privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !

பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !

-

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

பத்திரிக்கை செய்தி

நாள் : 12.10.2017

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமித்திருக்கிறது. இவர்களில் 6 பேர் தலித்துகள். அதே நேரத்தில் தமிழகத்தில், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்று, சான்றிதழும் தீட்சையும் பெற்ற 206 மாணவர்கள் பத்து ஆண்டுகளாக, பணி நியமனம் மறுக்கப்பட்டு தெருவில் நிற்கிறார்கள்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத்தீண்டாமையை ஒழிக்கவும் 1993 -ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். 2007 -ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டார்கள்.

பயனில்லை. 2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்ற போதிலும், அதிமுக அரசு மாணவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. பார்ப்பனராகப் பிறக்காத ஒரேயொரு குற்றத்துக்காக தகுதியுள்ள இம்மாணவர்கள் இன்று தெருவில் நிற்கிறார்கள். பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராக வைக்கம் சென்று போராட்டம் நடத்திய பெரியார் பிறந்த தமிழகத்தின் இன்றைய நிலை இதுதான்.

2006 -ல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கு திமுக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்து தடையாணை பெற்றவர்கள் மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள். 1972 -ல் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழிக்க திமுக கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றவர்களும் இவர்கள்தான். “தங்களைத் தவிர வேறு யாரும் கடவுள் சிலையைத் தொட்டால் சிலை தீட்டாகிவிடும்” என்ற அப்பட்டமான தீண்டாமைக் கருத்தைத்தான் ஆகமவிதி என்ற பெயரிலும் மத நம்பிக்கை என்ற பெயரிலும் இவர்கள் முன்வைக்கிறார்கள்.

“பார்ப்பனரல்லாதவர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்களின் மற்ற உட்பிரிவினர் கூட அர்ச்சகராக முடியாது” என்று சாமர்த்தியமாக வாதிடுவதன் மூலம் தங்களது சாதி – தீண்டாமை வெறியை இவர்கள் மறைத்துக் கொள்கிறார்கள். மாரியாத்தா, காளியாத்தா கோயில்கள் போன்றவற்றில் மற்ற சாதியினர் பூசாரியாக இருப்பதை காட்டி, ஒவ்வொரு கோயிலுக்கு ஒரு மரபு என்று சாதியை தந்திரமாக நியாயப்படுத்துகிறார்கள்.

கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், நடராசர் கோயில், அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி கோயில், தஞ்சை, திருவையாறு, நெல்லை, ராமேசுவரம், பழனி உள்ளிட்ட எல்லா முக்கிய கோயில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பார்ப்பன உட்சாதியினர் மட்டும்தான். 1972 சேசம்மாள் தீர்ப்பு, “வாரிசு உரிமையாக அர்ச்சகர் பதவியைக் கோர முடியாது” என்று தெளிவாக கூறிவிட்ட பின்னரும், தற்போது இத்தகைய பெருங்கோயில்களில் இருக்கும் அர்ச்சகர்கள் 1174 -ல் 574 பேர் வாரிசுரிமையாக பதவி பெற்றவர்கள்தான்.

மேலும் 411 பேர் அவர்களால் சிபாரிசு மூலம் நுழைந்தவர்கள். அது மட்டுமல்ல, மதுரைக் கோயிலின் 116 அர்ச்சகர்களில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். சென்னை கபாலி கோயில் அர்ச்சகர்கள் 41 பேரில் 4 பேர்தான் ஆகமம் கற்றவர்கள். மற்றவர்களுடைய தகுதி சாதி மட்டும்தான் என்பதை நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை ஆதாரபூர்வமாக தெளிவுபடுத்துகிறது. ஆனால் தகுதியுள்ள பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை நியமிக்க அரசு மறுத்து வருகிறது.

மேற்கண்ட கோயில்கள் அனைத்தும் பொதுக்கோயில்கள். அவை முன்னர் மன்னர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. இன்று இக்கோயில்களின் பணிநியமனம் உள்ளிட்ட நிர்வாக விவகாரங்கள் அரசு அதிகாரத்தின் கீழ் வந்திருக்க வேண்டும்.

ஆனால், “ஆகமவிதி, மரபு, பழக்கவழக்கம், இந்துக்களின் மத உரிமை” என்ற போர்வையில் தமிழ்மக்களுடைய உழைப்பில் உருவான இந்தக் கோயில்களின் கருவறைக்குள் தமிழனே உள்ளே நுழையமுடியாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். சிதம்பரம் கோயிலில் அர்ச்சகர் வேலைக்கு வந்த தீட்சிதர்கள், இன்று “கோயிலே தங்களுக்கு சொந்தம்” என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பும் வாங்கி விட்டார்கள்.

அர்ச்சகர்களும் சங்கராச்சாரிகளும் எதைச் சொல்கிறார்களோ அதைத்தான் “மரபு” என்று உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறது. கோயில் தேவதாசி முறையும், தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்பதும்கூட ஆகமவிதிகள்தான். பால்ய விவாகம், பலதார மணம், உடன்கட்டையேற்றுதல் போன்ற அனைத்தும் இந்து மரபுகள்தான். “பார்ப்பனரல்லாதவர்கள் கருவறைக்குள் நுழையக்கூடாது” என்பதும் அத்தகையதொரு மரபு.

ஒழிக்கப்படவேண்டிய தீண்டாமை மரபு. 1969 -ல் நியமிக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி தீண்டாமை ஒழிப்புக்கு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான், 1971 -ல் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தையும், 2006 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியையும் திரு.கருணாநிதி கொண்டுவந்தார்.

இதற்கு எதிரான வழக்கில், 2015 -ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, தந்திரமான முறையில் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறோம். சட்டப்பிரிவு 25 -ன் படி அர்ச்சக மாணவர்களும், பல்வேறு சாதிகளிலும் பிறந்த இந்துக்களும் பெற்றிருக்கும் மத உரிமையைக் காட்டிலும், சட்டப்பிரிவு 26 இன்படி குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியை சேர்ந்த அர்ச்சகர்கள் கோரும் மரபுரிமைதான் பெரியது என்று கூறுகிறது அந்த தீர்ப்பு.

“தங்களைத் தவிர மற்றவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டு என்று அர்ச்சகர்ள் கூறுவது தீண்டாமைக்குற்றம் ஆகாது” என்றும் இந்த தீர்ப்பு கூறுகிறது. இருந்த போதிலும் மாணவர்களின் பணிநியமனத்துக்கு இத்தீர்ப்பு தடை விதிக்கவில்லை. அரசு இவர்களை நியமனம் செய்யலாம் என்றும், அந்த நியமனம் மரபுக்கு எதிரானது என்றால் அந்த நியமனத்துக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறுகிறது இத்தீர்ப்பு.

தற்போது கேரளத்தில் பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே என்ற போதிலும், அதனை எதிர்த்து பார்ப்பன அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்றம் செல்வதற்கும் வாய்ப்புண்டு. இதே கேரளத்தில் குருவாயூர், திருவனந்தபுரம், சபரிமலை போன்ற கோயில்களில் பார்ப்பனரல்லாதார் நியமிக்கப்படவில்லை என்பதையும், சபரிமலையில் வழிபடுவதற்கே பெண்களுக்கு உரிமையில்லை என்ற வழக்கு நிலுவையில் இருப்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கேரளத்து பார்ப்பன அர்ச்சகர்ளுக்கும் சாதகமானதுதான். அங்கே பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்துக்கு போகாமலிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சமூக ரீதியாகத் தனிமைப்பட்டு விடுவோம் என்ற அச்சமாகத்தான் இருக்க வேண்டும். அத்தகைய அச்சவுணர்ச்சியை தமிழ்ச்சமூகம் அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் ஏற்படுத்தவில்லை என்பதே இந்த மாணவர்களின் அவல நிலைக்கு மிக முக்கியமான காரணம்.

2015 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தீண்டாமைக்கு முட்டுக்கொடுக்கிறது என்ற போதிலும், அது பணி நியமனத்துக்கு தடை விதிக்கவில்லை என்பதால், தமிழக அரசு, 206 மாணவர்களையும் பெருங்கோயில்களில் நியமிக்க வேண்டும் என்று கோருகிறோம். அவர்களுடைய பணி நியமனத்துக்கு எதிராக அர்ச்சகர்கள் நீதிமன்றம் செல்லும் பட்சத்தில், அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மட்டுமின்றி வீதியிலும் நாம் போராடவேண்டும்.

இந்த சாதி – தீண்டாமை இழிவை சகித்துக் கொண்டும் அரசாங்கத்திடமும் நீதிமன்றத்திடமும் மன்றாடிக் கொண்டும் நாம் இருக்கமுடியாது. சாதி, தீண்டாமையை அரசமைப்பு சட்டம் நியாயப்படுத்தினால் அந்த சட்டம்தான் மாற்றப்படவேண்டுமேயன்றி, அந்த சட்டத்துக்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள முடியாது. மரபுக்கு தலைவணங்குவது என்ற பெயரில் சாதி ஆதிக்கத்துக்கும் தீண்டாமைக்கும் தலை வணங்க முடியாது. அர்ச்சகர் நியமனத்துக்கு மட்டுமல்ல, தலித் கோயில் நுழைவு, சாதி – தீண்டாமை மறுப்பு திருமணம் உள்ளிட்ட அனைத்துக்கும் இது பொருந்தும்.

206 மாணவர்களை பெருங்கோயில்களில் தமிழக அரசு உடனே பணி நியமனம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதற்குப் பொருள், “பார்ப்பனரல்லாதார் சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும்” என்ற பார்ப்பன அர்ச்சகர்களின் கருத்துக்கு இந்த அரசு துணை நிற்கிறது என்பதுதான்.

அதனை முறியடிக்க தமிழகமெங்கும் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்த வேண்டுமென்று தமிழ் மக்களின் நலன் நாடும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம். அதுதான் வைக்கம் வீரருக்கு நாம் செலுத்தும் மரியாதை. தமிழ் மக்கள் என்ற முறையில் அப்படிப் போராடுவதொன்றுதான் நமக்கு சுயமரியாதை! இது அர்ச்சக மாணவர்களின் பிரச்சினை அல்ல, தமிழ்ச் சமூகத்தின் தன்மானப் பிரச்சினை.

பங்கேற்றோர்

  • திரு. சி.ராஜீ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
  • திரு. சே.வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
  • திரு. சு.மில்ட்டன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
  • திரு. அரங்கநாதன், தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்
  • திரு. பாலகுரு, திருச்செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி
  • திரு. திருமுருகன், திருவல்லிக்கேணி அர்ச்சகர் பயிற்சி பள்ளி
  • திரு. வெங்கடேசன், திருவண்ணாமலை அர்ச்சகர் பயிற்சி பள்ளி

இவண் :
சே.வாஞ்சி நாதன், வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

அலுவலகம்: 150-இ,
ஏரிக்கரை சாலை,
அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை-20.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 98653 48163.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி