privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்ஓபசமுத்திரம் கிராம மக்களின் இறால் பண்ணை அழிப்பு போராட்டம் !

ஓபசமுத்திரம் கிராம மக்களின் இறால் பண்ணை அழிப்பு போராட்டம் !

-

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், ஓபசமுத்திரம் கிராமத்தில் சுமார் 6 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தை சுற்றி 15 -க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக அந்த கிராமத்தின் பிரதான தொழில்களான மீன் பிடி தொழிலும், விவசாயமும் முற்றிலுமாக அழிந்து வருகிறது.அதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீர் முற்றிலும் கெட்டுப்போய், குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போதைக்கு அக்கிராமத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நத்தம் கிராமத்திலிருந்துதான் குழாய் மூலமாக குடி தண்ணீர் பெற்று வருகின்றனர். தற்போதே இந்த நிலைமை என்றால், எதிர் வரும் காலத்தில் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை என்னவாகப்போகிறது? என உணர்ந்த கிராம மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இறால் பண்ணைகளை அகற்றுவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இடைப்பட்ட காலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பது, வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பது, உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் போராட்டங்களை நடத்திவிட்டனர். அரசு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தியுள்ளனர். மக்களின் போராட்டத்தால் மிகுந்த நெருக்கடிக்கு ஆட்படும்போது, அரசு அதிகாரிகள் பெயரளவிற்கு கிராமத்தில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து சென்றுள்ளனர்.

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இறால் பண்ணைகளை அகற்றியே ஆகவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் 2016 -ம் ஆண்டு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக வருவாய் கோட்டாட்சியர் திரு.நாராயணன் அவர்கள் இறால் பண்ணைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரவு பிறப்பித்தது மட்டுமல்லாமல் கிராமத்திற்கே வந்து இறால் பண்ணை உரிமையாளர்களை அழைத்து “உடனடியாக இறால் பண்ணைகளை அகற்றவேண்டும்; இல்லாவிட்டால் அரசு நிர்வாகமே அந்த வேலையை செய்யும், அதற்கான அபராதமும் விதிக்கப்படும்” என எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் கிராம மக்கள் தங்கள் போராட்டம் வெற்றியடைந்ததாக நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். பின்னர்தான் தெரிந்தது அது வெரும் கண்துடைப்பு, ஏமாற்று என்று!.

இன்றளவும் இறால் பண்ணைகள் அகற்றப்படவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கிராம மக்கள் அவமானமாக கருதினர். இதே நிலை நீடித்தால் தங்களது வாழ்நாளிலேயே, தமது சந்ததிகள் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவனிடன் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம் உண்டானது.

ஓபசமுத்திரம் இறால் பண்ணை அழிப்பு போராட்டதில் கைது செய்து ரீமான்டு செய்யப்பட்ட பெண்.

இனி அரசு அதிகாரிகளை நம்பி பயனில்லை என உணர்ந்த கிராம மக்கள் கடந்த 29.10.2017 அன்று கிராம கூட்டத்தை கூட்டி இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு, பண்ணையை அகற்றுவதற்கு ஒரு வாரம் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இருந்தபோதிலும் இறால் பண்ணை உரிமையாளர்கள் ‘தமக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளும், போலீசும் இருக்கும்போது நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும், மக்களால் என்ன செய்துவிட முடியும்’ என அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால், அதற்கு மாறாக சொன்னபடியே 05.11.2017 அன்று கிராம மக்கள் ஒன்றுகூடி தங்கள் சொந்த அதிகாரத்தை கொண்டு இறால் பண்ணைகளை அகற்றும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

பாதிப்படைந்த பண்ணை உரிமையாளர்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஆரம்பாக்கம் போலீசு நிலையத்தில் 11 பேர் மீது பொய் புகாரும் கொடுத்துள்ளனர். காவல் துறையும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்த அரசு நமக்கு உதவாது என தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ள ஓபசமுத்திர கிராம மக்கள் என்ன நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளுர் (கிழக்கு). 
தொடர்புக்கு : 94444 61480