privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்நெல்லை ஆலங்குளம் - தொடர் முற்றுகையில் மூடப்பட்டது டாஸ்மாக் !

நெல்லை ஆலங்குளம் – தொடர் முற்றுகையில் மூடப்பட்டது டாஸ்மாக் !

-

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் உள்ளது புதுப்பட்டி கிராமம். குறு விவசாயிகள் நிறைந்த பூமி இது.  விவசாயிகள் மானாவரியாகவும், கிணற்றுப் பாசனமாகவும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விளைநிலங்களுக்கு இடையில்தான் டாஸ்மாக் கடை கடந்த 4.9.2017 ல் திறக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் மக்கள் அதிகாரத்துடன் இணைந்து டாஸ்மாக் எதிர்ப்புக் குழு ஒன்றை அமைத்துப் போராடினர். அந்த செய்தி  நெல்லை : விளைநிலத்தில் டாஸ்மாக்கை திறந்த அரசு – விவசாயிகள் போர்க்கோலம் ! என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளிவந்துள்ளது.

முதல் நாள் போராட்டம் முடிவில், மக்கள் கடைசி வரை எதிர்பார்த்து காத்திருந்தும் மண்டல மேலாளர் (DM) வரவேயில்லை. ஆனாலும் மக்களின் போராட்டம் உறுதி குன்றாமல் இரவும் தொடர்ந்தது. 12.10.2017 அன்று காலையே போராட்டத்தின் போது  பந்தல் போடுவதற்கு அனுமதிக்காத போலீசு, இரவில் ட்யூப்லைட் போடுவதற்கும் அனுமதிக்கவில்லை. ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்டபோது, மேலதிகாரிகள் அப்படிச் செய்ய அனுமதி அளிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது என்று இன்ஸ்பெக்டர் வெளிப்படையாகவே கூறினார். எப்படியாவது மக்களை கலைந்து செல்ல வைக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணம் புரிந்தது.

இரவு முழுவதும் தொடர்ந்த லேசான தூறலிலும் மக்கள் உறுதியுடன் இருந்தனர். மக்களே ஏற்பாடு செய்த ஒற்றை பெட்ரோமாக்ஸ் லைட்டை கொண்டே இருட்டை விரட்டினோம். குழுவாக அமர்ந்து போராட்டங்கள் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் உரையாடி அறியாமையும், தயக்கத்தையும் விரட்டினோம்.

மக்கள் தூங்கினாலும் ‘உளவுத்துறையோ தூங்காமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.’ இதனிடையே பின்னிரவு வரையிலும் மண்டல அதிகாரி வராததால் மேலும் மக்களின் கோபம் அதிகமானது. இரவோடு இரவாக மண்டல அதிகாரி வராததைக் கண்டித்து விடிய விடிய போராட்டம் தொடர்வதாக ஆலங்குளம் புதுப்பட்டி வட்டாரத்தில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அடுத்த நாள் காலையும் – போராட்டம் தொய்வின்றி தொடர்ந்தது. பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் இருந்தனர். வெயில் அதிகரிக்கவே அவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மீண்டும் பந்தல் போட முயற்சித்தபோது, இன்ஸ்பெக்டர் வந்து போடக்கூடாது என்று தடுத்தார். மக்களின் பாதுகாப்பை விட மேலதிகாரியின் உத்தரவையே முக்கியமாக கருதி செயலாற்றினார்.

இந்த முறையோ மக்களே கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர். மண்டல மேலாளர் வருவதற்கு நடவடிக்கை எடுங்கள் இல்லையென்றால் எங்களைத் தடுக்காதீர்கள். மீறித் தடுத்தால் சாலை மறியலில் இறங்குவோம் என்று துணிந்தனர். அதன் பிறகே பணிந்த்து போலீசு. மண்டல மேலாளருக்கு போன் செய்து தயவு செய்து உடனே வந்துவிடுங்கள் என்று தொலைபேசியில் மன்றாடினர். மதியம் 1.30 மணிக்கு மண்டல மேலாளர் வந்துவிடுவார், அதுவரைப் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று போலீசு கேட்டுக்கொண்டது.

மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தாசில்தார்

1.45 -க்கு வந்த மண்டல மேலாளர் எடுத்த எடுப்பிலேயே தாசில்தார் பேசியதையே வாந்தி எடுத்தது போல் இரண்டு மாதம் அவகாசம் வேண்டும் என்றார். மக்களோ உடனே மூடுங்கள் என்று உறுதியுடன் நின்றனர். பின்னர் தீடீர்னு கடைய எடுக்க சொன்னால் எப்படி என்று மக்களையே குற்றம் சாட்டத் தொடங்கிய அந்த அதிகாரி, உடனடியாக மாத்த முடியாது, அதற்கு தயாரிப்பு செய்ய வேண்டும். இடம் பார்க்க வேண்டும், பிறகுதான் மாற்ற முடியும் என்று அலட்சியமாக பேசினார்.

அதிகார வர்க்கத்தின் திமிர்த்தனத்தை கண்முன்னே கண்ட  மக்களோ, தீபாவளிக்கு டார்கெட் வச்சு கொள்ளையடிக்கத்தானே அவகாசம் கேட்கிறீர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி, ஏசி ரூமில் இருக்கும் உங்களுக்கு எங்க சிரமம் எப்படித் தெரியும்? என்று முகத்தில் அடித்தது போல் அம்பலப்படுத்தினர். கடையை மூடும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று அறிவித்தனர் மக்கள். தொடர்ந்து அதிகார வர்க்கத்தைக் கண்டித்த முழக்கங்களால் அந்தப் பகுதியையே அதிர்ந்தது.

அரசோ மக்கள் சாராயத்தை குடித்து அடிமையாக கிடக்க வேண்டும் என்று விரும்புகிறது. மக்களோ சுயமரியாதையுடன்தான் இருப்போம் என்று போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

மக்களின் கேள்விகளையும், உறுதியையும் எதிர்கொள்ள முடியாமல் ஓடிப்போய் வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டார் அதிகாரி. போலீசோ மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவித்தனர்.

மக்கள் போராட்டத்தைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியில் இருந்த தி.மு.க – எம்.எல்.ஏ பூங்கோதை அங்கு வந்தார். அவரிடமும் மக்கள் கடையை மூடும் வரை ஓயமாட்டோம். அதற்கான நடவடிக்கை எடுங்கள் என்று கூறினர்.  அவரோ நானும் வருகிறேன், வாருங்கள் தொகுதி அதிமுக எம்பி பிரபாகரன் வீட்டை முற்றுகையிடுவோம் என்று மறுபடியும் வடிவேல் போல முதலில் இருந்து தொடங்கினார். போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நின்றிருந்த மக்களோ எல்லாரையும் சந்தித்து விட்டோம். மூடுவதற்கான நடவடிக்கை எடுங்கள் என்று கூறினர்.

தி.மு.க. – எம் எல் ஏ பூங்கோதை

அதன் பிறகு எம்.எல்.ஏ வும், மண்டல அதிகாரியும் நாங்கள் உடனே கலெக்டரைச் சந்தித்து பேசுகிறோம் என்று கிளம்பிச் சென்றனர். போராட்டமும் தொடர்ந்தது.

மக்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்டு, வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, அதிலிருந்து மீளவும் வழிதெரியாத நிலையில் தவித்து நிற்கின்றனர். ஏதோ ஒரு வகையில் இந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்த அரசுதான் என்பதை தங்களின் அனுபவங்களின் மூலமாக உணர்ந்து கொண்டுள்ளனர். இந்த தீயில் எண்ணைய் ஊற்றுவது போல்தான் அதிகார வர்க்கம் மக்களை கிள்ளுக் கீரையாக நினைத்து நடந்து கொண்டது.

மக்களின் உறுதியான, விடாப்பிடியான, சமரசமற்ற போராட்டத்துக்கு முன்னால் ; தெளிவாகச் சொன்னால் மக்களின் அதிகாரத்துக்கு முன்னால் எதுவும் செல்லுபடியாகாது என்பது அங்கே நிரூபணமானது.

13.10.2017 அன்று மாலை 6:00 மணிக்கு டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாகவும், ஒரு வாரத்தில் சாராய பெட்டிகளை எடுத்துவிடுவதாகவும் அறிவித்து அதிகார வர்க்கம் பணிந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தநாள் அதிகாலையில் ஆலங்குளம் நகரம்,  சுற்றுவட்டார கிராமங்கள் முழுவதிலும் மக்களின் இந்த வெற்றியை பிரகடனப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

டாஸ்மாக் மட்டுமல்ல, மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் போராட்டமே தீர்வு என்பதை இந்தப் போராட்டத்தின் மூலம் ஆணித்தரமாக உணர்ந்து கொண்ட மக்கள் மக்கள் அதிகாரத்தோடு இணைந்து பயணிப்பதற்கு ஆயத்தமாயுள்ளனர்.

இறுதி வரை இந்த போராட்டத்தில் மக்களோடு இருந்து போராடியது மக்கள் அதிகாரம் தோழர்கள் தான் என்பதை இந்த போராட்டச் செய்தியை  வெளியிட்ட எந்த ஊடகமும் பதிவு செய்யவில்லை. மக்கள் அதிகாரம் எனும் அமைப்பின் பெயர் மக்களிடம் சென்று விடக் கூடாது என்பதில் ஜனநாயகத்தின் அத்தனை தூண்களும் ஒன்றுபட்டு நின்றன. ஆனால் மக்கள் மனதில் நிலைத்து விட்டதை இவர்களால் என்ன செய்ய முடியும்?

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க