privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாமெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?

மெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?

-

மெர்சல் படம் வசூல்ல ஏறக்குறைய வெற்றிதான்னு ஊடக விமர்சகர்கள் சொல்றாங்க. ரசிகர்களைப் பொருத்தவரை ஏற்கனவே தெரிஞ்ச மசலான்னாலும், மெசேஜ் ஸ்ட்ராங்கா இருக்குன்னு ரசிக்கிறாங்க. படத்துல மருத்துவ உலகின் ஊழல், பிரச்சினைகளை மக்கள் பார்வையில சொல்றதாலா பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அதுல ஆங்காங்கே மத்திய, மாநில அரசு மீது விமர்சனம் வருவதால கொஞ்சம் தைரியமா படம் பேசுதுன்னு அவங்க நினைக்கிறத புரிஞ்சுக்குறோம்.

ஆனால் மருத்துவத்துல பிரச்சினைன்னு காட்டுறதும், தீர்வுன்னு சொல்றதிலும் சில விமர்சனங்களை உங்கள் முன்னாடி வைக்கிறோம்.

படத்தோட இறுதிக் காட்சியில கோர்ட்டு முன்னாடி விஜய் பேசுற சீன் வரும். அதுல “7% ஜி.எஸ்.டி வரி வாங்குற சிங்கப்பூர்ல மருத்துவத்தை இலவசமா மக்களுக்கு தர முடியுறப்போ, 28% ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் இலவசமாக மருத்துவத்த தர முடியலை” -ன்னு விஜய் கேட்கிறார். இது நியாயமான கேள்விதானேன்னு மக்கள் சந்தோஷப்படுறாங்க. அந்தப் படி பாத்தா பாஜக தலைவருங்களுக்கு எரிச்சல் வந்துதானே ஆகணும்?

படத்துல மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறை சொல்லப்படுவதை கண்டிப்பதாக பாஜக தமிழிசை பொங்குறாரு. ஒருவேளை போன 2014 பாராளுமன்றத் தேர்தல்ல மோடி தமிழகத்திற்கு வந்த போது நடிகர் விஜய் கோவை விமான நிலையத்தில் காத்திருந்து பார்த்தவர்தானேன்னு ஒரு இளக்காரம் தமிழிசைக்கு இருக்கலாம்.

ஆனா இந்த சிங்கப்பூர் ஜி.எஸ்.டி விவகாரத்தை தமிழிசையும் அலசுறாரு. அதாவது சிங்கப்பூர்ல 80% மக்கள் வரிகட்டுவதாகவும், இங்கேயும் அப்படி கட்டுவதற்கு (பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி) மோடி அரசு முயற்சிக்கும் போது இப்படி விமர்சிக்கிறார்களேன்னு அவரும் நியாயம் பேசுராறு.

தமிழிசையும், நடிகர் விஜயும் சிங்கப்பூர் நாட்டை ஒத்துமையா ஆதரிக்கிறாங்க!

இப்ப விசயத்துக்கு வருவோம். படத்தில பேசுற விஜயும் சரி, வெளியே பேசுற தமிழிசையும் சரி இரண்டு பேருமே சிங்கப்பூரை ஆதரிச்சு பேசுறாங்க! அதுல அவங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனா நம்மளப் பொறுத்த வரைக்கும் அவங்க இரண்டு பேரோட கருத்துமே அதாவது சிங்கப்பூர் ஏதோ ஒரு ஆசிய சொர்க்கம்ங்குற கருத்து தவறுங்கிறதோடு, உண்மையை உங்களுக்கும் சொல்றோம்.

சிங்கப்பூர்ல இலவச மருத்துவம்னே ஒண்ணு கிடையாது. நம்மூரு ஆரம்ப சுகாதார நிலையம் மாதிரி சிங்கப்பூர்ல அரசாங்கத்தோட பாலி கிளினிக்னு ஒண்ணு இருக்கு. அங்க போனா ஒரு சராசரி கட்டணத்தை வசூலிப்பாங்க. அத குறைவும்னு சொல்ல முடியாது. அதிகம்னு சொல்ல முடியாது. ஆனா நிச்சயம் இலவசம்னு ஒண்ணும் கிடையாது. நம்மூரு நிலவரத்த வைச்சு பாத்தா அந்த குறைஞ்ச கட்டணம் ஒரு சராசரிக் கட்டணும்னு சொல்லலாம். ஆதாரம் கேட்குறவங்க, “ஹெல்த்கேர் சிஸ்டம் இன் சிங்கப்பூர்னு” விக்கிபீடியாவுல தேடிப்பாருங்க.

இலவசம் இல்லேங்கிறது மட்டுமில்ல, எல்லா சிகிச்சைக்கும் ஒரே மாதிரியான கட்டணமும் கிடையாது. நோய்க்கு தகுந்த மாதிரி கட்டணமும் கூடும் குறையும். ஏன் இப்படி இலவசமாக கொடுக்கலியேன்னு கேட்டா, பொது சுகாதரத்துறையின் நிதி ஒதுக்கீட்டை அப்படி காலி பண்ண முடியாதுன்னு சிங்கப்பூர் அரசாங்கம் ஆரம்பத்திலேயே முடிவு எடுத்திருக்காம்.

அதிகம் செலவு பிடிக்கிற சிகிச்சைன்னு வந்தா சிங்கப்பூர்ல கொஞ்சம் மானியம் கொடுக்கிறாங்க. ஆனா குறைவான செலவு சிகிச்சைன்னு வந்தா அங்க மானியமே கிடையாது. அதாவது ஒரு சாதாரண காய்ச்சல், சளி, வயிற்று வலின்னு அரசோட பாலி கிளினிக் போனீங்கன்னா தனியார் மருத்துவமனை மாதிரியான கட்டணத்தையே வசூலிக்கிறாங்க. அதுக்கு டிஸ்கவுண்டு கிடையாது.

அப்புறம் அங்க சம்பளத்துல மருத்துவத்துக்குன்னு கண்டிப்பா ஒரு தொகையை பிடிப்பாங்க. அந்த தேசிய காப்பீட்டுத் திட்டத்தோட பேரு Medisave மெடிசேவ். அந்த தொகையை வெச்சு அந்தந்த ஊழியரோட குடும்பம் மருத்துவ செலவுக்கு பயன்படுத்திக்கலாம். இது இந்தியாவிலும் இருக்கு, அமெரிக்காவிலும் இருக்குது. ஆனா எங்கேயும் இது நிச்சயமா இலவசம் கிடையாது. ஏன்னா உங்க சம்பளத்துல இருந்து மாதாமாதம் ஒரு தொகையை பிடிச்சுகிட்டு தேவை வரும்போது அதை நீங்க செலவழிக்கலாம்கிறது எப்படி இலவசமாகும்?

சிங்கப்பூரில் இலவச மருத்துவம்கிறது ஒரு வடிகட்டிய பொய்!

மெடிஷீல்டுன்னு (Medishield) இன்னொன்னு காப்பீட்டு திட்டமும் அங்க இருக்கு. ஆனா இதை வெச்சு ஒரு நோயை சிகிச்சை செய்ய முடியாது. தொகை பத்தாது. இன்னும் மெடிஷீல்டு லைஃப்ன்னு ஒரு காப்பிடும், எல்டர்ஷீல்டுன்னு முதியோருக்கு ஒரு காப்பீடும் அங்க இருக்கு. அதே நேரம் இந்த காப்பீட்டுத் திட்டத்துல மிகவும் அபாயகரமான நோய்கள், சிகிச்சைகள் எல்லாம் மறைமுகமாக தவிர்க்கப்பட்டிருக்கு. அப்படிப் பாத்தீங்கன்னா சிங்கப்பூர் குடிமகனுக்கு அப்படி ஒரு நோயோ பிரச்சினையோ வந்தா அவர் அதிகம் காசு செலவழிச்சே ஆகணும்,

சிங்கப்பூர்ல நிறைய தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருக்குது. அங்க வெளிநாட்டு நோயாளிகள், வசதியான சிங்கப்பூர் குடிமக்களுக்கு அதிக கட்டணத்துல சிகிச்சை பாக்குறாங்க. சிங்கப்பூர் குடிமக்கள், இந்த தனியார் மருத்துவமனைகளில் ஒரளவுக்கு கட்டணத்துல தள்ளுபடி பெறலாம்னாலும், மொத்தத்துல இங்க கட்டணம் அதிகம்தான். ஆனா நம்ம தமிழ்நாட்டுல இருந்து ஒரு தொழிலாளி அங்க பிழைக்கப் போய் பெரிய நோய் வந்தா அவருக்கு இங்கே மானியம், தள்ளுபடி எதுவும் கிடையாது. ஏன்னா அவர் ஒரு ஃபாரினர்.

சிங்கப்பூரோட மொத்த தேசிய வருமானத்துல இருந்து 1.6% -த்தை பொது சுகாதரத்துறைக்கு ஒதுக்குறாங்க. இந்தியாவுல 1.4% ஒதுக்குறாங்க! புள்ளி இரண்டை வெச்சு மட்டும் சிங்கப்பூர் தரமானது இல்லீங்க.

இப்டி காஸ்ட்லியான சிங்கப்பூர் மருத்துவத்தைத்தான், உலக சுகாதார நிறுவனம் 2000-ம் ஆண்டின் கணக்குப்படி ஆறாவது ரேங்கில் வைச்சுருக்கு. ஒருக்கால் மருத்துவம் இலவசமாகவும் தரமாகவும் கொடுத்து சாதனை படைச்ச நாடுன்னா அது கியூபாதான். சிங்கப்பூர் இல்லை.

அடுத்து தமிழிசை சொல்ற சிங்கப்பூர்ல 80% மக்கள் வரி கட்டுற இலட்சணத்தை பார்ப்போம். சிங்கப்பூருங்கிறது வளைகுடா மாதிரி பிழைக்க வந்த மக்களோட உழைப்புல வாழ்ற நாடு. அதனால் சிங்கப்பூர் குடிமக்களுக்கு கொஞ்சம் வசதி, வாய்ப்பு இருக்கலாம். ஏன்னா சிங்கப்பூர்ல மத்த நாட்டுல இருக்குற மாதிரி சட்டப்படியான குறைந்த பட்ச கூலின்னே ஒண்ணு கிடையாது. இந்தியாவுல கூட குறைந்த பட்ச கூலி இவ்வளவு கொடுக்கணும்னு சட்டம் இருக்கு. பீகாருல ரூ 160 -ன்னும், கேரளாவுல ரூ 750 -ன்னும் அந்த தொகை மாறுபடுது. இன்னும் விவசாய தொழிலாளிகளுக்கும் இந்தியா முழுவதும் சட்டப்படி இவ்வளவு கொடுக்கணும்னு இருக்கு.

உலகத்திலேயே அப்படி ஒரு சட்டம் இல்லாத நாடுன்னு சொன்னா அது சிங்கப்பூர்தான். 2014-வது வருசத்துலதான் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு 1000 -ம் டாலரும்னு, செக்யூரிட்டி வேலைக்கு மாதம் 1,100 டாலரும்னு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. இது போக மத்தவங்களுக்கு முதலாளிங்க எவ்வளவு கம்மியா சம்பளம் கொடுத்தாலும் அதை யாரும் தட்டிக் கேக்க முடியாது.

சிங்கப்பூரோட ஒரு டாலருங்கிறது இந்திய ரூபாயில 48 ரூபாய் வரும். ஒரு சாதாரண காய்ச்சலுன்னு இந்த தொழிலாளிங்க அரசோட பாலி கிளினிக் போனா குறைஞ்சது 30 டாலராவது செலவாகும்கிறாங்க. அதாவது இந்திய மதிப்பில் 1,400 ரூபாய் செலவழிக்கணும்.

பெப்சி தொழிலாளிங்க ஸ்ட்ரைக் நடந்தப்போ, விஜயோட கவலை மெர்சல் ஷூட்டிங் பத்தித்தானே ஒழிய, தொழிலாளர் ஊதிய்ம் பற்றி அல்ல!

மெர்சல் படம் ஷூட்டிங் நடக்கும் போது பெப்சின்னு சினிமா தொழிலாளி சங்கம் ஸ்ட்ரைக் பண்ணாங்க. அவங்க கோரிக்கை என்னங்க? மூணு வருசத்துக்கு ஒரு முறை சம்பளத்த கூட்டணும்னு விதி இருக்கும் போது இன்னும் ஏன் கூட்டலை, இப்ப விக்கிற விலைவாசியில குறைஞ்ச சம்பளத்துல வேலை பார்த்து ஓட்ட முடியுமா, எல்லா நாளும் சினிமா வேலை கிடைக்காத போது கம்மியான சம்பளம் நியாயமா – இதுதான் அவங்க கோரிக்கை.

ஆனா சினிமா முதலாளிங்க இதுக்கு ஒத்துக்கல! தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் இருக்குற நடிகர் விஷாலு, எங்களுக்கு பெப்சி சங்கமே தேவையில்லை, வெளிய இருந்து தொழிலாளிகளை ஏற்பாடு பண்ணிக்கிறோம்னு மிரட்டுனாரு. வேலை நிறுத்தம்தான் தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தைன்னு ரஜினிகாந்த் சொன்னாரு, இப்ப தளபதின்னு பேரு போட்டுறுக்குற விஜய் அப்ப வாயைத் திறக்கவே இல்லை. ஏன்னு யாராச்சும் கேட்டீங்களா?

சிங்கப்பூருல தொழிலாளிக்கு சட்டப்படி சம்பளம் இல்லேங்குற மாதிரி அங்க முதலாளிக்கு சட்டப்படியே வரியே கட்டவேண்டாம்கிற அளவுக்கு ஏகப்பட்ட சலுகை கொடுத்திருக்காங்க. அதனாலதான் வெளிநாட்டுல இருக்குற பல பண முதலைங்க சிங்கப்பூருலயும் கொஞ்சம் சொத்துக்களை மாத்தி வெச்சிருக்காங்க. நிறைய பேரு செட்டிலாகியிருக்காங்க. இது தொடர்பா எங்க வினவு தளத்துல நிறைய கட்டுரைங்க இருக்குது, படிச்சுப் பாருங்க!

பெப்சி தொழிலாளிகளுக்கு எதிராக நடிகர் விஷால்!

இந்தியாவுலயும் மறைமுக வரியை அதிகம் போட்டு மக்கள் மேல சுமத்துற மோடி அரசு, முதலாளிகளுக்கான நேரடி வரியை ரொம்பவே குறைச்சுட்டாங்க. இதைத்தான் சிங்கப்பூரு மாதிரி இங்கயும் மோடி முயற்சிக்கிறாருன்னு தமிழிசை சொல்றாங்க. தளபதி விஜயும் சிங்கப்பூருல இலவச மருத்துவம்னு அடிச்சு விடுறாரு!

ஆக இவங்க இரண்டு பேருக்கும் சிங்கப்பூரு மேட்டருல கருத்து வேறுபாடு கிடையாது. சரி, சாதாரண விக்கிபீடியா மேட்டர் அறிவு கூட இல்லாம இயக்குநர் அட்லி இப்படி ஒரு வசனத்தை ஏன் சேத்தாருன்னு உங்களுக்கு தோணலாம்.

7 சதவீத சிங்கப்பூருல மருத்தவம் இலவசம்னா, 28 சதவீத வரி கேக்குற இந்தியாவுல முடியாதான்னு ஒரு வாட்ஸ் அப் வதந்தியை பார்த்திருப்பாரு. நம்ம மக்கள் பலர் சிங்கப்பூரோட போக்கு வரத்து, வேலைக்கு போனவங்கங்கிறதால இங்க சிங்கப்பூர்னா ஒரு மரியாதை இருக்கு. அத வெச்சு அந்த மேட்டர் பொய்யா வந்தாலும் நம்ம ஆளுங்க அத உண்மைன்னு நம்புறாங்க. ஆனா ஒரு படத்தோட இயக்குநரும், நடிகரும் அத நம்புறாங்கன்னா இவங்களோட அறிவு, அரசியல், மேட்டரெல்லாம் என்ன லெவல்ல இருக்கும்கிறத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!

ஜி.எஸ்.டி-யை வெச்சு இந்த படத்துல தைரியமாக பாஜகவை எதிர்க்கிறாங்க-கிறது உண்மையா?

ஃப்ரோ, இன்னி தேதிக்கு பாஜக-காரனே ஜி.எஸ்.டி-யை எதிர்த்துப் பேசறான். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹான்னு ஏகப்பட்ட பேரு ஜி.எஸ்.டி சரியில்லேன்னு பேசுறாங்க. மத்தபடி எல்லா மக்களும், கட்சிகளும் ஜி.எஸ்.டியை கட்டி உரிச்சு உப்புக் கண்டம் போட்டு புதைக்கிறதுக்கு காத்திருக்காங்க. ஒரு தீப்பெட்டி வாங்குனாலும், தீபாவளி பட்டாசு வாங்கினாலும் ஜி.எஸ்.டி வரியால பாதிக்கப்படாத ஆளே எங்கேயும் இல்லை.

விஜயோட சினிமா உலகமும் கூட அந்த வரி அதிகம்னு சொல்லி பேசுனாங்களா இல்லையா? மத்தவங்களுக்கு எப்படியோ எங்களுக்காச்சும் குறைக்கணும்னு கமல்ஹாசன் கூட பணிவா பேட்டி கொடுத்தாருல்ல! மத்தபடி இந்த படம், ஜி.எஸ்.டி வரி கொடுமையானதுன்னோ, மக்களை வதைக்கிதுன்னோ, மோடி அரசு மக்களை ஒடுக்குதுண்ணோ சொல்லலை! இவ்வளவு வரி வாங்குறீங்களே, மருத்துவத்தை இலவசமாக கொடுக்கலாம்லன்னு கெஞ்சுது! அவ்வளவுதான். மக்களே ஜி.எஸ்.டி வரியே சாதாரண மக்களைப் பிழிந்து திரட்டப்படுற ஒரு கொள்ளை. அதை வாங்குற அரசாங்கத்த கண்டிக்காம, அதுல இருந்து இலவசம் கேப்பானா எவனாவது?

இன்னிக்கு பாத்தீங்கன்னா தமிழ்நாடே டெங்குவால பீதியில உறைஞ்சு போயிருக்கு. செத்தவங்களோட கணக்கை குறைக்கிறதுலதான் அரசாங்கம் கருத்தா இருக்கு. இதுக்கு முன்னாடி சிக்கன் குனியா, மலேரியா, காலரா, மூளைக் காய்ச்சல்னு சீசனுக்கு ஒரு வியாதியில நம்ம மக்கள் பட்ட கஷ்ட்டம் கொஞ்ச நஞ்சமில்லீங்க.

ஈழத்துலயோ, காஷ்மீரிலயோ, ஈராக்கிலயோ போரின் ஒடுக்குமுறையால வீட்டுக்கு ஒரு இழப்பு இருக்குங்கிற மாதிரி, தமிழகத்துல வீட்டுக்கு வீடு ஒரு மருத்துவ கஷ்டம் ரொம்பவே இருக்கு. இதுல முதல் கஷ்டம் பணம், அடுத்து அரசு மருத்துவமனையில வசதி இல்லாதது, பிறகு மருத்துவருங்க செய்யுற தவறுகள்னு பட்டியல் போடலாம்.

மெர்சல் படத்துல அப்பா விஜய் மீசை, வீபூதி வேட்டி சகிதமா “மதுரைக்கு போகாதடி” பாட்டு கெட்டப்புல இருக்காரு. அவரோட கிராமத்துல தீ விபத்துல பாதிக்கப்பட்ட குழந்தைங்கள காப்பாத்த முடியல. உடனே பஞ்சாயத்து கூடி விஜய் தலைமையில மருத்துவமனை கட்ட முடிவு செய்து தாய்மார்களெல்லாம் நகைகளை கழட்டி தாராங்க. கொஞ்சம் வசதியான கிராமம்தான் போல இருக்கு. ஏன்னா தற்கொலை செஞ்சுகிட்ட நீட் அனிதா வீட்ட பாத்தீங்கன்னா குடிசையும், மண்தரையும்தான் இருக்கு. சரி, சினிமான்னா கொஞ்சம் ரிச்சாத்தான் இருக்கணும் போல.

இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

அந்த புதிய மருத்துவமனைக்கு டாக்டராக வந்த வில்லன்கள் இரண்டு பேரு விஜய ஏமாத்தி ஆஸ்பத்திரியை கைப்பத்துறாங்க. விஜயும் அவரது மனைவியும் கொல்லப்படுறாங்க. இரண்டு குழந்தை விஜயும் பிரிஞ்சு ஒண்ணு ஐஞ்சு ரூபா டாக்டராகவும், இன்னொன்னு மாஜிக் கலைஞராகவும் மாறிடுறாங்க.

கடைசியில இரண்டு பேரும் சேந்து வில்லன பழிவாங்குறாங்க. அதுல இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

ஒரு ஆட்டோ டிரைவரோட மகளுக்கு விபத்து ஏற்படுறத வாயில இருந்து, மண்டையில இருந்து ரத்தம் பீறிட்டு வர்றதையெல்லாம் கொடூரமாக காட்டுறாங்க! ஏன்னா நாம்ம மருத்துவர்களோட வில்லத்தனத்தை கொடூரமா புரிஞ்சுக்கணும்ல, அதுக்குத்தான்.

அந்த ஆட்டோ டிரைவர் மகளை கொன்ன தனியார் மருத்துவமனை புரோக்கர், ஆம்புலன்ஸ் டிரைவர், பி.ஆர்.ஓ, டாக்டர் அத்தனை பேரையும் மேஜிக் விஜய் பிடிச்சு வித்தியாசமா கொல்றாரு. இப்படி படம் முழுக்க மருத்துவருங்க வில்லனா காட்டப்படுறாங்க.

ஒரு நோயால மரணமோ, பாதிப்போ எது இருந்தாலும் மக்கள் முதல்ல கோபப்படறது மருத்துவருங்க மேலதான். ஆனா மருத்துவருங்க மேல மட்டும் கோபப்பட்டு பிரோயஜனம் இல்லை.

தமிழ்நாட்டிலயோ இல்லை இந்தியாவிலயோ ஏன் உலகத்துலயோ பெரிய பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைங்கள கட்டி வெச்சு கொள்ளையடிக்கிறவங்களெல்லாம் மிகப்பெரும் நிறுவனங்களாகவோ இல்லை முதலாளிகளாகவோதான் இருக்காங்க. அப்பல்லோ பிரதாப் ரெட்டி மாதிரி ஒரு சில டாக்டருங்கதான் முதலாளிகளா இருக்காங்க. இவங்களும் டாக்டர் தொழிலை வெச்சு ஆஸ்பத்திரி கட்டலை. அரசு சலுகை, மானியம், வங்கி கடன் வசதி, பங்கு சந்தை இப்டித்தான் கட்டுனாங்க.

மெர்சல் படத்துல ரெண்டு சீனுக்கு ஒருவாட்டி எம்ஜிஆரைக் காட்டுறாங்க. அவருக்கு அப்புறம் நான்தான்னு காட்ட விஜய் நினைச்சிருக்கலாம். தலைவா படத்துக்கு அவர் கொடநாட்டுக்கு ஓடிப்போய் தவமிருந்தும் “அம்மாவை” பாக்க முடியாம படத்துல இருந்த பஞ்ச் டயலாக்கையெல்லாம் பட்டி டிங்கர் பாத்து தூக்குனது தனிக் கதை!

ஆனா அந்த எம்ஜிஆர்தான் தனது அடியாளுங்க மத்த அபிமானிங்க பலருக்கு சுயநிதிக் கல்லூரி துவங்கவும், மருத்துவமனைகள் கட்டவும் ஏராளமான அரசு நிலத்தை இலவசமாகவோ இல்லை மலிவு விலை குத்தகையாகவோ கொடுத்தாரு.

மியாட் மருத்துவமனை மோகன்தாஸ், ராமச்சந்திரா மருத்துவமனை உடையாரு, ஜெப்பியார் கல்லூரின்னு இதுல ஆதாயம் அடைஞ்சவங்க நிறைய பேரு! இதுல ஜேப்பியாரும், உடையாரும் சாராயம் ஓட்டுனவங்கன்னு உலகத்துக்கே தெரியும்.

இப்படி மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

1990-களில் இருந்தே நம்ம நாட்டுல பொது சுகாதாரத்தை அரசு கழுவிட்டு தனியாருக்கு தாரை வாக்கணும்னு முடிவு பண்ணீட்டாங்க. அதுதான் உலகவங்கி, உலக வர்த்தக கழகத்தோட ஆணை.

அதே மாதிரி தனியார் மருந்துக் கம்பெனிகள் அதுல உள்நாடு-வெளிநாடு இரண்டுமே அடிப்படை மருந்துகளுக்கு அதிக விலை வெச்சு கொள்ளையடிக்கிறாங்க. மத்திய அரசோட ஐடிபிஎல்-ங்கிற மருத்து நிறுவனமோ இல்லை கிங் மருந்து ஆராய்ச்சி நிறுவனமோ இப்பவா அப்பவான்னு சாகுற நிலைமையிலதான் இருக்கு.

அரசு மருத்துவமனைகள்ள பல வசதிகளை தனியார் சேவைன்னு மாத்திட்டாங்க. அங்கேயும் போதுமான மருத்தவருங்களோ, நர்சுங்களோ கிடையாது. நீட் வந்ததுக்கு பிறகு அரசு மருத்துவமனைங்கள்ள வேலை பாக்க புது டாக்டரே வரமாட்டாங்க!

நோயளிகளுக்கு தங்களோட மருந்துகளை எழுதணும்னு தனியார் மருந்துக்  கம்பெனிகள் டாக்டருகளுக்கு, பணமாவோ, சொத்தாவோ, இல்லை வெளிநாடு சுற்றுலாவோ பரிசா அளிக்கிறாங்க. அதுமாதிரி எல்லா சோதனைகளுக்கும் மருத்துவர்களுக்கு கமிஷன் உண்டு. அவன் கொடுக்குறாங்கிறதால இவன் எழுதுறான்.

அங்க அடிக்காம இவன திருத்த முடியுமா சொல்லுங்க! கூட்டிக் கழிச்சுப் பாத்தா நம்ம நாட்டுல மருத்துவத்துறையில் இருக்கும் தனியார் மயத்தை ஒழிக்காம, பன்னாட்டு நிறுவனங்களோட மருந்து ஏகபோகத்தை மறுக்காம நம்ம அரசு மருத்துவமனைகளை எப்படி காப்பாத்த முடியும்? சொல்லுங்க!

மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் அத்தனை பேரும் அரசு மருத்துவமனையிலதான் சிகிச்சை பெறணும்னு சொல்லுற விஜய் அதையே நடிகர்கள், பத்திரிகை துறையினர், தனியார் முதலாளிகள்னு சொல்ல மாட்டேங்குறாரு!

ரஜினியோ இல்லை விஜயகாந்தோ தும்முனாலும் துவண்டாலும் சிங்கப்பூர் போவாங்கன்னா அதை தளபதி விஜய் கண்டிக்க மாட்டாரா? இல்ல அவருதான் தன்னோட நோய்களுக்கு ஜிஎச்சுக்கு போவாரா?

மாசத்துக்கு 1500 ரூபாய் ஊதியம் வாங்குற ஒரு இந்தியக் குடிமகன், மருத்துவர் கிட்ட ஐஞ்சு ரூபா கொடுக்குறதே அதிகம்ணு சொல்ராறு விஜய். சரிங்க ஆபிசர், அதே மாதிரி உங்க படத்துக்கு முதல் நாளுல ரசிகருங்க ஐநூறு, ஆயிரம்ன்னு கொட்டிக் கொடுக்குறதும், இல்லேன்னா சட்டபூர்வமாகவே மல்டிபிளக்சுல 160 ரூபாயும், மத்ததுல 120-ம் கொடுக்குறத மட்டும் சரியா? இல்லை இந்தியக் குடிமகன் 1500 ரூபாய் வாங்குறதால இனி விஜய், அஜித், ரஜனி, கமல் அத்தனை பேரும் ஒரு  படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் வேணாம், ஒரு ஐம்பது இலட்சத்தை மட்டும் வாங்கிப்பாங்களா?

இல்லை லாஜிக்க மாத்திப் போட்டா ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறவன் டாக்டருக்கு ஐஞ்சு ரூபா கொடுக்குறது நியாயமனா, கோடிகளில் சம்பளம் வாங்குறவன் இலட்சக் கணக்குல ட்ரீட் மெண்ட் எடுக்குறது நியாயம்ணு வருதா இல்லையா?

ஐயா, அந்த காலத்துல நடிகருங்க தங்களோட மார்க்கெட்டுக்கு ஒரு சென்டிமென்ட் டச்சு கொடுக்குறதுக்குண்ணே, மூணு சக்கர சைக்கிள், இஸ்திரிப் பெட்டி, கல்வி உதவித் தொகை, பிரியாணி சாப்பாடுன்னு கொடுப்பாங்க. இப்ப சமூக வலைத்தளங்களோட காலத்துல இப்பிடி பிசிக்கலா பொருளா கொடுக்கணும்னு அவசியமில்லே.

கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்தால தானம் கொடுக்குற மாதிரி, விஜய் மாதிரி எல்லா நடிகருங்களும் படத்துல மெசேஜ் கொடுக்குறாங்க. இது இஸ்திரிப் பெட்டியை விட   ஒரு போராளி பில்டப்பை கொடுக்குது. அதனால்தானே கபாலியில ரஜினியை கூட ஒரு சமூகப் போராளின்னு தூக்கிச் சுமந்தாங்க சிலபேரு! சைக்கிள் செலவும் மிச்சம், சைக்கிள் கேப்புல நடிகருங்க போராளியாவும் ஆகலாம்.

ஹாலிவுட்டுலேயே இப்பல்லாம் வில்லன்னா கார்ப்பரேட் கம்பெனிங்களையும், முதலாளிகளையும் காட்ட ஆரம்பிச்சாட்டங்க! அப்பதான் மக்களோட சிந்தனையில படத்தை ஓட்ட முடியும். அது இப்ப தமிழ் சினிமாவுக்கும் வந்தாச்சு. மத்தபடி இந்த மசாலாவை மெசேஜ்னு சொல்லி நம்மள நாமே ஏமாத்துனா, இங்க டெங்கு நோய் ஏன் நம்மள கொல்லாது சொல்லுங்க!

_____________

இந்த சினிமா விமர்சனம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி