கடவுளுக்கே வெளிச்சம்!

நாம்
விளைவித்துக் கொடுக்கும்
தானியம்
நைவேத்யமாய் கருவறைக்குள்.

நாம்
நரம்புகள் நனைய
தொடுத்துக் கொடுத்த மாலை
அலங்காரமாய்
ஆண்டவன் மேலே.

நாம்
அரைத்துக் கொடுத்த சந்தனம்
சாமி மேலே மணக்கிறது.

நாம்
உண்டியலில் போட்ட காசு
சாமி வருவாயாய் கனக்கிறது.

நாம்
கறந்து கொடுத்த பால்
அபிஷேகமாய் வழிகிறது.

நாம்
தசைகளைத் திருகி
பிழிந்து கொடுத்த எண்ணெய்
அந்த ஆண்டவன் மேல்
நெளிகிறது.

வலிமிகு  உழைப்புடன்
நாம்
நெய்து கொடுத்த ஆடை
அருள்மிகு ஆண்டவனின்
மானத்தை காக்கிறது.

கற்பூரம், ஊதுவத்தி
விபூதி, குங்குமம், பன்னீர்
சகலத்திலும் நம் மூச்சு
ஆண்டவன் நாசியைத் தொடுகிறது.

உடைக்கும்
ஒவ்வொரு தேங்காயிலும்
நம் உழைப்பின் வியர்வை
கடவுள் மேல் தெறிக்கிறது.

சுதை, கோயில், கோபுரம்
ஏன் சாமி சிலையில் கூட
நம் சக்தி இருக்கும் போது

நாம்
தொட்டு பூசை செய்தால் மட்டும்
சாமி தீட்டாகிவிடுமாம்
இந்த அயோக்கியத்தனத்திற்கு பெயர்
ஆகமமாம்.

உண்மையில்
கருவறைக்குள்
அனைத்துச் சாதியினரையும்

நுழைய விடாமல் தடுப்பது
பார்ப்பானா? பகவானா?
விடை கண்டால்
அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

தட்டில் போடும்
காசுக்கு தீட்டில்லை
அதைத் தருகின்ற
நாம் மட்டும் தீட்டா?

அர்ச்சனைக்கு சமஸ்கிருதம்
தட்சணைக்கு மட்டும் தமிழா?

ஜல்லிக்கட்டு போதாது
பார்ப்பான திமிரோடு மல்லுக்கட்டு!
வாடி வாசல் திறந்தோம்

அந்த ஆண்டவனே
தேடி நிற்கும்
சுயமரியாதைச் சுடர் ஏற்ற
அனைத்துச் சாதியினருக்கும்
கருவறையைத் திறப்போம்!

–  துரை. சண்முகம்

_____________

இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி