privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விநீட்: நுங்கம்பாக்கம் - கோவூர் - அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் !

நீட்: நுங்கம்பாக்கம் – கோவூர் – அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் !

-

கோவூர் அறிஞர் அண்ணா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8.9.2017 அன்று காலை, அனிதாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் – நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் ! என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாணவிகள் சார்பில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. காலை 8.30 மணிக்கு குன்றத்துர் சாலையில் மாணவிகள் தொடங்கிய போராட்டத்திற்கு அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் ஆதரவளித்து கலந்துகொண்டனர். 200 -க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் சுமார் ஒன்றரை மணி  நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை எதிர்ப்பார்க்காத காவல்துறை அதிகாரிகள் மாணவர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மாணவிகளின் கையில் இருந்த முழக்க பேப்பர்களை வாங்கி கிழித்து போட்டு “ஓரமாக போங்க” என்று மிரட்டினர். இதைக் கண்டு பயந்து பின் வாங்காமல் “ஓரமா போங்க… ஓரமா போங்கன்னு தள்ளி தள்ளித்தான் நாங்க இன்னும் ஓரமாவே நிற்கிறோம். இனி நாங்க ஓரமா போக மாட்டோம்” என்ற மாணவிகளின் பதிலால் அதிகாரியின் முகம் இருண்டது.

“முளச்சி மூணு இல விடல” அதுகுள்ள போராட்டமா? நீட்டுன்னா என்னன்னு தெரியுமா? அரசியலுன்னா என்னன்னு தெரியுமா?… என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனார், மற்றொரு அதிகாரி. “அரசியல் படிச்சா நீட்டை எழுதிடலாமா சார்?” என்ற மாணவிகளின் கிண்டலுக்கு பதில் சொல்ல முடியாமல் கடுப்பாகி சற்று தள்ளி போய் நின்று கொண்டார்.

மாணவர்களை மிரட்டி பள்ளிக்குள் அனுப்பி வாசலில் காவலுக்கு நின்றது போலீசு. ஆனால் மாணவிகள் போலீசுக்கு பணிந்து போகாமல் முழக்கமிட்டு கொண்டே இருந்தனர். அவர்களை என்ன சொல்லி களைப்பது என்று திணறிய அதிகாரிகள், ஒருவழியாக ஆசிரியர்களை வரவழைத்து மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதன் பிறகு பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர்.

போராட்டத்தின் போது மாணவிகள் முழக்கமிட்டுக்கொண்டே வகுப்புகளுக்கு சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

நீட் எதிர்ப்புப் போராட்டம் : உச்சநீதிமன்ற உத்தரவை தவிடுபொடியாக்கிய நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் !

“நீட் தேர்வை ரத்து செய்’’ என ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே மனிதனாக எழுந்துநின்று ஓங்கி ஒலிக்கும்  போராட்டத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தடுத்து நிறுத்திவிட முடியுமா? முடியாது. இது வேறு தமிழ்நாடு என்பதை மாணவர்கள் நிரூபித்து  வருகிறார்கள்.

“அனிதா படுகொலை”யைத் தொடர்ந்து நீட்டுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் தொடங்கி வைத்த போராட்டத் தீயை இப்போது பள்ளி மாணவர்கள் வேகமாக ஏந்திச் செல்கிறார்கள். அந்த தீயில் மோடி – எடப்பாடி கும்பலின் பொய் பித்தலாட்டங்களும், உச்சநீதிமன்றத்தின் மொள்ளமாரித்தனங்களும் பொசுங்கி வருகின்றன.

நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் நீட் தேர்வை ரத்து செய்யவும், அனிதா-வின் படுகொலைக்கு நீதி கேட்டும் கடந்த 7-ம் தேதி பள்ளிக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த தலைமை ஆசிரியர் பொன்னம்மாளிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் அவர் மாணவிகளிடம் “போராட்டம் எல்லாம் பண்ணக்கூடாது உங்க வேலைய மட்டும் பாருங்க’’ என்று திட்டி மாணவிகள் போராட்டம் நடத்தாதவாறு தடுத்துள்ளார். அடுத்த நாளும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சில ஆசிரியர்கள் மாணவிகளை மிரட்டியுள்ளனர். இதைக் கண்டு அஞ்சாத மாணவிகள் தங்களுக்குள் கூடி பேசி சனிக்கிழமை போராட்டம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

அதைப்போலவே 10,11,12 வகுப்புகளைச் சார்ந்த மாணவிகள் சனிக்கிழமை வகுப்புகள் முடிந்ததும் சுமார் 12:00 மணிக்கு பள்ளி வாசலில் ஒன்று கூடி “ஜல்லிக்கட்டுக்கு பீட்டா… மருத்துவக் கல்விக்கு நீட்டா” “வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடே…. வீதிக்கு வந்து போராடு” “ஓயாது ஓயாது மாணவர்கள் போராட்டம் ஓயாது’’ என்று முழங்கிக் கொண்டே சுமார் 100 மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர்.

அங்கு வந்த தலைமை ஆசிரியை மாணவிகளை தடுத்தார். மாணவிகள் “நாங்கள் எங்கள் எதிர்ப்பு உணர்வை கொஞ்சம் நேரம் தெரியப்படுத்திவிட்டு கலைந்து செல்கிறோம் என்று கூறினர். இதனை காதில் வாங்கிக்கொள்ளாத தலைமை ஆசிரியை, மாணவிகளின் முடியை பிடுத்து இழுத்து அடிக்கத் தொடங்கினர். அதோடு “யார் செத்தா உங்களுக்கு என்ன? பள்ளிக்கூட மானத்த வாங்குறீங்க. நீங்க பள்ளிக்கு எப்படி வர்ரீங்கன்னு பாக்குறேன். உங்க யாரையும் பரீட்சை எழுதவிடமாட்டேன், உங்க படிப்பு அதோ கெதிதான்’’ என்று மிரட்டினார்.

நாங்கள் பள்ளி மானத்தை வாங்கல, போராட்டம் நடத்தி பெருமையைத்தான் தேடித் தருகிறோம் என்று கூறிக்கொண்டே நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வரை சென்று சாலை மறியல் போராட்டம் செய்தனர். இந்த திடீர் போராட்டத்தைக் கண்டு போலீசார் பீதியடைந்து போயினர். உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி சாலைமறியல் செய்யக்கூடாது என்று கூறி போலீசார் போராட்டத்தை சீர்குலைக்க முயன்றனர். “நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடுகிறோம். அதை மதிக்காத உச்சநீதிமன்றம் எங்களை கேட்டா தீர்ப்பெழுதியது? அதற்காக நாங்கள் போராடாமல் இருக்க வேண்டுமா?” என்று கூறி உறுதிகுலையாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர். தலைமை ஆசிரியர், போலீசார் மாணவிகளை கீழே தள்ளி, வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்ததால் சில மாணவிகள் மயக்கமடைந்தனர்.  இதைக்கண்டு பல இளைஞர்கள் தண்ணீர் பாக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தனர். அந்த இளைஞர்களை பிடித்து இழுத்து கைது செய்து போராட்டத்தை திசை திருப்ப போலீசார் முயன்றனர். அப்போதும் மாணவிகள் அசைந்துகொடுக்கவில்லை. மாணவிகளை தாக்கிய தலைமை ஆசிரியர் மற்றும் போலீசாரை அங்கு கூடியிருந்த மக்களும், மாணவிகளின் பெற்றோர்களும், பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசனும் கண்டித்தனர். இறுதிவரை மாணவிகளுக்கு ஆதரவாக இருந்தனர்.

சுமார் 3 மணிநேரம் நடந்த சாலைமறியல் போராட்டத்தால் அந்த இடமே, போர்க்களம் போல் காட்சியளித்தது. அதன் பின்னர் சாலைமறியல் போராட்டத்தை விலக்கிக்கொண்ட மாணவிகள் பள்ளிக்கு திரும்பி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். மேலும் மாணவிகளைத் தாக்கிய தலைமை ஆசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும், பரீட்சை எழுதுவதை தடுக்கக் கூடாது, போராடிய மாணவிகளை பழிவாங்கக் கூடாது என்றனர். சுமார் 4:00 மணி வரை போராட்டம் நீடித்ததால் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு பொதுமக்கள் பலர் பள்ளி அருகே குவியத்தொடங்கினர். அதே போல் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் போலீசாரின் அராஜகத்தை எதிர்த்த பிறகே அடங்கினர். பின்னர் மாநகராட்சி கல்வித்துறை உதவி இயக்குனர் வந்து தலைமை ஆசிரியரையும், மாணவிகளையும் அழைத்து போராடிய மாணவிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்த பின்பு சுமார் 4.30 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஒரு தொலைக்காட்சி நிருபர், ”நீங்க எந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்துறீங்க?’’ எனக் கேட்டார். அதற்கு ஒரு மாணவி, “இங்க பாருங்க அண்ணா..  நாங்க அமைதியான முறையில் நீட்டுக்கு எதிராகவும் அனிதா சாவுக்கு நீதி கேட்டும் போராட்டம் பண்ணோம். ஆனா இந்த போலீசு எங்களை அடிச்சு இழுத்துட்டு போறாங்க. அங்க பாருங்க அண்ணா கை கட்டி வேடிக்கை பாத்துட்டு இருக்காங்க அவங்கதான் எங்க எச்.எம், அவங்கெல்லாம் ஒரு டீச்சரா..ண்ணா. சப்போர்ட் பண்ணலணாலும் பாதுகாக்கலாம்ல… அவங்களே அடிக்க சொல்றாங்க, நாங்க என்ன நாய்களா?”

”முடிய புடிச்சு இழுக்குறாங்க கன்னத்துல அறையுறாங்க எங்க உரிமையைக் கேட்டா அடிப்பாங்களா? சம்பளம் பத்தலணா மட்டும் போராடுவாங்க இதுக்கு வர மாட்டாங்களா? இந்த போலீசுக்கு நீட் தேர்வை வைச்சிருந்தா இவங்க போலீஸ் ஆயிருப்பாங்களா…ண்ணா? அவங்களுக்கும் சேத்துத் தானே நாங்க போராடுறோம். டீச்சரே மெரட்டுறாங்க டீசி குடுத்துருவேன்னு. என்ன பண்ணாலும் நாங்க போராட்டத்த தொடருவோம்.

திங்கக் கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.”

நிருபர் நன்றி கூறி அந்த மாணவியின் பெயர் கேட்டார். அம்மாணவி தனது பெயரைச் சொன்னார் “செங்கொடி”

தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக போராடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தடைவித்த நிலையில், அதை வைத்து போலீசு அடக்குமுறையை ஏவிவரும் நிலையில், அவைகளை தவிடு பொடியாக்கி அடுத்த சுற்று போராட்டத்தை தொடங்கி வைத்துவிட்டனர் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள். நீட் தேர்வை விரட்டும் வரை மாணவர்களின் இந்தப் போராட்டம் ஓயாது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க