு இருக்கே. கஸ்டமெருக்கு வேண்டியத எடுத்து தராமெ?

இல்ல சார் ஒரே விலையில ரெண்டு புடவை செட்டாகாமெ கஸ்டமர் தேடிட்டே இருக்காங்க.

அவங்களுக்கு உதவி பண்ணாம நீ என்ன பண்ணிட்டுருக்கே?

கஸ்டமர் கேக்கறதான் எடுத்து கொடுக்க முயற்சி பண்ணிடுருக்கேன் சார்.

ஆஃபர்ல செட்டாகலேன்னா சிங்கிள் பீசுல எடுத்துக் காமி. கஸ்டமருக்கு எது தேவையின்னு தெரிஞ்சுக்க. ஒனக்கு நேரத்த கடத்த நல்ல சான்ஸ்ன்னு நிக்காதே.

சரிங்க சார்…..

பிறகு சூப்பர்வைசர் இடத்தை விட்டு நகர்ந்தார்.

பரவாயில்ல. நான் நெனைச்சத விட சூப்பரவைசர் லேட்டாதான் வந்துருக்காரு. “நீங்க சீக்கரம் முடிங்கக்கா” என சிரித்தாள் அந்தப் பெண்.

சாரிம்மா. எல்லாம் என்னாலதான்.

அப்புடியெல்லாம் சொல்லாதிங்கக்கா. இவனுங்க இப்படிதான். அடிபட்டுட்டாக் கூட பாத்து செய்ய மாட்டியானு திட்டிட்டுதான் போவானுங்களே தவிர கரிசனமா விசாரிக்க மாட்டானுங்க.

என்னால உங்க வேலைக்கி பிரச்சனையாகிடப் போகுது.

வேலைய விட்டெல்லாம் தூக்க மாட்டானுங்க. உங்களப் போல ஆளுங்க பாக்க முடியாதபடி பேக்கிங் செக்சனுக்கு மாத்திடுவானுங்க. அந்தாளு திட்றதுக்கு வேற காரணமும் இருக்குக்கா. கஸ்டமர் துணிகள ரொம்ப நேரம் கலைச்சுப் போட்டுட்டே இருந்தா அவங்க எடுக்க மாட்டாங்கன்னு தொறத்துறதுக்கும் எங்களதான் திட்டுவானுங்க

நல்லா திட்டு வாங்க வச்சுட்டாளே புண்ணியவதின்னு நான் போன பிறகு என்ன திட்ட போறீங்க?

அட நீங்க வேறக்கா!. கம்பி இல்லாத கண்ணப் பறிக்கும் வண்ண கலர் ஜெயிலுக்கா இது. வர்ர கஸ்டமரும் துணி பத்திதான் பெரும்பாலும் பேசுவாங்க. யாராச்சும் சில பேருதான் இரக்கப்பட்டு எங்களப் பத்தி விசாரிப்பாங்க. நாங்களும் தன்னமறந்து எங்க பாட(வாழ்க்கையை) பேசுறோம். அதுவும் இல்லன்னா வாழ்க்கைய வெறுத்துரும்.

அவள் முடித்துக் கொண்டு வேலையில் மூழ்கிப் போனாள். எனக்கும் ஒரே விலையில் இரண்டு சேலைத் துணி கிடைக்கவில்லை. அனேக நாட்கள் அவளுக்கு வெறுப்பாகத்தான் கழிந்திருக்கும். இருந்தாலும் அவளை வாழ்க்கையோடு ஓட வைப்பது எது? யோசித்துக் கொண்டே படியிறங்கினேன்.

-சரசம்மா
(உண்மைச் சம்பவம். ஊர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

_____________

  1. வார்த்தைகளில் மீண்டும் ” ஒரு அங்காடிதெரு ” … இவை அனைத்தையும் அறிந்திருந்தும் அவர்களுக்கு பரிதாபப்பட்டு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் அரசுகள் …? மக்களை காக்கவந்ந புனிதர்கள் பாேல வாயால் வடை சுடும் …கேப்மாரிகள் ….!

  2. இங்கு மட்டுமா? ஐரோப்பிய நாடுகளில் கே எப் சீயில் சுழலும் மத்தியகிழக்கில் வறுக்கும் வெயிலில் கன்கிரீடோடு காதல் செய்யும் என உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்துக்கு இதே கதி தான், உழைப்பை உறிஞ்சுவது மட்டுமல்லாமல் சம்பளத்தை கூட பிச்சை போல எதிர்பார்க்கும் நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க