கேலிச்சித்திரம்: முகிலன்

டிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியன் தலைமறைவாகி விட்டார். தலை மறைவானாலும் அவரது காசு செல்வாக்கு அங்கிங்கெனாதபடி சகல இடங்களிலும், ஆட்களிடத்திலும் பகிரங்கமாக வெளியே வருகிறது. சீனு ராமசாமி, வெற்றி மாறன், கலைப்புலி தாணு துவங்கி பலரும் அன்புச் செழியனுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கின்றனர்.

முத்தாய்ப்பாக நாம் தமிழர் சீமான் களத்திற்கு வந்து விட்டார். “மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் ஃபைனான்ஸ், தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா…?” என்று அவர் சாடியுள்ளார்.  “முத்தூட் ஃபைனான்ஸ் என்று போடுகிறீர்களே, முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்” என்று கொதிக்கிறார்.

வட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.

2011 தேர்தில் அ.தி.மு.க எனும் கொள்ளைக் கூட்டத்தை ஆதரித்து பேசுவதற்கு காசு இல்லாமல் அவரது ‘தம்பி’ ஒருவரிடம் வட்டிக்கு ஐந்து இலட்சம் கடன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்தாராம். அதே போல அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும் என்கிறார்.

வெளிப்படையான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எவையும் அரசு நிர்ணயத்திருக்கின்ற வட்டியைத் தாண்டி வசூலிக்க முடியாது. அப்படி தாண்டினால் அதுதான் கந்து வட்டி என்பது கூட அறிஞர் சீமானுக்கு தெரியவில்லை. சட்டப்பூர்வமாக கடன் கொடுக்கும் வங்கிகள் மக்களிடம் அடித்து வசூலிப்பதை நாம் எதிர்த்துப் போராடுவதைப் போல அன்புச் செழியன் போன்ற மாஃபியாக்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

சீமானோ முன்னதைச் சொல்லி நியாயம் பேசுவது போல அன்புச்செழியனை விடுதலை செய்கிறார். சீமானின் இந்த நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக இயக்குநர் அமீர் கூறுகிறார்.

ஆனால் தாதுமணல் மாஃபியா வைகுண்டராசனோ, இல்லை மன்னார்குடி மாஃபியா சசிகலா நடராசனோ அனைவரும் சீமானின் மதிப்பிற்குரிய தமிழர்களாக, புரவலர்களாக இருக்கும் போது அன்புச் செழியனும் ஒரு நல்ல தமிழராகத்தானே சீமானுக்கு இருந்தாக வேண்டும்?

இன்றைய கருத்துக் கணிப்பு :

சீமான், கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன்?

  • அன்புச் செழியன் ஒரு தமிழர்
  • அன்புச் செழியனிடம் ஏதேனும் ஆதாயம் அடைந்திருக்கலாம்
  • மார்வாடி – மலையாளி ஃபைனான்சியர்களை ஒழிப்பதற்காக
  • திரைத்துறையை சீர்திருத்துவதற்கு
  • ஏதோ நாக்கு பிறழ்ந்து பேசிவிட்டார்

(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்)


உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி