privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஏர் – இந்தியா : மகாராஜா விற்பனைக்கு !

-

ஏர் – இந்தியா தனியார் : 2ஜி ஊழலை விஞ்சுமோ ?

ர்-இந்தியா நிறுவனம் தொடர்ச்சியான நட்டத்தைச் சந்தித்து வருவதாகத் தேசிய பொருளாதாரக் கள ஆய்வு நிறுவனத்தின் 2016-2017-ஆம் ஆண்டுக்கான அறிக்கை திரியைக் கொளுத்திப் போட, அந்த அறிக்கையின் அடிப்படையில் ஏர்-இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்க வேண்டுமென நிதி ஆயோக் பரிந்துரைத்தது. அப்பரிந்துரையை ஏற்றுக் கொண்டுவிட்ட மைய அமைச்சரவைக் கமிட்டி, ஏர்-இந்தியா 52,000 கோடி ரூபாய் அளவிற்குக் கடனில் சிக்கியிருப்பதைக் காட்டி, இத்தனியார்மயமாக்கலை நியாயப்படுத்தி வருகிறது.

இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களையே அடிமாட்டு விலைக்குக் கேட்கும் இந்தக் காலத்தில்,  இவ்வளவு கடன் தொகையுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்க முன்வந்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இது டாடாவின் பெரிய மனதைக் காட்டுகிறதா அல்லது இதற்குப் பின்னே வேறு ஏதாவது ஆதாயம் இருக்கிறதா என்பதற்குள் செல்லும் முன்னே, 2006-ஆம் ஆண்டு வரையில் இலாபத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் நட்டத்திற்குள் தள்ளப்பட்ட கதையைத் தெரிந்து கொள்வது அவசியமானது.

விமான சேவையில் தனியார்மயம் திணிக்கப்பட்டதையடுத்து, தனியார் நிறுவனங்களோடு போட்டிபோடும் திறனை மழுங்கடிக்கும் சதித்தனத்தோடு, 1998 தொடங்கி 2003 வரையிலும் ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்குப் புதிய வானூர்திகள் வாங்கி, அதனை நவீனப்படுத்துவது கைகழுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனங்களின் இலாபம் சரிந்து, அவை தள்ளாடிக்கொண்டிருந்த  சமயத்தில், 2004 ஆம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனங்களுக்கு 41,000 கோடி ரூபாய் செலவில் 68 புதிய வானூர்திகள் வாங்கும் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக மைய அரசு 325 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கியது. மீதிச்சுமை முழுவதும் அந்நிறுவனங்களின் தலையில் சுமத்தப்பட்டது. புதிய வானூர்திகள் வாங்குவதில் நடந்த முறைகேடுகளும், அதனால் ஏற்பட்ட கடன் சுமையும் இந்த இரண்டு நிறுவனங்களையும் நட்டத்தை நோக்கித் தள்ளிச் சென்ற சமயத்தில், ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும் முடிவை எடுத்தது, மன்மோகன் சிங் அரசு.

மேலும், மூன்றாண்டுகளுக்கு முன்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலருக்கும் மேலாக அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்நாட்டில் விமான எரிபொருள் விலையும் அதிகரித்தது. ஏற்கெனவே வலிந்து கடனுக்குள் தள்ளப்பட்டிருந்த நிலையில், இலாபம் தரத்தக்க வழித்தடங்கள் தனியார் வானூர்தி நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருந்த நிலையில், விமான பெட்ரோல் விலையேற்றம் ஏர் இந்தியாவிற்கு இன்னொரு சுமையாக மாறியது. இக்காலக்கட்டத்தில்தான் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருடாந்திர நட்டம் 5,000 கோடி ரூபாயாகவும், அதனின் கடன் சுமை 43,500 கோடி ரூபாயாகவும் அதிகரித்தது.

இந்த நிலையில், ஏர்-இந்தியா நிறுவனத்திற்குப் புத்தாக்க நிதி கொடுத்து, அதனை மீட்கும் திட்டத்தைக் கடந்த 2012-ஆம் ஆண்டு காங்கிரசு அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மூன்றாண்டுகளில் ஏர்-இந்தியா நிறுவனம் நட்டத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதோடு, அதனின் வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2015-16 ஆம் ஆண்டில் ஏர் இந்தியாவின் இலாபம் 105 கோடி ரூபாயாகவும், அதற்கடுத்த 2016-17 ஆம் ஆண்டில் 1,086 கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. தனது வருமானத்தின் மூலமாகவே தனது கடன்களை அடைத்துக் கொள்ளும் நிலைமையை ஏர்-இந்தியா இன்று வந்தடைந்திருக்கிறது. ஆனால், மோடி அரசோ, வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைத்த கதையாக, புத்தாக்கத் திட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது.

ஏர்-இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவது என முடிவெடுத்தவுடனேயே, அதன் கடன் தொகையில் சுமார் ரூ.20,000 கோடியைத் தள்ளுபடி செய்யப் போவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். அதன் விமான ஓடுதள வாடகை உள்ளிட்ட ரூ.8,000 கோடி பெறுமான கடன்களை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார். மொத்தத்தில், ஏர்-இந்தியாவை டாடாவோ அல்லது வேறு எந்த தனியார் நிறுவனமோ வாங்கினாலும், இத்தள்ளுபடிகள் போக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வெறும் ரூ.24,000 கோடி மட்டுமே கடன் தொகையாக எஞ்சி நிற்கும்.

ஏர்-இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 20,000 கோடி ரூபாயைத் தொடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு அப்பால், அதற்குச் சொந்தமான 118 அதிநவீன  விமானங்கள், பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் ஏர் இந்தியாவின் சார்பாகச் செலுத்தப்பட்டிருக்கும் பிரீமியம் தொகை மற்றும் அதன் 5 துணை நிறுவனங்கள் என மேலும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டிருக்கிறது ஏர்-இந்தியா. இந்தச் சொத்து மதிப்புகளோடு ஒப்பிட்டால், அரசு தள்ளுபடி செய்த பிறகு எஞ்சி நிற்கும் ஏர் இந்தியாவின் கடன் தொகை – 24,000 கோடி ரூபாய் என்பது வெறும் பூஜ்யம்தான். இந்த அத்துணை சொத்துக்களோடும் ஏர் இந்தியாவைத் தனியார்மயமாக்க மோடி அரசு முடிவெடுத்திருப்பதால்தான், தானே வலிய முன்வந்து, ஏர் இந்தியாவின் கடனையும் பொருட்படுத்தாமல், அதனை வாங்கிவிட முன்நிற்கிறது, டாடா நிறுவனம்.

வாஜ்பாய் தலைமையில் இருந்த முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, இந்தியத் தொலைதொடர்புத் துறைக்குச் சொந்தமாக இருந்த சர்வதேச தொலைதொடர்பு சேவை நிறுவனமான வீ.எஸ்.என்.எல். டாடாவிற்கு விற்கப்பட்டது. அச்சமயத்தில் வீ.எஸ்.என்.எல். தன்னிடம் ரொக்கக் கையிருப்பாக மட்டும் 1,000 கோடி ரூபாயை வைத்திருந்தது. “ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” என்ற பழமொழிக்கு ஏற்ப, டாடா அந்த ஆயிரம் கோடியை லவட்டிக்கொண்டு, தனது சொந்த நிறுவனமான டாடா டெலிசர்வீசஸின் நட்டத்தை ஈடுகட்டிக் கொண்டார். இப்பொழுது எந்த நட்டத்தை ஈடுகட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை விழுங்க டாடா திட்டமிடுகிறது  என்பது தேவ இரகசியம்.

பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்ட ஏர் இந்தியாவை விற்பதற்கு எந்தவிதமான சர்வதேச டெண்டரும் கோராமல், தாம்பாளத்தில் வைத்து டாடாவிடம் தூக்கிக் கொடுக்க மோடி அரசு முயலுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. “டெண்டர் கோராமல், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை விற்பனையை ஊழல்” எனச் சொல்லி சாமியாடிய பார்ப்பன ஊடகங்கள், மோடி அரசின் இந்த முறைகேடு குறித்துக் கண்டும் காணாமல் நடந்துகொள்கின்றன. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் அல்லவா!

-அழகு

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.

நண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங் கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி