ந்தை பெரியாரின் 139 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு “காவிக் கூட்டத்தை பெரியாரின் தடி கொண்டு விரட்டுவோம்!” என்ற தலைப்பில் திருப்பூர் பகுதி மக்கள் அதிகாரம் தோழர்களால் கடந்த 17.09.2017 அன்று மாலை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

தலைமை :
தோழர். பிரகாஷ்

வரவேற்புரை  :
தோழர். ஆனந்தராஜ்

பேச்சாளர்கள் :

தோழர். பேச்சிமுத்து – கல்வியில் காவி பயங்கரவாதம்
தோழர். முத்தமிழ் செல்வி – பாடல், நீட் பற்றி
தோழர். வசந்தி – கவிதை
தோழர். பிரணவ் (6 வயது சிறுவன்) – கதை
தோழர். பாண்டியன் – பெரியார் ஒரு அறிமுகம்
தோழர். ராஜமாணிக்கம் – பெரியார் ஏன் தேவை
தோழர். தருமர் – எல்லாம் காவிமயம் பெரியார் தடி கொண்டு மக்கள் அதிகாரம் படைப்போம்.

தோழர். பிரகாஷ் அவர்களது தலைமையுரையில் தமிழகம் எப்படி பெரியாரை தவிர்த்து இயங்க முடியாது என்பது பற்றியும், வடமாநிலங்களில் சாமியார்கள் போடும் கிரிமினல் ஆட்டங்கள், சிறை தண்டனை கிடைத்தால் ஏற்படும் கலவரம் பற்றியும் – தமிழகத்தில் சாமியார்கள் கைது நடக்கும் போது மக்கள் அச்சாமியார்களை எள்ளி நகையாடுவதையும் குறிப்பிட்டு பேசினார். தற்போதுள்ள சூழலில் பெரியார் விட்டுச்சென்ற கடவுள் மறுப்பு கொள்கையை அதிகமாக செயல்படுத்த வேண்டியதின் அவசியம் பற்றி பேசினார்.

தோழர். ஆனந்தராஜ் அவரது வரவேற்புரையில் பெரியார் மக்கள் பணியில் 94 வயது வரை எவ்வாறு உணர்வுபூர்வமாக ஈடுபட்டார்  என்பதையும், அதுபோல இளைஞர்கள் வரவேண்டும் என்று அறை கூவி அழைத்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தோழர். பேச்சிமுத்து கல்வியில் காவிமயம் எப்படி நமது கல்வியை தரம்கெட்டுப் போகச் செய்தது என்பது பற்றியும் – குரு உத்சவ், சமஸ்கிருத வார விழா, வந்தேமாதரம், ABVP , உயர்கல்வி நிறுவனங்களிலும், எதிர் கருத்து கூறும் பத்திரிக்கையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவது, வன்முறைகள் மூலம் கல்வியை அபகரிக்கும் வேலையை எப்படி காவிக்கும்பல் செயல்படுத்துகிறது என்பதை விளக்கினார்.

அவருக்கடுத்தபடியாக பேசிய தோழர். பாண்டியன் பெரியாரின் சிறுவயது, படிப்பு, தொழில், காசி – ரஷ்யா சென்று வந்தது நாத்திகம், திராவிடம், தனித்தமிழ்நாடு கோரிக்கை என தன் வாழ்நாள் முழுவதும் செய்த பணிகளை விளக்கிக் கூறினார்.

அதன் பின்னர் பேசிய தோழர். ராஜமாணிக்கம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் இறைவன் வழிகாட்டுவான், நமது பிறப்பால் உருவான சாதி இழிவு, சமூக ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் கடவுள் சித்தம் என இருக்காமல் கடவுளை மறந்து, பார்ப்பனிய இந்து மதத்தை புறக்கணிக்காமல் மக்களுக்கு விடிவு இல்லை என்பதையும். பிள்ளையார் சிலை உடைப்பு, கருவறை நுழைவுப் போராட்டம், அனைவரும் அர்ச்சகராக வரவேண்டும் என்ற கோரிக்கை என பலவகையான போராட்டங்களையும் நினைவு கூறினார்.

இறுதியாக பேசிய தோழர். தருமர், பெரியார் என்பவர் போர்க்குணமிக்க போராட்டங்கள் மூலம் ஆரிய, பார்பனத் திமிரை அடக்க முடியும் என்பதற்கு கண்கூடாக உள்ள ஆதாரம் எனவும், அதனைப் பின்பற்றாமல் தி.க,  தி.மு.க. – என இன்றைய அரசியல்வாதிகள் பெயரளவிலான போராட்டங்கள் மூலம் தேர்தல் ஓட்டுக்காக சமரசவாதிகளாக மாறிய போக்கையும். அதனைப் பயன்படுத்தி MGR, ஜெயலலிதா போன்ற பாசிஸ்டு கிரிமினல்கள் எப்படி ஆட்சி செய்யமுடிந்தது என்பது பற்றியும், தமிழ் தேசியவாதிகள், தலித் அரசியல் பேசும் அரசியல்வாதிகள் எப்படி பார்ப்பன அடிவருடிகளாக மாறினர் என்பது பற்றியும் பேசினார்.

தற்போதைய சூழலில் பெரியாரை நமக்கு இந்து மதவெறியர்களை எதிர்கொள்ள ஒரு உந்து சக்தியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதையும். மேலும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் இந்த மோடி அரசினை வீழ்த்தவும் மக்களே அதிகாரத்தை கையிலெடுத்துப் போராட வேண்டும் என அறைகூவும் விதமாக பேசினார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி