privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுடிநீர் இல்லை கழிப்பறை இல்லை ! போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு !

குடிநீர் இல்லை கழிப்பறை இல்லை ! போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு !

-

போராட்டத்தில் மகளோடு ஒரு செவிலியர்

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்று வரும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தோ ஒடுக்க அதிகார வர்க்கமும், போலிசும் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்த சதி திட்டங்களை எல்லாம் முறியடித்து தொடர்ந்து மூன்றாவது நாளாக போராடி வருகிறார்கள் செவிலியர்கள்.

தண்ணீர், உணவு, கழிப்பிட வசதிகள் அனைத்தும் மறுக்கப்பட்டு வதை முகாம்களைபோல அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கிறார்கள் செவிலியர்கள்.

நேற்று (28.11.2017) மாலை பேச்சு வார்த்தை என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 32 பேரை தலைமை செயலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். சுமார் ஐந்தரை மணி நேரம் அவர்களை உள்ளே வைத்து மிரட்டியிருக்கிறார்கள். 191 அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை உங்களுக்கு யார் சொன்னார்கள், போராட்டத்தை வாபஸ் பெறவில்லை என்றால் அதன் பாதிப்பை உங்கள் குடும்பம் வரை சந்திக்கும் என்று அடாவடியான முறையில் மிரட்டியிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்றுவதை அதிகாரிகளும், போராட்டத்தை கலைப்பதற்கு அச்சுறுத்தும் வேலையை போலீசும் செய்கிறார்கள்.

வெளியே ஊடகங்களிடம் போராட்டம் வாபஸ் என அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பினார்கள் என்று தெரிவிக்கிறார்கள் பேச்சு வார்த்தைக்கு சென்ற செவிலியர்கள். ஆனால் இந்த திரைக்கதையை  ஊடகங்கள் அப்படியே உடன் வெளியிட்டன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் 90 சதவீதம் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும், போராட்டம் வாபஸ் என்றும் செய்தி வெளியிட்டனர்.

அதற்குள் டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கும் அனைவரையும் வெளியேற்ற தகவல் வந்து விட்டது என்று சுற்றியுள்ள தடுப்பரண்களை அப்புறப்படுத்த முயன்றுள்ளது போலிசு. “அந்த செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இருப்பினும் எங்களுக்காக பேச சென்றவர்கள் வரும் வரை  நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். அவர்கள் நேரில் வந்து அறிவிக்கும் வரை இங்கேயே இருப்பது என்று முடிவெடுத்தோம். இல்லையென்றால் இரவே எங்களை விரட்டியிருப்பார்கள்” என்கிறார்கள் செவிலியர்கள்.

தலைமை செயலகத்தில் இருந்த வந்தவர்களை இரவு 10.30 மணி அளவில் மிரட்டி வாபஸ் பெற்றதாக அறிவிக்க கோரியது போலிசு. அதில் மூன்று பேர் போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்  என்று அறிவித்தனர். அதற்கு மற்ற செவிலியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே ,அந்த மூன்று பேரை மட்டும்  வெளியேற்றிவிட்டு மீண்டும் போராட்டத்தை  தொடர்ந்துள்ளனர்.

வெள்ளை சீருடையுடன் தொடரும் செவிலியர் போராட்டம்

போராட்டத்தை சீர்குலைக்க முடியாததால், அதிகாரிகள், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்களை வரவழைத்து ஒரு புதிய கதையை பரப்பினார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு தடியடி நடத்தவும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே நாம் கலைந்து விடுவோம் என்று கூறி உளவியல் ரீதியாக பயமுறுத்தும் வேலையை அந்த அரசு மருத்துவமனை செவிலியர்கள் செய்தார்கள். இது அரசின் திட்டமிட்ட சதி என்பதை புரிந்து கொண்ட செவிலியர்கள் அந்த சிலரை வெளியேற்றினார்கள்.

விடிவதற்குள் எப்படியேனும் கலைத்து விட வேண்டும் என்ற வெறியில் போலிசே களத்தில் இறங்கி “நடுஇரவில் குறுக்கும், நெடுக்குமாக அலைந்து அவர்களை  தூங்க விடாமல்” தொல்லை செய்திருக்கிறது.

மேலும் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளில் உள்ள அலுவலர்கள் மூலம் ஒவ்வொருவராக தொடர்பு கொண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக வேலைக்கு வரவில்லை என்றால் பணிநீக்கம் செய்வோம் என்று மிரட்டியுள்ளார்கள். வேலைக்கு வராதது குறித்து மூன்று விதமான  கடிதங்களை அனுப்பியதாக தெரிவிக்கிறார்கள் செவிலியர்கள்.

எந்த வசதியுமின்றி போராடும் உறுதியை மட்டும் துணையாக வைத்துக் கொண்டு போராடுகிறார்கள், செவிலியர்கள்!

பேச்சுவார்த்தை என்ற பெயரில் 30, 40 பேரை அழைத்து செல்வது அவர்களை மிரட்டி அப்படியே வீட்டுக்கு அனுப்புவது என்ற முறையை நய வஞ்சகமாக செய்து வருகிறார்கள். மாடியின் மேலே ஏறி கண்காணிப்பது, போட்டோ எடுப்பது, பார்க்க வரும் உறவினர்கள் – பிறரை தடுப்பது என்று வகை வகையாக  அச்சுறுத்ததலை தொடர்கிறது போலீசு.

டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மூன்று கழிவறைகளை நேற்று வரை பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் நேற்று மாலை முதல் ஒரே ஒரு கழிவறை தவிர மற்றவற்றை மூடிவிட்டனர். அதுவும் அங்கு பணியாற்றும் துப்புரவு தொழிலாளி, கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கழிவறை. அதில் வரும் தண்ணீரை கூட நிறுத்தி விட்டார்கள். தண்ணீர் குடிக்க அலுவலகத்துக்கு சென்றால் அறையை பூட்டிக்கொள்வது, உள்ளேயே விடாமல் தடுப்பது என்று எங்களை தீண்டத்தகாதவர்களை போல் நடத்துகிறார்கள் என்று குமுறுகிறார்கள் செவிலியர்கள்.

போராடும் அனைவரும் ஒரே கழிவறையை பயன்படுத்துவதால் தண்ணீர் தேங்கி அதன் அருகே கூட செல்ல முடியாத அளவிற்கு அங்கே துர்நாற்றம் வீசுகிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் என்பதால் அங்கு சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஏற்கனவே அந்த கழிவறையில் மலை போல் நாப்கின்கள் குவிந்து கிடக்கின்றன.

கழிவறைக்கு செல்ல முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓடுவதும், அங்கேயே உட்காருவதும் என்று அவர்கள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. ஜெயலலிதாவை விமர்சித்து கோவன் பாடல் பாடியதற்காக “என்ன இருந்தாலும் ஜெயா ஒரு பெண்” என்று பொங்கியவர்கள் எல்லாம் இன்று இத்தனை பெண் செவிலியர்கள் “மனிதவதை” துன்புறுத்தலுக்கு ஆளாவதை கண்டு கொள்ளவில்லை.

பேட்டி கொடுக்க சென்றால் அவர்களை அடிக்க துரத்துவதும், யாரேனும் உணவு கொண்டு வந்தால் நுழைவு வாயிலிலே வைத்து அனுப்புவதும், வளாகத்தில் உள்ள கேண்டீன் உணவை தடுப்பதும் என்று போலிசின் அராஜகமும், அத்துமீறலும் இந்த அரசின் உண்மை முகத்தை போராடும் செவிலியர்களுக்கு புரிய வைத்துள்ளது.

பேச்சு வார்த்தைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் போலிசின் கண்களுக்கு தெரியாமல் கூட்டத்தோடு கூட்டமாக கார் மறைவிலும், அதற்கு அடியிலும் ஒளியும் நிலையில் இருக்கிறார்கள் என்றால் அவர்களை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

செவிலியர்கள் பலர் கைக்குழந்தைக0ளை கையில் வைத்துகொண்டு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு உணவு எடுத்து சென்றால் அவர்களை குறுக்கு விசாரணை செய்து தான் அனுப்புகிறார்கள். பத்திரிக்கையாளர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள். பொது மக்கள் உள்ளே செல்வதாக இருந்தால் தீவிர விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட அந்த டி.எம்.எஸ் வளாகமே போலிசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு அறிவிக்கப்படாத அவசர நிலையை அறிவித்திருக்கிறார்கள்.

இன்று காலை பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகள், உங்களுக்காக மூன்று நாட்களாக தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், பல மாநிலங்களில் சாத்தியப்படுத்தியுள்ள வோர்க்சீட் வாங்கியிருப்பதாகவும் அதனை நடைமுறைப்படுத்த சில காலம் வேண்டும் என்றும் கனிவோடு பேசி, நீங்கள் சொல்லுகின்ற 191 அரசாணையை அமல்படுத்த முடியாது. அது MRBக்கு பொருந்தாது என்றும் கூறினார்கள். அதேபோல் ஏற்கனவே எடுத்தவர்களில் 200 பேர் பாக்கி இருக்கிறாகள் அவர்களை நிரந்தரமாக்கி விட்டு உங்களை படிப்படியாக நியமனம் என்ற முறையில் ஆண்டு 200 பேர்  வரை எடுக்கிறோம் என்றார்கள்.

ஒரு உயர் போலிசு அதிகாரியோ, இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் கேள்விகளை கேளுங்கள் என்று முழு ஜனநாயகத்தை வழங்கினார்.

அதன்படி முதலில் பேசிய பெண் செவிலியர் ஒருவர், அதிகாரிகள் சொல்லுவது சரி தான் என்று பேச ஆரம்பித்ததுமே அந்த செவிலியர் போலிஸ் செட்டப் செய்த போலி செவிலியர் என்று போராடும் மக்கள் கண்டுபிடித்து விட்டனர்.

அசிங்கப்பட்ட அதிகார வர்க்கம் வேறு வழியில்லாமல் கூட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தது. பேச சென்ற செவிலியர்களிடம் மைக்கை கொடுக்காமல் வாயாலேயே பேசு என்றார் அதிகாரி. கீழிருந்த செவிலியர்கள் மைக்கை கொடுங்கள் என்று கத்திய பிறகு கொடுத்தனர்.

அதிகாரிகளிடம், 191 அரசாணை செல்லாது என்றால் மருத்துவர்களை எப்படி வேலைக்கு எடுத்தீர்கள், தேர்வு எழுதி வருகிற எல்லோருக்கும் இந்த அரசாணை  பொருந்தும் என்று தான் சட்டத்தில் உள்ளது. ஆனால், எங்களுக்கு மட்டும் செல்லாது என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பிய பின்னர்  அதிகார வர்க்கம் பதில் சொல்ல வக்கற்று மைக்கை பிடுங்கி விட்டு பறந்து போனது.

செவிலியர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொன்னால் மட்டும் எங்களிடம் இனிமேல் வாருங்கள்.. இல்லையேல் வர வேண்டாம்.. நாங்களும் இங்கிருந்து கலைய மாட்டோம் என்று உறுதியுடன் மனம் தளராமல் போராடி வருகிறார்கள்.

அதிகார வர்க்கமோ அடுத்த சதித்திட்டத்தை அரங்கேற்ற காத்திருக்கிறது. மெரினா போராட்டம் போல முடிவு தெரியும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம் என்று போராடும் அந்த செவிலியர்களுக்கு உணவு கொடுக்கவோ, கழிப்பறை ஏற்பாடுகளை செய்து தரவோ, போராட்டத்திற்கு ஆதரவு தரவோ அங்கு யாருமில்லை.

அவர்களை ஆதரிப்பதும், போராட்டத்திற்கு உதவி செய்வதும் நமது கடமை அல்லவா?

  • வினவு செய்தியாளர்கள்