privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்டெங்கு : செயலிழந்த எடப்பாடி அரசும் மாநகராட்சியுமே குற்றவாளிகள் !

டெங்கு : செயலிழந்த எடப்பாடி அரசும் மாநகராட்சியுமே குற்றவாளிகள் !

-

“அரசியல் அக்கிரமங்களுக்கு; அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை !”

தமிழக மக்களுக்கு வரக்கூடாத நோய்களான டெங்கு, மர்ம காய்ச்சல் என்ற வைரஸ் நோய்கள், தமிழகத்தில் EPS – OPS கும்பல் ரூபத்தில் வந்து வாட்டிக்கொண்டுள்ளன. இன்று அதனை ஒழிப்பதற்கான வழி நம் முன் ஒன்றே ஒன்று தான் உள்ளது. இந்த அரசமைப்பை ஒழிக்க வேண்டும்.

அதற்கு வழிகாட்டும் விதமாக திருப்பூரில் கடந்த 31.10.2017 செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

“அரசியல் அக்கிரமங்களுக்கு, அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை !

டெங்கு: தொடரும் மரணம் ! செயலிழந்த எடப்பாடி அரசும் மாநகராட்சியுமே குற்றவாளிகள் ! ”

– என்ற முழக்கத்தின் பெயரில் திருப்பூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர் தனது தலைமையுரையில் கடந்த 3 ஆண்டு மோடி ஆட்சியிலும் அவரது கைப்புள்ளைகள் EPS – OPS ஆட்சியிலும் டாலர் சிட்டியான திருப்பூர் தொழில் வளர்ச்சி இன்றி காலிக் கூடாரங்களாக மாறி வருவதும், குப்பைகளின் வளர்ச்சியில் திருப்பூரில் நோயளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருவதையும், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கூட ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் கைதிகளைப் பார்ப்பது போல மருத்துவரை சந்திக்கும் அவல நிலையையும் விளக்கினார்.

ஜி.எஸ்.டி-யால் சிறு குறு ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் இன்று ஏற்றுமதி வணிகத்தை விட்டுவிட்டு பெருநிறுவனங்களுக்கு JOB WORK செய்து கொண்டுள்ளனர். அதனால் தொழிலாளிகளுக்கு போதிய வேலைவாய்ப்புகள் பறிபோய் சொற்ப கூலிக்கு தங்களை இரவு பகல் என்று பாராமல் 12-16 மணி நேரம் வேலை செய்ய தயாராக இருந்தும் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர் என்பதோடு, போலீசு அதிகாரிகள் கூட திருட்டு போன்ற கிரிமினல் குற்றங்கள் இப்போதே அதிகரித்து விட்டது என்று ஒப்புக்கொண்டதையும் நினைவு படுத்தினார்.

திருப்பூர் மாநகராட்சி மின்சார கட்டணம் முதல் இதர துறைகளுக்கு செலுத்த வேண்டிய செலவினங்களுக்கும் கடன்பெற்று வருவதுடன் அதனையும் அரசியல்வாதிகளுடன் கள்ள கூட்டு வைத்து ஆட்டையப் போட்டு வருவதோடு மக்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளும் வழங்குவதில்லை. அதற்குப்பதில் சாதாரண நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்வுக்குக் கூட பட்டாசு வெடித்து விழாவாக A-1 குற்றவாளியின் படத்திற்கு மாலை போட்டு கொண்டாடி வருகின்றனர் இந்த களவாணிகள்.

டெங்கு மற்றும் பிற காய்ச்சல்களால் ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன என்று அரசு மருத்துவமனையை அணுகினால், ஒருவரும் வாய் திறக்காமல் மெளனியாக மேலதிகாரியை பார்த்துக் கேளுங்கள் என அரசுக்கு விசுவாசமாகவே இருந்தனர். இருக்கும் ஒரு சில மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களும் தங்களால் முடிந்த அளவு பணியாற்றுவதாக தெறிவித்ததுடன், காலிப்பணியிடங்களை நிரப்பினாலே நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க முடியும் என்றும் – திருப்பூரின் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக விபத்துகள் அதிகமாக போக்குவரத்து நெரிசலிலும் மக்கள் தவிப்பதும், இதனையெல்லாம் சரி செய்யாமலும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே கொசுக்களையும் – நோய்க்கிருமிகளையும் உற்பத்தி செய்து பரப்பி வரும் கலெக்டர் முதற்கொண்ட அரசுத்துறை அதிகாரிகள் மக்களுக்கும், வணிகர்களுக்கும் அபராதம் விதித்து அடாவடி வசூல் செய்வது டெங்குவை விட மோசமானவர்கள் இந்த ஆட்சியாளர்கள் என்பதையும் விளக்கிக் கூறினார்.

உடுமலை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சூரியா பேசுகையில் இந்த மோடியின் எடுபிடி அரசால் எந்தவித ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் செயல்படுத்த வக்கற்ற, அறிவுப்பூர்வமான சிந்தனைகள் இல்லாத ஆளும் வர்க்கத்தை நக்கிப் பிழைக்கும் கும்பலாக அமைச்சர்கள் செயல்படுவதால் மக்கள் படும் துயரங்களையும், டெங்குவையும் ஒழிக்க வேண்டும் என்றால் இந்த அரசமைப்பை ஒழித்து, மக்கள் அதிகார மையங்கள் கட்டி அமைக்க வேண்டுமென்றும் அதற்குமுன்மாதிரியாக ஜல்லிக்கட்டு போராட்டம் , சென்னை – கடலூர் வெள்ளப்பாதிப்பில் தமிழக மக்களின் பேருதவியும் , ADMK வினரின் ஸ்டிக்கர் ஒட்டும் செயலையும் ஒப்பிட்டு விளக்கினார்.

அடுத்து பேசிய கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி 500-1000 ரூபாய் ஒழிப்பு , GST என்று மோடியின் நடவடிக்கையால் கோவையில் சிறுதொழில் அழிந்து வேலையற்ற தொழிலாளிகளின் கையறு நிலை மற்றும் ஏற்கனவே பெற்று வந்த சம்பளத்தை விட குறைவான சம்பளத்திற்கு தெருவில் அலைவது பற்றி விளக்கி கூறியதுடன் கடந்த 4-10-2017 அன்று GST யின் பாதிப்புகள் பற்றி கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வுகளையும் நினைவுபடுத்தினார்.

இறுதியாக பேசிய கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆனந்தராஜ், GST என்று வரிபோட்டு வசூலிக்கும் பணத்தை மக்களுக்கு சேவை செய்யாமல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனாக வாரிக் கொடுப்பதும் பின்பு அதனையே வாராக்கடனாக தள்ளுபடி செய்து திரும்பவும் மக்களிடம் வரி போடும் இந்த அயோக்கியத்தனமான செயலை எள்ளி நகையாடியதுடன், டெங்கு கொசுவை உற்பத்தி செய்வதாக கூறி அரசு பாதிக்கப்படும் மக்களிடமும், வணிகரிடமும் அபராதம் வசூலிப்பதும், சுற்றுப்புறத்தை தூய்மை படுத்தாமலும், அனைத்து வேலைகளையும் தனியார்மயமாக்கி தனி நபரின் லாபத்தை உயர்த்துவதுடன் அவர்களுடன் கள்ள கூட்டு வைத்து சேவை மனப்பான்மையுடன் வேலை செய்யும் தொழிலாளிகளுக்குரிய பாதுகாப்பு கருவிகளையும் தராமல் ஒப்பந்தபடியான கூலியையும் கொடுக்காமல் கொள்ளையடித்து வருகின்றனர்.

மோடியின் பக்தர்களால் இந்தியா வல்லரசாகவும் , சீனா – ஜப்பானை மிஞ்சி உலகத்தரமான நிலைக்கு வந்துவிட்டதாக பீற்றி வருவதை சுட்டிக்காட்டி இங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பெரும்பான்மையினர் குஜராத், ஒரிஸ்ஸா, சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதோடு சொற்பக்கூலிக்கு குழந்தைகளுடன் பிளக்ஸ் பேனரிலான குடிசையில் வசிப்பதையும் கூறி இந்த ஆட்சியாளர்களின் நிரந்தர வேலையோ, இலவச கல்வியோ – மருத்துவமோ – வீடோ எதுவும் தராத ஏமாற்றுப் பேர்வழிகளாக விளம்பர பிரியர்களாக உள்ளார்கள் என்பதையும் விளக்கிக் கூறி இதனை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரையும் கேள்வி கேட்டு மக்களின் எதிரிகளான இவர்களை நடுவீதியில் வைத்து விசாரித்து தண்டனை வழங்குவதுடன் ஊர்தோறும் மக்கள் அதிகாரத்தை கையிலெடுத்து கிராமம் – நகரம் தோறும் கமிட்டி அமைத்துச் செயல் படவேண்டியதன் அவசியம் குறித்து பேசி முடித்தார்.

ஒவ்வொரு பகுதி ஒருங்கிணைப்பாளர்களின் பேச்சிற்குமிடையில் கூடியிருந்த தோழர்களின் ஆர்ப்பாட்ட முழக்கத்தை சுற்றி நின்று பார்த்த பொதுமக்கள், ரயில் பயணிகள், வணிகர்கள், தள்ளு வண்டி வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உணர்ச்சிவசப்பட்ட சில நபர்கள் தோழர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் கந்துவட்டி கடனைக் காட்டாதே கலகம் செய் ! என முழங்கிய போது தனிநபர்கள் சிலரும் கைதட்டி வரவேற்றனர்.

இறுதியாக நன்றியுரை ஆற்றிய தோழர் மாணிக்கம் கலந்து கொண்ட அனைத்து தோழர்கள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு நன்றி கூறியதோடு நோட்டீஸ் விநியோகத்தின் போதும் போஸ்டர் ஒட்டும் போதும் வந்த போலீசார் தங்களுக்கு தெரிந்த சில விபரங்களைக் கூறியதற்கும் நன்றி தெரிவித்து தனது நன்றியுரையை முடித்தார்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருப்பூர்
தொடர்புக்கு – 99658 86810

  1. தரம் கெட்ட மக்கலுக்கு தரம் கெட்ட ஆட்ஷிஆலர்கல்தான் கிடைப்பர்கல்.

  2. டெங்குவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று டெட்பாடி அரசு ஒருபுறம் கூறுகிறது. மறுபுறம் தமிழக கிராமங்களில் டெங்குவின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது.

    திருசெங்கோட்டிற்கு அருகே இருக்கும் என்னுடிய கிராமத்தில் குறைந்தது 15 பேருக்காவது டெங்கு இருக்கும். திருமணத்திற்காக திருசெங்கொடு சென்றிருந்த என்னுடைய குடும்பம் எனது சொந்த ஊருக்கு கூட பயத்தினால் செல்லவில்லை. ஊரில் உள்ள அனைவருமே care24 தனியார் மருத்துவமனைக்கே செல்லுகிறார்கள். ஏதாச்சும் காய்ச்சல் என்றாலே அட்மிட் ஆகி விடுங்கள் என்று தான் கூறுகிறார்கள்.

    கறை நல்லது என்பது போல டெங்கு தனியார் மருத்துவமனைகளுக்கு நல்லது.

Leave a Reply to செல்வம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க