privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்ஷெல்லி லூபென் - ஒரு முன்னாள் போர்னோ நடிகையின் வாக்குமூலம்

ஷெல்லி லூபென் – ஒரு முன்னாள் போர்னோ நடிகையின் வாக்குமூலம்

-

போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம் – பாகம் 2

பாசப்படங்களில் அலங்காரத்தோடு வரும் பெண்கள், அவர்கள் நடிகைகள் என்று அழைக்கப்பட்டாலும், அது வெறுமனே நடிப்பில்லை. தன் உடலையும், வாழ்வையும் சிதைப்பதற்காக ஊதியம் வாங்கும் ஒரு தற்கொலைத் தொழில்தான் அது. அலங்காரத்தையும், பாலியல் அசைவுகளையும் ஆவேசத்தோடு பார்க்கும் பார்வையாளர்களுக்கு அப்பெண்ணின் பிறப்புறுப்பு எப்படி சிதைக்கப்படுகிறது என்றோ அவள் பிறந்த வாழ்வின் பொருளே எப்படி குதறப்படுகிறது என்றோ தெரிவதில்லை.

ஷெல்லி லூபென் அப்படி ஒரு நடிகை – என்ன சொல்கிறார்?

இருபத்தி நான்கு வயதில் ஆபாசப் பட உலகில் நுழைந்தேன். அதற்கு முன் விபச்சாரியாக, கேளிக்கை விருந்துகளில் ஆபாச நடனமாடும் பெண்ணாக காலம் கழித்தேன். மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவள் நான். ஆபாசப் பட உலகத்தால், ஒரு காலத்தில் நான் வெகுவாகப் புகழப்பட்டேன். போர்னோ உலகில் நுழையும் போது எனக்கு பலவித வாக்குறுதிகள் தரப்பட்டன. பணம், புகழ், அங்கீகாரம், போர்னோ உலகின் மாடல் என்று எல்லாமே என் காலடியில் வந்து சேரும் என்று பொய் வாக்குறுதியளித்தனர்.

ஷெல்லி லூபென்

இதைத் தவிர 3 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை இலவசம் என்றனர். அதாவது என் உடல்நலத்தைப் பேணுவதில் அவர்களுக்கு அத்தனை அக்கறையாம்! 30 படங்களில் நடித்த பிறகு எனக்கு இரண்டு கொடிய பால்வினை நோய்கள் வந்தன. ஒன்று எச்.பி.வி (Human Papilloma Virus – HPV) இரண்டாவது ஹெர்பீஸ்(Herpes). முதலாவது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் இரண்டாவது நோயான ஹெர்பீஸ் இப்போதுள்ள எச்.ஐ.வி(HIV)-க்கு சமமானது. இந்த நோய் ஒருவருக்கு வந்ததென்றால் அவருடைய வாழ்க்கை முடிந்து விட்டது எனலாம். ஆகவே இந்நோய் என் வாழ்வையே பாழாக்கியது. தூக்க மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக நான் சாகவில்லை. என் உடலில் எங்கு பார்த்தாலும் ஹெர்பீஸ் நோயின் தாக்கம் வெளிப்பட்டது. உதடுகள், தொண்டை, பிறப்புறுப்பு, மலத்துவாரம் என எல்லா இடங்களிலும் இந்த நோய் என்னை வாட்டி வதைத்தது. கிட்டத்தட்ட ஒரு பேய் போல மாறிவிட்டேன். என்ன சொல்லி என்னை இங்கு அழைத்து வந்தார்களோ அதற்கு எதிர்மாறாகவே எல்லாம் நடந்தது. கண்ணாடி முன் என் உருவத்தையே பார்க்கச் சகிக்காத அளவுக்கு தோற்றம் மாறியது.

என் வாழ்க்கை முடிந்துவிட்டதென நினைத்தேன். என்னைப் போன்றே இந்தத் தொழிலில் ஈடுபடும் பல பெண்களும் இவை போன்ற நோய்களால் பாதிக்கப்படும்போது வாழ்வே முடித்துவிட்டதாக கருதிக்கொண்டு தற்கொலை செய்கின்றனர். இத்தகைய பால்வினை நோய்கள் இத்தோடு நின்றுவிடுவதில்லை. எனக்கு 43 வயதாகின்றது. மாதவிடாய் பிரச்சினை இன்னும் தீரவில்லை, ஹெர்பீஸ் நோயால் என் கருப்பையின் வாய்ப் பகுதியை வெட்டி எடுத்து விட்டனர். மொத்தத்தில் என் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு விட்டது.

இப்படி ஆபாசப் பட உலகம் எங்களை மட்டும் சிதைப்பதில்லை. பார்ப்பவர்களையும் உயர் மன அழுத்தத்தில் தள்ளுகின்றது. ஆபாசப் படங்களை ஒரு நோய் என்றே சொல்வேன். பார்ப்பதற்கு அழகாகக் காட்சிப்படுத்தப்படும் இந்தப் படங்களில் நடிக்கும் பெண்களின் நிலை என்னவாகுமென்று நீங்கள் புரிந்து கொண்டால் இந்த நோயை ஒழிக்க நீங்களும் முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த உரை மட்டும் நமக்கு போதுமா என்ன? ஷெல்லி லூபென்னுக்கும் தெரியும். அதற்காகவே அவர் தனது குழந்தைப் பருவம் துவங்கி போர்னோ பருவம் குறித்த நாட்களை கதையாக விவரிக்கிறார். யாரும் இத்தகைய கதையை அதுவும் தனது சொந்த வாழ்க்கையை விவரிப்பது அசாத்தியம். ஏழ்மை, விபச்சாரம், துகிலுறியும் நடனம், போர்னோ இறுதியில் அழிவு இவைதான் இவர்களது பொது அத்தியாயங்கள்…. என்றாலும் அந்த வாழ்வின் இருண்ட பக்கங்களை எப்படி உணர்வது? வெளிச்சத்தில் எடுக்கப்படும் போர்னோ படங்களை இருட்டில் பார்த்து குதூலிக்கும் எவரும் அந்த குதூலகத்தை தொடர முடியாது. ஏனெனில் நடிப்பில் எப்படி வலியும் வதையும் இருக்கிறதோ அதுவே பார்க்கும் போதும் இறுதியில் வந்து சேர்கிறது.

இனி ஷெல்லி லூபென்னின் கதையைப் பார்ப்போம்.

ஓ! ரிக்கி இன்று நீ என்னை அழ வைக்கப் போகிறாய் என்று நினைக்கிறேன். போர்னோ உலகின் அவலங்களை உன் முன்னே நின்று சொல்வதற்கு எனக்கு கண்டிப்பாக மனத்திடம் தேவை. அது அத்தனை எளிதான ஒன்றா என்ன? எனவே என்னை திறந்த மனதுடன் பேச அனுமதிக்க வேண்டுகிறேன்.

ஒரு வேளை நான் சொல்லி முடித்தபின் நீங்கள் எனக்கு நன்றி கூற விழையலாம்; ஏனென்றால் போர்னோவால் பாதிக்கப்படாத குடும்பம் உண்டா என்ன? ஒரு மளிகைக் கடைக்குப் போனால் கூட அங்கே சிலர் என்னிடம் வந்து என் கணவர் போர்னோவில் இருக்கிறார் அல்லது தன் மகன் போர்னோவில் இருக்கிறார் என்று புலம்புகின்றனர். போர்னோ எல்லா இடங்களிலும் நுழைந்து விட்டது. போர்னோ என்பது மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் ஒரு மோசமான பொய் நம்பிக்கை என்பதை என்னால் நிரூபிக்க முடியும்.

விபச்சாரத் தொழிலிருந்து போர்னோ உலகத்திற்கு எப்படி வந்தேன் என்பதை முதலில் சொல்கிறேன். முதலாவதாக தெருக்களில் விபச்சாரத்தில் ஈடுபட்டேன். எனக்குத் தெரிந்த வரையில் போர்னோ உலகில் நுழையும் எல்லா பெண்களும் ஏறக்குறைய இதே வழியில் தான் நுழைகின்றனர்.

நான் என்னுடைய 9-ம் வயதில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டேன். ஒரு பெண்ணால் ஓரினச் சேர்க்கைக்கு உள்ளாக்கப்பட்டேன்; மற்றொரு முறை ஒரு ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். அப்போது அவர் என்னிடம் இதை உன் பெற்றோரிடம் சொல்லத் தேவையில்லை என்று கூறினார். இரகசியம் என்பது இது தானோ என்றே அப்போது நான் உணர்ந்தேன். அந்த வயதில் அதை யாரிடமும் சொல்லத் துணிவில்லை. இது என்னிடம் ஒரு வன்முறைப் பண்பை உருவாக்கியது. ஏனோ என் பெற்றோரால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என் குடும்பத்தில் ஒரு கறுப்பு ஆடானேன். என்னால் குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் உருவாயின. என் செயல்பாடுகளினால் அதிருப்தியடைந்த என் தந்தை நோய்வாய்ப்பட்டார். ஒரு கட்டத்தில் என்னை வீட்டை விட்டே விரட்டி விட்டார்.

கையில் கிடைத்த பைபிளுடன் வீட்டை விட்டு வெளியே வந்த எனக்கு அப்போது வயது 18. மேல்நிலைப் படிப்பைச் சராசரியாக முடித்துவிட்ட இளம்பெண் நான். உலகத்தைப் பற்றிய அறிவு கிஞ்சிற்றும் தெரியாத வயது அது. என்னை ஒரு முட்டாளாக, யாராலும் நேசிக்கப்படாதவளாக, வாழத்தகுதியற்றவளாக உணர்ந்தேன். அப்படி நான் தனித்து விடப்பட்ட சான் ஃபெர்னாடோ பள்ளத்தாக்கு தான் ஆபாசப் பட உலகின் பிறப்பிடம், 85% ஆபாசப்படங்கள் கலிஃபோர்னியாவில் தான் உற்பத்தியாகின்றன என்ற விவரமெல்லாம் அப்போது எனக்குத் தெரியவில்லை.

உலகில் தனித்துவிடப்பட்ட எனக்கு அப்போது துணையாய் இருந்தது பைபிள் மட்டுமே. சிறு பிள்ளையிலிருந்தே மறைக்கல்வி வகுப்புகளுக்குப் போனதால் அதை எப்போதும் கையில் வைத்திருப்பது பழக்கமாகிவிட்டது. இப்போது இயேசுவை நோக்கிப் பேசினேன் “இயேசுவே என்னை இப்படி அனாதையாக அலையவிட உமது மனம் எப்படி ஒப்புக்கொண்டது?”. பின்புறம் ஒரு ஆணின் மென்மையான குரல் என்னை நோக்கி “இனிய பெண்ணே! என்ன ஆனது உனக்கு?” என்று கேட்டது. உடனே நான் அவரிடம் வீட்டில் நடந்ததைக் கூறி அழ ஆரம்பித்தேன். கவலைப்படாதே சிறுமியே நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று அவர் திரும்பக்கூற உடனே நான் இயேசு தான் எனக்காக ஒரு நபரை அனுப்பியதாக நம்பினேன்.

அந்த நபர் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் காட்டி அங்கே ஒரு நல்ல மனிதர் ஒருவர் இருக்கிறார். அவருடன் நீ சில நிமிடங்கள் தனிமையில் செலவிட்டால் 35 டாலர் பணம் தருவார் என்று நைச்சியமாகப் பேசினார். உடனே எனக்குக் கோபம் வந்துவிட்டது. ”என்னை என்ன விபச்சாரியென்றா நினைத்துக்கொண்டீர்கள்; நான் வீட்டை விட்டு வெளியே விரட்டப்பட்டவள் தான். ஆனால் விபச்சாரியல்ல” என்று கத்தினேன். ஆனால் அந்தக் கோபத்திலும் ஒரு கெட்ட எண்ணம் தோன்றியது. கடவுளுக்கும் என் மேல் அக்கறையில்லை; பெற்றோருக்கும் என் மேல் அக்கறையில்லை. பின் எதற்காக நான் அச்சப்படவேண்டும்?

அந்தக் கணத்திலிருந்து நான் விபச்சாரியாக மாறினேன். அந்த நல்ல மனிதரிடம் 35 டாலருக்காக விலை போனேன். அவரின் அன்பும் பணமும் என்னை ஆட்கொண்டன. என் தந்தை ஒரு போதும் என் மீது அன்பு காட்டியதில்லை. எனவே ஏதோ ஒன்று என்னை அவரிடம் ஆட்கொள்ள வைத்தது. ஆரம்பத்தில் இது ஒரு ஏமாற்றும் வித்தை என்பதை நான் அறியவில்லை; போகப்போக அவரின் கொடூர குணம் வெளிப்பட ஆரம்பித்தது. இயற்கைக்கு முரணான வழிகளில் என்னைப் பலருடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதால் அவரிடமிருந்து தப்பித்து வெளியே வந்தேன்.

இப்போது உலகம் வேறு விதமாகக் காட்சியளித்தது. ஏன் நான் பிறரைச் சார்ந்திருக்க வேண்டும், நானே ஏன் நேரடியாக விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று எண்ணி, தெருக்களில் நேரடியாக விபச்சாரத்தில் இறங்கினேன். அடித்தட்டுத் தொழிலாளர்களிடம் சென்று 50 டாலர்களுக்கு விலை போனேன். மெக்கானிக் கடைகளின் பின்புறம் உள்ள அழுக்குப்பிடித்த அறைதான் படுக்கை அறை. சுத்தம், சுகாதாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒரு முறை ஒரு மனிதனின் ஆணுறுப்பிலிருந்து விந்தணுவும், இரத்தமும் வெளி வந்ததை என் முகத்தில் தெளிக்க விட்டான். இது என்னை மிகவும் அச்சுறுத்திய ஒன்று; ஏனென்றால் அப்போது என்னுடைய வயது வெறும் 18. என் முடியைப் பிடித்து இழுத்து அடிப்பார்கள், பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்வார்கள்; பெரும்பாலும் இயற்கைக்கு முரணான உடலுறவு; ஆனால் மறுப்பேதும் சொல்ல முடியாது; நான் ஒரு விலைமகள் அல்லவா?

இரண்டாவது நிகழ்வு என்னை மற்றொரு விபச்சாரி சந்தர்ப்பவசமாகப் பார்க்க நேரிட்டது. நீ ஏன் தனியாக அலையவேண்டும், நம்மைப் போன்றோருக்கு வேலை கொடுக்க பல பேர் இருக்கின்றனர் என்று கூறி என்னை அழைத்துச் சென்று ஒரு மேடம்-இடம் கொண்டு சென்றார். விபச்சாரம் என்பது வாழ்வில் சுவராசியமான ஒன்று என்பது அவர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். உடல் சுகாதாரம், உடல் கவர்ச்சி இவையிரண்டையும் எப்படிப் பராமரிப்பது என்பதை அவர்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

இப்போது ஆண்களின் மீதான என் வெறுப்பு மேலும் அதிகமானது. 50 வயதைக் கடந்த அந்தப் பெண் தான் விபச்சாரத்தின் போது வரும் சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது; சூழ்நிலைகள் சிக்கலாகும் போது எப்படி பொய் சொல்லி தப்பிப்பது, குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலிசிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று கற்றுக் கொடுத்தார். போலிசிடம் சிக்கிக் கொள்ளும் போது அந்த நாளில் கிடைத்த பணமெல்லாம் அவர்களுக்குப் போய் விடும்; போதாக்குறைக்கு அவர்களுடன் மது விருந்துகளுக்கு வேறு அழைத்துச் செல்வார்கள் அந்த வெட்கம் கெட்ட அதிகாரிகள்.

விபச்சாரத்தில் பொதுவாக பெண்களுக்கு பல்வேறு சிக்கல்கள் வரும். ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ள ஆரம்பிப்பார்கள், சில நிமிடங்களில் அதைக் கழட்டி எறிந்து விடுவார்கள்; எழுந்து சோதிக்கக் கூட அனுமதி கிடைக்காது; சிலர் ஆபாசப் படங்களைப் பார்த்துக்  கொண்டே உடலுறவில் ஈடுபடுவார்கள். ஒருவேளை விபச்சாரத் தொழிலை விட போர்னோ தொழில் இலகுவாக இருக்குமோ என்று நினைப்பேன். அந்த ஆசை தான் என்னை போர்னோ உலகை நோக்கி இழுத்தது.

விபச்சாரத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களைப் போலவே என்னையும் மது மற்றும் போதைப் பொருள் அருந்தச் சொல்லி கட்டாயப்படுத்துவர். சிலருக்கு பால் வினை நோய்கள் இருப்பது நன்கு தெரிந்திருந்தாலும் அதை எங்களிடம் மறைத்து பாதுகாப்பற்ற வகையில் உடலுறவு கொள்வார்கள். சிலர் எங்களிடமிருக்கும் எல்லா பொருள்களையும் பறித்துக் கொண்டு விரட்டிவிடுவர். இந்த 14 மாத விபச்சாரத் தொழிலில் இரண்டு முறை கர்ப்பமாகினேன். முதல் குழந்தை உருவான சில நாட்களில் ஒரு காமவெறியனால் நான் கடுமையாகத் தாக்கப்பட்டதால் கரு கலைந்து போனது. ஆனால் இரண்டாவது கரு பிழைத்துக் கொண்டது. அப்போது என்னுடைய பெயர் ஜொவானி.

மூன்றாவதாக விபச்சார வாழ்க்கையின் மீது வெறுப்புற்று ஆபாச நடன விடுதியில் சென்று கவர்ச்சி நடனம் ஆடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் எனக்குப் போதிய வயது தகுதியில்லை. பாலியல் தொழிலில் சீக்கிரம் வளர்ந்தால் தான் காசு பார்க்க முடியும். அமெரிக்காவானாலும் மாற்று வழி இல்லையா என்ன? போலி அட்டை ஒன்றைத் தயாரித்தேன். வேலையும் கிடைத்தது. நடன விடுதி உரிமையாளருக்கு என் வயதைப் பற்றியா கவலை? என் உடலைப் பற்றி தானே?

விபச்சார வாழ்க்கைக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. விபச்சார விடுதிகளில் இருந்த சுகாதாரம் என்பது இமியளவும் இல்லை. இதில் குறிப்பாக நாங்கள் உடை மாற்றிக் கொள்ளும் அறை மிக மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டிருக்கும். கிழிந்து போன அழுக்குத் துணிகள், போதைப் பொருட்கள், உடைந்த கண்ணாடிகள் இன்னும் பலப்பல. இந்த அறைகள் தான் எங்களுக்கு உடைமாற்றும் அறை. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆபாச நடன விடுதிகளில் கூட இதே நிலை தான். நீங்கள் ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் போது கதாநாயகன் நடன விடுதிகளுக்குச் செல்லும் காட்சிகள் வரும். அதைப் பார்த்து இப்படி ஒரு உல்லாச நடன விடுதியா என்று வியந்திருப்பீர்கள். ஆனால் அவையனைத்துமே பொய் என்பதற்கு இதை விட ஒரு விளக்கம் தேவையில்லை.

வாடிக்கையாளர்கள் ஆபாச நடனமாடும் என்னைப் போன்ற பெண்களை, மிகவும் மோசமான வார்த்தைகளால் தான் அழைப்பார்கள். அங்கே விபச்சாரமும் தவிர்க்க முடியாத ஒன்று. நடன விடுதியில் எங்காவது ஒரு மூலையிலோ, அல்லது வாகனங்கள் நிறுத்தும் பகுதியிலோ விபச்சாரத்தில் நாங்கள் ஈடுபட வேண்டி வரும். வழக்கம்போல மதுவும், போதைப் பொருட்களும் இலவசமாகக் கிடைக்கும். திடீரென மிருகங்கள் போல் அடித்துக் கொள்வார்கள்; சில சமயங்களில் துப்பாக்கிச் சூடும் நடக்கும். ஒரு முறை எனக்கு மிக அருகில் இருந்த ஒருவரைச் சுட்டுக் கொன்றதில் என் மீது இரத்தம் சிதறிக் கொட்டியது. மரணத்தின் விளிம்பிற்குச் சென்று வருவது சாதாரண நிகழ்வாகியது.

இப்படி இருக்கும்போது நான் அடிக்கடி பார்த்த விளம்பரம் ஒன்று என்னை வெகுவாகக் கவர்ந்தது. மெக்சிகோ நாட்டில் ஒரு ஆபாச நடன விடுதியில் வாரத்திற்கு 2000 அமெரிக்க டாலர்கள் சம்பளம் என்ற விளம்பரம் தான் உடனடியாக அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட போது கடற்கரையில் நடனமாட வேண்டும், கை நிறைய பணம் என்றனர். முதல் வகுப்பு விமானக் கட்டண இரசீதுடன் நான் சேர வேண்டிய இடம் குறித்த தகவலும் வந்தது. ஆனால் நான் தரை இறங்கி மெக்சிகோ சென்றடைந்ததும் தான் எனக்கு அங்குள்ளவர்கள் மூலம் நிலவரமே புரிந்தது!!! ஆம் நான் பாலியல் தொழிலுக்காக நாடு கடத்தப்பட்டேன்!!.

நான் இருந்த இடத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அன்றே தப்பிக்காவிடில் பிறகு வாய்ப்பேயில்லை என்று கருதி கட்டிடத்தில் நெருப்பு பிடித்து விட்டதாக கத்திக்கொண்டே வெளியில் ஓடி வந்து இறுதியில் வாயிற்காப்பாளன் வெளியே விட மறுக்க அவனை ஒரே அடியாய் அடித்துத் தள்ளிவிட்டி ஒரு காரைப் பிடித்து ஒரு வழியாக வெளியேறி திரும்பவும் அமெரிக்காவுக்கு வந்து விட்டேன்.

ஆறு வருடங்கள், விபச்சாரம், ஆபாச நடனம் அப்பப்பா சலித்துப் போய் விட்டது வாழ்க்கை! தொடர்ந்து பலமுறை தற்கொலை முயற்சிகள் செய்தேன்! ஆனால் எப்படியோ காப்பாற்றப்பட்டு விட்டேன். ஆண்களைக் கண்டாலே எரிச்சலாயிருந்தது. இவர்களால் வராத பிரச்சினைகள் தான் என்ன? புலிமியா, போதை பழக்கம், பேரனோயா எனப்படும் மனநோய், உயர் மனஅழுத்தம், பி.டி.எஸ்.டி(PTSD – Post-Traumatic Stress Disorder ) எனப்படும் பயத்தினால் உருவாகும் ஒருவித மனநோய், பித்துப் பிடித்தல் இப்படி பல நோய்களால் எங்களுக்கு அச்சுறுத்தலுண்டு.

இந்த நிலையில் தான் ஆபாச நடன விடுதிக்கு சில சமயங்களில் நடனமாட வரும் ஒரு பெண் என்னிடம் வந்து “ நீ மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளாய்! ஏன் நீ போர்னோ உலகத்துக்குள் வரக்கூடாது? அங்கு ஒரு படத்தில் நீ நடித்தாலே போதும், 2000 அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைக்கும், அது மட்டுமன்றி, பெயரும், புகழும் சேர்த்தே கிடைக்கும் என்று ஆசை காட்டினாள். சட்டப்பூர்வமான தொழில், மருத்துவ சோதனைகள் இலவசம், கை நிறைய பணம், வேறு என்ன வேண்டும் இதை விட. ஏற்கனவே ஒரு குழந்தைக்குத் தாயானதால் இது பாதுகாப்பான தொழிலாகத் தோன்றியது.

நான்காவதாக போர்னோ துறையில் நுழைந்தேன். இப்போது என் பெயர் ராக்சி(Roxy).

(தொடரும்)

-வரதன்

(இக்கட்டுரையின் முந்தைய பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்)

_____________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா? மக்களின் விழிப்புணர்ச்சிக்கு போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி