சத்தியபாமா பல்கலைக் கழகத்தில் மாணவி ராகமோனிகா படுகொலை !
தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராக மாணவர்கள் மூட்டிய தீ பரவட்டும் !

தெலுங்கானாவில் இருந்து சத்தியபாமா பல்கலைக்கழகத்தில்  பொறியியல் படிக்க வந்த ராகமோனிகா என்ற மாணவி, நிர்வாகத்தினரில் உளவியல் சித்திரவதை செய்யப்பட்டு பிறகு தூக்கிடடு தற்கொலை செய்திருக்கிறார். மறைந்த சாராய ரவுடி ஜேப்பியாருக்கு சொந்தமான  பல்கலைக்கழகம் உள்ளிட்ட இதர கல்வி நிறுவனங்களிலும் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்.

22.11.2017  அன்று  பல்கலைகழகத்தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில் ராகமோனிகா சக மாணவியின் பேப்பரை பார்த்து எழுதியதாக கூறி (பிட் அடித்ததாக) ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் கேவலாமன வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அறைவாசலுக்கு அழைத்து வந்துள்ளார். அந்த மாணவி தன்னை மன்னித்துவிடுமாறு கெஞ்சியிருக்கிறார்.

இதை காதில் வாங்காத அந்த ஆசிரியர் தேர்வை மேற்பார்வை பார்த்த மற்றொரு ஆசிரியரான விமல் என்பவரையும் அழைத்துக்கொண்டு “உன்னுடைய டிரஸ் மொத்தத்தையும் கழட்டி சோதன போட்டாத்தான் பிட் வைத்திருப்பதை கண்டுபிடிக்க முடியும்’’ என்று வக்கிரமாக மிரட்டியிருக்கின்றனர்.

மாணவி ராகமோனிகா

மீண்டும் தன்னை மன்னித்து விடுமாறு அந்த மாணவி கெஞ்சியிருக்கிறார். ஆசிரியர்கள் போர்வையில் திரியும் அந்த ரவுடிகள் உன்னை எந்த தேர்வையும் எழுதவிட முடியாது,  உன் அப்பா, அம்மாவை வரவழைக்கிறோம், நீ  போதை மருந்துக்கு அடிமையாகிவிட்டாய், நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்று சொல்லப்போகிறோம் என்று ஆபாசமாகவும், இழிவாகவும் பேசி சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

இறுதிவரை தேர்வு எழுத அனுமதிக்கவே இல்லை. தேர்வு  முடிந்ததும் அதே கல்லூரியில் படிக்கும் ராகமோனிகாவின் தம்பி அக்காவை அடுத்தடுத்த தேர்வு எழுதவிட வேண்டும் என்று கூறி நிர்வாகத்தினரின் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார். எதுவும் ஏற்கப்படவில்லை. பிட் அடித்ததை ஒரு குற்றமாக்கி அந்த குற்றத்திற்காக  விபச்சாரப்பட்டமும் கட்டிவிட்டதால், அவமானம் தாங்க முடியாத மோனிகா பரீட்சை நேரம் முடிந்த பின்னர் காலை 11.45 -க்கு தனது அறையில்  தூக்கில் தொங்கிவிட்டார். இது தற்கொலையல்ல, பல்கலைக் கழக ஆசிரியர்கள் மீனாட்சிசுந்தரம், விமல் மற்றும் நிர்வாகத்தினர்  சேர்ந்து செய்த படுகொலை.

ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் “நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.

மாலையில் விசயம் தெரிந்து மாணவர்கள் பதறியடித்து நிர்வாகத்திடம் சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகத்தினரோ ராகமோனிகாவை  பல்கலைகழகத்திலேயே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அந்த மாணவி இறந்துவிட்டது உறுதிசெய்யப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழக சேர்மன் மரிய ஜான்சன் உத்தரவின் பேரில் உண்மை மறைக்கப்பட்டு,  உயிர் இருப்பதாகவும் மேல்சிகிச்சைக்கு குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறி அங்கு கொண்டு சென்று இறந்ததை மீண்டும் ஒரு சம்பிரதாயத்திற்காக உறுதிசெய்துவிட்டு  ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொண்டு போய் போட்டுவிட்டார்கள்.

மாணவி ராகமோனிகா இறந்த தகவலை பல்கலைக் கழக நிர்வாகம் அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கவே இல்லை. தம்பியைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை. போலீசை வைத்து விரட்டியிருக்கிறார்கள். ராகமோனிகா விடுதியில் தூக்கில் தொங்கிய போதும், மருத்துவமனையிலும் “நான் ராகமோனிகாவின் தம்பி என்று போட்டோ, வீடியோ ஆதாரங்களை காட்டி பார்க்க அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கேட்டபோதும் போலீசார் அனுமதிக்கவில்லை.

மாணவி ராக மோனிகாவின் தந்தை

இதற்கிடையே ஊடகங்களிடம் அப்பெண் கருவுற்றிருந்தார் என்றும் போதைப்பழக்கம் உடையவர் என்றும் அவதூறுளை கிளப்பி வாங்கிய காசுக்கு வேலைபார்க்க ஆரம்பித்தனர் ஜேப்பியார் கல்விக்குழுமங்களின் சட்டப்பூர்வ ரவுடிகளாக செயல்பட்டு வரும்  செம்மஞ்சேரி போலீசார். இந்த அநீதிகளையெல்லாம் பார்த்த மாணவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். அந்த கொந்தளிப்பில் பற்றி எரிந்தது கல்லூரி வளாகம். பீதியான பல்கலைக்கழக நிர்வாகம் போலீசை குவித்தது, எதற்கும் அஞ்சாத மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி கல்லூரி வளாகங்களை அடித்து நொறுக்கினார்கள்.

சுமார் 300 -க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து மாணவர்களை அடித்து விரட்டினார்கள். அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது.

தேர்வில் பிட் அடித்தால் அந்தத் தவறை சுட்டிக்காட்டி அனுப்பி இருக்க வேண்டும், அவ்வளவுதான். அதை விடுத்து மாணவி கல்லூரியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இரவு 3 மணிக்கு பேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். தன்னுடன் படித்த மாணவியைக்கொன்ற நிர்வாகத்தை என்ன செய்வதென்று தெரியாமல் கோபத்துடன் அதிகாலை 4 மணிவரை சாலையில் அலைந்து கொண்டிருந்தார்கள் மாணவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ராஜீவ் காந்தி சாலை முழுவதும் போலீசால் நிரப்பப்பட்டு இருந்தது. கொல்லப்பட்ட மாணவியின் பெற்றோரை வரவைத்து மிரட்டி நிர்வாகம் ராகமோனிகாவின் பிணத்தை வாங்க வைத்துவிட்டது.

மாணவர்களின் கொந்தளிப்பில் பற்றி எரியும் விடுதி.

ஊரைஅடித்து உலையில் போட்ட கிரிமினல் ஜேப்பியாருக்கு தண்டனையாக கல்வித்தந்தைபட்டம் கிடைத்தது. பிட் அடித்தற்காக ராக மோனிகாவுக்கு மரணம் தண்டனையாக கிடைத்திருக்கிறது.

எனில் பொது நிலங்களை ஆக்கிரமித்து, மக்களிடம் கட்டாய நன்கொடை கொள்ளை நடத்தி ஆட்டும் போடும் ஜேப்பியார் கல்லூரி முதலாளிகளுக்கு என்ன தண்டனை?

சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் ராகமோனிகா படுகொலை!

மாணவியை இழிவுபடுத்தி, சித்திரவதை செய்ததே மரணத்திற்கு காரணம்!
கொலைகூடாரமான சத்தியபாமா தலைவர் மரிய ஜான்சன்
பேராசிரியர் போர்வையில் திரியும் பொறுக்கிகள்
மீனாட்சிசுந்தரம், விமல் ஆகியோரை கைது செய்!

மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ பரவட்டும்!
தனியார் கல்விக் கொள்ளையர்களின் அட்டூழியம் ஒழியட்டும்!

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை. 9445112675


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி