சிறுமி ஆத்யாவை படுகொலை செய்தது மட்டுமல்லாமல் அதை வைத்து கார்ப்பரேட் மருத்துவமனையான போர்டிஸ் பகல் கொள்ளை அடித்தது வினவில் வெளிவந்துள்ளது. ஆத்யா, ஹெமநாதனின் தாயார் உள்ளிட்ட ஒன்றிரண்டு பேர்கள் மட்டும் கார்ப்பரேட் மருத்துவமனைகளால் பாதிக்கப்படவில்லை.

சிறுமி ஆத்யா

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுகாதாரத்துறைக்காக 2.5 விழுக்காடு செலவிடுவதைக் குறிக்கோளாக கொண்டிருந்தாலும், வெறும் 1.5 விழுக்காட்டை மட்டுமே இந்திய அரசு செலவிடுகிறது. உலகின் ஏனைய நாடுகள் பலவற்றை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. இந்திய அரசின் இந்த பற்றாக்குறையான ஒதுக்கீடு ஆகப்பெரும்பான்மையான இந்திய மக்களை தனியார் மருத்துவத்திற்கு எத்தித் தள்ளுகிறது.

மருத்துவத்துறையில் அரசின் முதலீடு குறைவாக இருப்பதால் மக்கள் தங்களது சொந்த சட்டைப்பையில் இருந்து செலவிடுவது அதிகரிக்கிறது. தேசிய மாதிரி ஆய்வு (தே.மா.ஆ) அலுவலகத்தின் அறிக்கையின் படி சமீபத்திய ஆண்டுகளில் அதிக அளவிலான மக்கள் குறிப்பாக மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தள்ளப்படுகிறார்கள். நகர்ப்புற மக்களில் 68 விழுக்காட்டினரும் கிராமப்புற மக்களில் 58 விழுக்காட்டினரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக கட்டண சிகிச்சையா? அல்லது குறைந்த கட்டண சிகிச்சையா? எதைத் தெரிவு செய்வது எனும் கையறு நிலையில் தங்களது நெருங்கிய உறவுகளைக் காப்பதற்காக கட்டணம் அதிகமானதையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதிக கட்டண சிகிச்சை சிறந்ததாக எந்த ஆய்விலும் இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை. இருப்பினும் தனியார் மருத்துவமே சிறந்தது என்பது அரசின் கொள்கைகள் மூலமாகவே பொதுபுத்தியில் செதுக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவில் உள்நோயாளிக்கான சராசரி செலவு 18,268/- ரூபாய் என்கிறது தே.மா.ஆ அலுவலகத்தின் 2014 -ம் ஆண்டு ஆய்வறிக்கை. ஆயினும் கிராமம் – நகரம் மற்றும் அரசு – தனியார் என்று பகுத்து பார்க்கும் போது அதில் பாரிய வேறுபாட்டை நாம் காணலாம். உள்நோயாளிக்கான செலவும் கூட 2004 -ம் ஆண்டை ஒப்பிடும் போது 2014 -ம் ஆண்டில் 200 விழுக்காடு அதிகரித்திருக்கிறது.

தே.மா.ஆ அலுவலகத்தின் தகவலின் படி, அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிக்கான செலவு ஒப்பீட்டளவில் 2 மடங்கு அதிகம் பிடிக்கிறது. அதுவும் பொதுவாக கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் குறிப்பாக மருந்துகளுக்கான செலவு அதிகம் ஆகிறது.

ஒட்டுமொத்த மருத்துவச் செலவை ஒப்பிடும் போது 60 விழுக்காட்டிற்கு மேலாக தங்களது சட்டைப்பையில் இருந்து தான் நோயாளிகள் செலவு செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களில் 80 விழுக்காட்டினருக்கு தனியாரோ இல்லை அரசுடையதோ எந்த விதமான மருத்துவக் காப்பீடும் கிடையாது.

சுகாதாரம் என்பது தனியார் மருத்துவத்துறை முதலாளிகளின் பணம் பறிக்கும் வேட்டைக்கடாகவே மாறியுள்ளது ஆய்வுகளில் தெரிகிறது. அரசின் மெத்தனமும் அதன் தனியார்மய கொள்கைகளும் தரமான பொது மருத்துவத்தை மக்களுக்கு தருவதிலிருந்து அதை விலகிக் கொள்ள செய்கிறது. ‘மோடி இராஜா’ அரியணை ஏறியதிலிருந்து இந்திய மருத்துத்துறையில் நேரடி அந்நிய முதலீடும் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்தியா முழுதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் இருக்கும் அப்பல்லோ குழுமம், ஃபோர்டிஸ், நாராயண ஹிருதயலயா, மேக்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் ஹெல்த்கேர் குளோபல் நிறுவனங்கள் போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகள் அடித்து வரும் கொள்ளை இலாபம் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் மார்ச் வரை மட்டுமே கிட்டத்தட்ட 12,990 கோடி ரூபாய் அதாவது 2012 மார்சை ஒப்பிடும் போது 80 விழுக்காடு அதிகம் வருமானம் ஈட்டியுள்ளன. அவற்றின் இலாப விகிதமும் 68.75 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் கொள்கை முடிவுகளால் பொதுமருத்துவம் என்பது சிதிலமடைந்து விட்டது; தனியார் மருத்துவமும் கொள்ளை என்று ஆனபிறகு அறிவியல் அடிப்படை ஏதுமற்ற அல்லது இன்னும் அறிவியல் ஆய்வுக்குட்படாத மாற்று மருத்துவ முறைகளில் மக்கள் விழுகிறார்கள். இதன் மூலம் பாபா ராம்தேவ் போன்ற பில்லியனர் சாமியார்களை இந்திய அரசு உருவாக்குகிறது.

மருத்துவம் என்பது பணம் பறிக்கும் கொள்ளைத் தொழிலல்ல. அது மக்களுக்கான அடிப்படைத் தேவை.  அந்தத் தேவைக்காக மக்கள் கலகம் செய்வதே நமது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்தாகும்.

மேலும் :


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க