privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கருப்புப் பணத்தின் ஷா- இன் - ஷா : அமித் ஷா மற்றும் ஜெய் ஷா

கருப்புப் பணத்தின் ஷா- இன் – ஷா : அமித் ஷா மற்றும் ஜெய் ஷா

-

வானதி சீனிவாசன், ’கே.டி’.ராகவன் உள்ளிட்ட பாஜக ‘யோக்கியர்களின்’ முறைகேடுகள் குறித்து  வினவு தளத்தில் வெளி வந்த கட்டுரைகளை வாசகர்கள் படித்திருக்கலாம். அதில் வானதி சீனிவாசன் குறித்த கட்டுரைக்கான தரவுகளின் மூல ஆதாரமாக விளங்கியவர் பாஜகவைச் சேர்ந்த பாலசுப்பிரமணிய ஆதித்தன். அவர் இது குறித்து அம்பலப்படுத்தி எழுதிய அனைத்து முகநூல் பதிவுகளின் முடிவிலும் தவறாமல் ஒன்றை எழுதியிருப்பார். ”இந்த விசயம் (மோசடி) குறித்து அமித் ஷாஜி மற்றும் மோடிஜியிடம் ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன், விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தனது நம்பிக்கையை தெரிவித்திருப்பார்.

என்னதான் ஆதாரங்களை அள்ளிக் கொடுத்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது அமித் ஷாஜி நடவடிக்கை எடுக்கவில்லையே என பாலசுப்பிரமணிய ஆதித்யனே இதுநாள்வரை குழம்பியிருக்கலாம். அவரது முகநூல் பதிவுகளை நம்பி அமித் ஷாவின் நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருந்த சில பாஜக ‘அப்பாவி’களும் கூட நடவடிக்கை எடுக்கப்படாததை எண்ணி சிந்தித்திருக்கலாம். அந்தக் குழப்பத்திற்கு விடை சொல்லியிருக்கிறார் ’தி வயர்’ இணையதளத்தின் பத்திரிக்கையாளர் ரோஹினி சிங்.

’தி வயர்’ இணைதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் பத்திரிக்கையாளர் ரோஹினி சிங்

ரோஹினி சிங் ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளர். கடந்த 2011-ம் ஆண்டில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, சோனியாகாந்தியின் மருமகனான ராபர்ட் வதோரா, டி.எல்.எஃப். நிறுவனத்துடன் இணைந்து செய்த ரியல் எஸ்டேட் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்தார். எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழில் பணியாற்றிய ரோஹினி சிங் , தற்போது ’தி வயர்’ இணையதளத்திற்கு கட்டுரைகள் மற்றும் புலனாய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார்.

ரோஹினி சிங் சிலநாட்களுக்கு முன்பு ”தி கோல்டன் டச் ஆஃப் ஜெய் அமித் ஷா” என்ற புலனாய்வுக்கட்டுரை ஒன்றை ‘தி வயர்’ இணையதளத்திற்காக எழுதியுள்ளார். இந்தக் கட்டுரை, மோடி பிரதமராக ஆட்சியில் அமர்ந்த பிறகு, அமித் ஷாவின் மகனான ஜெய் அமித்பாய் ஷா என்ற ஜெய் ஷா செய்யும் தொழில்களின் ஆண்டு வருமானம் அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருப்பதோடு, அத்தொழில்களில் சம்பந்தப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகங்களையும், முறைகேடுகளையும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும் சுட்டிக் காட்டியுள்ளது. ’யோக்கியர்களாகத்’ தங்களை சிங்காரித்துக் கொள்ளும் பாஜக கிரிமினல்களின் பெரும் வலைப்பின்னலில் ஒரு சிறு பகுதியை, அக்கட்டுரை தோலுறித்துக் காட்டியுள்ளது.

ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் பெயர் ”டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்”. இந்நிறுவனத்தில் ஜெய் ஷாவுடன் அவரது தாய் சோனல்ஷா மற்றும் அவரது நண்பர் ஜிதேந்திரஷா ஆகியோர் முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர்.

நிறுவனங்களின் பதிவாளர் (Registrar of Companies) அலுவலகத்தில் தாக்கல் செய்த கணக்குகளின் படியே டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனம், 2012-2013ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் ரூ.6230 நட்டம் என்றும், 2013-2014-ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் ரூ.1724 நட்டம் என்றும் கணக்குக் காட்டி இருந்தது. மோடி ஆட்சி அமைத்த 2014 – 2015-ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் மொத்த வருமானம் ரூ.50,000 என்றும் அதில் இலாபம் ரூ.18,728 என்றும் கணக்குக் காட்டி இருந்தது. அதிலும் கடந்த 2015- 2016ம் நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கையில் அந்நிறுவனத்தின் மொத்த வருமானம் திடீரென ரூ.80.5 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆண்டுக்கு ரூ. 50,000க்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு சிறு வணிகர், திடீரென ’ஆடி’ காரிலும் ‘பென்ஸ்’ காரிலும் வலம் வந்தால் என்ன நினைக்க முடியும்? சினிமாவில் ஒரே பாடலில் நாயகன் ‘உழைத்து’ப் பணக்காரன் ஆகிவிடுவது போல், எதார்த்தத்தில் ஒரே ஆண்டில் உழைத்துக் கோடீசுவரன் ஆகிவிட முடியுமா என்ன?

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் கதையும் அதேதான். ஒரே ஆண்டில் அவரது நிறுவனத்தின் வருமானம் ஒரு மடங்கு, இரு மடங்கு அல்ல, 16,000 மடங்கு உயர்ந்திருக்கிறது. இது நேர்மையான வழியில் சாத்தியமா?

சம்பந்தமில்லாத இந்த வளர்ச்சி விகிதத்தை வைத்தே, இது சாத்தியமற்றது என்றும் கண்டிப்பாக முறைகேடுகள் நடந்திருக்கும் என்றும் ஒரே வார்த்தையில் கூறிவிடலாம். ஆனால் பத்திரிக்கையாளர் ரோஹினி சிங் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இந்த முறைகேடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்தையும் அம்பலப்படுத்தி உள்ளார்.

ஜெய் ஷா – மோடி – அமித் ஷா

டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை, விவசாய விளைபொருட்கள் விற்பனை நிறுவனமாகப் பதிவு செய்துள்ளார் ஜெய் ஷா. கடந்த 2015- 2106-ம் நிதியாண்டில் இந்நிறுவனம் கே.ஐ.எஃப்.எஸ். என்ற வங்கியல்லாத நிதி நிறுவனத்திடமிருந்து(Non Banking Financial Institution) ரூ.15.78 கோடி கடன் பெற்றிருக்கிறது. இதனை ஜெய் ஷாவின் நிறுவனம் தனது ஆண்டுக் கணக்கு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கே.ஐ.எஃப்.எஸ். நிறுவனம் தனது ஆண்டுக்கணக்கு அறிக்கையில் ஜெய் ஷாவின் நிறுவனத்திற்குக் கொடுத்த கடனைக் கணக்கிலேயே காட்டவில்லை.

”சட்டப்பூர்வமாக இயங்கும் ஒரு நிறுவனத்திற்குக் கடன் கொடுக்கும் போது அதனைக் கணக்கில் காட்டாமல் இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என்ற கேள்விக்குப் பதில் பெற கே.ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தின் பின்னணியைச் சற்று பார்க்க வேண்டும். இந்த கே.ஐ.எஃப்.எஸ் நிறுவனம் குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கந்த்வாலா குழும நிறுவனங்களுள் ஒன்று.

இந்நிறுவனத்தை ராஜேஷ் கந்த்வாலா என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் வட்டிக்கு கடன் வழங்குதல், வீட்டுமனை கடன் வழங்குதல், பங்குச் சந்தை வணிகத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட நிதி சார்ந்த பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. ராஜேஷ் கந்த்வாலாவின் மகளை, பாஜக எம்.பி.யும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – குஜராத் பிரிவின் தலைவருமான, பரிமள் நத்வானியின் மகன் திருமணம் செய்துள்ளார். அதாவது பரிமள் நத்வானியும், ராஜேஷ் கந்த்வாலாவும் சம்பந்திகள். கடந்த 2014ம் ஆண்டு மேல்சபைக்கு ஜார்கண்ட் மாநில பாஜகவினரால் பரிமள் நத்வானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரும் தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும், சுருக்கமாகச் சொல்லப் போனால் விஜய் மல்லையாவைப் போல் இருந்து வருகிறார்.

பரிமள் நத்வானி – ராஜேஷ் கந்த்வாலா குடும்பத்தினர்

ஜெய் ஷாவின் நிறுவனத்திற்கு ’காப்பு அற்ற கடனாக’ (Unsecured Loan) ரூ.15.78 கோடி சர்வ சாதாரணமாக ”கூட்டு நிறுவனங்களுக்கு இடையிலான வைப்புத்தொகையாக” (Inter Corporate Deposits) கணக்கில் காட்டாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, கந்த்வாலா நிறுவனத்திடம் (கே.ஐ.எஃப்.எஸ்) ’தி வயர்’ இணையதளம், ”ஜெய் ஷாவிற்குக் கொடுக்கப்பட்ட ரூ.15.78 கோடி கடன் தொகை கணக்கில் காட்டப்படாதது ஏன்?” எனக் கேட்டதற்கு இதுவரை அவர்கள் பதிலளிக்கவில்லை.

2015-2016-ம் ஆண்டிற்கான வருமானமான ரூ.80.5 கோடியில், 95 சதவீதத் தொகை, சரக்குகள் விற்பனை மூலம் கிடைத்ததாகக் கணக்குக் காட்டியுள்ளார் ஜெய் ஷா. அதில் ரூ.51 கோடி வருமானம் வெளிநாட்டிற்குப் பொருளை விற்பனை செய்ததனால் கிடைத்த வருமானம் என கணக்குக் காட்டியுள்ளார். அதற்கு முந்தைய ஆண்டு ஒரு ரூபாய் கூட வெளிநாட்டிலிருந்து வருமானம் ஈட்டாத டெம்பிள் எண்டர்பிரைசஸ் ஒரே ஆண்டில் ரூ.51 கோடிக்கு வெளிநாட்டிலிருந்து வருமானம் ஈட்டியிருக்கிறது.

ஜெய் ஷா, 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம், டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.1.4 கோடி நட்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி இந்நிறுவனத்தின் அனைத்து வியாபார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார். குறுகிய காலத்தில் ரூ.80 கோடி வருமானம் ஈட்டித் தந்த ஒரு நிறுவனத்தை யாராவது ஊத்தி மூடுவார்களா என்ன?

கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கடனாகப் பெற்றது, ஒரே ஆண்டில் திடீரென அதிகரித்த ரூ.80.5 கோடி வருமானம், அதிலும் ரூ.51 கோடி வெளிநாட்டில் இருந்து வந்தது, வேலை முடிந்ததும் அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது ஆகிய நடவடிக்கைகள், ஜெய் ஷா – ராஜேஷ் கந்த்வாலா கும்பல் முழுவதும் கருப்புப் பணப் பேர்வழிகள் என்ற சந்தேகத்தை உறுதிசெய்வதாக இருக்கிறது.

மோடியுடன் பரிமள் நத்வானி

பொதுவாகவே,  கறுப்புப் பணப் பேர்வழிகள், அவ்வளவு ஏன், நமது ஏ1 ஜெயாவும் கூட இப்படித்தான் பல டுபாக்கூர் கம்பெனிகளை உருவாக்கி அதில் பணத்தை மாற்றிவிட்டு கருப்புப்பணத்தை வெள்ளையாக்கி சுருட்டிக் கொண்ட கதை நம் அனைவருக்கும் தெரியுமல்லவா? அதற்குச் சற்றும் குறையாத ஒரு நடவடிக்கையைத் தான் ஜெய் ஷா செய்திருக்கிறார்.

ஜெய் ஷா இத்தகைய நடவடிக்கைகளுக்காக மேலும் சில டுபாக்கூர் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தியிருக்கிறார். டெம்பிள் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கந்த்வாலாவின் நிதி நிறுவனம் கடனளித்த அதே ஆண்டில், ஜெய் ஷாவும் கந்த்வாலாவும் இணைந்து வரைமுறைக்குட்பட்ட பொறுப்புகொண்ட பங்குதாரர் (Limited Liability Partnership) நிறுவனமான ’சத்வா ட்ரேட்லின்க்’ (Sattva Tradelink) என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.

துவங்கிய அதே ஆண்டில் அந்நிறுவனத்தையும் இழுத்து மூடியிருக்கின்றனர். இது குறித்து ‘தி வயர்’ இணையதளம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ஜெய் ஷாவின் வழக்கறிஞர், ’எதிர்நிலையான சந்தை நிலைமை’களின் காரணமாக, அந்த நிறுவனம் மூடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு கருப்புப் பணப் பரிமாற்றத்திற்காகத் துவங்கப்பட்ட டுபாக்கூர் ’லெட்டர்பேடு’  கம்பெனிதான் என்பது உறுதியாகிறது.

ஜெய் ஷா நடத்தி வந்த மற்றொரு நிறுவனம், குஷும் ஃபின்செர்வ். இந்நிறுவனத்திற்கு கடந்த 2014-2015 நிதியாண்டில் ரூ.2.6 கோடியை ”கூட்டு நிறுவனங்களுக்கு இடையிலான வைப்புத்தொகையாக” (Inter Corporate Deposits) (கடனாக) கந்த்வாலாவின் கே.ஐ.எஃப்.எஸ். நிறுவனம் கொடுத்ததாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமாக செயல்பட்டு வந்த இந்நிறுவனம், கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அது ஒரு ”வரைமுறைக்குட்பட்ட பொறுப்புகொண்ட பங்குதாரர்” (LLP- Limited Liability Partnership) நிறுவனமாக மாற்றப்பட்டது. ஜெய் ஷா அந்நிறுவனத்தின் 60% பங்குகளைக் கொண்டிருந்தார்.

குஜராத்தில் உள்ள ’கலுப்பூர் வணிகக் கூட்டுறவு வங்கியில்’ இந்நிறுவனம் ரூ,25 கோடி கடன் வசதியைப் (Letter of Credit) பெற்றுள்ளது. இந்த வங்கியின் இயக்குனர்களில் நிர்மா குழுமத்தைச் சேர்ந்த நபர்களும் இருக்கிறார்கள் என்பதோடு வங்கியின் தலைவரும் நிர்மா குழுமத்தைச் சேர்ந் அம்புபாய் மக்கான் பாய் பட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.

சொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யஸ்பால் சுடசாமா

யஸ்பால் சுடசாமா என்ற அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குனரிடம் இருந்து வாங்கியதாகக் கூறப்படும் ரூ.1.2 கோடி சந்தை மதிப்புள்ள இடத்தையும், அமித் ஷாவின் பெயரில் உள்ள ரூ.5 கோடி மதிப்புள்ள இடத்தையும் அடமானம் வைத்து ரூ.25 கோடி கடன் வசதியை இந்த வங்கியிலிருந்து பெற்றுள்ளார் ஜெய் ஷா.

இதில் குறிப்பிடப்படும் யஸ்பால் சுடசாமா என்பவர், சொராபுதீன் கொலைவழக்கில் அமித் ஷாவோடு சேர்த்து குற்றத்தை மறைத்ததாக சிபிஐயால் குற்றம் சாட்டப்பட்டு பின்னர், அமித் ஷா விடுவிக்கப்பட்டதன் புண்ணியத்தின் விளைவாக இவ்வழக்கிலிருந்து வெளிவந்தவராவார்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, அடமானம் வைக்கப்பட்ட இடங்களின் மதிப்பிற்கும், பெறப்பட்ட கடன் வசதியின் மதிப்பிற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது தான். ரூ.6.2 கோடி மதிப்புள்ள இடத்தை அடமானம் வைத்தால் ரூ.25 கோடிக்கு கடன் வசதி பெற்றுக் கொள்வதில் எந்தக் குளறுபடியும் இல்லை என நியாயப்படுத்துகிறது ஜெய் ஷா தரப்பு. நிறுவனத்தின் இயங்கு மூலதனத்திற்காக 25 கோடி மதிப்புள்ள கடன் கடிதத்தின் வாயிலாக தேவையான சமயத்தில் கடன் பெற்றுக் கொண்டு, கடன் கடிதம் காலாவதியாவதற்குள் அதனைத் திரும்ப செலுத்திவிடுவதாகக் கூறுகிறது ஜெய் ஷாவின் தரப்பு.

இவ்வளவு சுலபமாக சாதாரணக் குடிமக்களுக்கோ, அல்லது சிறுதொழில் நிறுவனங்களுக்கோ இப்படி ஒரு ‘நிதிச்சேவை’ வழங்கப்படாத சூழலில் எந்த அடிப்படையில் ஜெய் ஷாவின் நிறுவனத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்பட்டிருந்தது என்பது தான் கேள்வி.

தற்போது அம்பலமாகியுள்ள ஜெய் ஷாவின் கலுப்பூர் கூட்டுறவு வங்கித் தொடர்பு மற்றும் அஹமதாபாத் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரான சுடசாமாவுடனான தொடர்புகள் ஆகியவை நமக்கு யாதின் ஓசாவை நினைவுப்படுத்துகின்றன. பாரதீய ஜனதாவைச் சேர்ந்த யாதின் ஓசா, மோடியின் பண மதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட 2016, நவம்பர் 8 அன்று இரவு அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள்  பழைய நோட்டுக்களை குஜராத்தின் கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாற்றிக் கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டதை அப்போதே அம்பலப்படுத்தியவர்.

அமித் ஷா கும்பல் – கூட்டுறவு வங்கி மூலம் கருப்புப்பணத்தை வெள்ளையாக்கியதை அம்பலப்படுத்திய முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. யதின் ஓசா

கருப்புப் பணத்தை கைப்பற்றுவதாக வீரவசனம் பேசிய பாஜக கும்பல், பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பிருந்தே இதுபோன்ற டுபாக்கூர் லெட்டர்பேடு கம்பெனிகளின் மூலம், கொடுக்கல் வாங்கலில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி கொடுத்து வந்துள்ளனர் என்பது இதுவரை பார்த்த நிகழ்வுகளில்  தெளிவாகத் தெரிகிறது.

சரி விசயத்திற்கு வருவோம். இந்த குஷும் ஃபின்செர்வ் நிறுவனம், நிறுவனங்களுக்கான பதிவாளர் ஆவணங்களின் படி, பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட்டிருப்பதாகவே கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்குத் துளியும் சம்பந்தமில்லாத வேறு சில தொழில்களிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வந்திருக்கிறது. மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் கீழ் வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியை எடுத்துச் செய்துள்ளது ஜெய் ஷாவின் குஷும் ஃபின்செர்வ் நிறுவனம்.

இத்தொழிலில் முன்பின் அனுபவம் இல்லாத ஜெய் ஷாவின் குஷும் நிறுவனத்திடம் மரபுகளை மீறி ரூ.15 கோடி மதிப்புள்ள, 2.1 மெகாவாட் காற்றாலையை நிறுவுவதற்கான அனுமதியைக் கொடுத்தள்ளது. அதோடு மத்திய அரசின் ’இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சிக் கழகம்’ (IREDA) சுமார் ரூ.10.35 கோடியைக் கடனாக வழங்கியுள்ளது. அச்சமயத்தில் இத்துறையின் அமைச்சராக பியூஷ் கோயல் இருந்துள்ளார், தற்போது இவர் ரயில்வேத்துறை மற்றும் நிலக்கரித் துறையின் அமைச்சராக இருக்கிறார். இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பது நல்லது அதனால்தான் அவர்கள் அனைவரும் தொழில் முனைவர்களாக இருக்கிறார் என்று திமிராக உளறியவரும் இவரே. ஒரு வேளை அமித்ஷாவின் மகன் திடீர் தொழிலதிபராக வளர்ந்ததை வைத்தும் அவர் சொல்லியிருக்கலாம்.

அனுபவமற்ற நிறுவனத்திற்கு அனுமதியும் கொடுத்து, கடனும் கொடுப்பது முறையானதா? என ’தி வயர்’ இணையதளம் ’இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சிக் கழகத்திடம்’ கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.

ஐ.ஆர்.டி.ஈ.ஏ. நிறுவனம், குஷும் ஃபின்செர்வ் நிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கிய 10.35 கோடி கடன்

மொத்தத்தில், மோடி மத்தியில் ஆட்சி அமைத்த பின்னர், ஜெய் ஷாவின் பல்வேறு நிறுவனங்களும், அவற்றின் சந்தேகத்திற்கிடமான, கணக்கில் காட்டப்படாத பணப் பரிவர்த்தனைகளும் நிறுவனங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கைகளிலேயே தெளிவாகத் தெரிகின்றன.

திடீரென 16,000 மடங்கு உயர்ந்த ஜெய் ஷாவின் வருமானமும், திடீரென அதிகரித்த வெளிநாட்டுப் பரிவர்த்தனையும், இலாபத்தோடு ஓடிய நிறுவனங்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் மூடப்படுவதும், திடீரென புதிய நிறுவனங்கள் துவங்கப்படுவதும், மூடப்படுவதும், இதுவரை நடந்த கருப்புப் பணப்பரிமாற்றங்களின் அதே வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டிருக்கின்றன.

துறை சாராத ஒரு நிறுவனத்திற்கு காற்றாலை அமைக்கும் பணி ஆணையை மத்திய அரசு கொடுத்ததும், அதற்குப் பொதுத்துறை நிறுவனம் கடன் கொடுப்பதும், வெளிப்படையாக அம்பலப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் – மறுக்க முடியாத உண்மைகள்.

ஜெய் ஷாவிற்கு முறைகேடாக கடன் வழங்கிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், இவை வெளிப்படுத்தப்பட்ட பிறகும், இந்த ‘ஜனநாயக நாட்டின்’ எந்தத் தூணும் இதற்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளி எறியவில்லை. ஆனால் ஜெய் ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்ட குற்றக் கும்பலோ, உண்மையை வெளிப்படுத்தியவர்களுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டல் விடுக்கிறது. ஜெய் ஷா வயர் நிறுவனம் வெளியிட்ட கட்டுரையை மறுவெளியீடு செய்பவர்களும் அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன் காரணமாகவே, வயர் இணையதளத்தில் வெளியான இந்தக் கட்டுரை வேறு எந்த முக்கியப் பத்திரிக்கைகளிலும் வெளியாகவில்லை. ஜெய் ஷாவின் சார்பாக வழக்காடுவதற்கு, விதிமுறைகளை மீறி துணை சொலிசிட்டட்ர் ஜெனரலுக்கு அனுமதி வழங்கியுள்ளது சட்ட அமைச்சகம்.

இந்த மோசடியை அம்பலப்படுத்தி எழுதிய ரோஹினி சிங் மீது சமூக வலைத்தளங்களில் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கிறது சங்கபரிவாரக் கும்பல். இத்தாக்குதல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ரோஹினி சிங். மேலும் “ நான் தைரியமானவள் என்பதனால் இதனைப் பற்றி பேசவில்லை. என் பணி பத்திரிக்கையாளர் பணி. அந்தப் பணியை நான் செய்தேன் அவ்வளவு தான்“ என்று கூறியிருக்கிறார் ரோஹினி சிங்.

ரோஹினி சிங் மீதும் , அவரது புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்ட ‘தி வயர்’ இணையதளத்தின் மீதும் கிரிமினல் அவதூறு வழக்குப் பதிவு செய்து ரூ.100 கோடி மானநட்டஈடு கோரியிருக்கிறார் ஜெய் ஷா. உடன் இணைந்து மிரட்டுகிறார் மத்திய அமைச்சர். வழக்குகளின் முலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்துவிட முடியும் என நினைக்கிறது காவிக்கும்பல்.

மோடி துதியை மட்டும் மந்திரமாகக் கொண்டு இயங்கும் ஊடக உலகில் இப்படி தைரியமாக அமித்ஷா குடும்பத்தின் ஊழலை வெளியே கொண்டு வந்த ரோஹினி சிங்கைப் பார்த்தாவது சுரணையற்றவர்களுக்கு சொரணை வரட்டும். வளர்ச்சி, ஊழல் எதிர்ப்பு என்று நாடகமாடி நாட்டையே கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அன் கோவை விரட்டாமல் மக்களுக்கு நிம்மதி இல்லை.

– நந்தன்

(ஷா இன் ஷா பொருள்  அரசனுக்கெல்லாம் அரசன்)

மூலக்கட்டுரை:

The Golden Touch of Jay Amit Shah


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பயனளித்ததா ?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. உலக மகா உத்தமர்கள் ….? அடுத்து மிரட்டி பார்ப்பார்கள் — மூடிமறைக்க என்ன வழி என்று தேடுவார்கள் — அந்த நிருபருக்கு குடைச்சல் கொடுப்பார்கள் — ஒயரில் வெளி வருவதற்குள்ளேயே — அரசு வக்கீலை அரசாங்க உத்திரவு போட்டு வாதாட வைத்துக்கொண்டது — இவர்களின் ” நேர்மைக்கு ” ஒரு எடுத்துக்காட்டு — என்னவொரு வேகம் …? இதே ” மேத்தா ” வக்கீல்தான் 2002 கலவர வழக்குகளிலும், என்கவுண்ட்டர் வழக்குகளிலும்
    குஜராத் அரசு வழக்குரைஞராக ஆஜர் ஆகி இருக்கிறார் …!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க