.நா. அகதிகள் ஆணையத்தால்(UNHCR) அங்கீகரிக்கப்பட்டிருப்பினும் இந்தியாவில் குடியேறியிருக்கும் சுமார் 40,000 ரோஹிங்கியா முசுலீம்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என முத்திரை குத்தி அவர்களை வெளியேறச் சொல்கிறது இந்திய அரசு.

இந்தியாவில் ஜம்மு, ஹைதராபாத், தில்லி, இராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இருக்கும் சுமார் 16,500 ரோஹிங்கியா அகதிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் அடையாள அட்டைகளை வழங்கியிருக்கிறது. இது தங்களுக்கெதிரான துன்புறுத்தல்கள், கைது நடவடிக்கைகள் மற்றும் நாடு கடத்துதல் போன்றவற்றில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை  ரோஹிங்கியா மக்களுக்கு கொடுத்தது.

ஆனால் இந்த அடையாள அட்டைகள், அகதிகளை வெளியேற்றுவதில் இருந்து தங்களைத் தடுக்காது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருக்கிறார். அடையாள அட்டைகளை ஐ.நா. அகதிகள் ஆணையம் வழங்குவதை இந்தியாவால் தடுக்க முடியாது எனினும் அகதிகள் தொடர்பான எந்த உடன்படிக்கையிலும் இந்தியா கையெழுத்துப் போடவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், அகதிகளைப் பாதுகாப்பது தொடர்பான ஐ.நா.-வின் தீர்மானமானது இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியது தான் என இந்தியாவில் உள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் கூறியுள்ளது.

இன்றைய நாளில், உலகின் மிகவும் இன்னலுறும் சிறுபான்மை இனமாக ரோஹிங்கியா முசுலீம்கள் உள்ளனர். மியான்மர் அரசின் சகல அதிகார சந்துபொந்துகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பர்மிய பெரும்பான்மை இனம், ரோஹிங்கியா சமூகத்தின் அனைத்து உரிமைகளையும் மறுத்து உலகம் அறிந்திராத ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது.

“இனம், மதம், தேசியம் அல்லது ஒரு குறிப்பிட்ட இனக் குழுவையோ அல்லது அரசியல் கருத்தையோ சார்ந்தவர் என்ற காரணத்தால் ஒரு நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டு, அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர்களை மீண்டும் பிரச்சினையுள்ள ஒரு நாட்டிற்கு திரும்பிச் செல்லும்படி ஒரு நாடு தன்னுடைய நாட்டில் தஞ்சமடைந்த அகதிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை ஐ.நா. ஒரு கொள்கையாக வகுத்திருக்கிறது. பன்னாட்டு மன்றங்களில் பல்வேறு தருணங்களில் ஐ.நா.-வின் இக்கொள்கையை இந்தியா ஆதரித்துள்ளது. ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் நிர்வாகக்குழுவில் இந்தியா உறுப்பினராக இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரோஹிங்கியா இன மக்களின் மீதானப் படுகொலைத் தாக்குதல்களை மியான்மர் இராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இனப்படுகொலை மீதான ஐ.நா. விசாரணையை கடந்த ஜூன் மாதம் மியான்மர் அரசு மறுத்திருப்பது,  ஐ.நா.-வின் தீர்மானம் வெற்றுக் காகிதம் என்பதற்கு ஒரு சாட்சியாக இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இந்து சிறுபான்மை அகதிகளை, நுழைவுச் சான்றிதழ் காலாவதியான பின்னரும் இந்தியாவில் தங்கலாம் என்று இதே மோடி அரசு கடந்த 2015 -ம் ஆண்டு அறிவித்திருக்கிறது. மதச் சிறுபான்மையினர் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதால் மனிதாபிமான அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக இந்திய அரசு கூறியிருந்தது. ஆனால் மியான்மரின் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லீம் இன அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.

இது மத்திய பாஜக அரசின் இசுலாமிய வெறுப்பையும், அகதிகள் விவகாரத்தில் இந்திய அரசின் இரட்டை வேடத்தையும் பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளது. குஜராத்தில் ஆயிரக்கணக்கான முசுலீம்களைக் கொன்று குவித்து, நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான முசுலீம் மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைந்து திரியவிட்ட பாஜக – சங்க பரிவாரக் கும்பலிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?

செய்தி ஆதாரம் :

_____________

இந்தச் செய்திக் கட்டுரை உங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதா!
இனவெறி மதவெறி ஒடுக்குமுறைகளைத் தொடர்ந்து எதிர்க்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி