மனில் நடைபெற்று வரும் போரில் சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்கள் விற்றதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுத நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி இலாபம் ஈட்டியிருப்பதாக வார் சைல்டு (War Child) என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

சவூதித் தலைமையிலான கூட்டணி, ஏமனில் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து பி.ஏ.இ. (BAE) மற்றும் இரேய்தியான் (Raytheon) உள்ளிட்ட இங்கிலாந்தின் ஆயுத நிறுவனங்கள் சவூதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 51 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் (8 பில்லியன் டாலர்) அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளன. அதன் மூலம் தோராயமாக 5,000 கோடி ரூபாய் (775 மில்லியன் டாலர்) இலாபம் அடைந்துள்ளதாக வார் சைல்ட் அறிக்கை கூறுகிறது.

ஆனால் இதற்கு வரிவிதிப்பாக இங்கிலாந்தின் அரசு பெற்றது வெறும் 257 கோடி ரூபாய் (40 மில்லியன் டாலர்) மட்டுமே. ஆயிரக்கணக்கானோரைக் கொன்றும், காயப்படுத்தியும், பஞ்சத்திலும் தள்ளிய இந்த வன்முறை வர்த்தகத்தில் இங்கிலாந்திற்கு கிடைத்த வருவாய் மிகவும் சொற்பமே என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏமனில் நடந்துவரும் போரில் இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் முப்பது லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளனர் ( படம் : நன்றி – அல்ஜசீரா )

ஈரானிய ஆதரவு பெற்ற ஹெளதிப் போராளிகளுக்கு எதிராக ஏமன் அரசை ஆதரிப்பதற்காக 2015 மார்ச் மாதம் சவூதி தலைமையிலான ஒரு இராணுவக் கூட்டணி அமைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த மோதல்களில் மட்டும் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் படுகொலையானதுடன் 40,000 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

அன்றிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் சவூதி அரேபியா ஏமனில் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பல்வேறு போர்க்குற்றங்கள் மற்றும் பிற உரிமை மீறல்கள் அங்கு நடைபெற்றுவருகின்றன.

பி.ஏ.இ நிறுவனத்தின் போர் விமானங்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள் உள்ளிட்ட 30,000 கோடி ரூபாய்க்கும் (4.7 பில்லியன் டாலர்) அதிகமான ஆயுதங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் சவூதிக்கு விற்பனை செய்ய இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அரசின் கொள்கையானது நிதி ரீதியாக பொருத்தமற்றது என்றும் அது பணத்திற்கு உரிய மதிப்பும் அல்ல என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஆயுத விற்பனை மூலம் இங்கிலாந்தில் இயங்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்கள் மட்டுமே கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை விற்றதிலிருந்து 2016 ஆண்டில் வெறும் 115 கோடி ரூபாய் (18 மில்லியன் டாலர்) மட்டுமே வரியாக இங்கிலாந்திற்கு கிடைத்திருக்கிறது. அதே சமயத்தில் ஏமனுக்கு மனிதாபிமான உதவி என்ற பெயரில் 1,201 கோடி ரூபாய் (187 மில்லியன் டாலர்) செலவாகிறது.

ஆனால் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல சவூதிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்துவிட்டு மனிதாபிமானம் பேசுகிறது இங்கிலாந்து. அதுவும் ஏமனின் அப்பாவிப் பொதுமக்களை கொன்ற பாவத்தை தீர்க்க இங்கிலாந்து தன்னுடைய குடிமக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கிறது.

இந்த ஆயுத வர்த்தகமானது, ஏமனின் குழந்தைகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மனிதாபிமான உதவிகளைப் பெறுவதன் மீது எதிர்வினை ஆற்றுகிறது. இது சர்வதேச மேம்பாட்டுத்துறையின் (Department for International Development) நிதி உதவிக்கான சரியான பலனைப் பெறுவது என்ற கொள்கைக்கு எதிராகும் என்றும் அந்த அறிக்கைக் கூறுகிறது.

சவூதிக்கு ஆயுதம் வழங்கக்கூடாது என்று ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரச்சாரம் (Campaign Against Arms Trade) என்ற இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் வழக்குத் தொடுத்திருந்தது. ஆனால் ஜூலையில் இங்கிலாந்து நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடிச்செய்துவிட்டது. ஏமன் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து பரவலான எதிர்ப்பிருந்த போதிலும், சவூதிக்கு ஆயுதம் கொடுப்பதற்கு நீதிமன்றம் தொடர்ந்து ஒப்புதல் அளித்துக் கொண்டுதான் வருகிறது.

சான்றாக தீர்ப்பிற்குப் பிறகு, 2062 கோடி ரூபாய் மதிப்பிலான(321 மில்லியன் டாலர்) ஆயுதங்களை சவூதிக்கு விற்பனைச் செய்ய இங்கிலாந்து ஒப்புதல் கொடுத்துள்ளது. ஏமனின் தலைநகரான சானாவில் நடைபெற்ற ஒரு இறுதிச்சடங்கில் சவூதிக்கூட்டணியின் வான்வெளித் தாக்குதலால் 140 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு ஆறு மாதம் கூட இன்னும் முடியவில்லை.

ஏமனின் பொதுமக்களைப் படுகொலைச் செய்வதாக சவூதிக்கூட்டணி மீது பன்முறை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கடைகள் மீது செவ்வாயன்று வான்வெளித் தாக்குதலை வேண்டுமென்றே சவூதிக்கூட்டணி நடத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம்(Human Rights Watch) குற்றஞ்சாட்டியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, இதன் எதிர்வினையாக, சுகாதாரப் பிரச்சினைகளிலும் ஏமன் மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் மாதத்திலிருந்து 2,000 -க்கும் அதிகமானோர் காலராவினால் இறந்திருக்கிறார்கள். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 6,00,000 பேருக்கும் அதிகமானோர் தொற்றுநோயினால் பாதிக்கப்படுவார்கள் என்று புள்ளிவிரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மனிதாபிமான உதவிகளும் உணவுப்பொருட்களும் கொண்டு செல்வதை சவூதி தடுத்து விட்டதாக உதவிக்குழுக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றன.

ஹௌதிக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்கவே முயற்சி செய்வதாக சவூதியும் அதன் கூட்டணி நாடுகளும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் இலட்சக்கணக்கான ஏமன் மக்களை இந்த நடவடிக்கைகள் துன்பங்களில் ஆழ்த்தியுள்ளதாக உதவிக் குழுக்கள் கூறுகின்றன.

ஏமன் மக்கள் படுகொலைச் செய்யப்படுவதற்கும், அவர்கள் அகதிகளாக வெளியேறுவதற்கும், மத்தியத் தரைக்கடலில் புதையுருவதற்கும் ஏகாதிபத்திய அரசின் கொள்கைகளே காரணம் ஆகும். அதைத் தணிப்பதற்கு இங்கிலாந்து மக்களின் வரிப்பணத்தை மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் அதே கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுகின்றன.

ஒருபுறம் சவூதி கூட்டணிக்கு எதிராக ஏமன் மக்கள் போராடுவதும் மறுபுறம் அதற்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் இங்கிலாந்து கார்ப்பரேட் முதலாளித்துவ அரசை எதிர்த்து அதன் சொந்த மக்களே போராடுவதும் ஆகிய இருமுனைத்தாக்குதல்கள் மட்டுமே இதற்குத் தீர்வாக அமைய முடியும்.

மேலும் :

_____________

போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி