ந்தியாவின் விண்வெளித் துறை நிறுவனமான “இஸ்ரோ” நிலவுக்கு செயற்கைக் கோள் அனுப்பும் சாதனையை விட பெருஞ்சாதனை அனைத்து சாதியனரையும் அர்ச்சகராக்குவது! இந்த வேதனைக்காக இந்தியாவிலேயே குரல் கொடுத்து மக்கள் இயக்கமாக்கியது தமிழ்நாடும், தந்தை பெரியாரும்தான். அதை சத்தமின்றி நிறைவேற்றியிருக்கிறது பினராயி விஜயன் தலைமையில் இயங்கும் கேரள சி.பி.எம் கூட்டணி அரசு! அதை தமிழக முற்போக்கு அமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கே வரவேற்று கொண்டாடி வருகின்றனர். ஆயினும் இந்துமதவெறி அமைப்புக்களோ “இந்துக்களை” ஒற்றுமையாக்கும் இப்பணியினை வேண்டா வெறுப்பாக பார்ப்பதோடு உள்ளுக்குள்ளே குமுறியும் வருகின்றனர்.

கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், திருக்கோயில் அர்ச்சகர்களாக முறைப்படி பயிற்சி பெற்றவர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்து இருக்கிறது. இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 26 பேர் பார்ப்பனர்கள், 36 பேர் பார்ப்பனரல்லாதோடு நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் பிரிவைச்ச் சேர்ந்தோர் 6 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் அமித்ஷா வகையறாக்கள் இடதுசாரி அரசுக்கு எதிராக பாதயாத்திரை, பஞ்சாமிர்த யாத்திரை என்று சீன் போடும் போதும் காலத்தில் அவர்கள் முகத்தில் கரிபூசும் விதமாக இந்த சமத்துவ நடவடிக்கை விளங்குகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நடக்க முடியாது என்று இருந்த தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தந்தை பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அதே மண்ணில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் தற்போது அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறார்.

தமிழகத்தை விட கேரள சமூகத்தில் ஆச்சாரம், சனாதனம், சடங்குகள், சமஸ்கிருத மயமாக்கம் அனைத்தும் அதிகமாகும். சிபிஎம் கட்சி கூட அங்கே பகுத்தறிவு பிரச்சாரத்தை ஒரு சமூக இயக்கமாக செய்வதில்லை. பாஜக – ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அங்கே சித்தாந்த ரீதியாக மக்களை இந்துமதவெறியின் பெயரில் அணிதிரட்டும் போது அதை எதிர்த்து கட்சி ரீதியாக போராடினாலும் கருத்து ரீதியான போராட்டங்களை சிபிஎம் கட்சி செய்வதில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்த அனைத்து சாதியனர் அர்ச்சகராகும் நடவடிக்கை ஆச்சரியமூட்டுவதோடு மனதார பாரட்ட வேண்டிய ஒன்று.

இந்நிலையில் இத்தகைய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக குறிப்பான பங்கினை செய்துள்ள தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை என்பது பெரும் மானக்கேடாகும். இதை ஒட்டி நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் மக்கள் அதிகாரம் தோழர் ராஜுவும், சிபிஎம் சார்பில் தோழர் கனகராஜும், இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத்தும், இந்து பக்தர்கள் சார்பில் யாரோ ரமேஷ் என்பவரும் கலந்து கொண்டனர். நெறியாளர் ஜென்ராம் இந்த விவாதத்தை ஒருங்கிணைத்தார்.

ஆகமத்தின் பெயரில் சட்டமும், தீர்ப்புகளும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்குவதை தடுக்கின்றன என்பதை தோழர் ராஜு விரிவாக வரலாறு மற்றும் சான்றுகள், வழக்குகளை வைத்து விவரித்தார். ஆகமம் என்பதே ஒரு மோசடி என்பதை அவர் நிறுவினார். கருவறைக்குள் மின் விளக்குகள், ஏ.சி எந்திரங்கள், போன்றவை ஆகமத்தை மீறி நுழையும் போது ஒடுக்கப்பட்ட சாதியினரை தடுப்பது அயோக்கியத்தனமில்லையா என்று அவர் கேட்டார். அதே போன்று சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து அறநிலையத்துறையின் கையில் வந்த போது ஒரு வருடத்தில் இரண்டு கோடி ரூபாய் காணிக்கை வந்ததும், அதே காலத்தில் முன்னர் வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே தீட்சிதர்களால் கணக்கு காண்பிக்கப் பட்டதையும் தோலுரித்தார்.

இதற்கெல்லாம் பதில் சொல்லத் துப்பற்ற அர்ஜுன் சம்பத் ஆங்காங்கே ஒரு ‘மாமா’-வைப் போல சிரித்துக் கொண்டு அவதூறுகளையும், பொய்களையும் கொட்டினார். தமிழகத்தில் அனைத்து சாதியனரும் ஏற்கனவே அர்ச்சகராகத்தான் இருக்கிறார்கள் என்று ஒரு முழுப் பொய்யை கூசாமல் சொன்னார். கேட்டால் அது சுடலை, இசக்கி, அய்யனார் போன்ற நாட்டுப்புற தெய்வங்களின் கோவில் என்று பட்டியல் வாசித்தார். பிறகு 90-களில் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் உள்ளே செருப்புடன் சென்று அரங்கநாதன் சிலையில் ஏறியதாக மற்றுமொரு பொய்யை கூசாமல் சொன்னார். அதை பொய் என்று தோழர் ராஜு கூறிய போது தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் வெட்கமே இல்லாமல் அடித்து விட்டார்.

அந்த போராட்டத்தில் தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 32 தோழர்கள் பெரியார், அம்பேத்கார் படங்களுடன் உள்ளே நுழைந்தனர். இவர்களைத்தான் ஒரு குறியீடு போல செருப்பு என்று கூறுகிறார் போலும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்று ஒரு பெரும் போராட்டம் வந்தால் ஒழிய இங்கிருக்கும் அரசு அனைத்து சாதியனரையும் அர்ச்சகராக்காது என்றார் தோழர் ராஜு. வீடியோவைப் பாருங்கள்!

___________________

அனைத்து சாதி அர்ச்சகர் உரிமை, தில்லை கோவிலில் தமிழ் பாடும் போராட்டம் ஆகியவற்றில் மக்கள் அரங்கிலும், நீதிமன்றத்திலும் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புக்கள் தீவிரமாக போராடியிருக்கின்றன. அவை குறித்து வினவு தளத்தில் முன்னர் வெளியிட்ட வீடியோக்களை இங்கே இணைத்திருக்கிறோம்.

1. அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு – பாகம் 1

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு – முதல் பாகம் (டிசம்பர் 2015)

2. அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு – பாகம் 2

கோயிலில் நுழையக்கூடாது, தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்’ என்று நந்தனாருக்கு மரண தண்டனை தீர்ப்பு அன்று வழங்கப்பட்டது. அர்ச்சகர் மாணவர்களை அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றும் வாய்ப்பை இத்தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது. (டிசம்பர் 2015)

3.  அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு – பாகம் 3

இந்த தீர்ப்பு திமுக அரசு கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்வதாகக் கூறவில்லை என்பது வெற்றி அல்ல. நடைமுறையில் அதனை ரத்து செய்து விட்டது என்பதே உண்மை. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு. ம.க.இ.க – ம.உ.பா.மை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் இறுதி பாகம் (டிசம்பர் 2015)

4. அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்

சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின. ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார். அனவரையும் கைது செய்து கொண்டு சென்ற போலீசு மாலையில் விடுவித்தது.

5. சென்னையில் 30-11-2013 அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய அரங்குக் கூட்டத்தில் தில்லை கோயிலை பாதுகாப்போம் ! சங்கராச்சாரியை கூண்டில் ஏற்றுவோம் – என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.

6. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு குறித்து மக்கள் தொலைக் காட்சியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு கலந்து கொண்ட விவாதம். – ஜூலை 2013

7. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தொடர்பாக மதுரையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் தொகுப்பு – அக்டோபர் 2013


__________________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி