privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தீண்டாமையின் தலைநகரம் - மோடியின் குஜராத் !

தீண்டாமையின் தலைநகரம் – மோடியின் குஜராத் !

-

“நீங்கள் பட்டபடிப்பு படித்தவர்; கல்லூரியில் ஆசிரியர் பதவி வகிப்பவர்; பதினாறு நூல்களுக்கு ஆசிரியர்; பத்திரிக்கையாளராக பணி புரிந்தவர்; சமூக செயற்பாட்டாளர் என்பதால் மட்டும், சமூகத்தில் நீங்கள் ஒரு தலித் என்ற உண்மையைக் கடந்து சென்று விட முடியாது” என வருத்தத்துடன் கூறுகிறார் அகமதாபாத்தைச் சேர்ந்த சுனில் ஜாதவ்.

கடந்த 2017, பிப்ரவரி மாதம் சுனில் ஜாதவ் பணிபுரியும் கல்லூரியில் அவரோடு பேசிக் கொண்டிருந்த மாணவரை ஒரு ஆதிக்க சாதி ஆசிரியர் அழைத்து, ”ஜாதவின் பேச்சைக் கேட்டால், அவர் உன்னைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விடுவார், அவரிடம் பேசாதே” எனக் கூறியுள்ளார். காரணம் சுனில் ஜாதவ் ஒரு தலித்.

குஜராத்தின் தீண்டாமை வெறிக்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு. குஜராத் தீண்டாமை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் “நவ்சர்ஜான் டிரஸ்ட்” என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அளிக்கும் தகவல்கள் நம்மை அதிர்ச்சியுறச் செய்கின்றன.

கடந்த 2007 முதல் 2010 -ம் ஆண்டு வரை சுமார் 1,489 கிராமங்களில் தலித்துகளிடம் பணியாற்றி தீண்டாமையைப் பற்றிய கணக்கெடுப்பை மேற்கொண்டது நவ்சர்ஜான் ட்ரஸ்ட். இடையில் ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் தீண்டாமைக்கு எதிரான தனது பணியை தொடங்கியுள்ளது. இவ்வமைப்பின் தலைவரான மார்ட்டின் மேக்வான் இது குறித்து கூறுகையில், “குஜராத்தில் ஆதிக்க சாதிக்காரர்கள் தலித் மக்களிடம் 98 வகையான தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள் என்றும் தலித்துக்களிடம் உள்ள 32 வகையான உட்சாதி பிரிவுகளுக்குள், 99 வகையான தீண்டாமைப் பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப் படுகின்றன” என்கிறார்.

மெஹ்சானாவில் உள்ள ரந்தேஜ் தாலுகாவைச் சேர்ந்த பெச்சராஜி என்னும் கிராமத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க ஊர் பொதுக் கிணற்றிலிருந்து சிறிது தூரம் தள்ளி உள்ள தனித்தொட்டியை தான் பயன்படுத்த வேண்டும்.

இது பார்ப்பனிய இந்துமதம் உருவாக்கி வைத்திருக்கும் சாதியப் படிநிலையின் அப்பட்டமான சான்று. தலை முதல் வேர் வரையில் சாதியப் படிநிலைகளை வகுத்து அதனை நிறுவனமயமாக்கி இருக்கிறது இந்து மதம்.

குஜராத்தின் கிராமப்புறங்களில் நவ்சர்ஜான் டிரஸ்ட் எடுத்த கணக்கெடுப்பின் படி 96.8% உயர் சாதிக்காரர்கள் தனிக்குவளை முறையை இன்றும் பின்பற்றுகிறார்கள். கல்லூரி ஆசிரியர் சுனில் ஜாதவ் இது குறித்து தனது இளமைக்கால நினைவுகளை கூறுகையில் “நான் சிறுவயதில் சவுராஸ்டிரா பகுதியில் வளர்ந்த நாட்களில் வயலில் வேலை செய்யும் எனது பாட்டிக்கு சிறு உதவிகளை செய்வேன். உணவு வேலையின் போது நாங்கள் (தலித்துகள்) மட்டும் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தை தேடி எடுத்து அதைக் கழுவி சுத்தம் செய்த பின்னர், உணவு பரிமாறும் நபரிடமிருந்து விலகி ஓரமாக நின்று பெற்றுக் கொண்டு உண்ண வேண்டும்” என்கிறார். தனிக்குவளை முறை இன்றளவும் குஜராத்தில் இயல்பான பழக்கமாக நீடித்து வருகிறது.

மெஹ்சானாவில் உள்ள ரந்தேஜ் தாலுகாவைச் சேர்ந்த பெச்சராஜி என்னும் கிராமத்தில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க ஊர் பொதுக் கிணற்றிலிருந்து சிறிது தூரம் தள்ளி உள்ள தனித்தொட்டியை தான் பயன்படுத்த வேண்டும் என்பதே இன்று வரை அங்குள்ள நடைமுறை. காரணம் தலித் மக்கள் கைப்பட்ட நீர் தவறுதலாக பொதுக்கிணற்றில் விழுந்தால் அந்த தண்ணீர் முழுதும் தீட்டாகிவிடுமாம்.

“பல வருடங்களாக இவ்வகையான தீண்டாமை கொடுமைகள் இங்கு சாதரணமாக நடக்கும் ஒரு நிகழ்வாய் உள்ளன”, என்கிறார் அந்த ஊரை சேர்ந்த கௌசிக் பர்மார்.

குஜராத்தில் அனைத்து கிராமங்களிலும் தலித்துகளுக்குத் தனிச்சுடுகாடு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அரசாங்கத்தை பொருத்தவரையில் தீண்டாமை இல்லை என்று கூறுகிறது. ஆனால் அதன் உள்ளூர் நிர்வாகமோ, தலித்களுக்கு தனிச் சுடுகாடு ஒதுக்க வேண்டும் என்று கூறுகிறது.

“நாங்கள் எங்கள் இறப்பிலும் தீண்டத்தகாதவர்கள் ஆகிறோம்”, என வேதனையுடன் கூறுகிறார், சமூக செயற்பாட்டாளரான நடுபாய் பார்மர்.

முலி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திர நகரில் உள்ள ராணிபட் என்னும் கிராமத்தில் வால்மீகி மக்களுக்கு பொது விழாக்களில் அமர இருக்கைக்கு பதிலாக கோணிப்பைகள் வழங்கப்படுகின்றன. வால்மீகி மக்கள் தலித்களில் உள்ள 32 உட்பிரிவுகளில் கடைசி பிரிவினராவர். தலித்துகள் இது குறித்துக் கூறுகையில் “எங்களிடம் உயர்சாதிக்காரர்கள் கடைபிடிக்கும் தீண்டாமை பழக்கவழக்கங்களை நாங்கள் வால்மீகி மக்களிடம் கடைபிடிக்கிறோம்“ என்கின்றனர். அந்த அளவிற்கு தீண்டாமை குஜராத்தில் படிநிலையாக நீடிக்கிறது.

கெரலு தாலுக்காவில் உள்ள நண்டோலி கிராமத்தின் தலைவராக 2006 முதல் 2011 வரை பாபுபாய் சென்மா இருந்துள்ளார். அவர் தலைவராக இருந்தபோதும் ஒரு வாக்குவாதத்தின் போது ஆதிக்கசாதிக்காரன் ஒருவனால் சென்மா தாக்கப்பட்டார். அவர் இதற்காக நீதிமன்றம் வரை சென்றும் எந்த பலனும் கிட்டவில்லை. நண்டோலியைத் தவிர பிற கிராமங்களிலோ தலித் தலைவர்கள் பொது விழாக்களுக்கு அனுமதிக்கப்படுவது கூட இல்லை. அவர்களுக்குப் பதிலாக ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த துணைத்தலைவர் உள்ளிட்ட மற்ற பதவி வகிப்போரை அழைத்து விழா நடத்துகிறார்கள்.

நவ்சர்ஜான் எடுத்த கணக்கெடுப்பின் படி 53.8 சதவீத அரசு ஆரம்பப் பள்ளிகளில் உள்ள தலித் குழந்தைகளுக்கு தனி இருக்கை, உணவு வேளையின் போதும்,  கழிப்பறைக்குச் செல்லும் போதும் தனிவரிசை என பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. பள்ளிக் கல்வியில் இருந்து வெளியேறும் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், வால்மீகி சாதியைச் சேர்ந்த குழந்தைகளே.

இது குறித்து நவ்சர்ஜானின் தலைவர் மேக்வான் கூறுகையில் “தலித் குழந்தைகள் பள்ளிகளில் காலையில் நடக்கும் பொதுநிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை”, என்கிறார்.

அதே போல குஜராத்தில் 90% கோயில்களில் வளாகத்திற்குள் செல்ல தலித்துகள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறுகிறார் மேக்வான். “நாங்கள் பார்வையிட்டதில் 92.3% கோயில்களில் தலித்துகள் பிரசாதம் வாங்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை” என்கிறார். இது கோயில்களுக்கு மட்டும் பொருந்தப்படும் விஷயமல்ல, பல குஜராத் கிராமங்களில் நவராத்திரியன்று தலித்துகள் பால் வியாபாரியிடமிருந்து பால் வாங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது இயல்பாக தொடர்ந்து வரும் பழக்கமாக உள்ளது.

இன்னும் சில கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் முடி கூட வெட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. கிராமப்புறங்களில் திருவிழா சமயங்களில் உயர்ஜாதிக்கார பெண்கள் பர்தா அணிவார்கள். ஆனால் தலித் பெண்களுக்கு பர்தா அணிய அனுமதி கிடையாது.

வளர்ச்சியின் அடையாளமாக ஊடகங்களாலும், மோடி பக்தர்களாலும் வியந்தோதப்பட்ட குஜராத்தின் அசல் முகம் இது தான். இதுவே தான் ஆர்.எஸ்.எஸ். கூறும் இந்துராஷ்டிரத்தின் முகமும்.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி