privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு ! கரூர் ஆர்ப்பாட்டம்

கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு ! கரூர் ஆர்ப்பாட்டம்

-

கடனைக் கட்டாதே ! கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டு !! கண்டன ஆர்ப்பாட்டம்

டந்த 15.11.2017 கரூர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மேற்கண்ட தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டதிற்கு மக்கள் அதிகாரம் கரூர் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமையேற்று நடத்தினர். பறையிசையுடன் துவங்கிய ஆர்ப்பாட்டம் மக்களை வரவழைத்தது.

போலீசின் அயோக்கியத்தனத்தை கிழிக்க போறாங்கன்னு தெரிந்து காவல்துறை ஆர்ப்பாட்டத்தை கலைத்து விட சிந்தித்தது. ஆர்ப்பாட்டத்தில் நாற்காலி போடக்கூடாது இதற்கெல்லாம் அனுமதி இல்லை என்றது. பெண்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் எல்லாம் கால் வலிக்க நிற்க வேண்டுமா சொல்லுங்க என  தோழர்கள், வழக்கறிஞர்கள் கேட்க சரி எப்படியோ செய்யுங்க என்றது.

“நெல்லை இசக்கி முத்து மரணத்துக்கு காரணமான கலெக்டர், எஸ்.பி ஆகியோரை கைது செய்ய வேண்டுமென சுவரொட்டி ஒட்டிய தோழர்களை வழக்கு போட்டு சிறையில் தள்ளியது கரூர் நகர காவல்துறை.”

கருத்து சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவை பெயரளவுக்குதான் அதுவும் ஆளும் கட்சிகளுக்குதான்! போராடுகின்ற மக்களுக்கும், அமைப்புகளுக்கும் இல்லை. இந்த அடக்குமுறையெல்லாம் கொஞ்சம் நாள் தான்? மக்கள் தங்கள் அதிகாரத்தை எடுக்கும் போது காவல்துறையின் வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரும் என்று தலைமையுரையில் தோழர் சக்திவேல் பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய கரூர் பகுதி மக்கள் அதிகாரத்தின் தோழர் இராமசாமி அவர்கள் “கந்து வட்டி கும்பலின் பிறப்பிடம் கரூர் மாவட்டம், அரவாக்குறிச்சி மண்மாரி கிராமம்தான். இந்த கரூர் மாவட்டம்தான் கந்து வட்டிக்கு தாய் வீடு போல உள்ளது. குறிப்பிட்ட சாதியினர் இந்தியா முழுவதும் வட்டிக்கு விட்டு கரூரில் பல மாடி கொண்ட கண்ணாடி மாளிகை கட்டியதுதான் உதாரணம்.

பல குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி வட்டி தொழிலில் ஊறி திளைத்து வருகின்றனர் ரவுடிகள். இவர்களுக்கு அதிகாரிகள், போலீசு பாதுகாப்பாக உள்ளது. இவர்களின் கொடுமையால் பலரும் இறந்து உள்ளனர். மக்கள் அமைப்பாக திரண்டு போராடினால் கந்து வட்டி காரர்களை ஒழிக்க முடியும்” என்று பேசினார்.

பிறகு உரையாற்றிய கரூர் பகுதி தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தோழர் கு.கி.தனபால் “மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர்கள் போஸ்டர்கள் ஒட்டியதற்கு வழக்கு போட்டு சிறையில் தள்ளியதை கண்டித்து பேசினார். வட்டி கொடுமைக்கு முடிவு கட்ட ஒன்று திரண்டு போராடுவோம்” என்றார்.

கரூர் பகுதி CPI(ML) விடுதலை அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் தோழர் மு.ராமச்சந்திரன் “கந்து வட்டிக்கெதிராக இடதுசாரி அமைப்புகள் ஒன்று சேர்ந்துள்ளோம். காவல்துறை நடவடிக்கை கந்துவட்டி நபர்களுக்கு ஆதரவாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கின்றோம். தொழிற்சங்கம் வைத்து போராடினாலும் போலீசு மிரட்டுவதும் உள்ளது. நமது ஒருங்கிணைந்த நடவடிக்கை அடக்கு முறைக்கு எதிராக மாறும். இணைந்து செய்வோம்!” என்று பேசினார்.

கரூர் பகுதி வழக்கறிஞர் தோழர் புகழேந்தி பேசுகையில் “போஸ்டர் ஒட்டிய மக்கள் அதிகார தோழர்களை வழக்கு போட்டு சிறையில் தள்ளியது, “இங்க அடிச்சா அங்க வலிப்பதை” போல நெல்லை சம்பவத்தையொட்டி கலெக்டர், எஸ்.பி -ஐ கைது செய் என்றால் இந்த குற்றவாளிகளுக்கு வலிக்கிது என்றும். கந்துவட்டி கொடுமைக்கு குடும்பமே தீயில் கருகியது கண்டு எந்தவித உணர்வின்றி மனசாட்சி இல்லாமல் வழக்கு போடுவதை கண்டித்தார்.”

ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் தோழர் முல்லையரசு பேசுகையில் “சாதாரண கூலி தொழிலாளர்கள் கந்து வட்டிக்கு வாங்கி குடும்பங்கள் மிகவும் பாதிக்கிறது பல வட்டிகள் உள்ளது ராக்கெட் வட்டி, ரன்வட்டி, மீட்டர்வட்டி என அட்டைபோல உறிஞ்சுகின்றனர். இந்த கொடுமைக்கு முடிவு கட்ட மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து செயல்படுவோம்!” என்றார்.

கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கங்கா ஸ்ரீ என்ற பெண்மணி பேசினார். அவர் “இந்த போலீசு கந்துவட்டி பிரச்சனையை தீர்த்து தரவில்லை. பலமுறை புகார் செய்தும் எவரும் கண்டு கொள்ளவில்லை. அதனால்தான் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கிறாங்க. மக்கள் அதிகாரத்தை எடுக்கனுங்க அதான் தீர்வு போலீசு எல்லாம் உதவாது” என்றார்.

அடுத்து பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் பேசுகையில் “கந்து வட்டியை ஒழிக்க கடனைக் கட்டாதே கலகம் செய்! என்ற முழக்கம் அரசுக்கு கோரிக்கை வைப்பதல்ல? மக்களுக்கு வைக்கின்ற முழக்கம். ஏன் என்றால் கந்து வட்டியை இந்த அரசு ஒழிக்காது நெல்லையில் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இசக்கி முத்து குடும்பம் தீக்கீரையானது. இப்படி பல குடும்பங்கள் பலியாகின்றன.

ஏன் மக்கள் கந்து வட்டி வாங்குகின்றனர். விவசாயம் இல்லை, வேலையில்லை, விலைவாசி உயர்வு, வாழவழியில்லாமல் கந்து வட்டி வாங்குறான் இந்த நிலைக்கு தள்ளியது அரசு. விவசாயிகளின் மொத்த கடன் முதலாளிகளின் கடனில் 1% தான் அதை தள்ளுபடி செய்யவில்லை மோடி – எடப்பாடி அரசு. ஆறு இலட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறது முதலாளிகளுக்கு.

கடன் கொடுப்பது கூட மக்களுக்கு கடன் கட்ட முடியுமா? என்று பார்த்துதான் கொடுக்கிறது வங்கிகள். மக்களை விளிம்பு நிலைக்கு தள்ளியது இந்த அரசுதான் கந்து வட்டி கொடுமையை தடுக்கவில்லை போலீசு. அதிகாரிகள்,போலீசு துறையே ஒரு கிரிமினல் மாஃபியா கும்பலாக உள்ளது. இவர்கள் கந்துவட்டியை ஒழிப்பார்களா?

கரூரில் உள்ள தரைக்கடை முதல் சாதாரண கடை வியாபாரிகளிடம் மாமுல் வாங்குவது, லைசென்ஸ், ஹெல்மெட் பிடிப்பதாக வசூல்வேட்டை நடத்துவது சிவகங்கை சிறுமி பாலியல் கொடுமை என பாதிக்கப்பட்டு புகார் கொடுத்தால் ஏட்டு முதல் ஐ.ஜி வரை பல நாட்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வது. பாண்டிச்சேரியில் கிரிமினல் கும்பலுடன் கூட்டு சேர்ந்து போலீசு கொள்ளையடித்தது.

கரூரில் ஹவாலா ஊழல் பணத்தை காவல் ஆய்வாளர் ஆட்டைய போட்டது. மணல் கொள்ளையர்களிடம் இலஞ்சம் பெறுவது போன்ற பல மோசடி, பித்தலாட்டம் போலீசுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன யோக்கியதை உள்ளது. இந்த கட்டமைப்பு முழுவதும் தோல்வியுற்று, எதிர்நிலையாக மாறிவிட்டது. இதை நம்பி பலனில்லை. மக்கள் அதிகாரத்தில் உறுப்பினராக சேருங்கள் அப்போதுதான் கந்து வட்டியை ஒழிக்க முடியும்” என்று பேசினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் பேசுகையில் “கந்து வட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான அரசை கண்டித்து  போஸ்டர் ஒட்டியதற்காக கரூர் பகுதி தோழர் பாக்கியராஜ் மீது வழக்கு போட்டு சிறையில் தள்ளியது போலீசு.

இந்த நாட்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஜனநாயகம் என்ற கொஞ்ச நஞ்ச உரிமை கூட காலில் போட்டு மித்திக்கிறது இந்த அரசு. ஆனால் கவர்னர் கோவையில் திடீர் என்று ஆய்வு செய்கிறார். அனைவருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது என்று பேசுகின்றனர். ஆனால் இங்கு போஸ்டர் ஒட்டி ஒரு கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லை.

இந்த சட்டம் அனைவருக்கும் சமம் என்கிறார்கள். மோடி வாய்கிழிய பல வெளிநாட்டு கூட்டங்களில் பேசுகின்றார். ஆனால் அதே சட்டத்தை கரூரில் உள்ள காவல்துறையினர் மதிப்பதில்லை. தோழர் பாக்கியராஜை கைது செய்யும் போது ஆய்வாளர் நீயெல்லாம் ஒரு ஆளு, உன்னை தேடி வந்து கைது செய்ய வேண்டியது உள்ளது. என்று அத்துமீறி வீட்டில் நுழைந்து எளக்காரமாக பேசினார். எங்கள் தோழர் பாக்கியராஜ்  பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

மக்களுக்காக போராட்டம் என தன் வாழ்கையையே தியாகம் செய்கிறார். ஆனால் இந்த காவல்துறை, மாமுல் வாங்கிக் கொண்டு கஞ்சா விற்பவனுக்கும் மணல் கொள்ளையனுக்கு ஆதரவாக இருப்பது தியாகமா? என சாடினார்.

கந்து வட்டிக்கு மக்கள் பணம் வாங்கி விளிம்பு நிலையில் உள்ளனர். மக்களை பாதுகாக்க, ரவுடிகளை ஒழிக்க இந்த அரசு வக்கற்று, தகுதியிழந்து, தோற்றுப்போய் உள்ளது இதை நம்பி எதுவும் செய்ய முடியாது என்றார்.

செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள் எல்லாம் கோடி கோடியாய் சொத்து சேர்த்து வைத்துள்ளான். கரூரில் பல வகையில் மோசடியாக சேர்த்த சொத்துக்கள், இவர்கள்தான் கந்து வட்டி கும்பலின் புகலிடம். கந்து வட்டி மட்டுமல்ல பல நிறுவனங்களின் டிவி விளம்பரத்தில் வாட்டிக்கா கோல்டு லோன் என்ற பெயரில் சேமித்து வைத்திருக்கும் தங்க நகைகளை கூட பொது மக்களிடம் விட்டு வைப்பதில்லை. அடகு வைங்க என ஆட்டைய போட விளம்பரம். இதுவும் கந்து வட்டிக் கணக்கில் வராத கருப்பு பணம்தான்.

விஜய் மல்லையா போன்ற முதலாளிகளுக்கு கடன் கொடுத்து ஏப்பம் விட்டு போனவர்களை பிடிக்கவில்லை இந்த அரசு. ஆனால் திருவண்ணாமலையில் கடன் கட்டாத விவசாயியை SBI வங்கி குண்டர்களை வைத்து அடித்தே கொலை செய்து இருக்கிறது. இதுதான் இந்தியாவின் நம்பர் ஒன் வங்கி என பெயர் எடுத்தது. இது தான் மோடி அரசின் யோக்கியதை.
மக்களே தங்கள் அதிகாரத்தை கையிலெடுத்து போராடும்போது மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழமுடியும். இன்று ரெய்டு என்று CBI அதிகாரிகள் 2000 -பேர் வரலாறு காணாத வகையில் அதிரடி ரெய்டு என்று தினகரன், சசிகலா, ஜெயலலிதா வீடுகளில் 1,493 கோடி சொத்துக்களையும், ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறுகின்றனர்.

ஆனால் ஜெயாவின் கொடநாடு எஸ்டேட்டின் மதிப்பு 5,000கோடி, சிறுதாவூர் போன்ற பல பங்களாக்களின் மதிப்போ பல இலட்சம் கோடி வரும் இதை யார் பறிமுதல் செய்வது? யாரை ஏமாற்ற மோடி அரசின் ரெய்டு நாடகம்? மோடி அரசு மற்றும் எடப்பாடி அடிமை அரசை எதிர்த்து போராட மக்கள் அதிகாரம் அமைப்பில் இணையுங்கள்!” என்று பேசினார்.

ம.க.இ.க கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் மோடி, எடப்பாடி அரசின் அயோக்கியத்தனத்தையும், பித்தலாட்டத்தையும் அம்பலப்படுத்தியது.

இறுதியாக  மக்கள் அதிகாரத்தின் கரூர் பகுதி தோழர் சுதர்சனம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு முழக்கத்தின் மூலம் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கந்து வட்டிக் கொடுமையை முடிவு கட்ட மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கரூர். தொடர்புக்கு : 97913 01097.


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க