privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மழைநீரை அகற்ற அரசாங்கத்தை செயல்பட வைத்த மக்கள் அதிகாரம் !

மழைநீரை அகற்ற அரசாங்கத்தை செயல்பட வைத்த மக்கள் அதிகாரம் !

-

மழைநீர் அகற்றப்படவில்லையா? மக்கள் அதிகாரத்தை அழையுங்கள்! – தண்டையார்பேட்டை அனுபவம்.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக பெய்த மழை நவம்பர் 5ம் தேதி சற்று ஓய்வு எடுத்தது. தண்டையார்பேட்டை நேரு நகரில் மொத்தம் உள்ள 14 தெருக்களில் 13வது தெரு மட்டும் சற்று உயரம் குறைவு. இளைத்தவனை வலியவன் ஆதிக்கம் செலுத்துவது போல மற்ற தெருக்களில் வழிந்தோடும் மழைநீர் 13வது தெருவில் தஞ்சம் புகும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் புதிதாக சாலை அமைக்கும்போது ஏற்கனவே இருந்த சிமெண்ட் சாலைக்கு பதிலாக தார்ச்சாலை அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளதாக தெரிவித்து சாலையை உயரம் தூக்காமல் போட்டுள்ளனர். நேரு நகரின் மற்ற தெருக்களில் இல்லாத தார்ச்சாலை இங்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. விளைவு தொடர்ச்சியான நீர்த்தேக்கம்.

குழந்தை குட்டிகளுடன் வயதானவர்கள், முதியவர்கள் என யாவரும் துயருரவே தொடர்ச்சியாக மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்போது இயங்குவதில் கோளாறு நிரம்பிய பழைய நீரிறைக்கும் இயந்திரத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். பகுதி இளைஞர்களை கொண்டு இரவு முழுக்க நீர் இறைத்தபின்னும் மறுநாள் காலையில் பெய்த மழை மீண்டும் நீரை வரவழைத்துவிட்டது.

அதிகாரிகளோ, ஊழியர்களோ யாரும் கண்டுகொள்ளவில்லை. முதன்மை சாலை அருகில் வசித்தவர்கள் சாலையை மறித்ததால் அங்கு உடனடியாக வேலை செய்த அதிகாரிகள் சற்று உள்ளே உள்ள இவர்களை கண்டுகொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படாததால் கண்டுகொள்ளவில்லை.

ஆறு நாட்கள் வீடுகளின் வாசலில் முட்டிக்காலளவு நீரில் நடந்து சென்று பகுதியில் பெரும்பாலானோருக்கு காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது. பாதம் சிதைந்து போயிருந்தது. போதாக்குறைக்கு சாலையில் இருக்கும் மின்பெட்டி கீழேயே இருப்பதால் தண்ணீரில் மூழ்கியிருந்தது. எனவே, மின்சார வாரியம் மின் இணைப்பை கொடுக்கவில்லை. நீரில் மட்டுமல்ல, இருளிலும் மூழ்கியுள்ளனர். கழிவறைகளில் நீர் மேலேறியதால் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். எந்த ஒரு பிரச்சனையும் கண்டுக்கொள்ளப்படவில்லை. கேட்க நாதியில்லை.

இந்நிலையிலே மக்கள் அதிகாரம் அமைப்பினர் வந்து பார்க்கும்போது இரண்டு மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தில் உள்ள தண்ணீரை மேட்டிற்கு கொண்டு செல்ல சிமெண்ட் சாலையில் துளையிடும் கருவி கொண்டு துளையிட முயன்று கொண்டிருந்தனர். அதிலும் மின்வெட்டு பிரச்சனையால் அந்த வேலையும் நடைபெறவில்லை.

எனவே பகுதி முழுக்க ஒவ்வொரு வீடாக சென்று மக்களை திரட்டிக்கொண்டு மாநகராட் சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளை கையோடு அழைத்துவரலாம் என முடிவு செய்தோம். முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் அதே அளவு பொதுமக்களுடன் சென்று பார்த்தால் அலுவலகத்தில் ஒருவர் கூட இல்லை.

எனவே, அதிகாரிகளை வரவழைக்க சாலையை மறிப்போம் என முடிவு செய்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பால முச்சந்தியில் அமர்ந்தோம். உடனடியாக அங்கு முழக்கங்களை தயார் செய்து முழக்கங்களை எழுப்பினோம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அவர்களுக்கு நிலைமை என்னவென்று ஒரு தோழர் விளக்கினார். பின்னர் மீண்டும் முழக்கம் போடத்துவங்கினோம். மறியல் நடைபெறும்போதே மழை பெய்யத் துவங்கிவிட்டது.

இருப்பினும் யாரும் கலைந்து செல்லாமல் மறியல் தொடரவே இருபது நிமிடங்களில் போலீசு வந்து சேர்ந்தது. தானே நேரில் வந்து பிரச்சனையை முடித்துக் கொடுத்துவிட்டு செல்வதாக ஆய்வாளர் தெரிவித்ததால் அவரை முன்னே அனுப்பிவிட்டு பின்னே தெருக்களில் முழக்கங்களை எழுப்பிக்கொண்டே பகுதிக்கு வந்து சேர்ந்தோம். பகுதிக்கு வந்தவுடன் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் வெளியில் வந்துவிட்டனர். நம்மை அழைத்து வந்த காவல்துறை ஆய்வாளர் அவருக்கு பதிலாக உள்ளூர் காவல் ஆய்வாளர் மற்றும் இன்னொரு காவலரை பொறுப்பாக்கிவிட்டு சென்றுவிட்டார்.

உடனே நமது தோழர் ஒருவர் பொதுமக்களுக்கு நிலைமையை விளக்குவதற்காக வீட்டு திண்ணையில் ஏறி பேசத்துவங்கினார். போராட்டம் அதன் முடிவு குறித்து விளக்கிவிட்டு பிரச்சனை தீரும் வரையில் இந்த இரு போலீசாரை நம்மிடம் விட்டுவிட்டு சென்றுள்ளனர். அவரை நாம்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துவிட்டார். உடனே போலீசாரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தெரிவித்துவிட்டு இருவரையும் கையோடு தேங்கியிருந்த நீருக்குள் அழைத்து சென்றுவிட்டனர்.

பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து நீரை வெளியேற்ற துவங்கினர். போராட்ட செய்தி வெளியில் கசிய பாலிமர் செய்தி நிருபர்கள் களத்திற்கு வந்து பொதுமக்களை பேட்டி கண்டு சென்றனர். அச்செய்தியும் வெளிவர தெருவில் உள்ள பிரச்சனை ஊர் முழுக்க தெரிந்தது. இடையில் இரு போலீசாரை பொதுமக்கள் சிறைபிடித்தனர் என செய்தி  பரவவே இன்னும் ஐந்தாறு போலீசு, உளவுப்பிரிவினர் வந்துவிட்டனர். போராட்டத்தில் சமாதானம் பேசி நம்மை அழைத்துவந்த போலீசு வந்துவிட்டு அந்த செய்திப் பதிவை நீக்குமாறு அரைமணி நேரம் கெஞ்சினார். குறைந்தது மறுப்பு செய்தியாவது தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அன்று மாலையே கழிவுநீர் அடைப்பை நீக்க ஜெட்ராடிங் வண்டி தெருவுக்குள் வந்தது.

அத்தெருவை சேர்ந்த முதியவர் ஒருவர் அவர் வந்து கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக தெருவுக்குள் சாக்கடை அடைப்பை போக்க வண்டி வந்திருப்பதாக தெரிவித்தார். அதற்கு காரணம் நீங்கள்தான் என நெகிழ்ந்தார். இரவு 9 மணிவரை அடைப்பை போக்க முயற்சித்தும் வேலை முடியவில்லை. வேலை முடியும்வரை போலீசார் கூடவே இருந்துவிட்டுதான் வீட்டுக்கு போயினர்.

மறுநாள் காலை 6 மணிக்கே போலீசு வந்துவிட்டது. நாம் 9 மணிக்குதான் சென்றோம். வந்தவுடன் நிலைமையை ஆராய்ந்துவிட்டு மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து காலையிலேயே நீர் இரைக்க துவங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் மின்வாரியத்தை சார்ந்தவர்களும் காலையிலேயே வந்துவிட்டு சாலையில் கிடந்த உடைந்து போன மின்பெட்டியை சீரமைக்க துவங்கிவிட்டனர். வெல்டிங் கருவியை கொண்டுவந்து சீரமைத்துவிட்டு சிமெண்ட் காரையில் மேடை அமைத்து உயரே தூக்கிவைத்து மின் இணைப்பை கொடுத்துவிட்டு சென்றனர். வேலையை பார்வையிட துணை பொறியாளர் வந்துவிட்டார்.

அதோடு கூடவே பகுதி மக்களுக்கு மருத்துவமுகாம் ஏற்பாடு செய்துதர வேண்டுமென நாம் கோரியிருந்தோம். கோரியபடி நடமாடும் மருத்துவ முகாமை அழைத்து வந்து மக்களுக்கு மருந்து மாத்திரைகளை கொடுக்க துவங்கினர். பகுதி இளைஞர்கள் நம்மிடம் நீங்கள் இருப்பதனாலே வேலை நடைபெறுகிறது. நீங்கள் போய்விட்டால் இவர்களும் போய்விடுவர் என தெரிவித்தனர். அதோடு எங்களுக்கும் மக்கள் அதிகாரம் டிசர்ட் கொடுங்கள் நாங்கள் போட்டுக்கொள்கிறோம். இங்கு டிசர்ட் போட்ட நபர் இருந்தால்தான் போலீசு பயப்படுகிறது என தெரிவித்தனர்.

கழிவு நீர் அடைப்பு எடுப்பதற்காக சென்னைக்கே மொத்தம் 22 வாகனங்கள்தான் உள்ளன. ஆனால் இப்பகுதிக்காக அன்றைய தினத்தில் சிறப்பாக முகப்பேரிலிருந்து ஒரு வாகனத்தை வரவழைத்து நாள் முழுக்க இப்பகுதிக்கே ஒதுக்கிவிட்டனர். அந்த வண்டியும் போதாமல் மீண்டும் முந்தைய ஜெட்ராடிங் வாகனத்தை கொண்டுவந்துவிட்டனர்.

இவ்வளவு வாகனங்கள் கொண்டுவந்தும் நீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. கழிவுநீரை வாகனத்தில் அடைத்து வெளியில் விடலாம் என சென்றால் சிறிது நேரத்தில் மற்ற இடங்களிலிருந்து வந்து நிரம்பி விடுகிறது. கழிவுநீர் அகற்றும் நிலையத்திலே அடைப்பு என்பதால் நகரில் எங்கிருந்தும் கழிவுநீரை அகற்ற முடியவில்லை. ஜெட்ராடிங் வண்டி மூலம் அதிக அளவு அழுத்தம் நிறைந்த காற்று மூலம் கழிவுநீர் குழாயில் அடைப்பு எடுக்க முயலும்போது கருவியே உள்ளே நுழைய முடியாத அளவிற்கு அடைப்பு இருந்தது.  மேலும் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர்தான் தெருவில் நுழைந்துவிடுவதையும் கண்டறிந்தோம்.

தொகுப்பாக பார்க்கையில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கழிவுநீர் அடைப்பு எடுக்கும் பணி நடைபெறுவதில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. கழிவுநீர் குழாய்க்கு அருகிலேயே மெட்ரோ வாட்டர் குழாயும் உள்ளது. இரண்டில் எதன் அழுத்தம் அதிகமாக உள்ளதோ அதிலிருந்து நீர் மற்ற குழாயில் கலந்துவிடும்.

கழிவுநீருடையது அதிகம் என்றால் மெட்ரோவாட்டரில் கழிவுநீர் கலந்துவரும். மெட்ரோ வாட்டருடையது அதிகமென்றால் கழிவுநீருடன் கலந்து வீணாக சென்றுவிடும். மொத்தமாக இவை இரண்டையும் பழுதுபார்த்து மாற்ற வேண்டும். மழைநீர் கால்வாய் எங்குள்ளது என்றே தெரியவில்லை. மொத்தமாக இதை மாற்றிவிட்டு தெருவில் உள்ள சாலையை உயரம் தூக்கி போட்டால்தான் பிரச்சனை நிரந்தரமாக தீரும். இன்னும் சொல்லப்போனால் கழிவுநீர் அகற்றும் நிலையம் முதல் நகரின் ஒட்டுமொத்த கழிவுநீர் கால்வாய் வரை சீரமைத்தால் மட்டுமே பிரச்சனை நிரந்தரமாக தீர்க்கப்படும்.

அரசின் அணுகுமுறை சென்னைக்கு விடிவுகாலத்தை கொடுக்காது என்பது மட்டுமல்ல சிறு மழைக்கு கூட அல்லாடும் நிலைக்கு வந்துவிட்டதன் காரணமும் இந்த அரசுதான் என்பது தெள்ளத்தெளிவாகிறது. இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இவர்களிடம் திட்டம் ஏதுமில்லை. கழிவுநீரை வெளியேற்ற வருபவர்களின் மனநிலையே பூசி மெழுகிவிட்டு செல்வதாகத்தான் உள்ளது. தற்காலிக, குறைந்தபட்ச தீர்வினைத்தான் இவர்கள் சொல்கின்றனர். அதுதான் இயல்பு என்பது போல பேசுகின்றனர்.

இத்தெருவுக்கு சாலை அமைக்கவும், மெட்ரோ குழாய் பதிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்தாலும் இன்று வரை இரண்டும் நிறைவேறவில்லை. தினமும் பகுதி இளைஞர்களிடம் போலீசு வந்துவிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பினரிடம் மட்டும் பிரச்சனையை சொல்லிவிடாதீர்கள் என சொல்லுவதாக தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் நடைபெறும் வேலைகளை எடுத்துச்சொல்லி போராட்டம் செய்யாதீர்கள் என சமாதானமாக பேசுவதாகவும் தெரிவித்தனர். முதல் நாளிலிருந்தே நீங்கள் போங்கள் நாங்கள் பார்த்து பிரச்சினையை தீர்த்துவிடுகிறோம் என போலீசு நம்மிடம் பேசுகிறது. போராடிய நாளிலிருந்து இன்று வரை தினமும் வந்துவிடும் போலீசு அவ்வப்போதைய கழிவுநீரை அகற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.