privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன ? விழுப்புரம் பொதுக்கூட்டம் !

இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன ? விழுப்புரம் பொதுக்கூட்டம் !

-

விழுப்புரம் வட்டம் மக்கள் அதிகாரம் சார்பாக 28.10.2017 சனிக்கிழமை, மாலை புதிய பேருந்து நிலையம் அருகில் ஜல்லிக்கட்டுத் திடலில் “இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன? அரசியல் அராஜகங்களுக்கு, அக்கிரமங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு தோழர்.சிவானந்தம் (பொருளாளர், விழுப்புரம் வட்டம் – மக்கள் அதிகாரம்) தலைமை தாங்கினார். தோழர்கள் ஞானவேல் (புரட்சிகர மாணவர்-இளைஞர் முண்ணனி அமைப்பாளர், விழுப்புரம்), மோகன்ராஜ் (விழுப்புரம் மண்டலம் ஒருங்கிணைப்பாளர்- மக்கள் அதிகாரம்), செல்வக்குமார் (விழுப்புரம் வட்டம் ஒருங்கிணைப்பாளர்- மக்கள் அதிகாரம்) உரையாற்றினார்கள். தோழர்.காளியப்பன் (மாநில பொருளாளர்- மக்கள் அதிகாரம் தமிழ்நாடு) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மோடியின் பணமதிப்பு நீக்கத்தால் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களுக்கும், காவிரி நீர் தடுத்து நிறுத்தப்பட்டு வறட்சியால் நெஞ்சு வெடித்து உயிரிழந்த விவசாயிகளுக்கும், நீட் நுழைவுத் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கும், கந்துவட்டி கொடுமையால் கலெக்டரும், போலீசு துறையும் வைத்த தீயில் கருகிய இசக்கிமுத்து குடும்பத்திற்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதையடுத்து கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர். சிவானந்தம் அவர்கள் பேசுகையில் “இன்று டெங்குவால் மக்கள் கொத்து கொத்தாக சாகின்றனர், நேற்று விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர், NEET- தேர்வால் மாணவர்கள் இறக்கின்றனர், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மாட்டுக்கறி தடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவு திட்டங்களை RSS-BJP கும்பல் திணித்து தமிழகத்தை சுடுகாடாக்குகிறது.

இந்த கொலைகார அரசிடமே சென்று மீண்டும் மீண்டும் மனுக் கொடுத்து, மன்றாடி  நம் பிரச்சனைகளுக்கு தீர்வு தேட போகிறோமா? அல்லது இந்த கட்சிகளுக்கு பதில் அந்தக் கட்சி என ஓட்டின் மூலமே தீர்வு தேடப் போகிறோமா? அல்லது இவர்கள் யாரும் சரியில்லை இன்று சினிமாக்காரர்கள் நன்றாக பேசுகிறார்கள்,படத்தில் கருத்து கூறுகிறார்கள் என்று அவர்கள் பின்னால் சென்று அவர்களுக்கு கொடி பிடிக்கப் போகிறோமா? இல்லை எப்படி மெரினாவில் சாதி கடந்து, மதம் கடந்து, அரசியல் கட்சிகளை தூக்கி எறிந்து, சினிமா மோகத்தை மறந்து, அதிகாரம் செலுத்தி நம் உரிமைகளை நாமே மீட்டு எடுத்தோமோ அது போன்ற போராட்டங்களை மீண்டும் முன்னெடுத்து நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண போகிறோமா? என்பதை விளக்கவே இந்த கூட்டம்” என்று முடித்தார்.

அவரைத் தொடர்ந்து தோழர்.ஞானவேல் பேசும்போது “வெறிநாய் கும்பலிடம் ஒரு ஆடு தனியாக மாட்டிக்கொண்டால் அதன் கதி என்னவோ? காம வெறிப் பிடித்த மிருகங்களிடம் ஒரு பெண் தனியாக மாட்டினால் அவள் கதி என்னவோ?” அப்படி இந்த அரசிடம் மக்கள் சிக்கி அவர்களுடைய வாழ்க்கை சின்னாபின்னமாக, கந்தல் கந்தலாக சீரழிந்து கொண்டிருக்கிறது.

மோடி வந்த பிறகு மக்களின் மீது அனைத்து திட்டங்களும் வலுக்கட்டாயமாக, அடாவடித்தனமாக திணிக்கப்படுகின்றன. இன்று நீட் தேர்வு வந்தபின் மாணவர்களின் கதி என்ன? நாங்கள் நீட்-ன் மூலம் மருத்துவ தரத்தை உயர்த்தப் போகிறோம், கட்டண கொள்ளையை தடுக்கப்போகிறோம், சுயநிதிக் கல்லூரிகள், தரமில்லா மருத்துவக் கல்லூரிகளுக்கு முடிவு கட்டப்படும் என்றெல்லாம் மோடி அரசு உதார் விட்டது.

காங்கிரஸ் அரசாங்கத்தின் போது நீதிபதி அல்கபீர் தாமஸ் என்பவரால் நீட் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் BJP ஆட்சிக்கு வந்த பிறகு அணில் ஆர் தவே என்ற RSS நீதிபதியால் மீண்டும் நீட் கொண்டுவரப்பட்டு, அனிதா உயிர் காவு வாங்கப்பட்டதோடு, அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளைகளும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றபட்டுள்ளனர்.

கேதான் தேசாய் போன்ற கிரிமினல்கள் மருத்துவ கவுன்சில் தலைவராகவும், கீதாலக்ஷ்மி போன்ற கிரிமினல்கள் துணை வேந்தர்களாகவும் நீடித்ததால்தான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி SVS கல்லூரியில் மூன்று மாணவிகள் பலியாகினர். இப்படி மாணவர்களின் உயிர்களை குடித்த கிரிமினல் நடத்தக்கூடிய கல்லூரிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்குகிறது.

கல்வியை அரசின் பொறுப்பிலிருந்து விடுவித்து HERA போன்ற முறைகளால் இனி தனியார் தான் மாணவர்களின் கல்வியை தீர்மானிக்கும். இனி யாரும் படிக்க கூடாது, காசு இருப்பவன் படிச்சிக்கோ, இல்லாதவன் அவன் அப்பன் தொழிலை செய்ய வேணும் என்று இந்த பார்ப்பன RSS, மோடி – கும்பல் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகிறது.

இப்படி தனியார் நிறுவனங்களின் ஊழலையோ, கட்டணக் கொள்ளையையோ  கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. இது தான் கல்வியை அனைவரும் சமமாக பயில இந்த யோக்கியர்கள் கொண்டு வரும் திட்டம்.

இனியும் மக்கள் ஒன்றிணையாமல், போராடாமல் தீர்வு இல்லை. எப்படி  ஒரு ஓட்டை வண்டியில் பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தோ அப்படி இந்த கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு தேடுவது பயனளிக்காது! நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. இதற்கு வெளியில் தான் தீர்வு. எங்களோடு சேர்ந்து செயல்பட வாருங்கள்” என்று பேசி முடித்தார்.

அதன்பின்னர் பேசிய தோழர் மோகன்ராஜ் அவரது உரையில் “இன்று தமிழக மக்களை காவு வாங்கி கொண்டு இருக்கும் டெங்கு என்பது வேற எதுவும் இல்லை இந்த மோடி கும்பலும், எடப்பாடி- பன்னீர் கும்பலும் தான்.

அவர்களை ஒழித்தாலே டெங்குவும் ஒழிந்து விடும், மக்கள் கஷ்டமும் தீரும். அரசு மருத்துவமனைகளில் பத்து நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நூறு நோயாளிக்கு ஒரு மருத்துவர் தான் உள்ளனர். ஒரு வார்டில் 32 இருக்கைகள் உள்ளன. ஆனால், 100 – 150 பேர் தரையில் படுத்துள்ளனர். எப்படி மாட்டுப் பட்டியில் மாடுகளை அடைத்து வைத்து இருப்பார்களோ அப்படி மக்களையும் அடைத்து வைத்துள்ளனர்.

போதிய மருத்துவர் இல்லை, மருந்துகள் இல்லை, படுக்கை  வசதி இல்லை. இதை ஏன் என்று மருத்துவ அதிகாரியிடம்  கேட்டால் எங்க கிட்ட இவ்ளோ தான் வசதி இருக்கு நாங்க என்ன பண்ண முடியும். இருப்பதை வைத்து தான் மருத்துவம் பார்க்க முடியும், நீங்க இதை மேலிடத்தில் தான் கேட்க வேண்டும் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.

ஆனால் மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் வசதி இருக்கு மக்களுக்கு இல்லை. இது தான் இவர்களின் யோக்கியதை. இன்னொரு புறம் கொசுவை ஒழிக்கிறோம் என்ற பெயரில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் நகராட்சி அபராதம் விதிக்கிறது. நாங்கள் விழுப்புரம் மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்ட, நகராட்சிகளில் உள்ள அரசு அலுவலகம், வாய்க்கால்கள் என்று ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களோடு நகராட்சியை முற்றுகையிட்டு போராடினால் அவர்களும் நாங்கள் என்ன செய்ய மேலிடம்… என்று சொல்கிறார்கள்.

எனவே மக்களே இனியும் இந்த அரசை நம்பி நாம் வாழ முடியாது. இவர்கள் நம்முடைய வேலையாட்கள் தான். இவர்களிடம் கெஞ்சுவதை நாம் விட்டுவிட்டு இவர்களுக்கு ஆணையிடுவதும், இவர்களிடம் நாம் அதிகாரம் செலுத்துவதன் மூலமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இது தான் மக்கள் அதிகாரம்” என்று முடித்தார்.

அவரையடுத்து தோழர் செல்வக்குமார் பேசும்போது “இன்று மக்களிடம் போய் இந்த ஆட்சியைப் பற்றி கேட்டாலே எடப்பாடி – ஓபிஎஸ் என்ற அடிமைகள் நம்மை  ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். ஏன்னென்றால் மக்களுக்கு பிரச்சனை தெரியாமல் இல்லை. அனால் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தான் தெரிவதில்லை. அந்த தீர்வை சொல்வதற்குத் தான் இந்த பொதுக்கூட்டம்.

இப்போதெல்லாம் திருடர்கள் பயப்படுவதில்லை. எந்த வீட்டில் திருடுகிறார்களோ அந்த வீட்டிலேயே சமைத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டு தூங்கிவிட்டு ஹாயாக போகிறார்கள். அது போலத்தான் இந்த அரசும் இன்று மக்களின் வரிப்பணத்தை கொள்ளையிட்டுக் கொண்டு அவர்களை காக்காமல் சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பராமரிக்காமல், மருத்துவக்கழிவுகளை அகற்றாமல், வாய்க்கால்களை மூடாமல், குப்பைகளை முறையாக பராமரிக்காமல் மக்கள் வசிப்பிடங்களிலேயே போட்டு விட்டு இன்று மக்கள் மீது பழி போட்டு அவர்களையே குற்றவாளிகளாக்கி அபராதமும் வசூல் செய்கின்றனர்.

இன்னொரு பக்கம் நேர்மையானவர்களின் நிலைமை என்ன? விஷ்ணுப்பிரியா, முத்துக்குமாரசாமி, சகாயம் – இவர்களின் நிலை என்ன? பெங்களூர் DSP கணபதி கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் மற்றும் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று எழுதி வைத்து உயிரிழந்தார். DSP கணபதியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் தந்தை சுப்ரீம் கோர்ட் சென்றுதான் முதல் தகவல் அறிக்கையையே பதிந்துள்ளார். அதுவும் மூன்று மாத போராட்டத்திற்கு பின். இதுதான் நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் அவலம்.

அதிகார வர்க்கம் பெரும்பாலும் ஊழலிலும், முறைகேடுகளிலும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு விழுப்புரம் முழுக்க மூணு சீட்டு, கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது போலீசுக்கு தெரியாதா? தெரியும். ஆனால் இந்த அரசு தடுக்காது. ஏனென்றால் மாமூலோடு சேர்த்து போனஸ் வாங்கும் போலீசுதுறை எப்படி இதைத் தடுக்கும்?

இந்த அரசுக் கட்டமைப்பில் நேர்மையானவர்களுக்கு இடமில்லை. ஏனென்றால் இது கிரிமினல்களின் கூடாரம். இங்கே நேர்மையானவர்களுக்கு கிடைப்பது மரணம், இல்லையென்றால் டம்மியான பதவிகளுக்கு தூக்கி எறியப்படுவார்கள். டாஸ்மாக் விசயத்தில் ஐயா சசிப்பெருமாள் நிலை என்ன?

ஆனால் மக்களே அதிகாரத்தை எடுத்து “மூடு டாஸ்மாக்கை” என்ற போராட்ட வழியை காட்டினோம். இன்று மக்களே மூடுகிறார்கள்.

இன்னொருபுறம் BJP, RSS, சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற சங்க பரிவாரங்கள் மக்கள் மீது இந்துத்துவத்தை திணிக்கின்றன. ஆனாலும் மோடியின் அனைத்து இந்தியாவும் கிழிந்து தொங்குகிறது. இன்று அனைத்து மக்களும் வீதிக்கு வந்துவிட்டனர்.” என்று முடித்தார்.

அடுத்து சிறப்புரையாற்றிய தோழர் காளியப்பன் பேசும்போது “உலகத்திலேயே சிறந்த அற இலக்கியத்தையும், நீதி இலக்கியத்தையும் கொண்டது தமிழ்நாடு. திருக்குறள் ஒன்றுக்காகவே நாமெல்லாம் பெருமைப்படலாம். ஒரு மன்னன் எவ்வாறு நாட்டை ஆள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

”நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.”

என்று எந்நாளும் மக்களை தேடித்தேடிச் சென்று அவர்கள் விருப்பத்தை அறிந்து மன்னன் செயல்பட வேண்டும். மக்கள் எங்களுக்கு நிலம் கொடு, வீடு கொடு, என்று கேட்டால் அது நாடு அல்ல. மக்கள் மனதில் நினைப்பதற்கு முன்னால் அவர்களை காத்து நிற்பது தான் மன்னனின் கடமை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜனநாயகம் என்றால் என்னவென்று மக்களுக்கு தெரியாது. அப்போது சட்டமன்றம் இல்லை, பாராளுமன்றம் இல்லை,  கலெக்டர் இல்லை, தாசில்தார் இல்லை, போலீசு இல்லை, உளவுப்பிரிவு இல்லை. ஆனாலும் மக்கள் வாழ்ந்தார்கள்.

பின்னர் மன்னர்கள் ஆண்டார்கள். மன்னன் வைத்தது தான் சட்டம், அவனை எதிர்த்து யாரும் கேட்க முடியாது. அது போலத்தான் அ.தி.மு.க. என்றொரு கட்சி இன்று கொள்ளை கூடாரமாக, கொள்ளை அடிப்பதை பிரிப்பதில் தான் சண்டை போட்டுக்கொண்டு   மக்கள் பிரச்சனைகளை கேட்பதற்கு கூட நாதி இல்லாமல், முட்டாள்களின் கூடாரமாக தினம்தினம் அராஜகங்களை அரங்கேற்றுகின்ற ஒரு கேவலமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

டெங்கு நோய் உயிரைக் கொல்லும் அளவுக்கு பெரிய நோய் அல்ல. ஆனால் ஒரு கொசுவைக் கூட ஒழிக்க முடியாத இந்த அரசின் சார்பாக, டெல்லியிலிருந்து, ஆம்னி பஸ்சின் மூலம் டெங்கு கொசு வருகிறது என  தெர்மாக்கோல் மேதை சொல்லுகிறார். வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டால் கொசு வராதாம். நாம் நோபல் பரிசுக்கு இந்தியாவிலிருந்து  அ.தி.மு.க. அமைச்சர்களை சிபாரிசு செய்யலாம். அந்தளவுக்கு அறிவாளிகளாக உள்ளனர்.

மதுரை ராஜாஜி தலைமை மருத்துவமனையில் என்ன நடந்தது. ஒரு துப்புறவு பணிப்பெண் ஊசி போட்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார், தலைமை மருத்துவமனைகளின் நிலையே இதுதான். மற்ற மருத்துவமனைகளைப் பற்றி சொல்லவா வேண்டும். இந்த அரசு எழவு வீட்டிலும் திருடுகின்றது. கொசு மருந்து அடிப்பதற்கு வக்கில்லாது மக்கள் மீது பழிப்போட்டு அபராதம் என்ற பெயரில் திருடுகிறது.

ஒரு பக்கம் டெல்டா விவசாயிகள் வறட்சி, பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. கடன் கிடைக்கவில்லை, காவிரியில் தண்ணீர் வரவில்லை என செத்து மடிந்தார்கள், திருப்பூரிலே நெசவுத்தொழில் அழிந்து அங்கு மக்கள் தங்கள் உடம்பை விற்று பிழைக்க வேண்டிய நிலை. சென்னை காசிமேட்டில் மீனவர்கள் சீன என்ஜின் படகுகளுக்கு எதிராகப் போராடினால் அவர்கள் மீது தடியடி நடத்துகிறது போலீசு. ஏனென்றால் அந்த சீன என்ஜின் படகுகள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமானவை.

கந்துவட்டியால் இசக்கிமுத்து குடும்பம் தீக்குளித்ததற்கு “அவர் ஏன் அவ்வளவு கடன் வாங்கணும், விரலுக்கு ஏத்த வீக்கம் வேணும்” என ஒரு அமைச்சர் பேசுகிறான். திருப்பூரில் ஐம்பது கோடி மதிப்புள்ள நூற்பாலை முதலாளி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாரே அதற்கு யார் பொறுப்பேற்பது?  இப்படி மக்கள் சாவதை கண்டுகொள்ளாமல் எங்களை அம்மாவின் ஆவி தான் வழி நடத்துது,  ஆவிக்கூட பேசினேன் என்று அராஜகங்களை நாள்தோறும் அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

‘குட்கா புகழ்’ விஜயபாஸ்கர் டெங்குவுக்காக 26 கோடி ஒதுக்கியதாக கூறுகிறார், ஆனால் MGR நூற்றாண்டு விழாவுக்கு 76 கோடி செலவு செய்கிறது எடப்பாடி அரசு. எம்.ஜி.ஆர் -க்கு விழா எடுக்கும் அளவுக்கு அவர் என்ன செய்து விட்டார். அவர் தமிழகத்துக்கு கொடுத்த கொடை என்பது ஜெயா என்கிற சதிகாரியை கொண்டுவந்தது தான்.

ஜெயா தமிழகத்தை இருந்தும் கெடுத்தார், இறந்தும் கெடுக்கிறார். இப்போது ஜெயா செத்ததுக்கு விசாரணையாம். அனைவரும் பிறக்கும்போதே கட்டாயம் இறப்பும் இருக்கும். தேர்தல் நேரத்திலேயே அந்த அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என எல்லோருக்கும் தெரியும். அதுவா பிரச்சனை? அவரை மருத்துவமனையில் வைத்து 75 நாள் மக்களை ஏமாற்றிய சசி, ஓ.பி.எஸ், எடப்பாடி, மோடி, கவர்னர், வெங்கையா நாயுடு இவர்கள் மேல் தான் விசாரணை வைக்கவேண்டும். இந்தக் கொள்ளைக்கார ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்று ஊழல் கண்காணிப்புத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரியே சொல்கிறார்.

இன்னொருபுறம் மோடியின் ஜி.எஸ்.டி. நாட்டின் பொருளாதாரத்தையும், வணிகர்களையும் அழிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் 2% வீழ்ச்சி. அதாவது 1% என்பது 15 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேட்டால் ஒரே வரி, ஒரே தேசம் என்று இந்த காவி கும்பல் பிதற்றுகிறது. சுருக்கமாக இந்த GST என்பது இனி தரகு முதலாளிகளும், அம்பானி, அதானி, போன்றவர்களும் வரிகட்ட தேவை இல்லை. அதாவது ஜவுளி வணிகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு இடத்தில் நூல் வாங்குவார், ஒரு இடத்தில் தைப்பார், ஒர் இடத்தில் எம்ப்ரைடு பண்ணுவார் இவருக்கு வரி. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து வணிகம் செய்யும் அம்பானி போன்றவர்களுக்கு வரி இல்லை ஏனென்றால் அவர் உற்பத்தியாளர் ஆகிவிடுகிறார்.

முன்பு ஒருவர் 5 லட்சம் வியாபாரம் செய்தால் அவர் செய்த வியாபாரத்திற்கு ஏற்றதுபோல் வரி செலுத்தினார். ஆனால் இன்று அந்த 5 லட்சத்துக்கு வாங்கியவர்கள் வரியை கட்ட வேண்டும் அது தான் GST. இன்று நாட்டில் நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் மோடியின் பணமதிப்பு நீக்கம் தான் என்று அனைத்து முதலாளித்துவ பத்திரிக்கைகளே எழுதுகின்றன. இன்னும் சொல்லப்போனால் BJP-யை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அருண்சோரி, சுப்ரமணியசாமி போன்றவர்களே இதை பேசுகின்றனர்.

அமித்ஷாவின் மகன் ஒரு வழக்கில் சிக்குகிறார். அவரை விசாரிப்பதற்கு பதில் விசாரிக்க சொல்கிறவர்கள் மீது வழக்கு போடுகிறது இந்த யோக்கியர்களின் கட்சியான BJP. இப்படியாக விவசாயிகள், வணிகர்கள், சிறுதொழில்கள், மாணவர்கள், மீனவர்கள், முற்போக்காளர்கள், என்று யாருமே வாழமுடியாத சூழலிலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எனவே இந்த கொலைகார அரசிடம் போய் தீர்வு தேடுவதை விட்டு விட்டு இதற்கு வெளியில் தீர்வை தேடுவது தான் சரியாக இருக்கும். மீண்டும் மெரினா போராட்டத்தை, ஒரு அமைப்பாக, ஒரு அரசியல் தலைமையின் கீழ் முன்னெடுக்க வேண்டும்” என்று முடித்தார்.

இறுதியாக கூட்டத்திற்கு தோழர். வித்யாசாகர் நன்றியுரை கூறினார். வட்டாரக்கலைக்குழு தோழர்கள் உரையின் இடையிடையே புரட்சிகர பாடல்களை பாடி எழுச்சியூட்டினர்.

மக்கள் அதிகாரம் தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுக்கட்சியை சேர்ந்த ஜனநாயக சக்திகள் என கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் – மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க