privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகௌரி லங்கேஷ் படுகொலையைக் கொண்டாடுபவர்கள் யார் ?

கௌரி லங்கேஷ் படுகொலையைக் கொண்டாடுபவர்கள் யார் ?

-

“ஒரு தேவடியா நாயைப் போலச் செத்திருக்கிறாள்; அவளுடைய கழிவுகள் எல்லாம் அதற்காக அழுது கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் நிகில் டாதிச்.

“ஆக, கம்யூனிஸ்டு கௌரி லங்கேஷ் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்.. வேறென்ன, ஆமென்” என்கிறார் பத்திரிகையாளர் ஜாக்ருதி சுக்லா.

“அவர் விதைத்ததை அறுவடை செய்திருக்கிறார்” என்கிறார் ஆஷிஷ் சிங்.

“கௌரியைப் பற்றித் தெரியாதவர்களுக்காக… அவர் ஒரு இடதுசாரி, நக்சல் அனுதாபி, அரசுக்கு எதிரானவர், இந்துக்களுக்கு எதிரானவர்” என கௌரி லங்கேஷ்வரை அறிமுகம் செய்து வைக்கிறார் ரிதா.

“இந்தியா ஒழிக என்று கோஷம் போட்டவர்களுக்காக கடவுள் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறார்..” என எழுதுகிறார் ஜியோரி.

ஒரு கொலையைக் கொண்டாடும் இந்தக் கல்நெஞ்சக்காரர்கள் அனைவரும் சமூகத்தில் முக்கியமான அந்தஸ்தில் இருப்பவர்கள். முக்கியமாக பாரதிய ஜனதா ஆதரவாளர்கள் – சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியாலேயே பின்தொடரப்படும் அளவுக்கு “செல்வாக்கு” மிகுந்தவர்கள்.

கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பார்ப்பனிய மதவெறிக்கு எதிரான ஒரு குரல் மௌனமாக்கப்பட்டு விட்டது. ஜனநாயகத்திற்கு ஆதரவாக எழுதிய பேனா உடைக்கப்பட்டு விட்டது. கல்புர்கி, பன்சாரே வரிசையில் மக்களின் சுதந்திரத்திற்காய் சிந்தித்துக் கொண்டிருந்தவர் அழித்தொழிக்கப்பட்டு விட்டார். கௌரியைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகளை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டுபிடிக்கலாம்; அல்லது கல்புர்கி, பன்சாரே உள்ளிட்ட கொலை வழக்குகளைப் போல் இவ்வழக்கும் மீளமுடியாத முட்டுச்சந்துக்குள் சிக்குண்டு விட இருக்கும் வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. எனினும், கௌரியின் கொலையால் யாரெல்லாம் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. கௌரி கருத்துத் தளத்தில் செயல்பட்டு வந்தவர்; அவரது மறைவால் அதே தளத்தில் பலனடைந்தவர்கள் இந்துத்துவ கும்பல் தான் என்பதும் வெட்டவெளிச்சமாக உள்ளது. தம்மால் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கும் விவாதங்களுக்கும் தோட்டாக்களால் பதிலளித்த வரலாறும் இந்துத்துவ கும்பலுக்கே உள்ளது.

கொலை நடந்தவுடன் அது குறித்து சமூக வலைத்தளங்களில் வெட்கமின்றிக் குதூகலித்த இந்துத்துவக் கூலி கும்பல், விசாரணை கூட துவங்காத நிலையில் கொலைக்கான பழியை கௌரியின் நண்பர்களின் மீதே சுமத்தத் துணிந்தது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்டுகள் சிலர் சரணடையும் முடிவை எடுத்ததில் கௌரியின் பங்கும் உண்டு என சொல்லப்படுவதை முன் வைத்து மாவோயிஸ்டுகளே அவரைக் கொன்றிருக்கும் வாய்ப்பு உள்ளதா என பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, “எதையும் விசாரணைக்குப் பிறகே உறுதியாகச் சொல்ல முடியும்” என கூறியுள்ளார். இந்த பதிலை அப்படியே திருப்பிப் போட்ட அர்னாபின் ரிபப்ளிக் தொலைக்காட்சி, “மாவோயிஸ்டுகள் தொடர்பு குறித்து விசாரிக்கப்படும்” என அமைச்சர் அறிவித்ததாக செய்தி வெளியிட்டது.

இதற்காகவே காத்திருந்த பாரதிய ஜனதாவின் இணைய கூலி கும்பல், மாவோயிஸ்டுகளைக் குற்றவாளிகளாகவே அறிவித்துக் கொண்டாடினர். தமது பொய்ப்பிரச்சாரத்துக்கு ஆதரவாக டிவிட்டரில் கௌரி லங்கேஷ் “நண்பர்களுக்குள் ஏன் மோதிக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டிருந்ததை “ஆதாரமாக” முன்வைத்தனர். உண்மையில் சில நாட்களுக்கு முன் லாலுபிரசாதின் பாட்னா பொதுகூட்ட புகைப்படம் ஒன்றை கௌரி லங்கேஷ் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படம் லாலு கட்சியினரால் போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டதென்பதை அவரது நண்பர்கள் சுட்டிக்காட்டி “நாமே பொய் பிரச்சாரங்களுக்கு பலியாகலாமா?” என வாதித்து வந்தனர். அந்த உரையாடலின் தொடர்ச்சியாகவே “நண்பர்களுக்கு மோதல் வேண்டாமென” கௌரி தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, பாரதிய ஜனதாவுடன் தொடர்பில் இருப்பவரும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவருமான கௌரி லங்கேசின் சகோதரரைக் கொண்டே நக்சல்பாரிகளால் தனது சகோதரிக்கு அச்சுருத்தல் இருந்ததாக அறிவிக்கச் செய்தனர். அந்த அறிவிப்பைத் தூக்கிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஓரிரு நாட்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிய இந்துத்துவ கும்பல், விசாரணையை முடித்து தூக்கு மேடையையே தயாரித்து விட்டனர். எனினும், கௌரியின் சகோதரர் அவ்வாறு பேசியதற்கு இரண்டு நாட்கள் கழித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது சகோதரி மிகத் தெளிவாக கௌரிக்கு இடதுசாரிகளிடமிருந்து எந்த அச்சுறுத்தலும் வந்ததில்லை எனத் தெரிவித்தார் – அதே பத்திரிகையாளர் சந்திப்பில் கௌரியின் சகோதரரும் அமைதியாக அமர்ந்திருந்தார். மேலும், தனது சகோதரன் தன்னுடைய கொள்கைக்கு விரோதமாக இந்துத்துவ முகாமுடன் குலாவிக் கொண்டிருப்பதை கௌரி தனிப்பட்ட முறையில் கண்டித்ததும், அவரோடுடனான தொடர்பை முறித்துக் கொண்டது குறித்தும்  அடுத்தடுத்து தகவல்கள் வெளியாயின.

கௌரியின் நண்பர்கள் மேல் கொலைப்பழியைச் சுமத்தும் முயற்சியில் மண்ணைக் கவ்விய இந்துத்துவக் கும்பல் அடுத்து அவரது நடத்தை மோசமானது எனச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சி.பி.ஐ (எம்.எல் லிபரேசன்) கட்சியைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணன் நான்கு வருடங்களுக்கு முன் தாம்பத்திய வல்லுறவுக்கு (Marital Rape) எதிராக தெரிவித்த கருத்துக்களைத் திரித்த இந்துத்துவ கும்பல் (முக்கியமாக சுப்பிரமணிய சுவாமி), கவிதா சுதந்திர பாலுறவை (Free Sex) ஆதரிப்பதாக பிரச்சாரம் செய்தது. அதற்குப் பதிலளித்த கவிதாவும் அவரது தாயாரும், சுதந்திரமான – விருப்பபூர்வமான (Consent) பாலுறவே சரியானது என்று தெரிவித்தனர் – அந்த விவாதம் நடந்த போது கவிதாவுக்கு கௌரி லங்கேஷ் ஆதரவு தெரிவித்திருந்தார்.

கௌரி லங்கேஷ் நான்காண்டுகளுக்கு முன் தெரிவித்திருந்த கருத்துக்களை வெட்டி ஒட்டிய இந்துத்துவ இணையக் கூலிப்படையினர், கௌரி லங்கேஷ் நடத்தை கெட்டவரென்பது போல பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கௌரி லங்கேஷ் கொலையில் விசாரணை முடிவுறாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இந்துத்துவ கும்பல் அடைந்த மகிழ்ச்சி, பதற்றம் போன்றவைகளைக் கவனித்தாலே கொலையாளிகள் யாராக இருக்க முடியும் என்பதை எந்தச் சிரமமும் இன்றியும் புரிந்து கொள்ள முடியும். மேலும், 2014 -ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வென்று பாரதிய ஜனதா அதிகாரத்தில் அமர்ந்ததில் இருந்தே, ஒருவிதமான இந்து பயங்கரவாதச் சூழலைப் பராமரித்து வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலம் சகரன்பூரில் பொய்யான காரணங்களை முன்னிட்டு இசுலாமியர்களுக்கு எதிராகத் தூண்டப்பட்ட கலவரம், தொடர்ச்சியான இடைவெளியில் நடந்து வரும் பசு பயங்கரவாத தாக்குதல்கள், லவ் ஜிகாத் என அரசியல் கொலைகள் நடப்பதற்கான ஒரு சூழலை திட்டமிட்டு பராமரித்து வருகிறது காவி கும்பல். இந்த ஒட்டுமொத்த கொலைச்சூழலில் தான் கௌரி லங்கேஷ் போன்ற இடது சாரி அறிவுத்துறையினரை அழித்தொழிக்கின்றனர்.

முற்போக்கு ஜனநாயக சக்திகள் தனிநபர்களின் இழப்புகளுக்கு எதிராகப் போராடுவதோடு, இதற்குக் காரணமான இந்துத்துவ பயங்கரவாதச் சூழலுக்கு எதிரான போராட்டங்களையும் ஒருசேர முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. 

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடி வரும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி